அத்தியாயம் இருபத்தியாறு: நடுவழியில்...
ஸ்பானிஷ்கார முகவனான பப்லோவுடனான அனுபத்தின் பின்னர் இளங்கோ முகவர்களின் மூலம் வேலை தேடும் படலத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். நேரடியாகவே நகரில் அலைந்து திரிந்து வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தான். சட்டவிரோதக் குடிகள் மில்லியன் கணக்கில் வசிக்குமொரு மாநகரில் தனக்கேன் வேலையொன்றை எடுப்பது சிரமமாகவிருக்கிறதென்று எண்ணியெண்ணி மனம் சலித்தான். இருந்தாலும் சோர்ந்து விடாமல் முயனறு கொண்டிருந்தான். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில்தான் அவன் ஜெயரடணத்தை மான்ஹட்டன் நகரத்துத் தெருக்களிலொன்றில் தற்செயலாகச் சந்தித்தான். ஈழத்தின் வன்னிமாவட்டத்தின் முக்கிய நகர்களிலொன்றான வவுனியாவைச் சேர்ந்தவனவன். நாற்பத்தியாறாவது தெருவிலுள்ள இத்தாலியனின் உணவகமொன்றில் பகல் நேரத்தில் உணவக உதவியாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இளங்கோ அன்றாட வாழ்வுக்கே திண்டாடுவதைப் பார்த்த அவன் இளங்கோவுக்குப் பின்வருமாறு புத்திமதியொன்றைக் கூறினான்: "இளங்கோ உனக்கு விருப்பமென்றால், பகல்நேரத்தில் ஓரிரு மணித்தியாலங்கள் செய்யக் கூடியதொரு சிறு வேலையொன்றுள்ளது, அதனை உனக்கு எடுத்துத் தரலாம். ஆனால் உன்னால் அதனைச் செய்ய முடியுமோ தெரியாது.."இவ்விதம் ஜெயரட்ணம் இழுக்கவே இளங்கோ "பரவாயில்லை ஜெயம். சொல்லு. முடிந்தால் செய்யிறேன். பார்ப்பம்" என்றான்.
"மற்றது.. என்ன " என்றான் இளங்கோ.
அதற்கு ஜெயரடணம் தொடர்ந்து விளக்கமளித்தான்: "மத்தியானச் சாப்பாடும் தருவாங்கள். எங்கடை ரெஸ்டாரண்டிலிருந்து என்னத்தை வேண்டுமென்றாலும் எடுத்துத் தின்னலாம். அந்த விதத்திலை பார்க்கேக்கை பரவாயில்லையென்று சொல்லலாம். இன்னொரு நல்ல வேலை கிடைக்கிற வரையிலை கொஞ்ச நேரம் செய்யிறதாலை உனக்குத்தான் நல்லது. நல்லா யோசித்துச் சொல்லு. இன்றைக்கு முழுக்க நல்லா யோசி. விருப்பமென்றால் நாளைக்கே எங்கட ரெஸ்டாரண்டிற்கு பத்து மணி போலை வா. முதலாளிக்கு உன்னை அறிமுகம் செய்து வைக்கிறன்."
இதற்கு அடுத்த நாள் மறுமொழி கூறுவதாகக் கூறி விட்டு இளங்கோ ஜெயரட்ணத்திடமிருந்து விடைபெற்றான். அன்று தன்னிருப்பிடம் திரும்பும்போது பாதாள இரயிலில் அதுபற்றியே சிந்தித்துக்கொணடிருந்தான். ஒரு விதத்தில் ஜெயரட்ணம் கூறுவதும் சரியாகவே பட்டது. பக்ற்பொழுதில் மூன்று மணித்தியாலங்கள்தான் வேலை. மணிக்கு மூன்று டாலர்கள் தருவார்கள். ஐந்து நாட்கள் வேலை செய்தால் நாற்பத்தியைந்து டாலர்கள் சம்பளமாகக் கிடைக்கும். அது அறை வாடகைக்கும், ஒரு போத்தலுக்கும் போதும். மூன்று மணித்தியாலத்திலும் பத்திலிருந்து இருபது டாலர்கள் வரையில் டிப்ஸ் கிடைக்குமென்று ஜெயம் கூறியிருந்தான். அந்த வழியில் பதினைந்து டாலர்களென்று பார்த்தாலும் வாரத்திற்கு எழுபத்தைந்து டாலர்கள் வரையில் வரும். எழுபத்தைந்தும் நாற்பத்தைந்தும் நூற்றியிருபது டாலர்கள் வரையில் வருமானம் வரும். அதே சமயம் மத்தியானச் சாப்பாடு இலவசமாக் கிடைக்கும். அதற்குரிய செல்வாகப் பத்து டாலர்களைப் போடலம். அந்த வகையில் வாரத்திற்கு ஐம்பது டாலர்கள் வரையில் வரும். ஆக மொத்தம் வாரம் நூற்றியெழுபது டாலர்கள் வரையில் வருமொரு தொழிலாக அதனைக் கருதலாம். அதுவும் மூன்றே மூன்று மணித்தியாலங்கள்தான் வேலை. செய்து பார்ப்பதில் தவறெதுவுமில்லை. கிழமைக்கு ஐம்பது டாலர்களையாவது சேமிக்க வேண்டும். அவ்விதம் சேமித்தால் ஒரு மாதத்திலை இருநூறு டாலர்கள வரையில் சேமிக்கலாம். ஆறு மாதங்கள் இவ்விதம் செய்தாலும் குறைந்தது ஆயிரத்தி இருநூறு டாலர்கள் வரையிலாவது சேர்க்கலாம். குறைந்தது கையில ஆயிரம் டாலர்கள் சேரும் வரையிலாவது இவ்விதம் வேலை செய்து பார்ப்பதில் தவறெதுவுமில்லை. இன்னுமொரு நியூயார்க் மாநகரத்து அனுபவமாக இதுவும் இருந்து விட்டுப் போகட்டும். இதற்குப் பிறகு கோஷிடமும் அவனுடைய தொழிற்சாலையிலேதாவது வேலை கிடைக்குமாவென்று முயன்று பார்க்க வேண்டும். அதுவே அவன் நியுயார்க் மாநகரத்தில் இவ்விதமாகச் சட்டவிரோதமாகச் செய்யும் இறுதி வேலையாகவிருக்க வேண்டும். அதுவும் பிழைத்தால் இந்த நகருக்குப் பிரியாவிடை கூறிவிட வேண்டியதுதான். எந்த நாட்டுக்குப் போகவென்று ஆரம்பத்தில் பயணத்தைத் தொடங்கினானோ அந்த நாட்டுக்குக், கனடாவுக்குச் சென்று விட வேண்டியதுதான். உலகத்தின் சொர்க்கபுரியான அமெரிக்காவின் பிரதான நகரான நியுயார்க் மாநகரில் இதுவரையில் உணவகத்தில் 'கிட்டார்' அடித்துப் பார்த்தாகி விட்டது; மழைக்குக் குடை பிசினஸ் செய்து பார்த்தாயிற்று; நடைபாதை வியாபாரமும் செய்தாயிற்று; போதாதற்கு விளம்பரங்களும் விநியோகித்துப் பார்த்தாயிற்று. இனி மத்தியான உணவினை விநியோகித்துப் பார்ப்போம்; அதுவும் சரியில்லாவிட்டால் கொஷின் தொழிற்சாலையிலும் ஏதாவது வேலை கிடைக்கிறதாவென்று பார்ப்போம். ஒரு சமயம் அனிஸ்மானிடம் தொடுப்பதாகக் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ள அமெரிக்க அரசுக்கெதிரான மானநஷ்ட்ட வழக்கில் அதிருஷ்ட்டமடித்தால் இங்கேயே இருந்து விட வேண்டியதுதான். இவ்விதமாகச் சிந்தனை பல்வேறு வழிகளிலும் கிளைவிட்டோடும் நதியாகவோடியது. இளங்கோ பெரிதும் சிந்தனை வயப்பட்டிருந்தான்.
அன்று அவன் நகர் முழுவதும் அலைந்து அறைக்குத் திரும்பும்பொழுது இரவு மணி பத்தைத் தாண்டி விட்டது. பாதாள இரயிலில் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தவனை ஒரு குரல் நனவுலகுக்கு மீட்டு வந்தது.
"உனக்கு ஆட்சேபனையேதுமில்லையென்றால் உன்னுடன் கொஞ்சம் கதைக்கலாமா?"
அவனது இருக்கைக்கெதிரிலிருந்த பெண்ணொருத்தியின் குரல்தானது. பார்ப்பதற்கு 'பாப்' பாட்டுக்காரி 'சிந்தி லோப்பர்' அவளது புகழ்பெற்ற பாடலான 'Time After Time' இல் வருவதைப் போல் பல்வேறு வர்ணங்களிலான ஆடைகளுடனும், கூந்தலுடனுமிருந்தாள். அவனது அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்க்கையில் அறிமுகமான பாப் பாடகி சிந்தி லோப்பர். அவளது 'நேரத்திற்கு நேரம்' என்ற மேற்படி பாடலை அவன் இரசித்துக் கேட்பதுண்டு; பார்ப்பதுண்டு. அவளது உணர்ச்சி பூர்வமான குரலில் அந்தப் பாடலைக் கேட்பது அவனுக்குப் பிடிக்கும்..நள்ளிரவில் படுக்கையில் படுத்திருந்தபடி, கடிகாரத்தின் 'டிக்' 'டிக்' ஒலியினைக் கேட்டபடி பிரிந்த காதலனைப் பற்றிய நினைவுகளில், நினைவுகளுடன் மல்லாடியபடி பாடும் பாடல் சிந்தி லோப்பரின் அற்புதமான குரலிலும், நடிப்பிலும் சிறந்து விளங்கும். எண்பதுகளில் ஒரு கலக்குக் கலக்கிய பாடலது.
If youre lost you can look and you will find me
Time after time.
If you fall I will catch you Ill be waiting
Time after time.
After my picture fades and darkness has
Turned to gray
Watching through windows youre wondering
If Im ok
Secrets stolen from deep inside
The drum beats out of time
என்று அவள் பாடும்பொழுது உணர்வு பூர்வமாக உருகியுருகிப் பாடுவாள். அவனுக்குப் பிடித்த வரிகள். பார்வைக்கு சிந்தி லோப்பரைப் போலவேயிருந்த அந்த வெள்ளைக்காரப் பெண் தன்னுடன் எதைப் பற்றிக் கதைக்கப் போகின்றாளோவென்று வியந்தபடி , தனது சிந்தனையைக் கலைத்த அவளையே நோக்கினான் இளங்கோ. அத்துடன் "எனக்கேதும் ஆட்சேபனையில்லை. தாராளமாகவே நீ கதைக்கலாம்" என்றும் கூறினான்.
"நானும் அப்பொழுதிருந்து பார்த்துக் கொண்டே வருகிறேன். அப்படியென்ன பலமான ஆழ்ந்த யோசனை?" என்றாள்.
அதற்கவன் "சிந்திப்பதென் பொழுது போக்குகளிலொன்று. சிந்திக்கும்பொழுது நான் என்னையே மறந்து விடுவதுண்டு." என்றான்.
அதற்கவள் தன் அகன்ற விழிகளை மேலும் விரித்தபடி "சிந்திப்பதுன் பொழுது போக்கா? ஆச்சரியமாகவிருக்கிறதே! எததனையோ பொழுதுபோக்குகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தவிதமான பொழுதுபோக்கு பற்றி இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்" என்று
வியந்தாள்.
அதை விட்டால் ஒவ்வொரு கணமும் இருப்புக்காகப் போராடுமவன் வாழ்க்கையில் வேறென்ன பொழுது போக்கிருக்க முடியும்? கனவுகள், கற்பனைகள், திட்டங்களெனச் சிந்திப்பதையும், இழந்தவற்றை இரை மீட்டு மகிழ்வதையும் விட்டால் வேறென்ன பெரிய பொழுது போக்கிருக்க முடியும்? செலவில்லாத பொழுது போக்குகளிலொன்று இவ்விதம் சிந்திப்பது. அவனது தற்போதைய பொருளியல் நிலைக்கேற்ற நல்லதொரு பொழுதுபோக்கு.
அவன்: "செலவில்லாத பொழுது போக்கு இதுபோல் வேறென்னவிருக்க முடியும்?"
அவள்: "ஒரு விதத்தில் நீ கூறுவதும் சரிதான்"
அவன்: "ஒன்று சொல்வேன் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டாயே?"
அவள்: "நிச்சயமாக நினைக்க மாட்டேன். நீ தாராளமாகக் கூறலாம்."
அவன்: "இரவின் மடியில் இழந்த நாட்களின் நினைவுகளை இரை மீட்டபடி சிந்தி லோப்பர் பாடும் 'நேரத்துக்கு நேரம்' பாடல்
கேட்டிருக்கிறாயா?"
அவள்: (ஆச்சரியத்துடன்)"உனக்கு அவளைத் தெரியுமா? சிந்தி எனக்கு மிகவும் பிடித்த பாடகி. அவளது இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். உனக்கும் பிடிக்குமா?"
அவன்: "எனக்கும் கேட்பதற்குப் பிடித்த பாடல்களிலொன்று இந்தப் பாடல். நான் சொல்ல வந்தது..."
அவள்: "ஆம். ஆம். நீ ஏதோ சொல்ல வந்தாய். இடையில் குறுக்கிட்டு விட்டேன். அப்படியென்ன சொல்ல வந்தாய்?"
அவன்: "உன்னைப் பார்த்தால் அந்தப் பாடகியைப் போலவே தோற்றத்திலிருக்கிறாய். அவளைப் போலவே கூந்தலை பல்வர்ணங்களில் அலங்கரித்திருக்கிறாய். ஆடைகளையும்தான். குறிப்பாக உன் அகன்ற கண்களும், வட்ட முகமும், சிரிப்பும் கூட அவளையே எனக்கு ஞாபகப்படுத்துகிறது"
அதைக் கேட்டதும் அவள் பலமாகச் சிரித்தாள். அத்துடன் கூறினாள்: "இதையா கூற வந்தாய்? உனது பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. என் சிநேகிதிகள் கூட அவ்விதம்தான் கூறுவார்கள். பல சமயங்களில் நானும் அவளைப் போலவே ஆடைகள் அணிந்து கொள்வதும், தலையலங்காரம் செய்து கொள்வதும் வழக்கம். உண்மையில் நீ இவ்விதம் கூறுவது எனக்கு மகிழ்ச்சியைத்தான் தருகிறது. என் அபிமானப் பாடகிகளொருத்திபோல் நானிருக்கிறேனென்று நீ கூறுகிறாய். எவ்வளவு பெருமையாகவிருக்கிறது தெரியுமா? நன்றி.
நன்றி. மிகவும் பற்பல நன்றி.."
இவ்விதமாக அவர்களது உரையாடல் பல்வேறு விடயங்களைத் தொட்டுத் தொடர்ந்தது.
"உன்னுடன் இதுவரையில் இவ்விதம் கதைத்துக் கொண்டு வந்தது மகிழ்சியாகவிருந்தது. இந்த இரவினை ஒருபோதுமே மறக்க மாட்டேன். உனக்கு விருப்பமென்றால் இந்த இரவினை உன்னுடன் கழிப்பதில்கூட எனக்கு ஆட்சேபனையேதுமில்லை. எங்காவது உணவகத்துக்கோ அல்லது கிளப்புக்கோ செல்லலாம். என்ன சொல்லுகிறாய்?'
அவனுக்கு அவளது வெளிப்படையான பேச்சு வியப்பினைத் தந்தது. அவளது வெளிப்படையான பேச்சும், நடத்தையும் அவளது
நல்லுள்ளத்தை வெளிப்படுத்தின.
அத்துடன் அவன் கூறினான்: "உன் அழைப்புக்கு நன்றி. ஆனால் தற்போது நான் முக்கியமானதொரு விடயமாக ஒருவரை சந்திக்க வேண்டியிருக்கிறது. மன்னித்துக் கொள். நடுவழியில் என் பிரயாணத்தை உன் சந்திப்பு மூலம் சிறப்பித்ததற்கு என் நன்றி பல. இந்த இரவையும், உன்னுடனான இந்தச் சந்திப்பையும் ஒருபோதும் மறக்க மாட்டேன். சிந்தி லோப்பரின் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு சமயமும் நீயும் என் நினைவுக்கு வருவாய்" என்றான். மூஞ்சூறு தான் போக வழியைக் காணவில்லை. விளக்குமாறைத் தூக்கச் சொல்கிறாள். ஒருவேளை சாப்பாட்டுக்கே 'ததிங்கிணதோம்' போடவேண்டிய நிலையில் கிளப்புக்கு அழைக்கிறாள்?
அவள் இறங்குவதற்கான தரிப்பிடம் வந்ததும் சிறிது வாடிய வதனத்துடன் சிறிய காகிதத்துண்டொன்றில் தனது தொலைபேசி இலக்கத்தையெழுதி அவனிடம் தந்தபடி "எப்பொழுதுதாவது நீ என்னச் சந்திக்க் விரும்பினால் இந்தத் தொலைபேசி இலக்கத்துக்கு அழை. நல்லதொரு சந்திப்பினைத் தந்ததற்காக இந்த இரவுக்கு நன்றி.. இந்தப் பயணத்தில் நல்லதொரு துணையாகவிருந்ததற்கு உனக்கும் நன்றி" என்றவள் சிந்தி லோப்பரின் Time After Time பாடலில் வரும் 'If youre lost you can look and you will find me Time after time; If you fall I will catch you Ill be waiting Time after time' என்ற வரிகளைப் பாடி அவனை நோக்கிக் கண்களைச் சிமிட்டியபடி விடைபெற்றாள்.
அவனது தனித்த பயணம் அந்த நள்ளிரவில் தொடர்ந்தது. [தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
[ஏற்கனவே அமெரிக்க தடுப்புமுகாம் வாழ்வை மையமாக வைத்து 'அமெரிக்கா' என்னுமொரு சிறுநாவல் எழுதியுள்ளேன். ஒரு காலத்தில் கனடாவிலிருந்து வெளிவந்து நின்றுபோன 'தாயகம்' சஞ்சிகையில் 90களில் தொடராக வெளிவந்த நாவலது. பின்னர் மேலும் சில சிறுகதைகளை உள்ளடக்கித் தமிழகத்திலிருந்து 'அமெரிக்கா' என்னும் பெயரில் ஸ்நேகா பதிப்பக வெளியீடாகவும் வெளிவந்தது. உண்மையில் அந்நாவல் அமெரிக்கத் தடுப்பு முகாமொன்றின் வாழ்க்கையினை விபரித்தால் இந்தக் குடிவரவாளன் அந்நாவலின் தொடர்ச்சியாக தடுப்பு முகாமிற்கு வெளியில் நியூயார்க் மாநகரில் புலம்பெயர்ந்த தமிழனொருவனின் இருத்தலிற்கான போராட்ட நிகழ்வுகளை விபரிக்கும். இந்த நாவல் ஏற்கனவே பதிவுகள் மற்றும் திண்ணை இணைய இதழ்களில் அமெரிக்கா என்னும் பெயரில் 2007 ஆம் காலப்பகுதியில் தொடராக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.- ஆசிரியர்]