வேடியப்பன் வாழ்வும் வரலாறும்! - முனைவர் ஆ. சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூயநெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம். -
(Ref: SHC/DB/Grant/20234/02)
முன்னுரைதிருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வேடியப்பன் மற்றும் வேண்டியம்மன் வழிபாடு. மக்களால். பரவலாக வழிபட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. தமிழரின் வீரத்தின் எச்சமான நடுகல் வழிபாட்டில் தொடங்கி உள்ள வேடியப்பன் வழிபாடானது இன்றும் மக்களால். முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வேடியப்பன் என்றாலே எல்லோரும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி என்ற ஊரில் உள்ள வேடியப்பனைத்தான் பொதுவாக அடையாளமாகக் கொள்கின்றனர். “கிருஷ்ணகிரி மாவட்டத்து கல்லாவி ஊரில் வேடியப்பன் கோவில் உள்ளது. வன்னிமரம் கோவிலில் உள்ளது. வேடியப்பன் உருவம் கற்பலகையில் செதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கல்லாக இருக்க வேண்டும். இவன் வன்னியர்களின் குலதெய்வம். 500 ஆண்டுகள் பழமை உடையது. நாள் பூசைகள் உண்டு. தைமாதத்தில் 7 நாட்கள் திருவிழா. நடைபெறும். அருகிலுள்ள முனியப்பனுக்கே ஆடுவெட்டி அழைத்து ஏழை எளியவர்களுக்குத் தருமம் செய்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூசைகள் உண்டு. மற்ற சாதியினரும் தற்போது வழிபடுகின்றனர்.”1
ஆனால் நமக்கு நடுகல் வடிவில் கிடைக்கும் வேடியப்பன் பற்றிய தரவுகளைக் கொண்டு பார்க்க கல்லாவியை நோக்கிய அந்தப் போக்கில் மாற்றம் தேவை என்று சிந்திக்கத் தோன்றுகின்றது. இன்றைய நடுகற்கள் மற்றும் மக்கள் வழிபாட்டுப் பின்புலத்திலிருந்து கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் வேடியப்பன் பற்றிய வரலாற்றைப் பற்றிய ஒரு சிறு முன்னெடுப்பை முன்வைக்கிறது இக்கட்டுரை.
வேடியப்பன் வழிபாட்டிட நடுகற்கள்
கி பி. 5ஆம் நூற்றாண்டு முதல் வேடியப்பன் நடுகல்களுடன் கல்வெட்டுகளும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றில் ‘’திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் வட்டத்திற்குட்பட்ட சாத்தனூர் (கி.பி 6. ஆம் நூற்றாண்டு) எடுத்தனூர் (கி.பி 624) மோத்தகல் (கி.பி. 622) தண்டம்பட்டு (கி.பி. 608) தொரைப்பாடி கி.பி. 600 படி அக்கரஹாரம் (கி.பி. 587) சின்னையன் பேட்டை (கி.பி 9. ஆம் நூற்றாண்டு) போளூர் வட்டத்திற்குட்பட்ட கடலாடி (கி.பி.6) தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் சின்னகுப்பம் (கி.பி. 6,7) மொண்டுகுழி கி.பி. 604) கதிரம்பட்டி கி.பி. 597 கோரையாறு, கோறையாறு 2 (கி.பி. 568) பாப்பம்பாடி (கி.பி.5), ஊத்தங்கரை வட்டத்திற்குட்பட்ட நடுப்பட்டி கி.பி.598) கானம்பட்டி கி.பி. 581) புலியானூர் (கி.பி.573)’’2 முதலியன குறிப்பிடத்தக்கன.