கவிஞர் ச.வே.பஞ்சாட்சத்திரத்தின் கவிதைத் தொகுதியொன்றின் பெயர் 'இன்ப வானில்' (1971). அகத்துறைக்கவிதைகள் என்று அவற்றைக் குறிப்பிட்டிருப்பார். புதுமைலோலனின் அன்பு வெளியீடாக வெளியான தொகுப்பு அது. காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் , பிரிவினை வெளிப்படுத்தும் கவிதைகள் பல அக்காலச் சூழலில் வைத்துச் சுவையாகப் பின்னப்பட்டிருக்கும்.
அதிலொரு கவிதை 'கொழும்பில் வேலை என்றால்..'. கொழும்பில் பல சிரமங்களுக்கு மத்தியில் வேலை பார்க்கும் கணவன் படும் சிரமங்களை எண்ணியெண்ணி மனைவியொருத்தி வருந்துவதை விபரிக்கும் கவிதை. அதிலுள்ள ' .. பாக்குக் கலப்படச் சோற்றைக் கடைகளில் விழுங்கிக், காற்றினை அங்கே குடிப்பரே! பாவம்!' என்னும் வரிகள் என் கொழும்பு வாழ்க்கையை நினைவு படுத்தின.
கொழும்பில் நகர அதிகார சபையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது நானும் ஏனைய நண்பர்களும் மதிய உணவுக்காக அதிகம் செல்லுமிடங்கள்: அருகிலிருந்த புகையிரதத்திணைக்களக் 'கண்டீன்', கோட்டையிலுள்ள 'நெக்டர் கபே & சுத்தானந்தபவன் (சுத்தானந்தபவனா அல்லது ஆரியபவனா என்பதை நினைவு படுத்துவதில் சிறிது குழப்பம்). சுத்தானந்தபவனுக்குச் செல்வது பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில். அப்போது தமிழ் உணவகங்களில் மதிய உணவின்போது நீங்கள் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் சோற்றினை முடிய முடிய வாங்கிச் சாப்பிடலாம். மேலதிகக் கட்டணம் ஏதுமில்லை. இவ்விதம் மதிய உணவுக்காக வரும் ஒவ்வொருவரும் முடிய முடிய சோற்றினை வாங்கிச் சாப்பிட்டால் வியாபாரம் என்னவாவது. இதற்காகத் தமிழ் உணவக முதலாளிகள் செய்யும் தந்திரமே சோற்றில் பாக்கு போட்டுச் சமைப்பது. அப்படிச் சமைத்தால் அவ்விதம் சமைத்த சோற்றினை அதிகமாகச் சாப்பிட முடியாது. பெரும்பாலும் முதற் தடவையிலேயே வயிறு நிறைந்து விடும். இதனைத்தான் கவிஞரும் 'பாக்குக் கலப்படச் சோற்றைக் கடைகளில் விழுங்கிக், காற்றினை அங்கே குடிப்பரே' என்கின்றார். அனுபவம் பேசும் கவிஞரின் வரி.
தனது 'எழிலி' கவிதைத்தொகுப்புக்காக இள வயதில் சாகித்திய விருதினைப்பெற்ற கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பில் வாசகர்தம் உள்ளங்களை ஈர்க்கும் , சுவைமிகு, இரசித்து மகிழும் தன்மை மிக்க வரிகளைக்கொண்ட கவிதைகள் உள்ளன. உதாரணத்துக்குச் சில வரிகள்:
"தென்னஞ் சோலை மணலில் குந்தி
தின்னும் நோக்கில் குறும்பைச் சிந்தி
என்னை வண்டி மீதில் கண்டு கிடுகு பின்னுவாள் - பொன்னி
என்னைக் கண்ணில் பின்னிப் பின்னிக் கிடுகும் பின்னுவாள்."
மனைவியொருத்தி... அவளைக்காதலித்து, இனமிழந்து, தொழிலிழந்து, சீதனமிழந்து வன்னியில் வந்து விவசாயம் செய்யும் காதற் கணவன் இரவில் வயலில் மரத்துக் கிளையில் பரண் அமைத்து மிருகங்களிலிருந்து வயலைப் பாதுகாக்கின்றான். அவனது பாதுகாப்பை எண்ணியெண்ணி மனைவி வீட்டில் படுத்திருந்தபடி கவலையில் ஆழ்கின்றாள். அவளது உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான கவிதை 'கால்களை முத்தமிட்டு..'. அவளது உணர்வுகளை வெளிப்படுத்தும் வரிகளைக் கவனியுங்கள்:
"மரந்தறித்துக் காடெ ரித்து விதைத்த நெல்வயல் - உச்சி
மரத்துக் கிளையில் பரணிற் குந்திக் காப்பர் காடயல்! - எண்ணி
இரங்கி ஏங்கி இரவி லிங்கே நான்ப தைக்கிறேன் - முகத்தில்
இருக்கும் பருக்குள் கிள்ளிக் கிள்ளித் தூக்கஞ் சிதைக்கின்றேன்!
கொப்புத் தாவும் மந்தி கூரை பிய்த்துப் பரண்விழின் - மூடக்
கோபத் தாலே அவரைக் கடிக்க மந்தி நினைந்தெழின் - அம்மா!
அப்போதவரவ் வுயரம் நின்று நிலத்தில் வீழ்ந்திடின் - இரைக்காய்
அங்கே கரடி புலிகள் சூழின் காக்க எவருளர்?
மதங்கொள் யானை மரம சைக்கிள் பரணும் நொருங்குமே - அவரும்
மண்ணில் காய்போல் வந்துவீழின் யானை நெருங்குமே - பகலில்
பதுங்கிக் கிடக்கும் இந்தப் பயங்கள் இரவின் தனிமையில் - நெஞ்சு
பதைத்துப் பதற உலுக்கி டுகிதே ஈசா காத்தருள்!
சூடு வாங்கும் புலிகள் சுட்ட திசைக்கே பாயுமாம் - அவருஞ்
சுட்டாற் புலியை அவரின் கதியும் என்னவாகுமோ! - இன்றும்
வீடு விட்டுக் கிளம்பும் போதும் 'கவனம்' என்றுநான் - கெஞ்சி
வேண்டி நின்றேன்! மறக்கின் எல்லாம் என்ன செய்வேனோ!
புயலும் மழையும் வந்தாற் பரணில் இருக்க முடியுமா - இறங்கி
புகுந்து தங்கக் காட்டில் வீடும் இருக்கமுடியுமா - செய்யும்
செயலறி யாமல் வீடு நோக்கி இருட்டில் கிளம்பிடில் - காட்டில்
திரியும் கரடி புலிகள் யானை தீங்கு செய்யுமே!
ஏழை என்றன் அன்பிற் காக எத்தனை யிழந்தார் - காக்கும்
இனமிழந்தார் தொழிலி ழந்தார் சீதன மிழந்தார் - தானும்
ஏழை யாகி என்னால் இந்தக் காடு வந்தாரே - பாவம்
இரவும் பகலும் விழித்து ழைத்தே மாடாய் நொந்தாரே!
இந்த நொடியில் இருந்தோ யாமல் அவரின் கால்களை - கையால்
இறுகக்கட்டிக் கொண்டு நானி றக்கும் வரையில் - முத்தம்
தந்து தந்து கிடக்க நெஞ்சம் ஏங்கித்துடிக்கிறேன் - அவரை
தாங்கி நாளும் காக்க அம்பாள் காலைப்பிடிக்கிறேன்."
இது போல் பல கவிதைகளைத் தொகுப்பில் நீங்கள் படித்துச் சுவைக்கலாம்.
கவிஞர் ச.வே.பஞ்சாட்சத்திரத்தின் 'இன்ப வானில்' கவிதைத்தொகுப்பினை வாசிக்க: https://noolaham.net/project/753/75201/75201.pdf
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.