சுயேட்சைப் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் "நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள், நீங்கள் கப்பலில் வந்தவர்கள்" என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரைப் பற்றிக் கூறியதாக முகநூலில் வாசித்தேன். இது பற்றிய காணொளியை முகநூல் நண்பர் நவமகன் கேதீஸ் தனது எதிர்வினையில் தந்திருக்கின்றார். அதற்கான இணைப்பு
இக்கூற்றுக்காக முழுத் தமிழினமும் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். ஏனென்றால் இதை அமைச்சர் ஒருவருக்கு எதிரான கூற்றென்று ஒதுக்கி விட முடியாது. ஒரு சமூகத்துக்கு எதிரான கூற்று. உண்மையில் அவர் கூறியிருந்திருக்க வேண்டியது 'நாங்கள் கப்பலோட்டியவர்கள். நீங்கள் எமக்கு வழிகாட்டியாகவிருந்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி மண்ணிலிருந்து வந்தவர்கள்' என்றே.
கடந்த 200 வருடங்களுக்கும் மேலாக, தேயிலைத்தோட்டங்களில் உழைத்து வரும் மலையகத் தமிழர்கள் அடைந்த துயர்கள் பற்பல. சுதந்திரமடைந்த நாட்டில் நாடற்றவர்களாக்கப்பட்டார்கள். அதற்கு எம் தமிழ்த்தலைவர்கள் , ஜி.ஜி.பொன்னம்பலம் உட்படப் பலரும் உடந்தையாகவிருந்தார்கள் என்பது வரலாறு.
தமிழர்களின் போராட்டக் காலகட்டத்தில் பல தடவைகள் இனவாதிகளால் துயரத்தை அனுபவித்தவர்கள் அவர்கள். வடகிழக்கு எல்லைகளில் குடியேறி அதன் காரணமாகவும் துன்பத்தினை அனுபவித்தவர்கள் அவர்கள். மலையகத்தமிழர்களைக் கள்ளத்தோணிகள் என்று எள்ளி நகையாடியவர் பலர். இவ்வளவு சவால்களையும் ஏற்று இன்று பல் துறைகளிலும் வெற்றி நடை போட ஆரம்பித்திருக்கின்றார்கள் மலையகத்தமிழர்கள். இந்நிலையில் இவ்வாறானதொரு கூற்று அம்மக்கள் மீது ஏவிவிடப்பட்ட கேவலமான , துவேசம் மிக்க வசையாகவே கருதப்படும்.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நீண்ட காலமாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பவர். ஒரு புரட்சிகர அமைப்பின் போராளியாக இருந்தவர். இந்நிலையில் அவரைப்பார்த்து இவ்விதம் வசை பாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. வருந்தத்தக்கது. மன்னிப்புக் கேட்கப்பட வேண்டியது. கூறியவர் கேட்காதிருந்தாலும் , நாம் அனைவரும் மலையக மக்களிடம் மன்னிப்புக் கேட்போம்: 'எம்மை மன்னித்து விடுங்கள்'
இப்பதிவு முகநூலில் பகிர்ந்துகொள்ளப்பட்டபோது வெளியான எதிர்வினைகளில் சில..
Jaya Palan - கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்
மிகவும் நன்றி கிரிதரன். யார் இந்த அர்ச்சுணா? தோழர் சந்திரசேகரையும் மலையக தமிழர்களை மட்டும்ன்றி தாய் பிள்ளைகளாக உணரும் ஈழத் தமிழர்களையும் அந்த தற்குறி தலைகுனிய வைத்துவிட்டான். ந்ன்றி கிரிதரன். தமிழர் அனைவர் சார்பாகவும் நீங்கள் பேசி உள்ளதை நானும் ஆமோதிக்கிறேன். மன்னித்துக்கொள்ளுங்கள் மலையக சொந்தங்களே.
மல்லியப்புசந்தி திலகர் - தமிழ் அரசியல்வாதி & எழுத்தாளர்
உங்கள் பெருந்தன்மையை மதிக்கிறோம். என்னைப் பொறுத்தவரை அவர் போன்றவர்களுக்கு நாங்கள் எதிர்வினை ஆற்றாமல் விடுவதே சிறந்த தெரிவாகக் கொள்கிறேன். அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ள பாதை அவனுக்கான எதிர் விளைவுகளைத் தரவல்லதே.
Kandiah Pathmananthan - தமிழ் எழுத்தாளர்
கண்டிக்கத்தக்க மிக அநாகரிகமான பேச்சு. ஒரு யாழ்ப்பாணத்தவனாக கவலைப்படுகிறேன்.... மன்னிப்புக் கோருகிறேன்...
Thavachelvy Gunarajah
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
என்ன கதைக்கவேண்டும் எதை கதைக்கக்கூடாது என்று தெரியாமல் இவர் என்ன செய்யப்போகிறார் என்று தெரியவில்லை. வேதனை தரும் வார்தைப் பிரயோகம்!
R.J. Prakalathan
துயரத்தை வென்று என்றும் உயரத்தில் இருப்பவர்கள் எம் மலையக உறவுகள். இத்தகு நாய்க்குரைப்புகள் நிலவுகளை ஒன்றும் செய்யாது. இருந்தபோதும் பொது வெளியில் பேசிய இத்தகு நாகரீகமற்ற , அறம் பிழைத்த வார்த்தைகளிற்காய் மன்னிப்பு கேட்டுநிற்கின்றோம்.
Mayooranathan Ratnavelupillai - கட்டடக்கலைஞர், எழுத்தாளர்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்சுனாவுக்குக் கடுமையான கண்டனங்கள். இவ்வாறானவர்களைச் சகித்துக்கொள்வது வெட்கக்கேடானது.
SK Rajen - ஊடகவியலாளர்
மன்னித்துவிடுங்கள்