1.
நான் முதன் முதலாக மட்டக்களப்பு சென்ற அனுபவம் என் வாழ்க்கையில் மறக்க முடியாததொரு சுவையான அனுபவம். அப்பொழுது நான் வவுனியா மகாவித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு மாணவனாகக் கல்வி பயின்று கொன்டிருந்த சமயம். விடுமுறைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த எங்களது ஆச்சி வீட்டிற்குச் செல்வோம். அல்லது ஆச்சி அம்மாவின் சகோதரி ஒருவரின் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வவுனியா வருவார். சில சமயங்களில் உறவினர்கள் யாருடனாவது அனுப்பி வைப்பார். என் வாழ்க்கையில் ஆச்சியின் பங்கும் முக்கியமானது. மிகவும் துணிச்சலான பெண்மணி. அவரைப் பற்றித் தனியொரு பதிவே இடலாம். இன்னுமொரு சமயம் அது பற்றியும் விபரிப்பேன்.
இவ்விதமானதொரு சூழலில் முதல் முறையாக மீன் பாடும் தேன் நாடு நோக்கிச் செல்லுவதற்குரிய சந்தர்ப்பம் வாய்த்ததும் எதிர்பாராத நிகழ்வொன்றின் மூலம்தான். ஆண்டு தோறும் நடைபெறும் தமிழ்த் தின விழாவுக்கான கையெழுத்துப் போட்டிக்கான தெரிவுக்காக என்னை வவுனியாவிலிருந்த சிங்களப் பாடசாலையான காமினி மகாவித்தியாலயத்திற்கு அனுப்பியிருந்தார்கள்.
அம்மாவின் விலையுயர்ந்த பார்க்கர் பேனாவையும் எடுத்துக்கொண்டு காமினி மகாவித்தியாலயம் சென்றேன். எதற்காக என்னைக் கையெழுத்துப் போட்டிக்கு அனுப்பினார்களோ தெரியவில்லை. ஏனென்றால் என் கையெழுத்தின் தகுதி அத்தகையது. ஆனால் காமினி மகாவித்தியாலயத்தில் கையெழுத்துப் போட்டிக்கு என் பெயர் இல்லையென்று திருப்பி அனுப்பி விட்டார்கள். மீண்டும் வவுனியா மகாவித்தியாலயத்திற்குத் திரும்பினேன். திரும்புகையில் அம்மாவின் விலையுயர்ந்த பார்க்கர் பேனாவையும் தொலைத்து விட்டேன்.
திரும்பிய என்னை டீச்சரின் பிள்ளையென்றோ என்னவோ அங்கு நடைபெறவிருந்த கட்டுரைப் போட்டிக்கு அனுமதித்தார்கள். அன்று நடைபெற்ற போட்டியில் தெரிவான முதல் மூன்று பேரில் நானுமொருவன். இதனைத்தொடர்ந்து பின்னர் நடைபெற்ற கட்டுரைப்போட்டியிலும் தெரிவு செய்யப்பட்ட முதல் மூன்றுபேரில் நானுமொருவன். உண்மையில் இவ்விரண்டு போட்டிகளிலும் முதலாவதாக வந்திருந்ததாகத்தான் எண்ணம். இவ்விதம் தெரிவான மூன்று பேரும் அடுத்து நடைபெற்ற மாவட்டரீதியிலான கட்டுரைப்போட்டியில் பங்கு பற்றினோம். அந்தக் கட்டுரைப்போட்டி நடைபெறுவதற்கு முன்னர் அது பற்றி உரையாற்றிய கல்வி அதிகாரி அம்முறை முதலாவதாகத் தெரிவுசெய்யப்படுபவர் மட்டும், மட்டக்களப்பில் நடைபெறவிருக்கும் அகில இலங்கைரீதியிலான தமிழ்த்தினக் கட்டுரைப்போட்டியில் பங்குபற்ற முடியுமென்று கூறியதும் , மட்டக்களப்பு நகர் செல்வதற்காக, எப்படியாவது அந்தக் கட்டுரைப் போட்டியிலும் முதலாவதாக வரவேண்டுமென்று நினைத்துக்கொன்டு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரையின் தலைப்பு: 'நான் இந்நாட்டின் பிரதமரானால் ..'. அம்முறை நானே முதலாவதாகத் தெரிவுசெய்யப்பட்டேன்.
இவ்விதமாகத் தெரிவு செய்யப்பட்ட நான், மட்டக்களப்பில் நடைபெறவிருந்த தமிழ்த் தினவிழாவில் கலந்து கொள்வதற்காக சுப்பிரமணியம் 'மாஸ்ட்ட'ருடனும் , அப்பாவுடனும் மட்டக்களப்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணமானேன். நீண்ட நேரமெடுத்த புகையிரதப் பயணமது. இடையில் நீண்ட பாலங்களினூடு புகையிரதம் சென்றபோது திகைப்பாகவிருந்தது. அவ்விதமான நீண்ட பாலங்களைக் காண்பது அப்போதுதான் முதல் தடவை. அதற்கு முன்னர் நான் பார்த்தது நாவற்குழிப் பாலத்தை மட்டுமே. அதுவொரு சிறிய பாலம். நீண்ட நேரமெடுத்த பயணமென்றாலும், நீண்ட பாலங்கள், இடையில் குறுக்கிட்ட மகாவலி கங்கை, வாவிகள் எல்லாம் பிரமிப்பையும் , ஆனந்தத்தையும் தந்தன.
2.
மட்டக்களப்பில் நாங்கள் தங்கியது கவிஞரும், எழுத்தாளருமான மஹாகவி (து.ருத்திரமூர்த்தி) மாளிகையில். அப்பொழுது அவர் மட்டக்களப்பில் உயர் அரச அதிகாரிகளிலொருவராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அரச அதிபருட்பட , அரச உயர் அதிகாரிகளுக்காக மிகப் பெரிய அரச மாளிகைகள் வாவியையடுத்து அமைந்திருந்தன. கவிஞர் மஹாகவியும் அத்தகையதொரு மாளிகையொன்றில் வசித்துக்கொண்டிருந்தார். இரு தளங்களைக் கொண்ட, முதற் தளத்திலும், இரண்டாம் தளத்திலும் பல அறைகளைக்கொண்ட அரச மாளிகையது. யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்த் தினவிழாப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக பல்வேறு பாடசாலைகளிலிருந்து வந்த பலர் அங்கு தங்கியிருந்தனர். நல்லூர்ப் பகுதியை அண்டிய பாடசாலையொன்றிலிருந்து நாடகப்போட்டிக்குப் பங்கு பற்றுவதற்காகவும் மாணவர்கள் பலர் வந்திருந்தார்கள். இதனால் மஹாகவியின் மாளிகை ஆரவாரத்துடன் விளங்கியது. அங்கு தங்கியிருந்த நாட்களில் அருகிருந்த வாவியில் மிதந்து கொண்டிருந்த 'ஜெல்லி ஃபிஷ்' (Jelly Fish)) பிடித்து விளையாடுவோம். அப்பொழுது கோடை விடுமுறை காலமாதலால் , கவிஞர் மஹாகவியின் குடும்பத்தவர்கள் அனைவரும் ஊருக்குச் சென்று விட்டிருந்தனர். ஒரு வாரம்வரையில் அங்கு தங்கியிருந்ததாக ஞாபகம் ஆனால் , என்னால் அந்தப் பயணத்தையும், கவிஞர் மஹாகவியுடனான சந்திப்பையும் மறக்கவே முடியாது.
இன்று பிரபல கவிஞராக அறியப்படும் முனைவர் சேரன், கவிஞர் மஹாகவியின் மகன், அப்பொழுது மாணவர். அவரது அறை சிறியதொரு நூலகத்தைக் கொண்டதாக விளங்கியது. கண்ணன் வெளியீடுகள் போன்ற பல சிறுவர் நூல்களை உள்ளடக்கியிருந்த நூலகமது. அங்கிருந்த நூல்களை வாசிப்பதற்கு அனுமதியளித்த மஹாகவி, வாசித்ததும் அவற்றை உரிய இடத்திலேயே வைக்கும்படியும் அறிவுறுத்தியிருந்தார். அவற்றிலொன்றை இழந்தாலும் சேரன் பொறுக்கமாட்டானென்பதையும் நினைவுறுத்தினார். ஆனால் தன்னிடமிருந்த அவரது நூல்களின் பிரதிகளைத் தந்தார். 'கண்மணியாள் காதை', 'குறும்பா' , தமிழகத்திலிருந்து வெளிவந்த 'அக்கரை இலக்கியம்','கவிஞன்' சில இதழ்கள் போன்றவற்றின் பிரதிகளைத் தந்ததாக ஞாபகம். அந்த 'அக்கரை இலக்கியம்' நூலில்தான் எனக்கு மிகவும் பிடித்த மஹாகவியின் கவிதைகளிலொன்றான 'புள்ளி அளவில் ஒரு பூச்சி' என்னும் கவிதையின் அறிமுகம் கிடைத்தது.
புள்ளி அளவில் ஒரு பூச்சி
- மஹாகவி -
புத்தகமும் நானும்,
புலவன் எவனோதான்
செத்த பின்னும் ஏதேதோ சேதிகள் சொல்ல
மனம்
ஒத்திருந்த வேளை!
ஓழுங்காக அச்சடித்த
வெள்ளைத் தாள் மீதில்,
வரியின் முடிவினிலே,
பிள்ளைத் தனமாய் பிசகாகப் போட்ட காற்
புள்ளியைக் கண்டு
புறங்கையால் தட்டினேன்.
நீ இறந்து விட்டாய்!
நெருக்கென்ற தென்நெஞ்சு
வாய் திறந்தாய், காணேன்,
வலியால் உலைவுற்றுத்
“தாயே’ என அழுத
சத்தமும் கேட்கவில்லை.
கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்டு
ஓர்
கீறாகத் தேய்ந்து கிடந்தாய்,
அக்கீறுமே
ஓரங்குலம் கூட ஓடியிருக்கவில்லை.
காட் டெருமை காலடியிற்
பட்ட தளிர்போல,
நீட்டு ரயிலில்
எறும்பு நெரிந்ததுபோல்,
பூட்டாநம் வீட்டிற் பொருள்போல
நீ மறைந்தாய்.
மீதியின்றி நின்னுடைய
மெய் பொய்யே ஆயிற்று
நீதியன்று நின்சா,
நினையாமல் நேர்ந்ததிது,
தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே!
காதில் அப்பூச்சி கதை ஒன்றே வந்துவந்து
மோதிற்று;
மீண்டும் படிக்க முடியவில்லை
பாதியிலே பக்கத்தை மூடிப்
படுத்துவிட்டேன்.
இது அநேகமானவர்கள் வாழ்வில் சாதாரணமாக நடைபெறும் நிகழ்வுகளிலொன்று. பல தடவைகள் புத்தகங்களைப் புரட்டும்போது உள்ளே இறந்து , உலர்ந்திருக்கும் பூச்சிகளைப் பார்த்திருப்போம். அவ்விதமானதொரு நிகழ்வு கவிஞரின் உள்ளத்தில் ஏற்படுத்திய பாதிப்பை எவ்விதம் அற்புதமான வரிகளில் கவிதையாகப் படைத்து விட்டார்! ஆனால் இங்கு கவிஞர் வரியொன்றின் முடிவில் பிள்ளைத்தனமாகப் போட்ட காற்புள்ளியென்று நினைத்துப் புறங்கையால் தட்டி விடுகின்றார். அப்பொழுதுதான் உணர்கின்றார் அதுவொரு பூச்சியென.
உண்மையில் இக்கவிதையை இரு விதமாகப் பொருள் கொள்ளலாம். ஏற்கனவே இறந்து கிடந்த பூச்சியொன்றை, புள்ளியாக எண்ணித் தட்டி, அது ஏற்கனவே இறந்ததுதெரியாமல், அது இறந்தது தன்னால்தானென எண்ணிக் கவிஞர் கவலையுறுவதாகக் கொள்ளலாம். அல்லது புள்ளியாகத் தென்பட்ட பூச்சி கவிஞரின் புறங்கை தட்டுதலால் இறந்துவிட , அது பற்றித் துயருற்ற கவிஞரின் உணர்வாகக் கொள்ளலாம். 'கூறிட்ட துண்டுக் கணத்துள் கொலையுண்ட' அந்தப் பூச்சி வலியால் உலைவுற்று வாய் கூடத் திறக்கவில்லை. 'காட்டெருமை காலடியிற் பட்ட தளிர்போல, நீட்டு ரயிலில் எறும்பு நெரிந்ததுபோல்' நெரியுண்டு கிடந்தது. அதனுடைய சா நீதியன்று என்று கவிஞரின் மனம் வருந்துகிறது. 'நினையாமல் நேர்ந்ததிது, தீதை மறந்து விட மாட்டாயோ சிற்றுயிரே' என்று அந்தப் பூச்சியிடம் மன்னிப்புக் கேட்கும் கவிஞரால் மேலும் புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. கவிஞரின் உயிர்கள் மீதான அன்பினைப் புலப்படுத்தும் அற்புதமான கவிதையிது.
அடுத்தது மஹாகவியின் குறும்பா. இளம்பிறை வெளியீடாக வெளிவந்ததென்று நினைக்கின்றேன். அதிலொரு குறும்பா வரிக்கு வரி இன்னும் ஞாபகத்திலிருக்கிறது. அது இதுதான்:
மாடியிலே நள்ளிரவில் மீனாள்
மைத்துனரை ஏற்ற வழி காணாள்.
வாடி நின்று கண்ணீரை
வார்த்திடவும், நீந்தி அதன்
ஊடு சென்றானா மகிழ்ந்து போனாள்.
அப்பொழுது எனக்கு இதன் அர்த்தம் சரியாகப் புரியாமலிருந்தது. அதற்கு கவிஞரே விளக்கமும் தந்தார். மீனாள் வார்த்த கண்ணீர்க் குளத்தினூடு மைத்துனர் நீந்தி மாடிக்குச் சென்று விடுகின்றாராம். அதனைக் கேட்டதும் சிரிசிரியென்று சிரித்தேன். குறும்பாவின் நோக்கமும் அதுதானே.
கவிஞரின் 'கண்மணியாள் காதை' நூல் நான் நாட்டை விட்டு நீங்கும் வரையில் என்னிடமிருந்தது. 'சடங்கு' என்று 'விவேகி'யில் எழுதிய தனது குறுங்காவியத்தின் நாயகனான செல்லையாவை வைத்து , லடீஸ் வீரமணிக்காக வில்லுப்பாட்டாக , 'சடங்கு' காவியத்தையே இன்னுமொரு கோணத்தில் எழுதிய துயர காவியமிது. குறுங்காவியமானாலும் அதில்வரும் பாத்திரங்களான கண்மணியாளையும், செல்லையனையும் படித்தவர்களால் மறக்கவே முடியாது. அவ்வளவிற்குப் பாத்திரப்படைப்பு நன்கு அமைந்திருந்த காவியமது. அறிஞர் அ.ந.கந்தசாமிக்கே மேற்படி 'கண்மணியாள் காதை' நூலினை அர்ப்பணித்தவர் கவிஞர் மஹாகவி. நூலின் இறுதியில் இவ்விதமாகக் கூறியிருப்பார்:
'கண்மணியாள் காதையை
எழுதும்படி என்னைத் தூண்டி,
அதனை நான் படிக்கக் கேட்டு
மகிழ்ந்தாலும்,
வில்லோ டிசைக்கக் கேளாது
மறைந்த
அன்பனும் அறிஞனும் கவிஞனுமாகிய
அ. ந. கந்தசாமிக்கு
இந்நூல் அஞ்சலி - மஹாகவி'
'கண்மணியாள் காதை' தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் லடீஸ் வீரமணி குழுவினர்ரால வில்லுப்பாட்டாக மேடையேறியபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அது பற்றி 'ஈழநாடு' பத்திரிகையின் வாரமலரில் வெளிவந்த 'தேனி'யின் விமர்சனம் 'காவியத்துக்கு ஒரு மஹாகவி; வில்லுப்பாட்டுக்கு ஒரு வீரமணி' என்ற தலைப்புடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்படி 'கண்மணியாள் காதை'யும் எனக்கு மிகவும் பிடித்த காவியம். அதில்வரும் 'கண்மணி', 'செல்லையன்' ஆகியோர் மறக்க முடியாதவர்கள். ஒரு விதத்தில் வாசிக்கும்போது சிலப்பதிகாரத்தை நினைவுக்குக் கொண்டுவரும் குறுங்காவியமது. காவியத்தை இரு கூறுகளாகக் கவிஞர் பிரித்திருப்பார். முதலாம் கூறு: வெண்ணிலவு காவியத்தின் இன்பமான பக்கத்தை விபரித்தால், இரண்டாம் கூறான 'காரிருள்' காவியத்தின் துன்பகரமான பக்கத்தை விபரிக்கும். அக்காவியத்தில் என்னை மிகவும் கவர்ந்த வரிகளாகக் கீழுள்ளவற்றைக் குறிப்பிடலாம்:
"யாழைக் கொணர்ந்திங்கு மீட்டிய தால், ஒரு
யாசகன் மன்ன னிடம் இருந்தோர்
பாழைப் பரிசு பெற் றான்!" எனக் கூறிடும்
பண்டைப் பழங்கதை கேட்டதுண்டு -
பாழைப் பரிசு பெற் றாலும், அப் பாலையைப்
பச்சைப் படுத்திப், பயன் விளைத்து,
வாழத் தொடர்ந்து முயன்றத னால், இன்று
வையத் துயர்ந்தது யாழ்ப்பாணம்!
"ஆழக் கடலுள் அமிழ்ந்தன வே எங்கள்
அன்றைப் பெரும்புகழ்; ஆதலினால்,
வீழத் தொடங்கி முடிந்தன வாம் பல
விந்தை!" என்றோர் கதை வந்ததுண்டு -
வீழத் தொடங்கிய விந்தை முழுவதும்
மீட்டுக் கொடுத்த பெருமையிலே
'ஈழத் தமிழகம்' என்று நிலம் தனில்
இன்று நிமிர்ந்தது யாழ்ப்பாணம்!
"ஆறு நடந்து திரிந்த வயல்கள்
அடைந்து கதிர்கள் விளைந்திட, வான்
ஏறி உயர்ந்த மலை ஏதும் இல்லையே!"
என்ற ஒரு கதை சொல்வதுண்டு -
"ஏறி உய்ர்ந்த மலை இல்லை ஆயினும்
என்ன? இருந்தன தோள்கள்!" என்றே
கூறி, உழைத்த பின் ஆறிக், கலைகளில்
ஊறிச் சிறந்தது யாழ்ப்பாணம்!
---
ஆழ நீர் கொண்டு வாழ இளைஞர்
அகழ்கின் றார் தம் நிலத்தினைத் தானே!
--
காவிய நாயகியான கண்மணியாள் பற்றி வரும் வரிகள்:
பெண் ணிருக்கும் அழகை யெல்லாம்
பேணி வைத்த பொற் குடமாம்.
விண்ணவர்க்கும் எட்டாது
விளைந்திருக்கும் நிலத் தமுதாம்.
கண் ணிமிர்த்தி அவள் பார்த்தால்,
கண்டவர்கள் மறப்ப தில்லை.
மண் மிதித்தம் மயில் நடந்தால்,
மண் கூடச் சிலிர்ப்ப துண்டு.
திங்கள் அவள் முகமளவு.
செழுங் கூந்தல் மழை யளவு.
தங்கம் அவள் நிறமளவு.
தயிர் அவளின் மொழியளவு.
கொங்கை இரு செம்பளவு.
கொடி இடையோர் பிடியளவு.
பொங்கும் அவள் அங்கம் ஒரு
பொல்லாத பாம்பளவு!
செல்லையன் தனது வயலில் துலா மிதிக்கின்றான். கண்மணியாளோ நாற்று நடுகின்றாள். அவர்களுக்கிடையில் நிகழும் உரையாடலைக் கீழுள்ள வரிகள் புலப்படுத்தும். செல்லையனுக்கும் , கண்மணியாளுக்குமிடையில் நிலவும் காதலை விபரிக்கும் வரிகள் இவை.
"நாற்றுப் பிடி எடுத்து
நாற்று நட்டு நான் இருக்க,
நாற்றுப் பிடி பிடியில்
நழுவுவது தான் எதற்கு?"
"சேற்றில் சதிர் மிதித்துச்
சின்ன இடை நீ வளைக்க,
நேற்றுச் சிரித்தபடி
நின்றவள் நி னைப்பெனக்கு!"
"நேற்றுச் சிரித்துவிட்டு
நின்றவள் நி னைப்பிருந்தால்,
காற்றிற் பறந்து விடும்
கதை விடுதல் தான் எதற்கு?"
"காற்றில் பறந்து வரும்
காவியத்தோ டாவி செல்ல,
ஏற்றத் துலா நடந்தே
இளைக்கும் உடல் இங்கெனக்கு!"
"ஏற்றத் துலாவினிலே
ஏறி நிற்கும் மன்னவர்க்குச்
சேற்றிற் கிடக்கும் ஒரு
சிறிய மலர் ஏன்? எதற்கு?"
"சேற்றிற் கிடைக்கும் அத்
திரு மலரோ இல்லை யென்றால்,
சோற்றைப் பிற கெதற்கு?
சொல்லடி இப் போதெனக்கு!"
மேற்படி காவியத்தின் முடிவு துயரகரமானது. செல்லையன் ஊர் இளைஞர்களுடன் கூடி, கலட்டியான தரையை உழைப்பால் பண்படுத்தி, அங்கு அவ்வூரின் தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்களைக் குடி அமர்த்துகின்றான். தந்தையின் எதிர்ப்பையும் மீறி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கண்மணியாள்மீது காதல் கொண்டு, அவளையே திருமணம் செய்து வாழ்க்கையைத் தொடங்குகின்றான். இவ்விதமாகக் காதலர்கள் தம் மணவாழ்வைத் தொடங்கும் சமயத்தில் நீண்டகாலமாகக் கண்மணியாளின் அழகில் ஆசை வைத்திருந்த சந்திக்கடை முதலாளி, அடியாட்களை அனுப்பி, செல்லையனைக் கொலை செய்து, கண்மணியாளைக் கவர்ந்து சென்று, தன் ஆசைக்கு இணங்க வைக்க முயல்கின்றான். அப்பொழுது அங்கிருந்து தப்பிச் செல்லும் கண்மணியாளின் நிலையைக் கவிஞர் இவ்விதம் விபரிப்பார்:
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்,
ஓர் இரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
சேலையின் முன்றானை காற்றினிலே
செல்ல, இடை மின் நுடங்க,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
பால் முகத்தின் மேல் வியர்வை
பாய, விழி நீர் பெருக,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
இவ்விதம் ஓடுமவள் முத்துமாரியம்மன் ஆலயத்தை அடைகின்றாள். அவளுக்கேற்பட்ட அநீதிக்கெதிராகக் கவிஞர் மாரியம்மனிடம் நீதி கேட்கின்றார்.
மாரியம்மன் வாசல் வழி
வந்தாளே கண்மணியாள்.
ஊரின் ஒரு புறத்தே
உறங்கினையோ மாரியம்மா?
நல்லான் ஓர் நல்லவளை
நாடுவது நாத்திகமோ?
எல்லாரும் ஒத்த குலம்
என்று சொன்னால் ஏற்காதோ?
ஏழை இருக்க நிலம்
ஈதலும் ஓர் ஏமாற்றோ?
வேள்வி மறுப்பதுவும்
வேண்டாத வெஞ் செயலோ?
பாழை விளைத்திடுதல்
பாதகமோ, பேசடியே!
கூடி உழைத்தல்
கொடுமை என்றோ கூறுகிறாய்?
ஏடி, முத்து மாரியம்மா,
எடுத்தொரு சொல் சொல்லடியோ!
'மெல்லியலார்' வாழ
விடாயோ பெருமாட்டி?
சொல்லடியே என் தாயே,
சுறுக்காகச் சொல்லடியோ!
புல் லிதழே பிய்ந்து
புயற் காற்றிற் போனது போல்-
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்,
ஓர் இரண்டு நாய் குரைக்கப், பேய் துரத்த,
ஓடுகின்றாள், ஓடுகின்றாள்...
ஓடும் கண்மணியாள் தனது கணவனின் கொலையுண்ட உடலைக் காண்கின்றாள்:
காதலனைக் கண்டு கொண் டாளே!
முலை
மீ த றைந்தாள்; நிலம் மீ து ருண்டாள்.
சிறு
மாது கண் செந் நீர் வழிந் தாளே!
ஒரு
சேதி, கீழ்ப் புற வானில் ஞாயிறு
நீதி காண எழுந்ததே!
இருள்
சாதி போலே போய் ஒ ழிந்ததே!
"ஒளி
வாழ்க!" என்றும், "இருள் வீழ்க!" என்றும்,
கிளை
மீது சேவல் கூவு கின்றதே!
இவ்விதமாகச் செல்லும் மெற்படி குறுங்காவியம் பின்வருமாறு முடியும்:
ஒத்துழைத்தால், ஒன்று பட்டால்,
உயர்வு பல காட்டி நின்றால்,
ஒத்தவர் தாம் யாரும் என்றே
ஒருத்தியின் மேல் அன்பு வைத்தால்,
பித்தரின் கைக் கோடரி போய்ப்
பிளந் தெறிய, நல்லவர்கள்
செத்திடத் தான் வேண்டுவதோ?
செக முடையோர், செப்புவிரே!
இவ்விதமாக கவிஞர் மஹாகவியின் 'கண்மணியாள் காதை' என்னும் குறுங்காவியத்தின் அறிமுகத்தினையும் மேற்படி எனது முதலாவது மட்டுநகர்ப் பயணத்தின் மூலம் பெற்றுக்கொண்டேன்.
'இன்னவைதாம் கவிஎழுத ஏற்றபொருள் என்று, பிறர்
சொன்னவற்றை நீர்திருப்பிச் சொல்லாதீர்! சோலை, கடல்
மின்னல், முகில், தென்றலினை மறவுங்கள்; மீந்திருக்கும்
இன்னல் உழைப்பு ஏழ்மை உயர்வு என்பவற்றைப் பாடுங்கள்'
3.
அம்முறை தமிழ்த்தின விழா மட்டுநகர் புனித மைக்கல் கல்லூரியில் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் தரப்பட்ட தலைப்புகளிலொன்றாக பிரயாண அனுபவம் பற்றிய தலைப்பிருந்தது. வேறும் பல தலைப்புகள் தந்திருந்தார்கள். ஆனால் அந்தப் பிரயாணம் பற்றிய தலைப்பையே விரும்பி எடுத்துக்கொண்டேன். அதில் 'வான் பார்க்கும் வடக்கிலிருந்து , மீன் பாடும் தேன் நாடு நோக்கிய எனது பயணமென்று தொடங்கி, தமிழ்த்தின விழாவுக்காக மட்டக்களப்பு வந்திருந்த எனது அந்த முதற் பயணத்தைப் பற்றியே விரிவாக விளக்கி எழுதியிருந்தேன். அதில் எனக்கே முதற் பரிசு கிடைத்தது. இரண்டாவது பரிசு ஏ.எல்.பரீத் பெயருள்ள கல்முனை சாகிறாக் கல்லூரி மாணவரென்று நினைக்கின்றேன், அவருக்குக் கிடைத்திருந்தது. அந்த மாணவரே பேச்சுப் போட்டியிலும் முதலாவதாக வந்திருந்தார்.
முதற் பரிசு பெற்ற எனக்கு நூல்கள் சிலவற்றையும், கேடயமொன்றினையும் பரிசாகத் தந்திருந்தார்கள். நூல்களில் சில: வீ.சீ.கந்தையாவின் 'மட்டக்களப்புத் தமிழகம்', வடமோடி, தென் மோடி சம்பந்தமான நூலொன்று, புலவர் பெரியதம்பிப்பிள்ளையின் வெண்பா நூலொன்று, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் இலங்கைச் சிறுகதைகளின் தோற்றமும், வளர்ச்சியும்' .. மேலும் சில நூல்கள். கேடயத்தினை வழங்கியிருந்தவர் பின்னர் பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய பொத்துவில் கனகரத்தினம்.
4.
இதன் பின்னர் மேலும் சில தடவைகள் மட்டுநகர் சென்றிருக்கின்றேன். எனது மொறட்டுவைப் பலகலைக் கழகத்தில் எனது கட்டடக்கலைப் பட்டப்படிப்பு முடிந்து, 'நகர அதிகார சபை'யில் பணி புரிந்து கொண்டிருந்த சமயம், பணி நிமித்தமாக ஓரிரு தடவைகள் சென்றிருக்கின்றேன். இன்னுமொரு சமயம் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்த சமயம், என் சக மாணவராகவிருந்த மோகன் (இவர் பல்கலைக்கழக விடுதியிலும் ஒரு வருடம் என்னுடன் தங்கியிருந்தவர்) அருளானந்தத்தின் திருமணத்திற்காகச் சென்றிருந்தேன். தாமரைக்கேணி வீதியில் வசித்த குலயேந்திரன் என்னும் கட்டடக்கலைஞரொருவரின் சகோதரியொருவரைத்தான் மோகன் திருமணம் செய்திருந்தார். மோகன் அருளானந்தம் பின்னர் கட்டடத்திணைக்களத்தில் கட்டடக்கலைஞராகப் பணிபுரிந்தவர். நன்றாகப் பாடுவார். எம் பல்கலைக்கழக நாட்களில் அவரைப் பாடச்சொல்லிக் கேட்டுகொண்டிருப்போம். இவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றார்.
'மீன் பாடும் தேன் நாடு நோக்கிய' எனது பயணம் பற்றிய அந்த நாள் ஞாபகங்களை இப்பொழுது நனவிடை தோயும்போது, இப்பொழுதும் அவ்வனுபவங்கள் பசுமையாக உள்ளத்தில் பதிந்திருக்கின்றன. அன்றைய காலகட்டத்திற்கே சென்று விட்ட மகிழ்ச்சியில் உள்ளம் குதித்துக் கும்மாளமிடுகிறது. மானுட இருப்பே எண்ணங்களின் தொகுப்புத்தானே என்று உள்ளம் வியந்து, உணர்ந்து கூத்தாடுகிறது!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..