குருவிக்கூடு நாவல் பற்றிய பார்வை - திருமதி. ஜெகதீஸ்வரி மகேந்திரன், ஜெர்மனி -
நூல் விபரம்: பதிப்பு: வசந்தா பதிப்பகம், சென்னை, பக்கம்: 344, ஆசிரியர்: கௌசி, ஜெர்மனி, விலை: 400 இந்திய ரூபாய்
மொழி மனிதனால் உருவாக்கப்பட்டதாயினும் அம்மொழியாலே தான் மனிதன் உயர்வடைகின்றான்.எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் உண்டு. ஆனால், தமிழ்மொழிக்கு மட்டுமே இவற்றோடு பொருளுக்கும் இலக்கணம் உண்டு. ஒரு மொழியின் உயர்வுக்குக் காரணம் இதன் கண் காணப்படுகின்ற இலக்கியமே. இவ் இலக்கியத்திற்கு இலக்கணம் அமைத்து மொழி செம்மைப்படுத்தப்படுகிறது. அவ்வாறு செம்மைப்படுத்தப்பட்ட ஒரு இலக்கியப் படைப்பாக மிளிர்கிறது இந்த குருவிக்கூடு என்னும் நாவல்.
ஒரு எழுத்தாளன் என்றால் எழுத்துக்களை எழுதிவிடுவது மட்டுமல்ல, அவரின் எழுத்துக்கள் ஆளுமையுடன் நடைபயில வேண்டும். அதனால் தான் வாசிப்பு அறிவைப் பெருக்கும், எழுத்து திறமையை வெளிப்படுத்தும் என்பார்கள். இவையிரண்டும் கௌசி அவர்களுக்கு நிறையவே இருப்பதனால் தான் இக்குருவிக்கூட்டை இவ்வளவு இலக்கியச்சுவை சொட்டச் சொட்ட அவரால் படைக்கமுடிந்திருக்கிறது என்றுகூறின் மிகையாகாது. வாசித்துப்பாருங்கள் மண்வாசனை முதல் விண்னைத்தொடும் அறிவியல்வரை அவர் கற்பனைவளமும் செழுமை மாறாச் சொல்வளமும் இலக்கிய இலகுநடையுடன் உணர்வுகளுக்கு உயிரூட்டி எழுத்துக்களால் வாசகர்களை கைபிடித்துக்கூட்டிச்சென்று நேரில்காண்பிப்பது போன்று காட்சிப்படுத்தியிருக்கின்றார். அது நன்கு சிறப்பாகவே இப்புத்தகத்தில் சில இடங்களில் துல்லியமாக காணமுடிகிறது.