வெகுசன பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்காகத் தொடர்ச்சியாக எழுதும் நிர்ப்பந்தத்திலுள்ள எழுத்தாளர்கள் பலர் தம் எழுத்துகளில் அடிக்கடி தவறுகள் பலவற்றை இழைத்து விடுகின்றார்கள். வாசகர்களைக் கவர வேண்டுமென்ற நோக்கில் இவர்கள் வார்த்தை ஜாலங்களைப் புரியும்போது, தம்மையறியாமலேயே இழைத்துவிடும் இவ்வகையான தவறுகள் படைப்பொன்றில் பல இருப்பின் அப்படைப்பின் தரம் தாழ்ந்துபோய் விடும் அபாயமிருப்பதைப் புரிந்துகொண்டால், எழுதும் ஒவ்வொரு வார்த்தைகளையும் தர்க்கரீதியாகச் சிந்தித்து எழுதினால், இவ்வகையான தவறுகளுக்கு இடமில்லை. அண்மையில் விகடன் தீபாவளி மலரில் வெளியான எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் 'கோப்பைகள்' சிறுகதையினை வாசித்தபோது இவ்வகையான எண்ணங்கள் ஏற்பட்டன.
ஒரு புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழ் அகதி ஒருவனைப் பற்றிய கதையிது. நெல்லியடி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் அவன். அவனைப் பற்றிய அறிமுகத்தில் இவ்வாறு கூறப்பட்டிருக்கின்றது:
"இலங்கை முழுக்க ஒரே சமயத்தில் நடந்த ஓ லெவல் பெரிய சோதனையில் எட்டுப் பாடத்திலும் எனக்கு அதி உயர் மதிப்பெண் கிடைத்தது. அடுத்த நாள் வந்த வீரகேசரி பேப்பரில் குலசேகரத்தின் படத்தை முதல் பக்கத்தில் பெரிசாகப் போட்டிருந்தார்கள். வட மாகாணத்தில் அவன் முதலாவதாக வந்திருந்தான். மதிப்பெண்கள் கூட்டுத்தொகையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் என்னை வென்று விட்டதால் அவனைப்பாராட்டி எழுதியிருந்தார்கள். இரண்டாவதாக வந்த என்னைப் பற்றி ஒரு வரி இல்லை. அப்பாவால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கவே முடியவில்லை. அன்று வேலைக்குப் போகாமல் வீட்டுக்கும் வராமல் வீதி வீதியாக அலைந்தார். அப்பொழுதுதான் அப்பாவுக்கு அது எத்தனை இழப்பு என்பது எனக்குப் புரிந்தது.
குலசேகரம் மேல் படிப்புக்குக் கொழும்பு போய்விட்டான். இந்தத் தோல்வியை எப்படியும் சரிக்கட்ட வேண்டுமென்று அப்பா தீர்மானித்தார். பல்லியின் வயிறு முட்டை வெளியே தெரிவதுபோல, அப்பா மூளையிலே ஓடுவது எனக்குத் தெரியும். அவருடைய முடிவைக் கேட்டு அம்மாவுக்கும் எலும்புத் தங்கச்சிக்கும் ஒரே அதிர்ச்சி. 'நீ கனடாவுக்கு போய்ப். அங்கே படிச்சு பெரிய டொக்டராகத் திரும்பு. உன்ரை மதிப்பு இங்கே ஒருவருக்கும் தெரியல்லை' என்றார் அப்பா. "
இவ்விதமாகக் கனடா செல்வதற்காக விமானமேறும் கதாநாயகன் மொன்ரியாலுக்கு வந்திறங்கினான். அப்பொழுது அவனைப் பற்றிக் கூறும் வார்த்தைகள் சில கீழே:
" எனக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லை. என்னிடம் சொந்தமாக இருந்தது 10 ஆங்கில வார்த்தைகள்தான்.'
இவ்விதமாகக் கனடாவில் இருபத்து ஐந்து வருடங்களாகக் கோப்பை கழுவும் தொழில் ஒன்றினையே பார்க்கும் ஈழத்தமிழன் ஒருவனைப் பற்றி கதை தொடர்ந்து செல்கிறது.
விகடன் புகழ்பெற்ற வெகுசன இதழ். அதில் வெளிவரும் படைப்புகளை வரிக்கு வரி சரி பிழை பார்ப்பதற்கு ஆசிரியர் குழு இருப்பதாக எண்ணியிருந்தேன். அப்படியில்லை போல் தெரிகிறது. 'எட்டுப் பாடத்திலும்' என்று வருகிறது. எட்டுப் பாடங்களிலும் என்று வந்திருக்க வேண்டும். '10 ஆங்கில வார்த்தைகள்தான்.' என்பது '10 ஆங்கில வார்த்தைகள்தாம்' என்றுதான் இலக்கணரீதியாக வந்திருக்க வேண்டும். ஆனால் நீண்ட காலமாகப் பலர் 'தான்' பாவிப்பதால், ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எனக்கு வந்த கேள்விகள் இவையல்ல. அவை:
இலங்கை முழுக்க ஒரே சமயத்தில் நடந்த ஓ லெவல் பெரிய சோதனையில் எட்டுப் பாடங்களிலும் அதி உயர் மதிப்பெண் கிடைத்த மாணவன் அவன். க.பொ.த. (சாதராண) பரீட்சையில் தோற்றும் எட்டுப் பாடங்களிலும் எடுக்கக்கூடிய அதிகூடிய பெறுபேறுகள் அதி உயர் மதிப்பெண்கள்தாம். (Distinction D). கதையின் நாயகனான இந்த மாணவன் க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதி விசேட சித்திகள் பெற்று சாதனை புரிந்திருக்கின்றான். அவனுக்குப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பான க.பொ.த (உயர்தரம்) வகுப்புக்குச் செல்வதில் எந்தவிதத்தடைகளுமில்லை. ஆனால் மந்திகை வைத்தியசாலையில் வாகன ஓட்டுநராக வேலை பார்க்கும் அவனது தந்தைக்கோ மகன் க.பொ.த (சாதாரண) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதி விசேட சித்திகளைப் பெற்றதில் எந்தவிதப் பெருமையுமில்லை. தன் மகனை விட ஒரு மார்க் கூட இன்னொரு மாணவன் பெற்று விட்டதைக் கண்டு கப்பலே கவிழ்ந்து விட்டதுபோல் கலங்குகின்றான் அவன்.
அதனை விபரிக்கும் 'குலசேகரம் மேல் படிப்புக்குக் கொழும்பு போய்விட்டான். இந்தத் தோல்வியை எப்படியும் சரிக்கட்ட வேண்டுமென்று அப்பா தீர்மானித்தார்.' என்னும் வரிகளை வாசித்தபொழுது வாசிப்பவர்களுக்கு, குறிப்பாகத் தமிழகத்திலுள்ளவர்களுக்கு ஏற்படும் எண்ணங்கள் பின்வருவனவாக அமைவதற்குச் சாத்தியங்களுள்ளன.
இலங்கையில் க.பொ.த (சாதாரண) பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் அதி விசேட சித்திகள் பெற்றாலும் மேல் படிப்பு படிக்க முடியாமல் போகலாம். ஏனென்றால் கதையின் நாயகனைவிட ஒரு மார்க் கூட எடுத்த குலசேகரம் என்னும் மாணவன் மேல் படிப்புக்காகக் கொழும்பு போய் விட்டானென்றும், அதனால் மனமுடைந்த ஒரு மார்க் குறைய எடுத்த மாணவனின் தந்தை அதனைச் சரிக்கட்ட வேண்டுமென்று தீர்மானிப்பதாகவும் கதையில் விபரிக்கப்படும் வரிகள் வருவதால் அவ்வாறு எண்ணலாம்.
அனைத்துப் பாடங்களிலும் அதி விசேட சித்திகளை எடுத்த மாணவன் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பிலும் மிகவும் இலகுவாக அதி விசேட சித்திகளை எடுப்பதற்கு வாய்ப்புகளுள்ளன. கொழும்பு சென்றுதான் மேல் படிப்பு படிக்க வேண்டுமென்றில்லை. உண்மையில் யாழ்ப்பாணப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் க.பொ.த. (சாதாரண0 பரீட்சை முடிந்ததும் கொழும்பு சென்று மேற்படிப்பு படிப்பதில்லை.
எனக்கு இன்னும் விளங்காத விடயம்: எதற்காக மந்திகை வைத்தியசாலையில் வாகன ஓட்டுநராக வேலைபார்க்கும் மாணவனின் தந்தை மாணவனின் சாதனை கண்டு பெருமையுறாமல் இவ்விதம் இயற்கைக்கு முரணாக நடந்து கொள்ள வேண்டும். ஒருவேளை மந்திகை வைத்தியாசாலையில் பணி புரிவதாலோ?
சிறுகதையில் " எனக்கு உதவி செய்ய ஒருவரும் இல்லை. என்னிடம் சொந்தமாக இருந்தது 10 ஆங்கில வார்த்தைகள்தான்.' என்றும் வரிகள் வருகின்றன. கல்விப் பொதுத்தராதரப் பரீட்சை எடுக்கும் மாணவர்கள் நிச்சயம் எடுக்க வேண்டிய ஒரு பாடம் ஆங்கிலம். அனைத்துப் பாடங்களிலும் மேற்படி மாணவன் அதி விசேட சித்திகளைப் பெற்றிருப்பதால் அந்த மாணவன் ஆங்கிலத்திலும் அதி விசேட சித்தியினையே பெற்றுள்ளான். இவ்விதம் ஆங்கிலத்தில் அதி விசேட சித்தியினைப் பெற்றுள்ள மாணவனுக்கு தெரிந்த ஆங்கில வார்த்தைகள் 10 ஆங்கில வார்த்தைகள்தாம். நம்பக்கூடியதாக இல்லையே.
மேலும் ' வட மாகாணத்தில் அவன் முதலாவதாக வந்திருந்தான். மதிப்பெண்கள் கூட்டுத்தொகையில் ஒரு மார்க் வித்தியாசத்தில் என்னை வென்று விட்டதால் அவனைப்பாராட்டி எழுதியிருந்தார்கள்' என்றும் வருகின்றது. எங்களது காலத்தில் க.பொ.த( சாதாரண) பரீட்சை முடிவுகள் இவ்விதம் புள்ளிகளுடன் பத்திரிகைகளில் வெளியாவதாக ஞாபகமில்லை. ஆனால் இப்போதெல்லாம் இவ்விதம் முடிவுகள் வெளிவருகின்றனவோ தெரியவில்லை.
நிச்சயமாக இந்தச் சிறுகதையினை வாசித்துத் தமிழகத்து வாசகர்கள் பலர், இலக்கிய ஆளுமைகள் பலர் கோப்பை கழுவிப் பிழைக்கும் புலம் பெயர்ந்த தமிழனின் நிலை கண்டு உள்ளம் வெதும்பிக் கண்ணீர் வடித்திருப்பார்கள்.