- வாசித்தவை, யோசித்தவை, வாசித்து யோசித்தவை எனப்பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியது இந்த 'வாசிப்பும், யோசிப்பும்' பகுதி. -
யாழ் இந்துக்கல்லூரி: புண்ணயலிங்கம் 'மாஸ்டர்'!
நான் யாழ் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலகட்டத்தில் அங்கு ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த இலக்கிய ஜாம்பவான்கள் பலர் ஆசிரியர்களாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். சொக்கன், தேவன் (யாழ்ப்பாணம்) ஆகியோரைக் குறிப்பிடலாம். பண்டிதர் கணபதிப்பிள்ளை என்பவரும் அவ்வப்போது தமிழப்பத்திரிகைகளில் இலக்கியக் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்ததாக ஞாபகம். ஆனால் இவர்கள் யாரிடமும் எனக்குக் கல்வி கற்கச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதில்லை. ஆனால் இவர்களில் தேவன் (யாழ்ப்பாணம்) அவர்களின் 'மணிபல்லவம்' என்னிடம் இருந்தது. ஆங்கில 'கிளாஸி'க்குகளிலொன்றான 'ரொபேர்ட் லூயிஸ் ஸ்டீவென்சன்' எழுதிய 'புதையல் தீவு' (Treasure Island) நாவலின் தமிழாக்கமது. சுவையாக மொழிபெயர்ப்பு இருந்ததாக ஞாபகம். ஏனெனில் அச்சமயம் 'மணிபல்லவம்' நாவலை விரும்பி வாசித்திருக்கிறேன்.
யாழ் இந்துக் கல்லூரி என்றதும் எனக்கு நினைவில் வரும் ஆசிரியர்களிலொருவர் புண்ணியலிங்கம் 'மாஸ்டர்'. இணுவில் பக்கமிருந்து வந்தவரென்று ஞாபகம். உயரமான ஆகிருதி. சிரித்த முகமும், சந்தனப்பொட்டுமாகக் காட்சியளிப்பார். அவர் சிரிக்கும்போது வாயெல்லாம் பற்கள் தெரியும். விகடன் 'கார்ட்டூன்'களில் வருபவர்கள் சிரிப்பதுதான் ஞாபகத்துக்கு வரும். அவர் எங்களுக்கு ஒன்பதாம் வகுப்பில் பெளதிகவியல் பாடம் எடுத்தவர். அந்த ஒரு வருடம்தான் அவரிடம் நான் பாடம் எடுத்திருக்கின்றேன். ஆனால் அவர் மறக்க முடியாத ஆசிரியர்களிலொருவராக என் நினைவில் பதிந்து விட்டதற்குக் காரணம் அவர் பாடங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறைதான். அவர் கற்பிக்கும்போது கற்பிக்கும் விடயங்களை நடைமுறையில் செய்து காட்டிக் கற்பிப்பதில் விருப்பமுள்ளவர்.
ஒருமுறை 'டைனமோ' எவ்விதம் வேலை செய்கிறதென்று காட்டுவதற்குத் தனது சைக்கிளை வகுப்பறைக்குக் கொண்டுவந்து 'டைனமோ' எவ்விதம் வேலை செய்கிறது என்பதைச் செய்து காட்டினார். சைக்கிள் டைனமோ எவ்விதம் சில்லின் இயக்கச் சகதியை மின்சாரமாக மாற்றி, சைக்கிளுக்கு ஒளியை வழங்குகிறது என்பதை விளங்கப்படுத்தினார்.
அவ்விதமாக அவர் விளங்கப்படுத்திக்கொண்டிருந்தபோது அப்போது அதிபராகவிருந்த சபாலிங்கம் கல்லூரித் தாழ்வாரம் வழியாக வந்து விட்டார். வந்தவர் புண்ணியலிங்கம் மாஸ்ட்டர் வகுப்புக்குள் சைக்கிளை வைத்துப் படிப்பித்துக்கொண்டிருப்பதைக் கண்டுபிடித்து விட்டார். உடனே மாணவர்களுக்கு முன், புண்ணியலிங்கம் மாஸ்ட்டரை அழைத்து, அவ்விதம் பாடம் நடத்துவதைக் கண்டித்து விட்டுச் சென்றார். மாணவர்களான எங்களுக்கு ஆசிரியரை நினைக்கச் சிறிது பாவமாகிவிட்டது. புண்ணியலிங்கம் மாஸ்டரோ நடந்ததை நாங்கள் பார்த்துவிட்டதை அறிந்துகொண்டாலும், பாடத்தைத் தொடர்ந்து படிப்பித்துவிட்டுச் சைக்கிளை எடுத்துச் சென்றார்.
மாணவர்களுக்குக் கற்பிக்கும் விடயம் நன்கு புரியவேண்டுமென்பதற்காக, தனது சைக்கிளைக் கொண்டுவந்து பாடம் நடத்திய ஆசிரியரை நினைக்கும் தருணங்களில் , அவ்விதம் பாடம் நடத்தியதற்காக ஆசிரியரைக் கண்டித்த அதிபரையும் நினைத்துக்கொள்வேன்.
யாழ் இந்துக் கல்லூரி: சந்தியாப்பிள்ளை 'மாஸ்ட்டர்'
எனது பதிவொன்றில் புண்ணியமூர்த்தி 'மாஸ்டர்' பற்றிக் கூறியிருந்தேன். (இங்கு நான் 'மாஸ்ட்டர்' என்று குறிப்பிடுவதற்குக் காரணம் ஒன்றுண்டு. மாணவர்கள் அவரைப் பற்றிக் குறிப்பிடும்போது அவ்விதம்தாம் குறிப்பிடுவார்கள்.) இம்முறை சந்தியாப்பிள்ளை 'மாஸ்ட்டரை'ப்பற்றி ஓரிரு வரிகள் கூறலாமென்று நினைக்கின்றேன்.
சந்தியாப்பிள்ளை 'மாஸ்ட்டரிடம்' ஒன்பதாவது வகுப்பில் தமிழ் படித்திருக்கின்றேன். இவர் தமிழ் ஆசிரியரல்லர். சாரணர் இயக்கம், விளையாட்டு இவைதாம் இவரது பிரதானமான துறைகள். பாடத்தைச் சுவையாகப் படிப்பிப்பதற்காக அவர் அவ்வப்போது சில குட்டிக்கதைகளைக் கூறுவதுண்டு. சில கதைகள் மாணவர்களின் வயதுக்கு மீறியவையாகவும் இருப்பதுண்டு. ஆனால் ஒரு போதுமே அவற்றை அவர் விரசமாகக் கூறுவதில்லை. வேடிக்கையை மையமாக வைத்தே அவற்றைக் கூறுவார். உதாரணமாக 'மருத்துவக் கல்லூரிக்குச் சென்ற கிராமத்தான்', 'அச்சகத்துக்குச் சென்றவரின் அனுபவம்' போன்ற குட்டிக்கதைகளை அவர் கூறியிருக்கின்றார். இவை அவர் கூறிய குட்டிக்கதைகளுக்கு நான் வைத்த தலைப்புகள். அக்குட்டிக்கதைகளின் மையக்கருக்கள் இவைதாம்.
ஆனால் சந்தியாப்பிள்ளை 'மாஸ்ட்டர்; என்றதும் எனக்கு முதலில் ஞாபகம் வருவது இவை அல்ல. இன்னுமொரு விடயம். அது: எங்களது வகுப்பு குமாரசாமி மண்டபத்துக்கு , கே.கே.எஸ்.வீதியிலிருந்து வரும் வீதியின் வடக்குபக்கத்திலிருந்தது. எங்கள் வகுப்பு யன்னல் வழியாக அவ்வீதியையும், அங்கு நடப்பவற்றையும் காணலாம். அவ்வப்போது அவ்வழியால் இறந்தவர்கள் சிலரது இறுதி ஊர்வலங்கள் செல்வதுண்டு. அவ்விதமான சந்தர்ப்பங்களில் சந்தியாப்பிள்ளை 'மாஸ்ட்டர்' மாணவர்கள் அனைவரையும் எழுந்து நிற்கச் சொல்லி, அவ்வழியால் இறுதி யாத்திரை செல்லும் அந்த மனிதருக்கு அஞ்சலி செய்ய வைப்பார். ஒருவரின் அந்திம யாத்திரைக்குச் சந்தியாப்பிள்ளை 'மாஸ்ட்டர்' காட்டிய அந்த மானுட நேயப்பண்பு எனக்கு அவ்வயதில் ஆச்சரியத்தை மூட்டியது; இன்றும்தான்.
யாழ் இந்துக்கல்லூரி: மேலும் சில நினைவுகள்.......
யாழ் இந்துக்கல்லூரி கல்விக்கும், விளையாட்டுக்கும் பெயர் போன கல்லூரிகளிலொன்று. மகாஜனா கலை, இலக்கியத்தில் பெயர் போன கல்லூரி. ஹாட்லிக் கல்லூரியை இன்னுமொரு வடமராட்சியின் 'யாழ் இந்து' என்று கூறலாம். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, யாழ் இந்துக் கல்லூரியின் கிரிக்கட் குழுவில் எங்களைக் கவர்ந்தவர்களாக சூரி, குகன் (பொன்னம்மான்) ஆகியோரையே நான் குறிப்பிடுவேன். இவர்களிருவரும் சொட்டுவதில்லை. பந்தை விளாசுவதில் (Hitters) வல்லவர்கள். சில நேரங்களில் நின்று பிடிப்பார்கள்; சில நேரங்களில் ஒரு சில விளாசல்களுடன் போய் விடுவார்கள். பந்து வீச்சாளர்களில் எனக்குப் பிடித்தவர்களாக நிருத்தானந்தனையும், வசந்தனையும் குறிப்பிடுவேன். சூரி சுழல் பந்து வீசுவதில் வல்லவர். ஹட்டன் நாஷனல் வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த சூரி பின்னர் யாழ்நகரில் இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதலொன்றில் கொல்லப்பட்டதாகப் பின்னர் கேள்விப்பட்டேன். குகனின் அண்ணன் நரேன் (யோகி). யோகியின் கிரிக்கட் ஆட்டம் குகனைப் போல் விளாசுதல்ல. நிதானமானது. ஆனால் நரேன் விளையாட்டில் பல சாதனைகளைச் செய்தவர். குண்டெறிதல், ஈட்டியெறிதல் மற்றும் இன்னுமொரு விளையாட்டு நீளம் பாய்தல் அல்லது உயரம் பாய்தல் ஆகியவற்றில் , பல வருடங்களுக்கு முன்னர் அவரது தந்தை ஆற்றிய சாதனைகளை முறியடித்தவர். அவ்விதம் முறியடித்த நிகழ்வுகளை சிறுவனாக நின்று அவதானித்திருக்கின்றேன். நரேனுடைய தந்தையார் யோகரத்தினம் ஒரு நில அளவையாளர். தாயார் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை. அம்மாவும் யாழ் இந்து மகளிரி கல்லூரியின் ஆசிரியைகளிலொருவர். அம்மா யாழ் இந்துக் கல்லூரியில் ஆரம்பத்தில் சிறிது காலம் ஆசிரியையாகவும் இருந்திருக்கின்றாரென்று கூறியதாக ஞாபகம். ஒரு காலத்தில் யாழ் இந்துவில் ஆசிரியைகளும் கற்பித்திருக்கின்றார்களென்று நினைக்கின்றேன்.. அம்மாவின் திருமணத்துக்கு திருமதி யோகரத்தினம் பரிசாகக் கொடுத்திருந்த வெள்ளித்தட்டுகளும், வெள்ளிக் குவளைகளும் நான் நாட்டை விட்டுப் புறப்படும் வரையில் வீட்டிலிருந்தன. அவற்றில் வெள்ளித்தட்டொன்று இன்னும் என்னுடைய கடைசித் தங்கையிடம் உள்ளது.
கிரிக்கட்டில் 'சொட்டு'வதற்குப் பெயர் பெற்றவர் 'விட்டமின்' என்று அழைக்கப்பட்டவர். விளையாட்டை இழுத்தடித்து வெற்றி, தோல்வி இல்லாமல் செய்ய வேண்டுமென்றால் இவரைத்தான் நம்பியிருப்பார்கள். இவர் பின்னர் யாழ் இந்துக் கல்லூரிக் கிரிக்கட் குழுவின் தலைவராகவுமிருந்தவர்.
அப்பொழுதெல்லாம் தெற்கிலிருந்து 'ரோயல் கல்லூரி' புனித தோமஸ் கல்லூரி போன்ற கல்லூரிகளிலிருந்து துடுப்பெடுத்தாட்டக் குழுக்கள் யாழ் இந்துக் கல்லூரிக்கு வந்து யாழ் இந்துவுடன் மோதுவது வழக்கம். அவ்விதம் எங்களது மாணவப் பருவத்தில் வந்த ஒருவர் பின்னர் இலங்கை அணி 'டெஸ்ட் மாட்ச்'சுகளில் விளையாடத் தொடங்கியபோது ஆடிப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களிலொருவர். அவர்: அர்ஜுனா ரணதுங்க.
ஒருமுறை யாழ் சென்ரல் கல்லூரி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிலிருந்தும் , பாகிஸ்தானிலிருந்தும் வந்திருந்த 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுடன் , யாழ் பாடசாலைகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மோதியது ஞாபகத்திலுள்ளது. யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து சூரி யாழ் மாணவர் குழுவில் விளையாடினாரென்று நினைக்கின்றேன். பாகிஸ்தான் குழுவில் விளையாடிய மாணவர்களிலொருவர் பின்னர் பாகிஸ்தான் 'டெஸ்ட் மாட்ச்'சுகளில் விளையாடிய ஜாவிட் மியாண்டாட். ஆஸ்திரேலிய அணியில் மைக்கல் லாங் என்பவர் இரு தடவைகள் பந்தைப் பிடிக்கச் சந்தர்ப்பங்கள் கொடுத்து, அதிருஷ்ட்டவசமாகத் தப்பி 158 ஓட்டங்கள் எடுத்ததும் இன்னும் நினைவிலுள்ளது.
நான் பார்த்த இன்னுமொரு முக்கியமான கிரிக்கட் போட்டி மொறட்டுவையில் நடைபெற்ற மேற்கு இந்திய நாடுகளுக்கும் , இலங்கை அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியாகும். அப்பொழுது நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன். இலங்கை அணி அக்காலகட்டத்தில் 'டெஸ்ட் மாட்ச்'சுகளில் விளையாட ஆரம்பித்திருக்கவில்லை. அந்த 'மாட்சில்' விளையாடிய மேற்கிந்திய நாடுகளைச் சேர்ந்த வீரர்களில் முக்கியமான இருவர்: காளிச்சரண், மற்றவார் கிளைவ் லாயிட். கிளைவ் லாயிட் அன்று மேற்கிந்தியக் குழுவுக்குத் தலைமை தாங்கினார். கிளைவ் லாயிட் அந்தப் போட்டியில் ஓரிரு 'சிக்ஸர்ஸ்' அடித்தது ஞாபகத்திலுள்ளது. இலங்கை அணியில் துலிப் மெண்டிஸ் திறமையாக விளையாடி 63 ஓட்டங்கள் எடுத்ததாக நினைவு.
யாழ் இந்துக் கல்லூரி உதை பந்தாட்ட விளையாட்டிலும் பெயர் பெற்றது. எங்கள் காலகட்டத்தில் எனக்குப் பிடித்த இருவர் கண்ணாடி ராஜேந்திரன் , பாசையூரைச் சேர்ந்த விமலதாசன் (என்றுதான் நினைக்கின்றேன்). கண்ணாடி உதைப்பந்தாட்டக் குழுவின் முன்னிலை ஆட்டக்காரராக விளையாடுபவர். பந்து கிடைத்துவிட்டால் விரைவாக அதைக் கொண்டு சென்று 'கோல்' அடிப்பதில் வல்லவர். மகாஜனாக் கல்லூரியும் உதைப்பந்தாட்டத்திற்குப் பெயர்பெற்ற கல்லூரி. அக்காலகட்டத்தில் கண்ணாடியைப் போல் அங்கு விளையாடுபவரை 'முயல்' என்று அழைப்பார்கள். பெயர் ஞாபகமில்லை.
விமலதாசன் எதிராளியிடமிருந்து பந்தினை வெட்டி, ஏய்த்து , சாதுரியத்துடன் (Dodge) விளையாடுவதில் வல்லவர். இவரிடம் பந்து கிடைத்துவிட்டால் அதனை அவர் விளையாடும் அழகு பார்ப்பதற்கு அற்புதமானது. அக்காலகட்டத்தில் அவரது ஆட்டத்தினை விரும்பி இரசிப்பேன்.
யாழ் இந்துக்கல்லூரி: மேலும் சில நினைவுகள்.......
அதிபர் சபாலிங்கம் என்றதும் நினைவுக்கு வரும் இன்னுமொரு விடயம்: யாழ் இந்து / சென்ரல் துடுபெடுத்தாட்டப் போட்டி. நான் குறிப்பிடும் போட்டி யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்தது. மிகவும் உணர்ச்சிகரமாக நடைபெற்ற போட்டி இடையில் குழம்பி, 'பிட்ச்' எல்லாம் எரிக்கப்பட்டது. அப்பொழுது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். யாழ் இந்துக் கல்லூரியின் புகழ்பெற்ற 'கிரிக்கட் கீப்பராக' விளங்கிய புவிராஜசிங்கத்தின் வீட்டுப் பகுதியை அண்டிய எல்லையில் அதிபர் சபாலிங்கத்தின் மகன் உதயலிங்கம் எங்களைப் போன்ற மாணவர்களை உள்ளடக்கிய குழுவை வைத்து , சென்ரல் 'கொலிஜி'ற்கு எதிராகக் கோசம் எழுப்பும்படி வழிநடத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது சபாலிங்கம் அவர்கள் சென்ரல் 'கொலிஜ்' அதிபராக இருந்தவர். நாங்கள் இருந்த எல்லைக்கருகில் களத்தில் இருந்தவர் சென்ரல் கல்லூரி ரஞ்சகுமார் (என்றுதான் நினைவு). யாழ் இந்துவின் வேகப்பந்து வீச்சாளராகப் பந்துகளை எறிந்துகொண்டிருந்தவர் நிருத்தானந்தன். அந்தப் போட்டி இடையில் சண்டியன் கொட்டடி மணியம் புகுந்து குழப்பியதாக நினைவு. யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவரும் , எந்த நேரமும் யாழ் இந்துக் கல்லூரியைச் சுற்றி வளைய வந்துகொண்டிருப்பவருமான 'சீனி' யாழ் இந்துக்காக அன்று சன்னதமாடிக்கொண்டிருந்தார். போட்டி குழம்பியதும் சீனி கையில் பொல்லோ அல்லது இரும்புக்கம்பியோ எதுவோவென்றினை வைத்து எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அன்று அவருக்கு இரத்தம் வழியும் அளவுக்கு நல்ல அடி என்று நினைவு.
போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தபொழுது தனது மகன் உதயலிங்கம் (உதயலிங்கம் யாழ் இந்து மாணவர்; லண்டனில் சைக்கிள் விபத்தொன்றில் பல வருடங்களுக்கு முன்னர் மரணித்து விட்டார்.) சென்ரல் கல்லூரிக்கெதிராக மாணவர் குழுவை வைத்து எதிர்க்குரல் எழுப்புக் கொண்டிருந்ததைக் கவனித்துக் கொண்டிருந்த சென்ரல் 'கொலிஜ்' அதிபரான சபாலிங்கம், போட்டி குழம்பியதும், ஏனைய மாணவர்களுக்கு முன்பு உதயலிங்கத்தின் கன்னத்தில் இரண்டு தட்டு தட்டி, இழுத்துக்கொண்டு சென்றதை அவர்களுக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்தவர்களிலொருவனாக நானும் கவனித்துக்கொண்டிருந்தேன்.
முகநூற் குறிப்புகள்: 'மெல்ல மெல்ல' என்று 'மெள்ள' இல்லாமல் போய் விடுமோ?
காவல்காரன் திரைப்படத்தில் (எம்ஜிஆர் / ஜெயலலிதா நடிப்பில் வெளிவந்த திரைப்படம்) 'மெல்லப் போ! பாடலில் பாடகர் டி.எம்.எஸ் 'மெல்லப் போ' என்று பாடுவது சரியா? ஆனால் 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தில் வரும் 'குமரிப் பெண்ணின் உள்ளத்திலே' பாடலின் இடையில் வரும்
'நான் அள்ளிக்கொள்ள
அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்'
என்னும் வரிகளில் 'மெள்ள மெள்ள' என்னும் சொற்களை அவ்விதமே டி.எம்.எஸ். பாடியிருப்பார்.
ஆனால் 'மெல்லப் போ' பாடலில் கவிஞர்
'மெல்லப் போ! மெல்லப் போ!
மெல்லிடையாளே மெல்லப் போ!
சொல்லிப் போ!''
என்று மெல்ல என்னும் சொல்லினைத்தான் பாவித்திருப்பார். இதே பாடலில்
'மெல்லத் தான் மெல்லத் தான் மயங்கி நடந்தாள் மாது
சொல்லத்தான் சொல்லத்தான் தயங்கி வரைந்தாள்
தூதுஇப்பொழுதே..' என்றும் வரிகள் வருகின்றன.
மெல்லப் போவில் வரும் மெல்ல என்னும் சொல் மெதுவாக என்னும் அர்த்தத்திலேயே பாவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மெல்ல என்பதற்கு மெதுவாக என்பதுதான் அர்த்தமா?
வள்ளுவரில் புகழ்பெற்ற குறள்களிலொன்று:
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும், நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
இங்கு தலைவி தலைவன் அவளைப் பார்க்கும்போது நிலம் நோக்கி நிற்பாள். அவன் அவளை நோக்காத சமயங்களில் அவனைப் பார்த்து மெல்லச் சிரித்துக்கொள்வாள். இதனையும், சங்கப்பாடலொன்றையும் இணைத்துக் கவிஞர் கண்ணதாசன் 'நேற்றுவரை நான் யாரோ? நீ யாரோ?, இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?' என்று பாடியிருப்பார். மேற்படி குறளில் வரும் மெல்ல என்பது மென்மையான என்னும் அர்த்தத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் மெல்லத் தொட்டான் என்னும்போது அங்கும் மெல்ல என்பது மென்மை என்னும் அர்த்தத்தில் பாவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் 'குமரிப் பெண்ணின் உள்ளத்திலே' பாடலில் வரும்
'நான் அள்ளிக்கொள்ள
அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெள்ள மெள்ளவே புரியும்'
என்னும் வரிகளிலுள்ள மெள்ள என்னும் சொல் (கவிஞர் இங்கு மெள்ள என்ற சொல்லினைத்தான் பாவித்திருப்பதாக நான் கருவதற்குக் காரணம்: அள்ளிக்கொள்ள, பள்ளிக்கொள்ள என்று எதுகைச் சொற்கள் ஏற்கனவே வருவதால், அவற்றுக்கேற்ப மெள்ள என்ற சொல்லைத்தான் பாவித்திருக்க வேண்டும். பாடகரின் குரலும் மெள்ள மெள்ள என்றே பாடுவதாக என் காதுகளில் ஒலிக்கின்றது.). இதுபோல் 'மெல்லப் போ' பாடலிலும் கவிஞர் 'மெல்ல' என்ற சொல்லைத்தான் பாவித்திருப்பதாக எனக்குப் படுவதற்குக் காரணம்: பாடகரின் குரல் அவ்விதம்தான் அச்சொல்லினை உச்சரிப்பதாக என் காதுகளுக்குக் கேட்கின்றது. அத்துடன் பாடலில் வரும் அடுத்தடுத்த வரிகளில் மெல்லிடையாள், சொல்லிப் போ போன்ற எதுகைச் சொற்கள் வருவதால், மெல்ல என்ற சொல்தான் பாவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இவ்விரு பாடல்களையும் எழுதியிருப்பவர் கவிஞர் வாலி. எதற்காக குமரிப்பெண்ணின் உள்ளத்திலே பாடலில் மெள்ள என்றும், மெல்லப் போ பாடலில் மெல்ல என்றும் பாவித்திருக்கின்றார்?
'குமரிப் பெண்'ணின் உள்ளத்திலே பாடலில் வரும் 'சுகம் மெள்ள மெள்ளவே புரியும்' என்பதில் வரும் மெள்ள என்பதன் அர்த்தம் மென்மை அல்ல. சிறிது மெதுவாகத்தான், சிறிது நேரமெடுத்துத்தான் சுகம் புரியும் என்னும் அர்த்தத்தில்தான் இங்கு மெள்ள பாவிக்கப்பட்டிருக்கின்றது. கம்பராமாயணத்திலும் 'மெள்ள' என்னும் சொல் இதே அர்த்தத்தில் பாவிக்கப்பட்டுள்ளதாகப் படித்திருக்கின்றேன். மெதுவாக என்னும் சொல் இரு அர்த்தங்களைத் தரும் சொல். மெதுவாகச் சென்றான் என்னும் பொழுது அதன் அர்த்தம் வேறு. மெதுவாகத் தொட்டான் என்னும்போது அதன் அர்த்தம் வேறு. மெதுவாகத் தொட்டான் என்னும்போது மெதுவாக, வலிக்காமல், மென்மையாகத் தொட்டான் என்னும் அர்த்தத்தில் பாவிக்கப்படுகிறது.
ஆக, மெல்ல என்பது மென்மை என்னும் அர்த்தத்திலும், மெள்ள என்பது மெதுவாக என்னும் அர்த்தத்திலும் பாவிக்கப்பட வேண்டியதொன்று. ஆனால் நடைமுறையில் பல கவிஞர்கள் , பலர் மெள்ள என்னும் சொல்லினைப் பாவிக்க வேண்டிய இடத்தில் மெல்ல என்னும் சொல்லினைப் பாவித்துப் படைப்புகள் பலவற்றைத் தந்துள்ளதைத்தான் பார்க்கின்றோம்.
நா. முத்துக்குமார் 'நீ தானே பொன் வசந்தம்' திரைப்படத்தில் எழுதிய பாடலான 'வானம் மெல்ல' என்னும் பாடலில் வரும் ' வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்து ஆடுதே' என்னும் வரியில் வரும் மெல்ல என்னும் சொல் மெதுவாக (அதாவது மென்மையான என்னும் அர்த்தத்தில் அல்ல) , சிறிது ஆறுதலாக என்னும் அர்த்தத்தில்தான் வருகின்றது. உண்மையில் மெல்ல என்பது மென்மையான என்னும் அர்த்தத்தில் பாவிக்கப்படாததால் மெள்ள என்னும் சொல்தான் இங்கு பாவிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று கருதுகின்றேன். ஆனால் கவிஞர் முத்துக்குமார் மட்டுமல்லர் பாரதியாரே மெல்ல என்னும் சொல்லினைப் பாவித்து எழுதிய கவிதை வரிகளான
சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"
என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!
என்னும் வரிகளில் வரும் மெல்லத் தமிழினி சாகும் என்னும் வரியில் வரும் மெல்ல 'மென்மையான' என்னும் அர்த்தத்தில் பாவிக்கப்படவில்லை. உண்மையில் மெல்ல என்பது பலரால் மெள்ள என்னும் சொல் வரவேண்டிய இடங்களிலெல்லாம் பல வருடங்களாகப் பாவிக்கப்பட்டு வருவதைத்தான் நாம் பார்க்கின்றோம். இதற்கு பாரதியாரும் விதிவிலக்கானவரல்லர். இவ்விதம் மெல்ல என்னும் சொல் மெள்ள என்னும் சொல வரவேண்டிய இடங்களிலெல்லாம் பாவிக்கப்பட்டு வந்த காரணத்தால் அதுவே சரியான சொல் என்பதுபோல் பழக்கத்தில் பாவிக்கப்பட்டு வருவதுதான் யதார்த்தம். அதனால் மெள்ளத் தமிழ் இனி சாகும் என்று எழுதினால் அது பிழை போல் தெரிகின்றது. இவ்விதமாகப் பல சொற்கள் வழக்கமாகப் பாவிக்கப்பட்டுத் தமிழ் இலக்கணத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதைப் போல் மெல்ல / மெள்ள என்னும் சொற்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்றொரு கேள்வி எழுகின்றது. '
'மெல்ல மெல்ல' என்று 'மெள்ள'
இல்லாமல் போய் விடுமோ
என்று அஞ்சுகின்றேன்.
முகநூற் குறிப்புகள்: 'ஐபிசி லேன்' அழகுவும், வேல் முருகனும்!
நான் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்துப் பட்டப்பபடிப்பை முடித்துவிட்டு கொட்டாஞ்சேனையில் நண்பர் ஒருவரின் உறவினர் வீட்டில் 'அவட் ஹவுஸ்'ஸில் நண்பர்கள் சிலருடன் தங்கி, 'கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த காலகட்டம். அப்பொழுதெல்லாம் எனது நண்பர்கள் பலர் கல்கிசையில் தங்கியிருந்தார்கள். எல்லாரும் பஸ் 'பாஸ்' வாங்கி வைத்திருப்போம். தேவைப்படும்போதெல்லாம் பாவித்துக்கொள்வோம். அப்பொழுதெலாம் நாங்கள் மாலை நேரங்களில் வெள்ளவத்தையில் 'ஐ.பி.சி' வீதியில் இலக்கம் 6 இல் அமைந்திருந்த அழகு என்பவரின் இடத்தில்தான் சாப்பிடுவது வழக்கம். இடியப்பம், பிட்டு என்று பல்வேறு வகையான கறி வகைகளுடன் சாப்பிடுவது வழக்கம். அந்த வீட்டில் அழகு மூன்று நேரமும் உணவு சமைத்துப் போடுவார். அவருக்கு வாடிக்கையாளர்கள் நாள் முழுவதும் வருவார்கள். நாங்கள் மாதக் கணக்கு வைத்திருந்தோம். கையில் காசிருக்கோ இல்லையோ எப்பொழுது சென்றாலும் எங்களுக்கு அங்கு உணவிருக்கும். வார இறுதி நாட்களில் வெள்ளவத்தைக் கடலில் சிறிது நேரம் நீந்திக் குளித்துவிட்டு, நல்ல பசியுடன் அழகுவிடம் செல்வோம், பிட்டோ, சோறோ, இடியப்பமோ வயிறு முட்டச் சாப்பிடுவோம்.
அழகுவுக்கு அப்பொழுது வயது நடுத்தர வயதுதானிருக்கும். எப்பொழுதும் இடுப்பில் மடித்துக் கட்டிய துண்டும், வெறும் மேலுமாகத்தான் காட்சியளிப்பார். எப்பொழுதும் ஏதாவது சமைத்துக்கொண்டும், வந்தவர்களுக்குப் பரிமாறிக் கொண்டுமிருப்பார். கொழும்பில் அக்காலகட்டத்தில் பணி புரிந்து கொண்டிருந்த பலர் அழகுவின் வாடிக்கையாளர்கள். அழகுவின் இருப்பிடத்திலும் மேலும் பலர் அறைகளில் தங்கி வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
அழகுவின் நினைவு வந்தால் எனக்கு இன்னுமொருவரின் நினைவும் வருவது வழக்கம். அவர் அக்காலகட்டத்தில் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிடத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவன் வேல்முருகன். மிகவும் திறமைசாலி. 'ஹாட்லி கொலிஜ்'இலிருந்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர். மிகவும் மென்மையான சுபாவம் மிக்கவர். சிலரைப் பார்த்தாலே 'இவர் மிகவும் மென்மையான, யாருக்குமே தீங்கிழைக்காதவர்' என நினைப்போமே அவ்விதமான தோற்றம் மிக்கவர் வேல்முருகன். இரவு நேரங்களில் அழகுவிடம் சாப்பிடச்செல்லும்போதெல்லாம் வேல்முருகனும் சாப்பிட வந்திருப்பார். அவருடன் பல்கலைக்கழகம் பற்றி, அவரது படிப்பு பற்றியெல்லாம் உரையாடுவது வழக்கம்.. 1983 கலவரத்தில் பலியான மொறட்டுவைப் பல்கலைக்கழகத்து மாணவர்களில் இவருமொருவர். இரத்மலானையில் கலவரம் உச்சக்கட்டத்திலிருந்த சமயம் நிராயுதபாணியான இவரைத்துரத்திக்கொண்டு காடையர் கூட்டமொன்று ஓடியதாகவும், கடைசியாக இவர் அருகிலிருந்த கிறிஸ்தவ ஆலயத்தினுள் ஓடியதாகவும் ஒரு தகவல். அவ்விதமாக ஓடிச் சென்றவரைக் காடையர் கூட்டம் கொன்று, எரித்து விட்டதாக இன்னுமொரு செய்தி. இறுதி வரையில் இவரது உடல் கிடைக்கவேயில்லை. 'வெள்ளவத்தை அழகு'க்கு, பின்னர் , 1983ற்குப் பின்னர் என்ன நடந்ததென்பது தெரியவில்லை. அழகு இப்பொழுதும் அங்கு இருக்கிறாரா? அல்லது வேறிடம் சென்று விட்டாரா? என்பதும் தெரியவில்லை.
அழகுவை நினைக்கும் ஒவ்வொரு கணமும் எனக்கு வேல் முருகனின் பால் மணம் மாறாத அந்த முகம்தான் ஞாபகம் வருகிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.