சிறுகதை: நட்பில் மலர்ந்த துணைமலராரம். - குரு அரவிந்தன் -
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுப மன்னோ,
நல்லை மன்ற அம்ம பாலே மெல் இயல்
துணை மலர்ப் பிணையல் அன்ன, இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.
(குறுந்தொகை - 229 மோதாசனார்)
காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலையில் காலைநேரச் சங்கு ஊதியதும், அயலவர்கள் பரபரப்பானார்கள். தொழிற்சாலைக்குச் சொந்தமான குவாட்டேஸில் அருகருகே வசித்த பாரமநாதனும், அப்துல் காதரும் ஒன்றாகவே வேலைக்குக் கிளம்பினார்கள். அவர்களின் பிள்ளைகளான ஜெகனும், ஹானியாவும் ஒன்றாகவே ஐந்தாம் வகுப்பில் படித்ததால் கல்லூரி வீதியில் உள்ள பாடசாலைக்கு ஒன்றாகவே போய்வருவார்கள். இருவரும் படிப்பிலும், விளையாட்டிலும் கெட்டிக்காரர்களாக முன்னிலையில் இருந்தார்கள். ஹானியாவின் உறவினர்களால் அவர்களின் மதம் சார்ந்த அதிககட்டுப்பாடு இருந்தாலும், பெற்றோர்கள் புரிந்துணர்வு உள்ளவர்களாக இருந்ததால் இவர்கள் ஒன்றாகவே பழகினார்கள்.
அடிக்கடி ஹானியாவும், ஜெகனும் தங்களுக்குள் வேடிக்கையாகச் சண்டைபிடித்தாலும், சற்று நேரத்தில் ஒற்றுமையாகி விடுவார்கள். கடற்கரையில் ஒன்றாக மணல்வீடு கட்டி விளையாடி, ஒன்றாகவே அதிகநேரம் பொழுது போக்குவார்கள். இப்படித்தான் ஒருநாள் வீட்டிலே அவர்கள் கண்ணாமூச்சி விளையாடும் போது, ஓடிஒளிய இடமில்லாமல் இருவரும் ஓடிப்போய் ஸ்டோர்ரூமுக்குள் இருந்த பழைய கட்டிலின்கீழ் ஒளித்துக் கொண்டனர். இவர்களைத் தேடிவந்தவன் ‘யாராவது ஒளித்து இருக்கிறீங்களா?’ என்று இருட்டுக்குள் தேடினான். அருகே வந்தபோது கண்டுபிடித்திடுவானோ என்ற பயத்தில் இவனோடு நெருக்கமாக அவள் ஒட்டிக் கொண்டாள். வந்தவனால் அவர்களைக் கண்டு பிடிக்கமுடியவில்லை, அங்குமிங்கும் அறைக்குள் தேடிவிட்டு அவன் அறையைவிட்டு சென்றபின்பும், திரும்பவும் வருவானோ என்ற பயத்தில் அவர்கள் அசையாது அப்படியே கட்டிலுக்குக் கீழ் படுத்திருந்தனர்.
‘எருமை, கையை எடுடா..!’ என்ற போதுதான் இவன் விழித்துக் கொண்டான், தப்பான இடத்தில் அவளை தொட்டுவிட்டேனோ என்று அவன் ‘சொறிடா’ என்றான்.
‘விட்டா இப்படியே அணைச்சிட்டே இருப்பாய் போல..!’ என்றவள் உருண்டு கட்டிலிக்குக் கீழ் இருந்து வெளியேவந்தாள். அவளைத் தொடர்ந்து அவனும் வெளியேவந்தான்.