- அமரர் ராஜேஸ்வரன் -
ஆழ் மனத்திரைக்குள் பதிந்திருக்கும் பக்கங்களைப்புரட்டிப் புரட்டி மறுபடியும் அப்புத்தகத்தை வாசிப்பதில் அத்தனை சுகம்!அதற்குள்தானே நிரம்பிக்கிடக்கின்றன அத்தனையாயிரம் கதைகள்?ஓடி ஓடி களைத்துப்போகும் வாழ்வெனும் வட்டத்திற்குள் அவற்றைப்பகிர்ந்திட எமக்குத்தான் நேரமில்லையே!எப்போதாவது முதுமைக்கு நரையழகாகும் பருவத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வாழ்வின் புதிய பயணத்தை ஆரம்பிக்கும்போதுதான் கதை சொல்லியாக இது கைகூடும் என்றால் அதுவும் ஆனந்தம்தான்!அதற்கும் அப்பால் ஞாபகங்களை கரைந்துவிடாது காத்திட பக்கங்களைப்புரட்டிப்பார்ப்பதும்கூட மனநலத்திற்கான ஆரோக்கியமும்கூட !
அம்மனத்திரைக்குள் பதிந்திட்ட இன்னொரு கதைதான் இது. எனக்கும்,என் நண்பர் கிரிக்குமான நட்பின் உயிர்ப்பு இது. வாழ்வில் எத்தனை நிகழ்வுகள் எதிர்பாராது வந்து போகின்றன. அதற்குள் எத்தனை தங்கி விடுகின்றன.எத்தனை நிலைத்து நிற்கின்றன? அப்படியென்றால்,எனக்கும் கிரிக்குமான நட்பு 50 வருடங்களையும்தாண்டி நிலைத்து நிற்கின்றது என்பதும் மகிழ்ச்சிதான்.எப்போது இணைந்தோம். இருவருக்குமான அறிமுகமோ அன்றி முதன்முதலாக பரிமாறிக்கொண்ட வார்த்தைகளோ நினைவிலில்லை. எந்த வருடம்,மாதம், நாள்,திகதி எதுவுமே ம்கூம்;ஒன்றுமே தெரியாது.நட்பு ஒன்றுதான் ஆணிவேராகி பலமாய் இன்றும் நிலைத்து நிற்கின்றது.இப்படித்தான் காதலும் சரி,ஆழமான நட்பும் சரி எதிர்பாராமல் உயிருக்குள் கலந்து மானுடத்தை வாழவைத்துக்கொண்டிருக்கின்றது. கிரியும் அப்படித்தான்.இந்த உறவுப்பாலத்தில் ஒன்றுணைந்து பயணித்தவர்கள் பலர்.தவிர,என் தம்பியும் கிரியுடன் இணைந்ததும் இன்னொரு சிறுகதை.
விடியலும் இருளும்போல
வெயிலும் மழையும்போல
வாழ்வில் இன்பம் துன்பம் எதுவாயினும்
வீட்டையும் தாண்டி இவற்றைச்சுமந்து கொண்டு
உயிர்நண்பனிடம் பகிர்ந்துவிட்டால்
அச்சுமைகள் ஏனோ கொஞ்சமாவது குறைந்துவிடும்.
இது நியதி.
அப்படித்தான் என் சுமைகளை என் நண்பன் சுமந்தான்.
அவனின் மைத்துனனான கிரிக்கு அது கடத்தப்பட்டது.
புரிந்துணர்வும்,கெட்டித்தனமும் கொண்ட
கிரியிடமிருந்து நல்லதொரு முடிவு வந்தது.
இதுதான் இச்சிறுகதைக்கான
முன்னுரை என்றும் எழுதலாம்.
"குட்டி சொன்னான்.உங்கட நிலைமை புரியுது.கணிதம்,இரசானவியல்,பெளதிகம் போன்றவற்றிற்கான பயிற்சி வகுப்புகளை நானே நேரில் வந்து தம்பிக்கு சொல்லிக்கொடுக்கின்றேன். காசு ஒன்றும் தேவையில்லை.அவர் கவனமாய்ப்படிச்சு பாஸ் பண்ணினாப்போதும் லிங்கேஸ்.ஒன்றுக்கும் யோசிக்கவேண்டாம்"என்றார் கிரி. இதைக்கேட்டதும் எதிர்பார்த்திராத இந்த அன்பை என் மனம் எந்தி ஆனந்தத்தில் திளைத்தது.கவிஞர்கள் பாட்டிலே சொல்லிவிட்டுப்போவதுபோல உண்மையான நட்புக்கு இவர்கள்தான் உதாரணமாக என் கண்முன்னே நின்றார்கள்.
நண்பர் கிரியை நான் பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு புத்தகமோ,கொப்பியோ கையிலிருக்கும்.அப்பியாசக்கொப்பியில் எழுதிவிட்டு ஓய்ந்த கைவிரல்களின் இடு க்குக்களில் சியால் பேனாவிலிருந்து கக்கிய மை படிந்திருக்கும். ஈழநாடு,வீரகேசரி,Daily Mirror,அம்புலிமாமா,பொன்னியின் செல்வன்,சிரித்திரன் என வாசிப்பதும்,கவிதை, கட்டுரை, சிறுகதைகளென எழுதுவதும், அல்லது Reader‘s Digest இதழ்களை படித்துக்கொண்டு இருக்கும் கிரியைத்தான் என் மனக்கண்கள் பதிந்துவைத்திருக்கின்றன. படிப்பும்,வாசிப்பும்,எழுத்தும் என வாழ்வில் தனக்கென ஓர் இலக்கை நோக்கி பல்கலைக்கழகம் என பயணத்துக் கொண்டு, பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தவர்,என் தம்பிக்காக உதவ வந்தது என்பது வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒன்று!
ஆரவாரம் இல்லா,மனதை வருடிவிடும்
புல்லாங்குழல் இசை போன்ற
அமைதியான தென்றல் பொழுது.
இன்னும் கொஞ்ச நேரம் போக அந்தி
வரும் நேரமாகிவிடும்.அப்பொழுதில்
கிரி சைக்கிளில் எம் வீட்டுக்கு வருவார்.
வந்ததும்;முதலில் தம்பியும்,நானும் இருந்து
கிரியுடன் உறவாடிச்சிரித்து மகிழ்ந்து
ஆறுதலாக பாடங்களை
ஆரம்பிப்பதுதான் இயல்பு.
பயிற்சி வகுப்பும் ஆரம்பிக்க
அங்கிருந்து நான் விடைபெறுவேன்.
ஒன்றரை மணித்தியாலங்களில்
ரியூசன் முடியும் தருணத்தில்
அம்மா சுடச்சுட பால் தேநீருடன்
எதாவது சிற்றுண்டியும் கலந்து பரிமாறுவார்.
தோய்ந்து பிடித்த பச்சை நிறத்தில் சேலை உடுத்தி
,ஈரம் சுவராமல் இருக்க;வெள்ளைத்துவாயால்
கூந்தலைச்சுற்றி முடிந்து கட்டிக்கொண்டு,
சிரித்துக்கொண்டு வரும் அம்மாவும்,
அந்தப்பொழுதும் அழகோ அழகு.
மனசுக்குள் பதிந்த,காலத்தில் அழியா சித்திரங்களுக்குள்
இதுவும் ஒன்று.'
அம்மாவின் அன்புக்கு நிகர்
அம்மாவின் சிரிப்பு' என்று
இன்றும்தான் உறவுகள் சொல்வது வழக்கம்.
அதேபோல இன்னொரு காட்சி.
அதுவும்கூட அழித்திட முடியாதது.
முற்றம் முழுக்க
ரோட்டன்,ரோசா,மல்லிகை,கனகாம்பரம், துளசியென
நிரம்பிக்கிடந்த பூமரங்கள்.
கிரியும் வந்திறங்கி நடந்து வர
வரவேற்கின்றவை பூக்களும்,
அந்த வாசங்களும் மட்டுமல்ல;
அடுத்து பலாமரம்,வாழைகள்,வேம்பு என
அத்தனையும்!
பணத்தால் சந்தோசப்படுத்த முடியாவற்றை
அன்பால் பகிர்ந்துகொண்ட மலர்களும்,
மரங்களும்,என் பெற்றோரும்,தம்பியுமான
எம் பொற்காலமது !
கிரியின் நெறிப்படுத்தல் வழியாக தம்பி சித்தியடைந்தது மட்டுமல்ல,12ஆம் வகுப்புகளில் தம்பியும் அவனது நண்பனிடம் இணைந்து இருவருமாக இன்னொரு பயிற்சிப்பள்ளியை ஊரிலேயே நடத்தினார்கள். இடம்பெயர்ந்து, இலண்டனில் வாழ்ந்து,அங்கும் 'புலமைப்பரீட்சை தேர்வில் சித்தியடையவைக்கும் சிறந்த ஆசான்'என்று சமுதாயத்தால் விரும்பப்பட்ட நல்ல குணம் படைத்த மனிதனாகவும் கடைசிவரை வாழ்ந்தான் என் தம்பி!
இப்படித்தான்
ஆழ் மனத்திரைக்குள் பதிந்திருக்கும்
பக்கங்களைப்புரட்டிப் புரட்டி
மறுபடியும்
இப்புத்தகத்தை வாசிப்பதில்
அத்தனை சுகம்!
எம் நினைவுகளை வாழும் காலத்திலேயே
மற்றவர்க்கும் கடத்தி விடுங்கள்.
ஆதலால்,அது எப்போதுமே கரைந்து போவதில்லை!
"காலத்தினால்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது"
நண்பன் கிரிக்கு நெஞ்சார்ந்த நன்றி.
[நினைத்தாலே இனிக்கும் நினைவுகள் தொடரும்]