அண்மையில் நடைபெற்ற 'யுகதர்மம்' நிகழ்வின் போது பேர்டோல்ட் பிறெக்ட் எழுதிய 'The Exception and the Rule' நாடகத்தின் பெயரை மொழிபெயர்த்தவர்கள் எதற்காக 'யுகதர்மம்' என்று மொழிபெயர்த்தார்கள் என்றொரு கேள்வி பலருக்கு எழுந்திருக்கக்கூடும். பெயரை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் இவ்விதம் மொழிபெயர்த்திருக்கலாமா என்றொரு கேள்வி சிலருக்கு எழுந்திருக்கும். ஏற்கனவே திறனாய்வாளர்கள் சிலருக்கு இக்கேள்வி எழுந்ததை முதலில் 'யுகதர்மம்' மேடையேற்றியபோது வெளிவந்த நாடகம் பற்றிய விமர்சனங்களில் அவதானிக்க முடிகின்றது.
அது பற்றி கருத்தைக் கூறுவதற்கு முன்னர் 'யுகதர்மம்' நாடகத்தை மொழிபெயர்த்தவர்கள் யார்? என்ற கேள்விக்கு முதலில் வருவோம். நாடகம் வெளிவந்த காலகட்டத்தில் நாடகத்தை மொழிபெயர்த்தவராக நிர்மலா நித்தியானந்தனையும், பாடல்களை மொழிபெயர்த்தவராக அமரர் ச.வாசுதேவனையுமே குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் நாடக மொழியாக்கத்தைச் செய்தவர் ச.வாசுதேவன் என்பதை அண்மையில் நாடகத்தின் இயக்குநர் பாலேந்திராவுடன் கதைத்துக்கொண்டிருந்தபோது அறிய முடிந்தது. 'யுகதர்மம்' நூலின் தொகுப்புரையிலும் பாலேந்திரா அவர்கள் "வாசுதேவனே முதலில் முழு நாடகத்தையும் மொழிபெயர்த்துத்தந்தார். அப்போது நாங்கள் இருவரும் கொழும்பில் வசித்து வந்தோம். 'யுகதர்மம்' என்ற தலைப்பும் அவராலேயே இடப்பட்டது." என்று குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் "நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க நிர்மலா நித்தியானந்தன் பிரதியைச் செம்மைப்படுத்தினார்" என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அத்துடன் "முதல் நாடக மேடையேற்றத்தின்போது தமிழாக்கம் நிர்மலா நித்தியானந்தன் என்றும் பாடல்கள் மட்டுமே வாசுதேவன் என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த நாடகத்தை வாசுதேவன் முதலில் மொழிபெயர்த்தமையை மு.நித்தியானந்தன் எமது சுவிஸ் நாடக விழா - 1994- மலரில் பதிவு செய்துள்ளார்." என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். இவற்றின் அடிப்படையில் வாசுதேவனே முதலில் நாடகத்தை முழுமையாக மொழிபெயர்த்தவர் என்ற முடிவுக்கு வருவதில் எந்தவித ஆட்சேபணையுமில்லை நிர்மலா நித்தியானந்தன் எந்தவித எதிர்க்குரலும் எழுப்பாதவிடத்து. இதுவரையில் அவர் அவ்விதம் எதிர்க்குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.
மேற்படி 'யுகதர்மம்' நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய ஆங்கில-தமிழ் மொழிபெயர்ப்பில் வல்லுநரான எழுத்தாளர் என்.கே.மகாலிங்கமும், நாடகவியலாளர் பி. விக்கினேஸ்வரனும் நாடகத்தின் பெயரை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல் 'யுகதர்மம்' என்று மொழிபெயர்த்ததைச் சிலாகித்துப் பேசினர். பி.விக்கினேஸ்வரன் நாடகம் கூறும் கதை தற்போது நடைபெறும் கலியுகத்தின் தர்மத்தை வெளிப்படுத்துவதால் 'யுகதர்மம்' என்னும் பெயர் பொருத்தமானது என்று குறிப்பிட்டிருந்தார். கலியுகத்தில் அதர்மங்கள் மேலோங்கும் என்பது நம்பிக்கை.
சரி , இப்போது இந்நாடகத்தைச் சிறிது பார்ப்போம். எண்ணெய் நாடி ஊர்கா என்னும் ஊருக்கு வழிகாட்டி, கூலி ஆகியோருடன் செல்லும் வியாபாரி இடையில் வழிகாட்டியை வேலையிலிருந்து அனுப்பி விடுகின்றான். இறுதியில் தண்ணீர்ப்போத்தலை அவனுக்குக் கொடுக்க வரும் கூலியை, கூலி தன்னைக் கத்தியால் குத்த வருவதாக எண்ணிச் சுட்டுக்கொன்று விடுகின்றான். நடைபெறும் வழக்கை விசாரிக்கும் நீதிபதியும் வியாபாரிக்குச் சார்பாகத் தீர்ப்பு கூறிவிடுகின்றார். முதலாளித்துவ அமைப்பில் நீதியும் ஆளும வர்க்கத்துக்குச் சார்ப்பாகத்தானிருக்கும் என்று பிறெக்ட் கூறுவதாகக் கருதலாம். இந்த அமைப்பின் தர்மம் இதுவே. இவ்வமைப்பின் நீதி இதுவே. இதனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ள நாடகமே பிறெக்டின் 'யுகதர்மம்'.
பிரபல திறனாய்வாளரான கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் தினகரன் 3.02.1980 பதிப்பில் எழுதிய நாடகம் பற்றிய விமர்சனத்தில் " முதலாவது நாடகத்துக்கு 'யுகதர்மம்' என்று ஏன் பெய்ரிட்டார்களோ தெரியாது. 'விதியும் புறநடையும்' என்பது பொருத்தமானது என்பதே என் கருத்து" என்பார். மேற்படி 'யுகதர்மம்' நூலில் இத்திறனாய்வும் இடம் பெற்றுள்ளது.
என்னைப்பொறுத்தவரையில் நேரடி மொழிபெயர்ப்பை விட யுகதர்மம் என்னும் தலைப்பு கவித்துவமுடையதாகப்படுகின்றது. நாடகம் கூறும் கருத்தின் சாரத்தைப் பிரதிபலிப்பதற்கே நாடக மொழிபெயர்ப்பாளர் கூடிய கவனம் செலுத்தியுள்ளார் என்பதையே அத்தலைப்பு வெளிப்படுத்துகின்றது. நாடகம் வெளிப்படுத்துவது என்ன? இவ்வமைப்பின் நீதி அதர்மமானது. ஆனால் அதுவே இவ்வமைப்பின் நீதி. தர்மம். நாம் வாழும் இந்த யுகத்தின் தர்மம். நாடகவியலாளர் கூறுவது போல் அதனை இந்துக்களின் கலியுகக்கோட்பாட்டுக்கு ஒப்பிட்டும் அணுகலாம். ஆனால் ஜெர்மனி மொழியில் நாடகத்தை எழுதிய பிறெக்ட் அது பற்றிச் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. அவர் மார்க்சியச் சார்புள்ள ஒருவரென்பதால், ஆதிக்க வர்க்கமாக விளங்கும் முதலாளித்துவ சமுதாயத்தில், நிலவும் நீதி,ம் சட்டங்கள் யாவும் முதலாளித்துவ வர்க்கத்துக்குச் சார்பாகத்தானிருக்கும் என்பதை பார்வையாளர்களுக்குப் புரிய வைப்பதற்காக எழுதியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்நாடகத்தை எழுதிய காலகட்டத்தில் அவர் நாடகங்களைக் கற்பித்தலின் பொருட்டு எழுதியிருப்பதால் அதுவே அவரது நோக்கமாக இருந்திருக்க வேண்டும். எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் நாடகம் பற்றி தினகரன் (13.01.1980) பதிப்பில் எழுதியிருப்பது போல் ' அவரது எபிக் தியேட்டர் என்பது நாடகத்துடன் பார்வையாளர்கள் ஒன்றிப்பதைப் பிரக்ஞை பூர்வமாகத் துண்டித்து, அவர்களுக்கு அறிவூட்டுவதையே நோக்கமாகக் கொண்டது.' என்று கூறுவதை இத்தருணத்தில் கவனத்தில் கொள்வது நல்லதே.
இவ்விதமானதொரு அணுகுமுறையுடன் நாடகத்தின் முடிவினை ஒருகணம் நோக்குவோம். அது கீழ்வரும் பாடலுடன் முடிகின்றது;
"இப்படி முடிந்ததோ பயணத்தின் கதை ஒன்று.
ஒரு பயணத்தின் கதையை நீர் கேட்டீரா?
ஒரு பயணத்தின் கதையை நீர் பார்த்தீரா?
மரபாய்ப் போனது எது?
வழக்கமாய் ஆனது எது?
என்பதை இங்கே பார்த்தீரா?
ஒரு சொல் கேட்கின்றோம்.
மரபாய் இருந்தாலும்
பிளவைக் காணுங்கள்.
வழக்கமாயிருந்தாலும்
துணுகக்குற வேண்டும் நீர்.
நீர் நியதியாகக் கண்டதெல்லாம்
நெட்டூரம் என உணர்வீர்.
இதுவோ யுகதர்மம்.
இல்லை என்பீரேல்
புதுவிதி செய்யுங்கள்."
இந்த , நாடகத்தின் இறுதிப்பாடல், நாடகம் கூற வந்த கருத்தினை முழுமையாகக்கூறி விடுகின்றது. அக்காலகட்டத்தில் நாடகாசிரியர் பிறெக்டிற்கு இருந்த நாடகம் பற்றிய கருத்தினை அழகாக வெளிப்படுத்தும் வரிகள் இவை.
"நீர் நியதியாகக் கண்டதெல்லாம்
நெட்டூரம் என உணர்வீர்.
இதுவோ யுகதர்மம்."
என்று பார்வையாளரைச் சிந்திக்கத்தூண்டுகின்றார் பிறெக்ட். 'இதுவோ யுகதர்மம்' என்று கேள்வி கேட்க வைக்கின்றார் அவர். இவையெல்லாம் அதர்மம் என்று உணர்ந்தால் , இது யுகத்தின் தர்மம் இல்லையென்று உணர்ந்தால் அவர் பார்வையாளருக்குக் கூறுகின்றார்: "புதுவிதி செய்யுங்கள்"
ஆம்! புது விதி செய்யுங்கள். நாடகம் கூறும் இந்த யுகத்தின் தர்மம் தர்மம் இல்லையென்று உணர்ந்தால், அதர்மம் என்று உணர்ந்தால் 'புதுவிதி செய்யுங்கள்'.
'யுகதர்மம் அற்புதமான தலைப்பு. கவித்துவம் மிக்க தலைப்பு. நாடகத்தின் சாரத்தைப் பிழிந்தெடுத்து வைத்த தலைப்பு. சிலவேளைகளில் நேரடி மொழிபெயர்ப்புகளை விட, படைப்பொன்றின் சாரத்தினடிப்படையில் செய்யப்படும் மொழிபெயர்ப்புகளும் சிறக்கின்றன என்பதை வெளிப்படுத்தும் தலைப்பு 'யுகதர்மம்'.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.