நான் எப்பொழுதுமே ஒரு குழந்தையிலக்கிய நூலொன்றினை அணுகும்போது ஒரு குழந்தை தன் சொந்த அனுபவத்தில் எவ்விதம் அந்நூலினை அணுகுமோ அவ்விதமே என் சொந்த அனுபவங்களின் அடிப்படையில் அணுகுவேன். என் பால்ய காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த குழந்தைக் கதைத் தொகுப்புகளில் முக்கியமான அம்சம். அத்தொகுப்பின் அட்டைப்பட ஓவியமும், அதில் பாவிக்கப்பட்டுள்ள வர்ணங்களும், உள்ளே ஆக்கங்களுக்குப் பாவிக்கப்பட்டுள்ள ஓவியங்களும் மற்றும் கூறப்படும் மொழியும்தாம். எனக்கு எப்பொழுதுமே நூலொன்று பிடிப்பதாகவிருந்தால் மேற்கூறப்பட்டுள்ள சகல அம்சங்களும் முக்கியமானவை. எனக்கு மட்டுமல்ல குழந்தைகள் அனைவருக்கும் இக்கூற்று பொருந்தும். குழந்தைப்பருவத்தில் குழந்தையொன்றின் சிந்தையில் நூலொன்றின் அட்டைப்படம் கற்பனைச்சிட்டினைச் சிறகடிக்கப் பறக்க வைக்கின்றது. அந்நூலிலுள்ள ஓவியங்களிலுள்ள உருவங்கள் அவை மானுடர்களாகவிருக்கட்டும் அல்லது ஏனைய உயிரினங்களாகவிருக்கட்டும் அவற்றைப்பார்க்கும் குழந்தையொன்றின் உள்ளத்தில் களிப்பினைத தருகின்றன. சிறு வயதில் கண்ணன் சிறுவர் சஞ்சிகையில் வெளியாகும் சிட்டுக்கள் போன்ற உயிரினங்களைப்பற்றிய குழந்தைக் கவிதைகளை இரசிக்கும் அதே ஆர்வத்துடன் நான் அப்படைப்புகளுடன் வெளியாகும் ஓவியங்களையும் இரசிப்பேன். இவற்றைப்போல் அப்படைப்புகளை வெளிப்படுத்தும் எளிமையான மொழி நடையும் எனக்கு மிகவும் பிடித்தவை. வாண்டுமாமா, குழந்தைக்கவிஞர் அழ.வள்ளியப்பா போன்றோரின் படைப்புகளின் சிறப்புக்கு முக்கியக்காரணம் அவற்றை விபரிக்கும் எளிய, இனிய மொழிநடையே. இவ்விதமான என் மற்றும் குழந்தைகளின் பொதுவான உளவியலின் அடிப்படையிலேயே நான் இவ்வகையான குழந்தைப்படைப்புகளையும் சரி, நூல்களையும் சரி அணுகுவது வழக்கம். அதே அணுகல் முறையினைத்தான் அண்மையில் 'டொராண்டோ' நகரில் வெளியான எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் குழந்தைகளுக்கான நூல்களுக்கும் கையாண்டேன். அவற்றில் இங்கு நான் எடுத்துக்கொண்ட நூல் அவர் எழுதிய 'சிறுவர் கதைகள்' என்னும் நூலே.
எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா இலங்கையில் தெல்லிப்பளையினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்..யாழ் மகாஜனாக் கல்லூரி முள்ளாள் மாணவி. இலங்கைப் பல்கலைக்கழகத்துப் பேராதனை வளாகத்துப் பட்டதாரி. தற்போது 'டொராண்டொ'க் கல்விச்சபையின் தமிழ் மொழி ஆசிரியராகவும், மொழி மதிப்பீட்டளராகவும் மற்றும் பாட விதான அபிவிருத்திக் குழுவின் அங்கத்தவர்களிலொருவராகவுமிருக்கின்றார். இவரது இந்தப்பின்னணி இவ்வகையான நூல்களை எழுதுவதற்கு மிகவும் உதவும்; உதவியிருக்கின்றது. இந்நூலுக்குரிய ஓவியங்களை , அட்டைப்படங்களுட்பட (முன் அட்டை மற்றும் பின் அட்டை) வரைந்திருப்பவர் ஓவியர் ஜீவா ( ஜீவநாதன்).
கனடாவின் நூற்றி ஐம்பதாவது பிறந்த நாளுக்குச் சமர்ப்பணமாக வெளிவந்திருக்கும் இச்சிறுவர் கதைகள் நூலின் முன்னுரையில் நூலாசிரியர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா சிறுவர் கதைகள் என்னுமிந்நூல் ஏன் பாடல்களை, நாடகத்தையும் உள்ளடக்கியுள்ளது என்பதற்கான காரணத்தையும் கூறுகின்றார்:
"உரைநடையில் எழுதப்படுபவைதான் கதை எனப்பொதுவாகக் கூறப்பட்டாலும், ஒவ்வொரு பாடலுக்குள்ளும், நாடகத்துக்குள்ளும் கூட ஒரு கதை இருக்கின்றது என்றதொரு பார்வையில் பதினான்கு கதைகள், மூன்று பாடல்கள் மற்றும் ஒரு நாடகம் ஆகியவற்றை இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன"
எனவே ஏன் சிறுவர் கதைகள் என்று கூறிவிட்டு நூலாசிரியர் நாடகமொன்றினையும், பாடல்கள் மூன்றினையும் இந்நூலில் சேர்த்திருக்கின்றார் என்று யாரும் ஆச்சரியப்படத்தேவையில்லை. மேலும் கதைகள் என்னும் தொகுதியின் அட்டைப்படக்கதையாக அப்பாடல்களிலொன்றினையும் ஏன் சேர்த்தார் என்று வியப்புறவும் தேவையில்லை. இவ்விதமாகப் பாடல்களையும் , நாடகத்தையும் அவை கூறும் கதைகள் காரணமாகக் கதைகள் என்னும் பிரிவுக்குள் அடக்கியதுடன், ஏன் அவற்றை அவ்வாறு உள்ளடக்கினார் என்பதற்கும் தர்க்கரீதியாகக் காரணமொன்றினையும் முன் வைக்கும் நூலாசிரியரின் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது. அவர் வேண்டுமானால் அப்பாடல்களும், நாடகமும் கூறும் கதைகளைக் கதைகள் என்னும் எழுத்து வடிவத்தில் தந்திருக்கலாம். அப்படிச்செய்யாமல் அவற்றின் வடிவங்களிலேயே தந்ததுடன் அதற்கான காரணமொன்றினையும், அதுவும் தர்க்கரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமொன்றினையும் வைக்கின்றார். இது ஆசிரியரின் வழமைக்கு மாறாகச் சிந்திக்கும் பண்பினை, பெட்டிக்குள்ளிருந்து சிந்திக்காமல் அதற்கு வெளியேயிருந்தும் சிந்திக்கும் பண்பினை வெளிப்படுத்துகின்றது. அத்துடன் இவற்றை வாசிக்கும் குழந்தைகளையும் அவ்விதமாகச் சிந்திக்கச் சிறு வயதிலேயே தூண்டுவதற்குல் வழிவகுக்கின்றது. ஆரோக்கியமான விடமிது.
மேற்படி ஆசிரியரின் பண்பினை நூலில் மேலும் பல இடங்களில் காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக நூலிலுள்ள பல கதைகள் நாம் என் பால்யகாலத்துப்பருவத்தில் படித்த நீதியைப்போதிக்கும் உருவகக்கதைகள்தாம். புகழ்பெற்ற பஞ்சத்தந்திரக் கதைகள் , ஈசாப் கதைகள், கர்ணபரம்பரைக்கதைகள் போன்ற கதைகள்தாம். ஆனால் இவற்றிலும் சில கதைகளின் முடிவுகளை ஆசிரியர் மிகுந்த ஆரோக்கியமான நோக்கில் மாற்றியுள்ளார். வழக்கமான கதைகளின் முடிவுகளிலிருந்த எதிர்மறையான சிந்தனையினை, முடிவினை மாற்றி அம்முடிவுகளை ஆரோக்கியமான திசையில் முடித்திருக்கின்றார். உதாரணமாக குரங்கு அப்பம் அபகரித்த கதையினை நாம் அனைவரும் எம் சிறு வயதில் அறிந்து மகிழ்ந்திருக்கின்றோம். அதில் பூனைகளிரண்டு தமக்குக் கிடைத்த அப்பத்தைச் சமமாகத் தமக்குப் பிரித்தெடுப்பதற்காகக் குரங்கொன்றின் துணையினை நாடும். ஆனால் தந்திரமான அந்தக் குரங்கோ அப்பத்தை அப்பூனைகளிடமிருந்து முழுதாகவே அபகரிக்கும் எண்ணத்துடன், தராசொன்றில் ஒரு துண்டுகளாக்போடும். சமமற்ற துண்டுகளால் எப்பொழுதும் தராசு சமனற்றே காணப்படும். அதனைச் சமப்படுத்துவதாகக் கூறி மாறி மாறித் துண்டுகளைக்கிள்ளி உண்டு அனைத்தையும் உண்டு விடும். கடைசியில் இருந்ததையும் இழந்து விடும் பூனைகளின் நிலை பரிதாபத்தைத்தான் தரும். ஆனால் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா இத்தொகுப்பிலுள்ள கதையில் முடிவினை அவ்வாறு முடிக்காமல் அக்குரங்கின் கபட சிந்தனையை உணர்ந்து, அப்பம் முற்றாக முடிந்து விடுவதற்குள் விழிப்படைந்துத் தாமே இருக்கும் அப்பத்தைப் பிரித்தெடுப்பதாகக் கூறித்தமக்குள் பங்கிட்டுக்கொள்கின்றன. இந்த அப்பமும், குரங்கும் கதை எனக்கு ஒரு விதத்தில் எம் நாட்டு நிலையினைத்தான் நினைவூட்டியது. ஒரு நாட்டின் மக்களாகிய நாம் , எமக்கிடையிலுள்ள பிரச்சினைகளை, பிளவுகளை எமக்குள்ளேயே பேசித்தீர்ப்பதற்குப் பதிலாக உபகண்ட , பூலோக அரசியல் சக்திகளை நாடியிருக்கின்றோம். இறுதியில் எமக்குரிய முழுப்பங்குகளையும் குரங்கிடமிழந்த பூனைகளாகத்தாம் ஆகப்போகின்றோம். என்றுதான் குரங்குகளிடமிருந்து அப்பத்தை மீட்டு நாம் எமக்குள்ளேயே பங்கிட்டுக்கொள்ளப்போகின்றோமோ?
ஆசிரியர் இவ்விதம் முடிவினை மாற்றிய இன்னுமொரு கதை : புகழ் பெற்ற பாட்டி வடை சுட்ட கதை. நாம் அறிந்து மகிழ்ந்த பாட்டி வடை சுட்ட கதையில் பாட்டியின் வடையைக் கவ்விக்கொண்டு செல்லும் காக்கை, நரியின் புகழ் மொழியினால் மகிழ்ச்சியுற்றுப் பாடுவதற்காக வாயைத்திறந்து இருந்ததையும் இழந்து விடும். ஆனால் இங்குள்ள கதையிலோ முடிவு சிறிது மாறியிருக்கும். அவ்விதம் பாட்டியிடம் வடையினைத் தட்டிப்பறித்த காகத்திடமிருந்து வடையினைத் தந்திரமாகத் தட்டிப்பறிக்கும் நரி பற்றைக்குள்ளிருந்ட்து வெளிப்படும் ஓநாயினால் கிடைத்த வடையினையும் விட்டு விட்டு துண்டைக்காணோம் , துணையைக் காணோமென்று ஓட்டமெடுக்கின்றது.
இவ்விதம் சில நீதிக்கதைகளின் முடிவுகளைத் தாம் ஏன் மாற்றி அமைத்தார் என்பதற்கு ஆசிரியர் நூலின் 'நுழை வாயிலில்..' பகுதியில் பின்வருமாறு கூறுவார்: "ஏற்கனவே அறியப்பட்ட சில நீதிக்கதைகளை அப்படியேயும், நேர்மறைரீதியில் வாழ்க்கைப்பெறுமானங்களைக் கற்பிக்கும் நோக்கில் ஒரு சிலவற்றைச் சற்று மாற்றியும் எழுதியிருக்கின்றேன்". இவ்விதமான ஆசிரியரின் ஆரோக்கியமான, 'பெட்டிக்குள்ளிருந்து வெளியே' சிந்திக்கும் நோக்கு, இச்சிறுவர் கதைகள் நூலின் முக்கிய சிறப்பு. அதுவே வழக்கமான சிறுவர் கதைத்தொகுப்புகளிலிருந்து இத்தொகுப்பினை வேறுபடுத்துவதாகவும் அமைந்து விடுகின்றது.
தொகுப்பிலுள்ள எனக்குப்பிடித்த கதைகளிலொன்று நரியின் கொக்கு கதையாகும். அதில் கொக்கினை விருந்துக்கு அழைக்கும் நரி விருந்தினைத் தட்டைத்தட்டில் கொடுத்து கொக்கினை அவமானப்படுத்தும். பதிலுக்கு நரியினை விருந்துக்கழைக்கும் கொக்கு நீண்ட சிறிய வாயுள்ள குவளையில் விருந்தினைக்கொடுத்து நரியினை உண்ண விடாமல் செய்து நரியினை அவமானப்படுத்தும். நான் என் பால்யப் பருவத்தில் வாசித்த கதையின் முடிவு அவ்விதமாகத்தானிருக்கும். இரண்டு மிருகங்களுமே ஒன்றையொன்று பழி வாங்கும் வகையில் முடிவிருக்கும். ஆனால் இத்தொகுப்பிலுள்ள கதையின் முடிவிலோ தனக்குத் தட்டையான பாத்திரத்தில் உணவு தந்த நரியினைக் கொக்கு தன்னிருப்பிடம் அழைத்து நரியும் இலகுவாகச் சாப்பிடுவதற்கேற்ற தட்டையான பாத்திரத்தில் உணவு கொடுத்து இன்னா செய்த நரிக்கு நன்மையினைச் செய்து விடும் வகையில் கதை முடிந்திருக்கும். ஆரோக்கியமான சிந்தனை. இக்கதையின் இறுதியில் போதிக்கப்பட்ட நீதி 'ஒருவர் பொறை. இருவர் நட்பு' என்று முடித்திருப்பார். உண்மையில் இக்கதையின் முடிவில் இக்கதை போதிக்கும் நீதி “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்று போட்டிருந்தால் அது இன்னும் நன்றாகவிருந்திருக்கும். காரணம் ஒருவர் பொறை என்ற பழமொழியில் பொறை என்றால் என்ன அர்த்தம் என்று விளங்கப்படுத்த வேண்டும். விளங்கப்படுத்தாமல் விட்டால் வாசிக்கும் குழந்தைகளுக்குக் கதையின் மேலுள்ள நாட்டம் போய் பொறையென்றால் என்னவென்று சிந்திக்கும் நிலை தோன்றி விடலாம். பொறை என்றால் தமக்கு இழைக்கப்படும் இன்னல்களைத்தாங்கி, அவற்றை மன்னித்துச் செயற்படுதல் என்று விளங்கப்படுத்த வேண்டும். ஆனால் இன்னா செய்தாரை அவர் நாண நன்னயம் செய்தல் என்பது இலகுவாக விளங்கி விடும். எனவே குழந்தைகளுக்குக் கதைகளை மிகவும் எளிமையாகக் கூறும் அதே சமயம், அவற்றுக்கான நீதியினைப்போதிக்கும் பழமொழிகளும் மிகவும் எளிமையானவைகளாகவிருப்பது மிகவும் அவசியமென்பதென் கருத்து. மேலும் இக்கதை கூறும் நீதி குழந்தைகளைப்பொறுத்தவரையில் மிகவும் ஆரோக்கியமானதாகும். பழிக்குப்பழி என்னும் நோக்கில சிந்திக்காமல் இன்னா செய்தாருக்கும் நன்மை செய்யக்கூறும் ஆரோக்கியமான நீதியைக் குழந்தைகளுக்குப் போதிக்கும் இது பொன்ற கதைகள் நிறையக்குழந்தைகளுக்கான கதைத்தொகுப்புகளில் வருவதவசியம்.
தொகுப்பிலுள்ள கதைகளைத் தேவைக்கு அதிகமாக நீட்டி வளர்க்காமல், மிகவும் சுருக்கமாக ஆனால் எளிமையான மொழி நடையில், குழந்தைகளைக் கவரும் வகையில் எழுதியிருப்பது ஆசிரியர் குழந்தைகளின் உளவியலை நன்கு புரிந்து எழுதியிருப்பதை வெளிப்படுத்துகின்றது. அத்துடன் ஒவ்வொரு கதைக்கும் உரிய, சிந்தையைக் கவரும் ஓவியங்களைச் சேர்த்திருப்பதும் நூலின் சிறப்பினை அதிகரிக்க வைக்கின்றது. ஓவியர் ஜீவாவின் ஓவியங்களும், அட்டைப்பட ஓவியமும் நிச்சயம் நூலினை வாசிக்கும் குழந்தைகளுக்குக் குதூகலத்த்தை ஏற்படுத்தும்; கற்பனைச்சிறகினையடிக்க வைத்திடும்.
இவ்விதமான குழந்தைகளுக்கான நீதிக்கதைகளைச் சுருக்கமாக, எளிய மொழி நடையில், உரிய ஓவியங்களுடன் தந்த ஆசிரியர் எதற்காக நூலின் முதற் கதையாக 'நரியும் திராட்சைப்பழ'க்கதையினைத் தெரிவு செய்தார் என்பது தெரியவில்லை. இக்கதையில் எட்டா உயரத்தில் தொங்கும் திராட்சைப்பழங்களுக்காக எவ்வளவு தடவைகள் நரி முயற்சி செய்து பார்த்திருக்கும். இறுதியில் சீச்சீ இந்தப்பழம் புளிக்கும், எட்டாப் பழம் புளிக்கும் என்று நரி ஏமாற்றத்துடன் திரும்புவது வாசிக்கும் குழந்தைகளுக்கு எதிர்மறையான எண்ணத்தினை ஏற்படுத்தி விடாதா? முயற்சி செய்த நரிக்கு ஏன் அதன் முயற்சிக்கான பலன் கிடைக்கவில்லை என்னுமொரு கேள்வியினை ஏற்படுத்தாதா? சில கதைகளில் முடிவுகளை நேர்மறையான முடிவுகளாக மாற்றிய நூலாசிரியர் நிச்சயம் நூலின் முதற் கதையிலும் அவ்விதம் மாற்றியிருந்தால், எட்டாப்பழம் புளித்திருக்காது. நிச்சயம் இனித்திருக்கும். விடா முயற்சி வெற்றி தரும் என்னும் நீதியினையும் குழந்தைகளுக்குப் போதித்திருக்கும்.
இது போல் இன்னுமொரு கதை என் நெஞ்சினைப் பாதித்தது. என்னையே அக்கதை பாதித்திருந்தால் நிச்சயம் வாசிக்கும் குழந்தைகளையும் நிச்சயம் பாதிக்கும் என்றே எண்ணுகின்றேன். அக்கதை 'கீரியும் பாம்பும்'. வீட்டில் எஜமானியம்மா இல்லாத சமயம் அவள் வளர்த்த கீரி அங்கு வரும் பாம்பிடமிருந்து குழந்தையைக் காப்பாற்றும். பாம்பைக் கொன்றதால் வாயில் பாம்பின் இரத்தத்துடன் காட்சியளிக்கும் கீரியைக் கண்ட எஜமானியம்மா கீரி தன் குழந்தையைக் கொன்று விட்டதாகக் கருதி அதனைத் தான் வைத்திருந்த தண்ணீர்க்குடத்தினால் தாக்கி உட் சென்றால் அங்கே குழந்தை ஆரோக்கியத்துடன் விளையாடியபடி இருக்கும். ஆனால் வளர்ப்புப்பிராணியான அந்தக்கீரியோ அதற்குள் இறந்திருக்கும். அவளது குழந்தையைக் காப்பாற்றிய அந்தக் கீரிக்கு இந்த நிலை வந்திருக்க வேண்டாம். எனக்கே அந்தக் கீரியின் நிலை சிறிது கவலையினைத்தருகிறதென்றால் நிச்சயம் குழந்தைகளுக்கும் தரும். இக்கதையின் முடிவினையும் சிறிது மாற்றி, கீரியையும் தப்ப வைத்து, வாசிக்கும் குழந்தைகளையும் மகிழ வைத்திருந்தால் நன்றாகவிருந்திருக்கும். ஏன் நூலாசிரியர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா அதனைச் செய்யவில்லை? மேலும் இந்நூலானது கனடாவில் வாழும் குழந்தைகளுக்காக எழுதப்பட்டுள்ளதால் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் கூடவே சேர்த்திருக்கலாம். அது நூலின் பயனை இன்னும் அதிகரித்திருக்கும்.
சுருக்கமாகக் கூறினால் ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் இச்சிறுவர் கதைகள் நூல் வழக்கமான சிறுவர் கதைகள் நூலிலிருந்து சிறிது மாறுப்பட்ட நூல். வழக்கமாக நாம் எம் சிறு வயதிலிருந்தே வாசித்து, மகிழ்ந்து, அறிந்திருந்த நீதிக்கதைகளை உள்ளடக்கியிருந்தாலும், சில கதைகளில் அவற்றின் முடிவுகளை ஆரோக்கியமான வகையில், நேர்மறையானவைகளாக மாற்றி அமைத்திருப்பதன் மூலமும், கதைகளைக்கூறும் பாடல்களை, நாடகத்தினைக் கதைகளாக உள்ளடக்கியிருப்பதன் மூலமும் இத்தொகுப்பு வேறுபடுகின்றது. அதே சமயம் எளிமையான மொழி நடையில் சுருக்கமாக அமைந்த , ஓவியங்களுடன் கூடிய நீதிக்கதைகள் நிச்சயம் வாசிக்கும் குழந்தைகளின் வாசிப்பனுபவத்தை , அவ்வாசிப்புத்தருணங்களை அவர்தம் வாழ்வின் அழியாத கோலங்களாக மாற்றி அமைக்குமென்பதிலும் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்துகளுமில்லை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.