மீள்பிரசுரம்: 88 வயதாகும் ஈழத்து வரலாற்று நாயகர் எசு. ஏ. தாவீது (எஸ். ஏ. டேவிட்)
தளரா நெஞ்சம். மருத்துவமனை கண்டிராத உடல். செருப்பணியாத கால்கள். திருமணமாகாத வாழ்க்கை. 1970 முதலாகக் காய்கறி உணவு. முகத்தை மூடும் வெள்ளை மீசையும் தாடியும். 88 வயதிலும் இரு மாடிகளுக்கும் படியேறி என் வீட்டுக்கு இன்று, புலர் காலை 0600 மணிக்கு வந்தவர், பெரியார் எசு. ஏ. தாவீது என நான் அழைக்க விரும்பும் எஸ். ஏ. டேவிட். 1970களில் வவுனியாவில் காந்தீயம் அமைப்புத் தொடங்கிய காலங்கள். மலைநாட்டில் துணை மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராசசுந்தரம், கொழும்பில் என்னிடம் வருவார். அவருடன் டேவிட் ஐயாவும் வருவார். கொழும்பு வைஎம்சீஏ விடுதியில் டேவிட் ஐயா தங்கியிருப்பார். அந்தக் கட்டட வரைபடத்தைத் தயாரித்துக் கொடுத்ததால், அதற்குக் கட்டணம் வாங்காததால், அவருக்கு எப்பொழுதும் அங்கே ஓர் அறை. 1972 இலங்கை அரசியலமைப்பு, அதைத் தொடர்ந்த தமிழர் நிலை, இவை எம்மை இணைக்கும் பாலம். மலைநாட்டுத் தமிழரை வன்னியில் குடியேற்றும் காந்தியத்தின் முயற்சி. இராசசுந்தரம், டேவிட் இருவரின் இடையறா ஈடுபாடு, இதில் என் சிறிய பங்களிப்பு. 1977 இனக் கலவரத்துடன் கொழும்பைவிட்டு வெளியேறினேன். யாழ்ப்பாணத்தில் 1978இல் தந்தை செல்வா நினைவுத் தூண் கட்டியெழுப்பும் குழுவின் செயலாளராக நான். திராவிடத் தூணாக 80அடி உயரத்தில் அமையும் வரைபடத்தைத் தந்தவர் வி. எஸ். துரைராசா. மொட்டையாக நிற்காமல் கூம்பாக்கிக் கலசத்தில் முடிக்குமாறு டேவிட் ஐயா கருத்துரைத்தால் 100 அடியாக அத் தூண் உயர்ந்தது. கட்டி முடிக்கும் வரை யாழ்ப்பாணத்தில் இருந்தேன்.