நம் பண்டைத்தமிழ்ச் சான்றோர்கள் தம் வாழ்வியலை அகம், புறம் என இரு கூறாக வகுத்து அமைத்தனர். புறம் புறவாழ்வில் மேற்கொள்ளும் இனப்பற்று, நாட்டுப்பற்று, மொழிப்பற்று, அறநெறிப்பற்று, ஆண்மை, போரியல் மரபு ஆகியவை இப் புறத்தில் அடங்கும். அகம் அக வாழ்வில் தமிழர்கள் அன்போடும், பண்போடும், அறநெறியோடும் வாழ்ந்ததன் சீரினைக் கூறுகின்றது. இங்குள்ள குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகை நிலங்களிலும் தலைவன், தலைவியர் உலாவலம் வந்து அவர்தம் உள்ளத்தில் எழும் உணர்வெழுச்சிகளிற் பங்கேற்றுப் பரவசமடைவர். இதைத் தொல்காப்பியச் சூத்திரத்தில் காண்போம்.
'புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.' ------- (பொருள். 16)
இவ்வண்ணம் அவர்கள் குறிஞ்சியில் புணர்தலும், பாலையில் பிரிதலும், முல்லையில் இருத்தலும், நெய்தலில் இரங்கலும், மருதத்தில் ஊடலும் ஆகிய வேறுபட்ட உணர்வுகளோடு வாழ்வியலை நடாத்தி வெற்றியும் கண்டுள்ளனர். தலைவன் தலைவியர் காதலித்துக் களவொழுக்கத்தில் நின்று, 'பகற்குறி', 'இரவுக்குறி' அமைத்துக் கூடுவர். இதை அறிந்த இரு பக்கப் பெற்றோரும் அவர்களுக்குக் கரணத்தொடு கூடிய திருமணம் செய்து வைப்பர். ஆனால் சில பெற்றோர் தம் பிள்ளைகள் மேற்கொண்ட காதலை ஏற்க மாட்டார். எனவே தலைவன் தலைவியர் ஒன்றிணைந்து தனிவழி சென்ற பொழுதும; கொடுத்தற்குரிய தலைவியின் தமர் இல்லாதவிடத்தும், சடங்கோடுகூடிய மணநிகழ்வு நடைபெறுதலும் உண்டாம். இங்குதான் கரணத்தின் சிறப்பைக் காண்கின்றோம்.
'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான.' – (பொருள். 141)
இனி, தலைவன் தலைவியர் பாலைவழி தனித்து உடன்போக்கில் சென்ற காட்சிகளைச் சங்ககால இலக்கியங்கள் காட்டும் பாங்கினையும் காண்போம்.
தொல்காப்பியம்
இடைச்சங்க காலத்தில் எழுந்த தொல்காப்பியம: உடன்போக்கில் சென்ற தலைவன் தலைவியர் பற்றிக் கூறுவதையும் பார்ப்போம்.
1. தலைமகள் உடன்போகியவழி, தன்னையும் தலைவன் தலைவியையும் சுட்டி, நிலைபெற்ற நிமித்தமாகிய பல்லி ஒலியைத் தன் கருத்திற்கு ஏற்றவாறு கொள்ளுதலும், பிறர் தம்முள் பேசுகின்ற சொற்களைத் தனக்குரியதாகக் கூறுதலும், தனக்கும் தலைமகளுக்கும் வரும் நன்மை, தீமை, அச்சம் பற்றிக் கூறுதலும், அவர்கள் தன்னிடம் வந்து சேர்தலைக் கூறுதலும், பிற கூற்றுக்களும் சேர்ந்து முக்காலத்துடன் தோழியிடத்தும் கண்டோரிடத்தும் கூறி வருந்துதலும் ஆகிய கூற்றுக்கள் நற்றாயிடத்து உளவாம்.'
தன்னும் அவனும் அவளுஞ் சுட்டி
மன்னும் நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம்
நன்மை தீமை அச்சஞ் சார்தலென்று
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் ன்றொடு விளக்கித்
தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்
போகிய திறத்து நற்றாய் புலம்பலும்
ஆகிய கிளவியும் அவ்வழி உரிய.' – (பொருள். 39)
2. பாதுகாவலான பெரிய ஊரிடத்தும், சேரியிடத்தும், ஊரினின்றும் நீங்கிய பாலையிடத்தும், பிரிந்து சென்ற மகளைத் தேடித் தாமே செல்லும் தாயரும் உளர்.
'ஏமப் பேருர்ச் சேரியும் சுரத்தும்
தாமே செல்லும் தாயரும் உளரே.' – (பொருள். 40)
3. தலைவன் தலைவியை விட்டுப் பிரியுமிடத்துத் தலைவிக்குப் பின்வரும் வருத்தத்தை எடுத்துக் கூறுதலும், தலைவியையும் உன்னுடன் அழைத்துச் செல்வாயாக என்று தலைவனிடத்துக் கூறுதலும், தலைவியைத் தலைவனுடன் அனுப்பிக் கூறுதலும், தலைமகள் சுற்றத்தை விட்டு நீங்குவதால் தனக்கு நேரும் நோயிடத்துக் கூறுதலும், உண்மைக்கும் பொய்;க்கும் இடமான தலைவனைக் குறித்தும், தலைவியின் தாயின் நிலையை அறிந்து தலைவியை அனுப்பாது இருக்கச் செய்யுமிடத்தும், தலைவன் பிரிவைத் தாங்காது வருந்திய தலைவியை 'வருந்தாது இருப்பாயாக' என்று வற்புறுத்துமிடத்தும,; தோழிக்குரிய கூற்று நிகழும் என்பதாம்.
'தலைவரும் விழும நிலையெடுத் துரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
நீககலின் வந்த தம்முறு விழுமமும்
வாய்மையும் பொயம்;மையும் கண்டோர்ச் சுட்டித்
தாய்நிலை நோக்கித் தலைபெயர்த்துக் கொளினும்
நோய்மிகப் பெருகித்தன் னெஞ்சு சுலுழ்ந்தோனை
வன்புறை நெருங்கி வந்ததன் திறத்தொடு
என்றிவை எல்லாம் இயல்புற நாடின்
ஒன்றித் தோன்றும் தோழி மேன.' – (பொருள். 42)
ஐங்குறுநூறு
கடைச்சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது ஐங்குறுநூறு என்ற நூலாகும். இதில் உடன் போக்குப் பற்றிய செய்திகளையும் காணலாம்.
1. தோழி, 'ஒளிபொருந்திய வளையலை உடையவளே! உடன் போக்கில் தமர் எதிர்த்துத் தடுக்காதபடி விரைவாய் ஓடும் குதிரை பூட்டிய தேருடன் தலைவன் தன்னுடன் நின்னை அழைத்துக் கொண்டு போவதற்கு வந்துள்ளான். ஆதலால் நீ காலம் தாழ்த்தாது கண் உறக்கம் நீங்கித் தெளிவாயாக! அதனால் நம் நலம் கவர்ந்த பசலையின் கேட்டைக் கண்டு நாம் மகிழலாம்' என்று உihத்தாள். அம்மூவனார் பாடிய பாடல் இது.
'இலங்கு வீங்கு எல்வளை! ஆய்நுதல் கவினப்
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே,
விலங்கரி நெடுங்கண் ஞெகிழ் மதி
நலங்கவர் பசலையை நகுக நாமே.' – (பாடல் 200)
2. மறவர் பறை கொட்டும் முழக்கத்துக்கு ஏற்ப மயில் ஆடும் நெடிதாய் உயர்ந்த குன்றத்தில் ஒலிக்கும் மேகம் மழை பெய்தலால் சுரம் வெம்மை இல்லாதாகுக. தலைமகள் தான் காதல் கொண்ட தலைவனுடன் போயினாள். அதை அறிந்த நற்றாய் உடன் போக்கு அறநெறி என்று மகிழ்ந்து சொல்லித் தன் நெஞ்சிற்கு விளக்கி வருந்தினாள்.
'மள்ளர்கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடுங்குன்றம் படுமழை தலைஇச்
சுரநனிஇனிய வாகுக தில்ல-
பிறைநுதல் குறுமகள் போகிய சுரனே' – (பாடல் 371- ஓதலாந்தையார்)
3. 'பல முறை எண்ணிப் பார்த்தாலும் இந்த உடன் போக்கு நல்ல முறையே ஆகும். கூற்றுவனைப் போன்ற வலிமையுடைய தலைவன் காவல் செய்ய, முடித்தற்குரிய நீளமில்லாத கூந்தலையுடைய என் இளமையான மகள், குரங்குகளாலும் புகுந்தறியப் படாத காட்டைக் கடந்து போயினள்.' என்று தாய் கூறி ஆனந்தங்கொண்டாள்.
'பல்ஊழ் நினைப்பினும் நல்லென்றுஊழ்-
மீளிமுன்பின் காளை காப்ப,
முடியகம் புகாஅக் கூந்தலள்
கடுவனும் அறியாக் காடிறந்தோளே.' – (பாடல். 374- ஓதலாந்தையார்)
4. தலைவி தலைவனுடன் கூடிச் சென்றாள். அப்பொழுது தோழி அறத்தொடு நின்று தலைவன் தலைவிக்கிடையே உள்ள தொடர்பை நற்றாய்க்குக் கூறினாள். அதற்கு நற்றாய் 'குளிர்ந்த மலையில் கூட்டமான யானைகள் நிறைந்த சோலை வழியே வெற்றி பொருந்திய வேலை உடையவனான தலைவனுடன் கூடிச் சென்று விட்டாள். இந்த உடன் போக்கு நாம் செய்யும் மணத்தை விட இனியதோ?' என்று வருந்திக் கொண்டாள்.
'தன்னமர் ஆயமொடு நன்மண நுகர்ச்சியில்
இனிதாம் கொல்லோதனக்கே – பனிவரை
இனக்களிறு வழங்குஞ் சோலை
வயக்குறு வெள்வேலவற் புணர்ந்து செலவே.' – (பாடல் 379- ஓதலாந்தையார்)
5. தன் மகள் தலைவனுடன் சென்றுவிட்டாள். இதை அறிந்த செவிலி அவளைத் தேடிச் சென்றாள். எதிர் வந்த அந்தணரை நோக்கி 'அறத்தை உரைக்கும் அரிய மறைகளைப் பயின்ற அந்தணரே! வணங்குகிறேன். என் மகள் தன் காதலனுடன் சென்று விட்டாள். அவளைப் பார்த்ததுண்டா? என வினவ, 'மங்கையே! யாம் அவளைச் சுரத்திடையே பார்த்தோம். அவள் தன் துணைவனுடன் குன்றுகள் செறிந்த உயர் மலைகளைக் கடந்து சென்று விட்டனர். ஆதலால் நீ அவளைத் தேடிப் பின் தொடர்ந்து சென்று துன்புற வேண்டாம்' என்று செவிலிக்கு அந்தணர் உரைத்தார்.
'அறம்புரி அருமறை நவின்ற நாவின்
திறம்புரி கொள்கை அந்தணிர்! தொழுவல் என்று
ஒண்தொடி வனவும் பேதையம் பெண்டே
கண்டெனம் அம்ம, சுரத்திடை அவளை-
இன்துணை இனிது பாராட்டக்
குன்றுயர் பிறங்கல் மலைஇறந்தோளே.' – (பாடல். 387- ஓதலாந்தையார்.)
6. தலைவன் உடன் போக்கில் தலைவியைத் தன் இல்லத்துக்குக் கொண்டு சென்றான். அப்போது அவன் தாய் அவளுக்குச் சிலம்பை விலக்கிச் சிலம்புகழி நோன்பு செய்தாள் என்பதை நற்றாய் அறிந்து கவலை கொண்டாள். பண்டைக் காலத்தில் திருமணம் இரு கூறு கொண்டது. முதற்கூறு சிலம்பு கழித்தல். அது தலைமகள் வீட்டில் நடைபெறுவது. இரண்டாம் கூறு வதுவை மணமானது. சிலம்பு கழிநிகழ்வு மணமகன் வீட்டில் நிகழ்ந்து விட்டதால் தன் இல்லத்தில் வதுவையேனும் நிகழ வேண்டுமென்று தலைவியின் தாய் வேண்டி நின்றாள்.
'நும்மனைச் சிலம்பு கழீஇய அயரினும்
எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச்
சொல்லின் எவனோ மற்றே – வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்,
பொய்வல் காளையை ஈன்றதாய்க்கே?' – (பாடல். 399- ஓதலாந்தையார்.)
கலித்தொகை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது கலித்தொகையாகும். இதில் தலைவன் தலைவியர் உடன்போக்குக் கூறும் செய்திகளையும் கண்டின்புறுவோம்.
1. தன்னைப் பிரிந்து செல்லத் துடிக்கும் தன் காதலனிடத்தே தன்னையும் உடன் அழைத்துப் போகுமாறு வேண்டுகின்றாள் ஒரு காதல் மனைவி. புல் நுனியும் காணாத காட்டுப் பசுக்கம், பசியால் மெலிந்து அங்குள்ள கள்ளிச் செடிகளைத் தின்னத் தொடங்கும். மழையோ பெய்யாது பொய்த்து விட்டது. நீர் நிலைகள் வற்றிப் போயிற்று. இத்தன்மை கொண்டது காட்டுவழி. இது பாறைகளால் நிறைந்தது. அவ்வழிச் செல்வோர், ஆறலை கள்வர்களின் அம்புகட்குப் பலியாவர். ஆறலை கள்வர்களும் குடிக்கத் தண்ணீர் இன்றித் துடிப்பர். காட்டின் நிலை கூறியும், தன்னையும் உடன் அழைத்துச் செல்லும்படி கேட்கின்றாளே! இணைந்து செல்லும் இன்பமே மேல் என்பது தலைவியின் பண்பை உணர்த்துகிறது.
'மரையா மரல்கவர, மாரி வறப்ப –
வரைஓங்கு அருஞ்சுரத்து ஆரிடைச் செல்வோர்,
சுரைஅம்பு மூழ்கச் சுருங்கிப், புரையோர்தம்
உள்நீர் வறப்பப் புலர்வாடும் நாவிற்குத்-
தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரம்
கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால்,
என்னீர் அறியாதீர் போல, இவை கூறல்?
நின்னீர அல்ல, நெடுந்தகாய்! ஏம்மையும்,
அன்பு அறச் சூழாதே, ஆற்றிடை நும்மொடு
துன்பம் துணையாக நாடின், அதுவல்லது
இன்பமும் உண்டோ, எமக்கு' – (பாடல் 5- பாலைபாடிய பெருங்கடுங்கோ)
2. ஒருவனை ஒருத்தி காதலித்தாள். பெற்றவரோ அவளை வேறொருவனுக்குக் கொடுக்க விரும்பினர். அவள் தான் பிறந்த இடத்தை விட்டுத் தன் காதலனுடன் உடன் போக்கில் சென்று விட்டாள். அவளை வளர்த்த செவிலித்தாய் அவளைத் தேடிச் சென்றாள். வழியில் அந்தணர் சிலர் வந்தனர். அவர்களை அவள் கேட்க அவர்கள் கூறிய பதிலும் கீழ்க்;காட்டிய பாவில் அமைந்துள்ளது.
'எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்,
உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல்அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல்மாலைக், கொளை நடை அந்தணீர்!
....... என்மகள் ஒருத்தியும், பிறர்மகன் ஒருவனும்,
தம்முள்ளே புணர்ந்த தாம்அறி புணர்ச்சியர்,
அன்னார் இருவரைக் காணிரோ? – பெரும!
காணேம் அல்லேம், கண்டனம், கடத்திடை,
ஆணெழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மாண்இழை மடவரல் தாயிர் நீர் போறிர்.
..... நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீருளே பிறப்பினும், நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையவளே!
........ சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்.
அறந்தலை பிரியா ஆறும் மற்று அதுவே.'– (பாடல்.8 –பாலைபாடிய பெருங்கடுங்கோ)
நற்றிணை
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது நற்றிணையாகும். அதில் தலைவனுடன் உடன்போகும்படி தலைவியை வேண்டுகிறாள் தோழி.
1. 'நம்மூர்த் தெருவில் பலர் கூடிநின்று எம்மைப்பற்றிப் பழி தூற்றுகின்றனர். இதையறிந்த அன்னையும் எங்களைக் கடினமாகப் பார்கின்றாள். இதனால் யானும் துயர் உற்றேன். கானலிடத்தே கடிதாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தேரை விரையச் செலுத்தியபடி, நடுயாமத்தில் வந்து நிற்கும் உன் தலைவனோடு உடன் சென்று விடு. அங்ஙனம் சென்றனையானால், ஊரில் எழுந்த பழிச்சொற்கள் ஒழிந்து போகும்' என்று தலைவிக்குத் தோழி கூறினாள்.
'சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
அலந்தனென் வாழி தோழி! கானல்
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவர்
கடுமாப் பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு
செலவுஅயர்ந் திசினால், யானே,
அலர்சுமந்து ஒழிகஇவ் அழுங்கல் ஊரே!' – (பாடல் 149 – உலோச்சனார்)
2. தலைவனுடன் தலைவியும் உடன்போக்கிற் சென்றனள். அவள் செயல் அறனெனக் கருதினாலும், தாயின் மனம் மிகவும் வேதனைப்பட்டது. வேம்பின் பழத்தைத் தின்னுதலையும் வெறுத்தது. இருப்பையின் பால் வற்றிய பழத்தையும் தின்ன விரும்பியது. பனியில் சென்று வருந்தும் வெளவால் போல், அவளும் புலர் காலையில் அகன்று வருந்திச் சென்றனள். தலைவனை அவள் மணமுடிக்கும் காலத்தில் கழிக்க வேண்டிய, சிலம்புகழி விழாவை யான் கண்டு மகிழாது, பிறர் கண்டு மகிழுமாறு அவன் பின்னால் போயினாள் அவள். என் மகளின் காலடிகள் அச்சுரத்திடையே சென்று இதுவரை எவ்வாறு வருந்துகின்றனவோ! என்று தாய் மனம் வேதனைப்படுகின்றது.
'வேம்பின் ஒண்பழம் முனைஇ இருப்பைத்
தேம்பால் செற்ற தீம்பழன் நசைஇ
வைகுபனி யுழந்த வாவல் சினைதொறும்
நெய்தோய் திரியில் தண்சிதர் உறைப்ப
நாட்சுரம் உழந்த வாட்கேழ் ஏற்றையொடு
பொருத யானைப் புண்தாள் ஏய்ப்பப்
பசிப்பிடி உதைத்த ஓமைச் செவ்வரை
வெயில்காய் அமையத்து இமைக்கும் அத்தத்து
அதருழந்து அசையின கொல்லோ ததரல்வாய்ச்
சிலம்பு கழீஇய செல்வம்
பிறருணக் கழிந்தஎன் ஆயிழை அடியே!' – (பாடல் 279 – கயமனார்)
3. தலைவன் தான் காதலித்த தலைவியை உடனழைத்து வந்து, தன்னூரில் அவளை மணந்து இல்லறம் நடாத்தி வந்தான். சிறுகாலம் செல்ல அவனுள்ளத்தில் பொருள் தேடும் ஆசை உதித்தது. அதனை, அவன், தலைவியின் தோழிக்குக் கூற, அவள் 'நும் பிரிவைத்; தலைவி பொறுத்து, நீர் பொருள்தேடி வரும்வரை உயிர் தரியாள். எனவே, அவளைப் பிரியாதிருப்பாயாக!' என்றாள்.
'நினைத்தலும் நினைதிரோ வைய வன்றுநாம்
பணைத்தா ளோமைப் படுசினை பயந்த
பொருந்தாப் புகர்நிழல் இருந்தன மாக
நடுக்கஞ் செய்யாது நண்ணுவழித் தோன்றி
ஒடித்துமிசை கொண்ட வோங்குமறுப்பு யானை
பொறிபடு தடக்கை சுருக்கிப் பிறிதோர்
அறியிடை இட்ட அளவைக்கு வேறுணர்ந்து
என்றூழ் விடரகம் சிலம்பப்
புன்தலை மடப்பிடி புலம்பிய குரலே! – (பாடல் 318-பாலைபாடிய பெருங்கடுங்கோ)
4. தான் காதலித்த தலைவியை அவள் பெற்றோரும் அறியாமல், தன் ஊருக்கு உடன் அழைத்துச் சென்றான் தலைவன். இடைவழியில், அவள் சோர்வு கண்டாள். தலைவியைத் தலைவன் தேற்றுகின்றான். மாமை நிறத்தவளே! ஏந்திரப் பாவைபோல இயங்கினாய். உன் தந்தையின் மனையின் எல்லையைக் கடந்து என்னுடன் வந்தனை. இக்காட்டிலுள்ள சிவந்த தம்பலப் பூச்சிகளைப் பார்த்தும், பிடித்தும் விளையாடுவாயாக! ஆறலைக் கள்வரோ, பிறகொடியவரோ இங்கு வந்தால் அவருடன் போரிட்டுக் கலைத்து விடுவேன். உன் சுற்றத்தார் நம்மைத் தேடி வந்தால் அந்த வேங்கை மரத்தின் பின்னே மறைந்து கொள்வேன். உன் அச்சமும், சோர்வும் நீங்கியபின் நாம் என்னூர் செல்வோம் என்றவாறு.
'வினையமை பாவையின் இயலி, நுந்தை
மனைவரை இறந்து வந்தனை, ஆயின்,
தலைநாட்டு எதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத் தகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டும், கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே, யானே,
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி,
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்,
நுமர்வரின், மறைகுவென்- மாஅயோளே!'–(பாடல் 362- மதுரை மருதனிள நாகனார்)
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
நாலடியார்
சங்கம் மருவிய காலத்தில் எழுந்த பதினெண் நூல்களை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனக் கூறுவர். இப் பதினெண் நூல்களையும் அறம், அகம், புறம் என்ற முப்பெரும் பகுதிகளில் வகுத்துக் காட்டுவர். அறம் பதினொரு (11) நூல்களையும், அகம் ஆறு (06) நூல்களையும், புறம் ஒரு (01) நூலையும் கொண்டதாகக் கூறுவர். இதில் நாலடியார் அறம் கூறும் நூலாகின்றது. சமண முனிவர் நானூறு பேர் பாடிய நானூறு வெண்பாக்களைக் கொண்டது நாலடியார். இதில் தலைவன் தலைவியர் உடன் போக்குப் பற்றிக் கூறும் பாங்கினையும் பார்ப்போம்.
1. செவ்வாம்பல் போலத் தோன்றும் வாயையும், அழகிய இடையையும் உடைய என் மகள் முன்னர், செம்பஞ்சுக் குழம்பைப் பாதத்தில் பஞ்சினால் தடவிய போதும், மெல்ல மெல்ல எனக் கூறிக் காலைப் பின்னுக்கு இழுத்துக் கொள்வாள். அந்தோ! அந்தப் பாதங்கள் பரற் கற்கள் பொருந்திய பாலை வழியின் கொடுமையை எவ்வாறு தாங்கின? (தலைவனுடன் உடன் போகிய தலைவியை எண்ணித் தாய் இரங்கியது.)
'அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற்கு அன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ – அரக்கார்ந்த
பஞ்சிகொண்டு ஊட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப் பின்வாங்கும் அடி' – (பாடல். 396)
2. ஒளி பொருந்திய வளையல்களையுடையவளே! 'கடந்து போதற்கு அரிய பாலை வழியிலே காளை போன்ற நின் காதலனுடன் நாளை நடந்து செல்லும் ஆற்றல் உடையையோ?' என்றுதானே கேட்கின்றாய்? ஓருவன் ஒரு குதிரையை எப்பொழுது பெற்றானோ அப்பொழுதே அதில் ஏறிச் செல்லும் முறையையும் கற்றவன் ஆவான். ஆதலால் காதலன்பின் செல்லுதல் அரிதன்று. (தலைவனுடன் போகச் சம்மதித்த தலைவி தோழிக்குக் கூறியது.)
'கடக்கருங் காலத்துக் காளைபின் நாளை
நடக்கவும் வல்லையோ என்றி – சுடர்த்தொடீஇ
பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அஃதூரும் ஆறு.' – (பாடல். 398)
3. முலைக்காம்புகளும், முத்துமாலையும் உடல் முழுதும் அழுந்தும்படி தழுவிக் கொண்டதன் காரணத்தை அப்போது யான் அறியேன்! தாமரைப் பூவில் உறையும் திருமகள் போன்ற என் மகள், மான் கூட்டங்கள் புலிக்கு அஞ்சும் பாலை நிலத்தில் என்னை விட்டுப் பிரிந்து தன் காதலனுடன் செல்வதற்குத்தான் அப்படி அன்புகாட்டி என்னைத் தழுவிக் கொண்டாளோ? (தலைவனுடன் போன தன் மகளை எண்ணி நற்றாய் வருந்திக் கூறியது.)
'முலைக்கண்ணும் முத்தும் முழுமெய்யும் புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன் - கலைக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும்என்
பூம்பாவை செய்த குறி.' – (பாடல். 399)
ஐந்திணை ஐம்பது.
1. தலைவனுடன் தலைவி உடன் சென்றனள். அப்போது நற்றாய் 'என் மகள் தன் காதலனுடன் வெப்பங் கொண்ட காட்டு வழியில், தான் விளையாடிய பொம்மை, பந்து, பசுங்கிளி, தோழியர் கூட்டம் ஆகியவற்றை எண்ணிப் பாராது சென்று விட்டாளே!' என்று தனக்குள் சொல்லி வருந்தினாள். இதுவும் மற்றதும் அகம் கூறும் நூலாகும்.
'பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும்
ஆயமு மொன்று மிவைநினையாள் - பால்போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லுங்கொல் காதலன்பின்
காய்ந்து கதிர்தெறூஉங் காடு.' – (பாடல் 33 – மாறன் பொறையனார்.)
2. தலைவனுடன் தலைவி உடன் போயினள். அதை நினைந்து நற்றாய் 'தோழியர்களுடன் விளையாடும் பொழுது தளர்கின்ற கால்களையுடைய என் மகளது நடை, கற்கள் நிரம்பிய காட்டில் தன் காதலன் பின்னால் ஓய்ந்து போகாமல் செல்லுதலில் வல்லனவோ?' என்று கவலை கொள்கின்றாள்.
'தோழியர் சூழத் துறைமுன்றி லாடுங்கால்
வீழ்பவள் போலத் தளருங்கால் - தாழாது
கல்லத ரத்தத்தைக் காதலன் பின்போதல்
வல்லவோ மாதர் நடை.' – (பாடல் 37 –மாறன் பொறையனார்.)
திணைமொழி ஐம்பது.
தலைவி தலைவனுடன் உடன் போக்கிற் சென்றாள். தலைவன் தன்பின் வரும் தலைவியுடன், 'கூர்மையான பற்களையும் அழகிய சொற்களையும் உடைய பெண்ணே! நாம் செல்கின்ற இந்த வழியானது கரிய மராமரம், நுணாமரத்துடன் கூடி மலரப் பெற்றும், பெரிய இறகுகளையுடைய வண்டுக் கூட்டங்கள் பாலைப் பண்ணைப் பாடப் பெற்றும், நம்மை அன்புடன் வரவேற்பதையும் காண்பாயாக!' என்று கூறி ஆற்றுவித்தான். இது அகம் கூறும் நூலாகும்.
'கருங்கான் மராஅ நுணாவோடு அலர
இருஞ்சிறை வண்டினம் பாலை முரல
அரும்பிய முள்ளெயிற்று அஞ்சொல் மடவாய்
விரும்புநாம் செல்லு மிடம்' – (பாடல் 16 – கண்ணன் சேந்தனார்.)
ஐந்திணை எழுபது
தவைனுடன் தலைவி பாலை வழியே புறப்பட்டுச் சென்று விட்டாள். அதை அறிந்த நற்றாய் வருந்தி உரைத்தது. 'என் மகள் ஆண் யானையைப் போன்ற தலைவன் பின்னால் சிறிய பரற்கற்கள் பதிக்கப்பட்ட சிலம்புகள் ஒலிக்க, கற்கள் நிறைந்த பாலை நில வழியே நடந்து போவாளோ! அல்லது பாலை வழியே செல்ல இயலாது வருந்தித் துன்புற்று வாடுவாளோ? யான் அறியேன்!' என்று கூறி வருந்தினாள். அகம் கூறும் நூலாகும் இப் பாடல்.
'ஒல்லோமென் றேங்கி உயங்கி யிருப்பளோ
கல்லிவ ரத்தம் அரிபெய் சிலம் பொலிப்பக்
கொல்களி றன்னான் பின் செல்லுங்கொல் என்பேதை
மெல்விரல் சேப்ப நடந்து.' – (பாடல் 40 - மூவாதியார்)
திணைமாலை நூற்றைம்பது
இதில் வரும் நான்கு பாடல்களிலும் தலைவி தமரை விட்டுத் தன் தலைவனுடன் உடன் போக்குச் செய்த காட்சிகள் தென்படுகின்றன. இந்த ஐந்து பாடல்களையும் கணிமேதாவியார் பாடியுள்ளார். இவை அகம் கூறும் பாடல்களாகும்.
1. தலைவி தான் காதலித்த தலைவனுடன் சென்று விட்டாள். அவளைத் தேடிய செவிலி பாலை நிலத்தைச் சென்றடைந்தாள். அங்கு குரா என்ற மரத்தைப் பார்த்துப் புலம்புகின்றாள். 'குரா மரமே! கொங்க மரம் தாய் போன்று இரங்கிக் கொங்கை போன்ற பூக்களைக் கொடுக்க, (பாலையூட்ட) நீ பொம்மை போன்ற காய்களைப் பெற்றாய் (பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளாய்). அதனால் என் மகள் உன்னிடம் சொல்லிய பொருளை எனக்கு எடுத்துக்காட்ட வல்லாய் அல்லை!. எனினும், என் மகள் தலைவன் பின் போன வழியை முன்வந்து காட்டுவாயாக!' என்று செவிலி குராமரத்தைக் கேட்கின்றாள்.
'தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப
ஈன்றாய்நீ பாவை இருங்குரவே - ஈன்றாள்
மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்டாய் ஈதென்று வந்து.' – (பாடல். 65)
2. தலைவன் களவியலில் இருக்கும் பொழுது தலைவியை உடன் அழைத்துச் சென்றான். அவர்களை இடைச் சுரத்துக் கண்டோர் 'நீங்கள் செல்லவுள்ள வழி நீண்டுள்ளது. இப்பொழுது கதிரவன் பாதியளவு மறைந்தனன். எனவே, நீவிர் இருவரும் எம் சிறிய ஊரில் இன்று தங்கி, மறுநாள் இங்கிருந்து செல்வது சிறந்ததாகும்.' என்று கூறினர்.
'அத்த நெடிய அழல்கதிரோன் செம்பாகம்
அத்தமறைந் தானிவ் அணியிழையோடு – ஒத்த
தகையினாள் எஞ்சீ றூர்த் தங்கினிராய் நாளை
வகையினிராய்ச் சேறல் வனப்பு.' – (பாடல். 69)
3. தலைவன் தலைவியைப் பாலை வழி உடன் அழைத்துச் சென்றான். அவர்களைத் தேடிச் செவிலி சுரத்தில் சென்றாள். சிலர் செவிலித்தாயை எதிர்ப்;பட்டு, 'அழகிய சந்திரனைப் போன்ற ஒளியுடைய முகத்துடன் சிறந்த அணிகளை அணிந்த தலைவியும், ஒளியையும் நீண்ட வேலையும் கொண்ட தலைவனும், இப் பாலை வழியில் செல்ல, அவர்களைப் பார்த்து அஞ்சி இரண்டு சுடர்களுள் ஒன்றும் இல்லாது உலகம் முழுவதும் கெடுமாறு அந்த இரண்டு சுடர்களும் மறைந்து சென்றன.' என்று கூறினர்.
'அஞ்சுடர்நீள் வாண்முகத்து ஆழிழையு மாறிலா
வெஞ்சுடர்நீள் வேலானும் போதாரக்கண்டு – அஞ்சி
ஒருசுடரு மின்றி உலகுபா ழாக
இருசுடரும் போந்தனஎன் றார். – (பாடல் 71)
4. மகள் தான் காதலித்த தலைவனுடன் உடன் போக்கில் சென்று விட்டாள். தாயானவள் 'விரிந்த கூந்தலையுடைய என் மகள் போர் வன்மை கொண்ட தலைவனுடன் சென்ற வழியானது, கடும் சூரிய வெப்பத்தால் மலைப் பாம்புகள் முறுக்கி விட்ட கயிறு போலப் புரண்டு மாண்டு கிடக்கின்ற நீண்ட பாலை நிலத்து வழியாகும். இதில் அவள் எவ்வாறு நடந்து போகப் போகின்றாள்?' என்று தனக்குள் கூறி நொந்து கொண்டாள்.
'எரிந்து சுடுமிரவி ஈடில் கதிரால்
விரிந்து விடுகூந்தல் வெஃகா – புரிந்து
விடுகயிற்றின் மாசுணம் வீயுநீள் அத்தம்
அடுதிறலான் பின்சென்ற ஆறு.' – (பாடல் 75)
5. தலைவனுடன் தலைவி உடன் போக்குக்கு உதவி நின்றாள் தோழி. அத்தகைய தோழிக்கு 'பின் வாங்காத, விற்போர் வல்லவனான, வேலையுடைய தலைவன், என் அருகில் துணையாய் வர, நீண்ட பாலை நில வழியைச் செல்வதற்கரியது என்று நினைக்கலாமோ? நம் தலைவன் பின் செல்லல் நல்லொழுக்கமானதே ஆகும்' என்று தலைவி கூறினாள்.
'ஒன்றானு நாமொழிய லாமோ செலவுதான்
பின்றாது பேணும் புகழான்பின் - பின்றா
வெலற்கரிதாம் வில்வலான் வேல்விடலை பாங்காச்
செலற்கரிதரிச் சேய சுரம்.' – (பாடல் 87)
முடிவுரை
இதுகாறும், தொல்காப்பியம், ஐங்குறு நூறு, கலித்தொகை, நற்றிணை, நாலடியார், ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது ஆகிய நூல்களில் தலைவன் தலைவியர் உடன் போக்கில் பாலை வழி சென்றமையால் தலைவியின் தாய், செவிலி, தோழி ஆகியோர் தலைவியை நினைந்து கவலை கொண்ட பற்பல செய்திகளையும் அறிந்து கொண்டோம். தலைவன் தலைவியரின் பெற்றோர்கள் இவர்களின் காதல் நிலையை அறிந்து, அவர்களை ஒன்று கூட்டி வைக்காதவிடத்தில், காதலில் நனைந்தவர்கள் உடன் போக்கைத் தவிர வேறு என்னதான் செய்வா;! உடன் போக்கு உலக நீதியாகி விட்டது அவர்களைப் பொறுத்தமட்டில். இதில், வயதிலும; அனுபவத்திலும் முதிர்ந்தவர்கள் பச்சை விளக்கைக் கையில் எடுத்தால் பல்வேறு பட்ட எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து, நிலைமை முன்னேற்றமடைந்து விடும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.