யூன் மாதம் 20ம் நாள் 1682ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்தவர் பத்தலோமயுஸ் சீகன்பால்க் என்னும் புரட்டஸ்தாந்த மத போதகர். துந்தை உணவுத்தானிய வியாபாரியாக விளங்கியவர். சீகன்பால்க் நான்கு மூத்த சகோதரிகளுக்கு இளையவராகப் பிறந்தார். நலிந்த உடலும் பலவீனமானவராகவும் இளமைக்காலத்தில் காணப்பட்டார். இளமையில் தாயையும் பின்னர் தந்தையையும் இழந்தார். புல்ஸனிட்ஸ் என்னும் இடத்தில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்த அவர் 12வது வயதில் யோர்லிட்ஸ் என்னும் இடத்திலுள்ள இடைநிலைப் பள்ளியில் சேர்ந்து உயர்கல்வியைப் பெற்றார். பாடசாலைப் பதிவேட்டில் அவரது பெயருக்குக் கீழே உடலிலும், உள்ளத்தாலும் வளர்ச்சியடையாத மாணவன் எனக்குறிப்பிடப்பட்டிருந்தது அவரது இளமைக்காலத்தில் அவர் எத்தககைய நிலையல் இருந்துள்ளார் என்பதனை எடுத்துக்காட்டுகின்றது. வாலிபப்பருவத்தை அடைந்தும் ஜேர்மனியல் பிரபலமாக விளங்கிய ஜேக்கப் பௌஃமி இன் அறிந்துகொள்ளமுடியாத பரவச மனநிலையில் ஆன்மீக வழிபாடு செய்து இறைவனை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் தத்துவக் கொள்ளையின் பால் ஈர்க்கப்பட்டு அதிலிருந்து விடுபடமுடியாதவராக பெரும் உளப்போராட்டத்திற்கு உள்ளானார். பின்பு அதிலிருந்து விடுபட்டு 1702ல் உயர்கல்விக்காக பெர்லின் நகருக்குச் சென்றார். சுகவீனமுற்றிருந்தமையால் அவரால் கல்வியைத் தொடர்வதில் தடங்கல்கள் காணப்பட்டன. 1703ல் இறையியில் கல்வி கற்பதற்காக ஹலே என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கும் அவர் அடிக்கடி சுகவீனமுற்றிருந்தார். “நான் எங்குசென்றாலும் சிலுவை என்னைப் பின்தொடரகின்றது” என அவர் தனது துன்பத்தை வெளியிட்டுள்ளார். அங்கு எரேபிய மொழியைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார்.
டேன்மார்க் அரசன் நான்காம் பிரடெறிக் டேனிஸ் கிழக்கிந்தியக் கம்பனியின் காலணிக்குட்டபட பகுதிகளில் அருட்பணியாளர்களை அனுப்பி மதக்கொள்கைகளைப் பரப்பவேண்டும் என அறிவித்தான் எனினும் சீகன்பாக் சார்ந்திருந்த லுதேர் திருச்சபை அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மிசனரிக்கான தேர்வுப்பணி ஜேர்மனியில் இடம்பெற்றது. அங்கு கென்றிச் புளுட்டாச்சோ மற்றும் சீகன்பால்க இருவருக்கும் திருநிலைப்பாட்டு நீராட்டப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் மன்னரின் அழைப்பை ஏற்று டென்மார்க் சென்றார். 1705ல் சீகன் பால்க்கும் கென்றிச்புளுட்டாச்சும் அரசரின் செலவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தனது கடல் பயணத்தை “மரணக் கல்விச் சாலை Academy of death எனக்குறிப்பிட்டு தனது The General School of True Wisdom” என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். கடல் பயணத்தின் ஆபத்துக்களையும் நிலைமைகளையும் விளக்கி எழுதியிருந்தார். இதுபின்னர் 1710ல் டென்மார்க இளவரசி சோபியாவினால் வெளியிடப்பட்டது. ஜேமனியில் இருந்து முதன் முதல் இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்ற புரட்டஸ்தாந்து மதத்தைச் சார்ந்தவர் சீகன் பால்க் ஆவார். இவரது காலத்தில் இந்திய மொழியில் முதன்முதல் விவிலியம் மொழிபெயர்க்கப்பட்ட அச்சுரப்பெற்றதெனினும் தமிழில் அதனை மொழிபெயர்த்து 1714ல் சீகன்பால்க் அச்சுருவாக்கினார்.
தமிழ் நாட்டிற்கு வந்த சீகன்பால்க் அங்கு தமிழ்மொழியைக் கற்று அதன் சிறப்பையும் தமிழரின் சீரிய பண்பையும் கண்டு வியப்புற்றார். தமிழர்கள் எழுத்தாணியைப் பயன்படுத்திப் பனை ஓலையில் எழுதும் கல்வியறிவைப பெற்றிருந்தனர் என்பதனையும் அவரின் இலக்கிய இலக்கண அறிவு அபாரமானது என்பதனையும் உணர்ந்துகொண்டார். அவரால் எழுதப்பட்ட எழுத்துகளில் குற்றுகள் இடம் பெறவில்லை என அதனை ஆராய்ந்த மோகனவேல் குறிப்பிடுகின்றார். தமிழ் மொழி பற்றி அதனைக் கற்று அறிந்த பின்னர் அவரின் எண்ணப்பாங்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளமையை பின்வரும் அவரது வாசகம் எடுத்துக்காட்டுகின்றது. “நானும் முதலில் தமிழ் மொழி தரம் குன்றியது என்றும், தமிழர் வாழ்க்கை தாறுமாறானது என்றும் நினைத்தேன். தமிழ் மொழியைப் பயின்றேன். தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தேன். தமிழரோடு உரையாடினேன், உறவாடினேன். அதன் பின்னர் என் எண்ணத்தை முற்றிலும் திருத்திக் கொண்டேன். தமிழ் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று. தமிழ் இலக்கண விதிகள் மிகச் சிறந்த முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. எழுத்தாணியால் பனை ஓலையில் அழகாக எழுதும் திறமை வாய்ந்தவர்கள் தமிழர்கள். பல கலைகளில் புலமை எய்தியவர்கள். வாணிபத்திலும், ஓவியத்திலும் தேர்ந்தவர்கள். அவர்களுடைய ஆட்சிச் சட்டமும், நீதி நெறியும் மக்கள் நல வாழ்க்கைக்கு அரணானவை. மனோதத்துவ வேதாந்தப் பொருட்களிலும் அவர்களின் நூல்கள் வியந்து போற்றுதற்குரியது. வேதசரித்திர நுட்பங்களை அவர்கள் உரிய முறையில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.”
தமிழர்களின் மேன்மையினை ஜேர்மனியர்கள் அறியவைத்த முதலாவது புரட்டாஸ்தாந்த மதபோதகர் இவரே ஆவார். கப்பலில் இருந்து கடற்கரைக்கு வருவதற்கே பெரும் எதிர்ப்புக்கள் இருந்தன. போர்த்துக்கீசர் அவர்களை வரவிடாது தடுக்க முயற்சித்தனர். அவர் பேர்த்துககீசரால் அகதி முகாமில் தங்கவைக்கப்பட்டார். மணலில் கையால் எழுதித் தமிழைக் கற்றுக்கொண்டார். போர்த்துக்கீச மொழிபெயர்ப்பாளராக இருந்த ஒரு தமிழ் முதியவரிடம் தமிழைக் கற்றுக்கொண்டார். ஏறக்குறைய 5000 தமிழ்ச் சொற்களை மனனம் செய்துகொண்டார். ஐரோப்பியரை எதிர்த்துச் சீகன்பால் ஏழைகளுக்காகக் குரல் கொடுத்தார். சீகன்பால்க் ஐரோப்பியர்களின் வீடுகளிலும், தோட்டங்களிலும் எடுபிடி வேலை செய்த இந்தியர்களுக்காக, முதல் மிஷன் பாடசாலையையும், குழந்தைகள் இல்லத்தையும் நிறுவினார். டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றிய ஜெர்மன் வீரர்களுக்காக வேதாகமம், பாடல் புத்தகம், தியானப் புத்தகம் கொண்ட ஒரு ஐரோப்பிய நூலகம் ஒன்றையும் ஏற்படுத்தினார். ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ், மற்றும் ஸ்பானிய வேதாகமங்கள், தியானப் புத்தகங்கள் இங்கிருந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் வினியோகிக்கப்பட்டது. சீகன்பால்க் முயற்சியால் 1707 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 14ஆம் நாள், இந்திய கிறிஸ்தவர்களுக்கென்று ஒரு தனி ஆலயம் (புதிய எருசலேம் ஆலயம்) பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது 1717 ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழ் லுத்தரன் திருச்சபைக்காக இத்தேவாலயம் மூன்று நூற்றாண்டுகளைத் தாண்டி இன்னும் நிற்கிறது. சீகனின் தீவிர முயற்சியால், தரங்கம்பாடி மிஷனை, ஜெர்மனி, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளும் ஆதரித்தன. இவர்களால் கொடுக்கப்பட்ட பணத்தால் மிஷனரிகளுக்கு வீடுகளும், மூன்று பள்ளிக்கூடங்களும் வாங்கப்பட்டன. பொறையாறு என்னும் ஊரில் அழகிய தோட்டம் ஒன்றையும் சீகன் வாங்கினார். சென்னை மற்றும் கடலூரில் பள்ளிக்கூடங்கள் நிறுவினார் தமிழ் மொழிக்கு 1700களின் ஆரம்பத்தில் தொண்டாற்றியதோடு போர்த்துக்கீசருக்கு எதிராகவும் செயற்பட்ட ஒரு மதபோதகராக அவர் காணப்பட்டார். அவர் ஆற்றிய தமிழ்ப்பணி பற்றி அடுத்த இதழில் ஆராய்வோம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.