அண்மையில் முகநூலில் எழுத்தாளர் கோ.நாதன் "புலம் பெயர்ந்தவர் முள்ளிவாய்க்கால் அவலம் பற்றி படைத்தால் புலம் பெயர்வு இலக்கியமாகுமா?" என்றொரு கேள்வியினைக் கேட்டிருந்தார். அது பற்றிய எனது கருத்தும் அதனைத்தொடர்ந்து முகநூலில் நடைபெற்ற சிறு கருத்துப்பரிமாற்றம் பற்றிய தகவல்களை இங்கு பதிவு செய்கின்றேன்.
எனது பதில்: "புலம் பெயர்ந்து வாழும் தமிழர் படைக்கும் எதுவுமே புலம் பெயர் இலக்கியம் என்ற வரையறைக்குள்தான் வரும். புலம்பெயர் இலக்கியம் என்பது புலம் பெயர்ந்து வாழும் எவரும் படைக்கும் இலக்கியம். அவ்விலக்கியம் அக்கரை மண்ணின் வாழ்வினை விபரிக்கலாம். இழந்த மண்ணின் மீதான கழிவிரக்கத்தை வெளிப்படுத்தலாம். பிறந்த மண்ணைக்களமாகக்கொண்டும் படைக்கப்படலாம்.
புகழ்பெற்ற யூத இனத்தைச்சேர்ந்த அமெரிக்கரான ஜேர்சி கொசின்ஸ்கி இரண்டாம் உலக மகாயுத்தக் காலத்தில் பெற்றோரிடமிருந்து பிரிந்த நிலையில் , சிறுவனாக ஐரோப்பிய நாடுகளிலெல்லாம் தப்பிப்பிழைப்பதற்காக அந்நியர்களுடன் அலைந்து திரிந்திருக்கின்றார். யூதச்சிறுவனான அவரைப்பெற்றோர் முகம் தெரியாத அந்நிய மனிதர்களுடன் அவராவது தப்பிப்பிழைக்கட்டுமென்று அனுப்பி விடுகின்றார்கள். . தன் இளமைக்கால அனுபவங்களை அவர் தனது புகழ் பெற்ற நாவல்களிலொன்றான 'The Painted Bird' என்னும் நாவலில் விபரித்திருக்கின்றார். இவ்விதம் சிறுவனான அவர் அலைந்து திரிந்த சமயம் யூத மக்கள் படும் துன்பங்களை, அவர்கள் மீது நடைபெறும் படுகொலைகளை, யூதப்பெண்கள் மீது புரியப்படும் கூட்டுப்பாலுறவு வன்முறைகளை, இவை போன்ற கொடிய அனுபவங்களையெல்லாம் அப்படி அப்படியே வாசிப்பவர் தம் இதயங்களை உலுக்கும் வகையில் விபரிக்கின்றார் அந்த நாவலில் ஜேர்சி கொஸின்ஸ்கி. இன்று அந்தப்படைப்பு அமெரிக்க இலக்கியத்தின் முக்கிய படைப்புகளிலொன்றாகக் கருதப்படுகின்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் குணா கவியழகன், சோபா சக்தி, தமிழ்நதி, சயந்தன், விமல் குழந்தைவேலு... எனப் புலம் பெயர்ந்த படைப்பாளர்கள் பலரின் படைப்புகளின் கதைக்களங்களும் பிறந்த மண்ணின் மீதான சமூக அரசியல் நிகழ்வுகள்தாமே. அவர்கள் யாவரும் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்கள் என்றுதானே அழைக்கப்படுகின்றார்கள். அவர்கள் படைக்கும் இலக்கியம் புலம்பெயர் தமிழ் இலக்கியமாகத்தானே அழைக்கப்படுகின்றது."
மேற்படி 'தி பெயின்டட் பேர்ட்' நாவலைப்படைத்த ஜேர்ஸி கொஸின்ஸ்கிதான் இன்னுமொரு புகழ்பெற்ற நாவலான 'Being There' நாவலையும் படைத்தவர். அது பீட்டர் ஷெல்லர்ஸ் நடிப்பில் திரைப்படமாகவும் வெளிவந்து புகழ்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
நண்பர்களே! நீங்கள் உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
அசோக் யோகன் கண்ணமுத்து: புலம் பெயர் இலக்கியம்’ என்பது எவ்வித நிபந்தனைகளும் அற்றது.
ஆனால், ‘புகலிட இலக்கியம்’ என்பது, புலம் பெயர்ந்து வாழும் ஒருவர், வாழ நேர்ந்த சூழலில், அவர் எதிர்கொள்ளும் , அவதானிக்கும் அரசியல் -சமுக –சலாச்சார- பண்பாடுகள் –புவியல்- பொருளாதார மற்றும் தன் இருத்தல் காணும் நெருக்கடிகள் இன்ன பிற பற்றியது.
வ.ந.கிரிதரன்: புகலிட இலக்கியம் புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு பிரிவு. சொந்த மண்ணில் வாழ வழியற்று, புகலிடம் நாடிப்புலம் பெயர்ந்தவர்கள் படைக்கும் இலக்கியம் புகலிடம் இலக்கியம். ஆனால் புகலிடம் நாடிப்புலம் பெயர்ந்தவர்கள் புதிய இடங்களில் காலூன்றிய பின்னர், அவர்கள், அவர்களது சந்ததியினர் படைக்கும் இலக்கியம் புகலிட இலக்கியம் என்பதற்குப் பதிலாகக் கனடியத் தமிழ் இலக்கியம், ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கியம்... என அவர்கள் வாழும் மண்ணின் இலக்கியமாக அழைக்கப்படலாம். அழைக்கப்படலாம். இது பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட வேண்டுமென்று நினைக்கின்றேன் அசோக்.
தங்கம் சின்னத்தம்பி: புகலிட மற்றும் புலம் பெயர் இலக்கியம் என்ற பதங்கள் பற்றிய வரைவிலக்கணங்களை முதலில் தெளிவு படுத்திக் கொள்வதும் நல்லது
வ.ந.கிரிதரன்: புகலிட இலக்கியம் புலம்பெயர் இலக்கியத்தின் ஒரு பிரிவு. சொந்த மண்ணில் வாழ வழியற்று, புகலிடம் நாடிப்புலம் பெயர்ந்தவர்கள் படைக்கும் இலக்கியம் புகலிடம் இலக்கியம். இது என் நிலைப்பாடு.
உமையாழ் பெரிந்தேவி: திரைப்படங்களில் இதற்கு நிறைய சான்றுகள் இருக்கின்றன. எழுத்துக்களிலும்... ஒரு கட்டத்தில் பூக்கோ அல்ஜீரியாவில் இருந்து எழுதிய கோட்பாட்டுவியல்கள் கட்டுரைகள் கூட புலம்பெயர் வகையறாக்குள் வந்துவிடும். ங்காசி அடிச்சி அமெரிக்காவில் இருந்து கொண்டு நைஜுரியா பற்றி எழுதுவதெல்லாம் புலம் பெயர் இலக்கியங்களாகவே கொள்ளப்படுகிறது. Kola Boof. Salman Rushdi இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். கலீல் ஜிப்றான் கூட அந்த வகைக்குள் வந்துவிடுவார். அவரது the broken wings அமேரிக்காவில் இருந்து கொண்டு எழுதப்பட்டது
முருகேசன்: குடியேறும் நாட்டில் படும்பாடுகளை பேசுவது மட்டுமே புலம்பெயர் இலக்கியம்...தனது தாயகத்தின் குரலை அந்த மண்ணின் நிலப்பரப்புகளில் நிகழும் கதை அந்த மண்ணின் இலக்கியமாகவே போற்றப்படவேண்டும்....
கடங்கநேரியன் பெருமாள்: விரும்பியும் விரும்பாலும் வேறு நிலங்களில் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் எப்போதும் தம் முதுகில் நிலத்தைச் சுமந்தலைகின்றனர். கலைஞர்கள் எல்லை தாண்டியவர்கள் எனச் சொல்லப்பட்டாலும் அவர் தம் படைப்புகளின் வழியே தம் வாழ்வை வாழத் தலைப்படுகின்றனர் / இழந்த வாழ்வை மீளக் கட்ட பிரயத்தனப்படுகின்றனர். படைப்புகளில் சத்தியம் இருந்தால் போதும் எங்கிருந்து எழுதினால் தான் என்ன
தியாகராசா ராஜ ராஜன்: ஓர் சிறிய திருத்தம் கிரிதரன். கோ நாதன் கவிஞராகவே அறியப்பட்டவர் .
வ.ந.கிரிதரன்: கவிஞர்கள், நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், விமர்சகர்கள்..... .போன்ற அனைவருமே எழுத்தாளர்கள் என்னும் பொதுவான பிரிவினுள் அடங்குவர் என்பது என் கருத்து.
கால சுப்பிரமணியம்: புலம் பதிப்பகம் தி பெபிண்டட் பேர்ட் நாவலைத் தமிழில் வெளியிட்டுள்ளது
வ.ந.கிரிதரன்: தகவலுக்கு நன்றி நண்பரே. இந்நாவலைப்பற்றிக்கூறியபோது (இது நடந்தது தொண்ணூறுகளின் இறுதியிலென்று நினைக்கின்றேன்.) நண்பர் ஸ்நேகா பாலாஜி நாவலை அனுப்பும்படி கூறியிருந்தார். அதனை அனுப்பியிருந்தேன். பின்னர் சில வருடங்களுக்கு முன்னர் அந்நாவல் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானதாக அறிவித்திருந்தார். நீங்கள் குறிப்பிடும் பதிப்பகம் வெளியிட்ட நாவலா அது அல்லது வேறொரு பதிப்பகம் மூலமும் இந்நாவலின் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளதா என்பது தெரியவில்லை. பாலாஜி தற்போது சுட்டி விகடனில் பணியாற்றுகின்றார். அவரிடம் கேட்டால் தெரியும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.