தினசரி செய்தித் தாள் வாங்கிப் படிக்கும் பழக்கம் இங்கு ஹிராகுட் அணைக்கட்டுக்கு வேலைக்கு சேர்ந்து நானே சம்பாதிக்க ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டது. இருந்த போதிலும், அதில் Wanted பகுதியையும் படிக்கும் கால கட்டம் ஒன்று புதிதாக ஆரம்பித்துவிட்டது. வேலை தேடவேண்டும் என்ற முனைப்பு இருந்தாலும் அது எத்தகைய கவலையும் தோய்ந்ததாக என்ன ஆகுமோ, என்னவோ, வேலை கிடைக்குமோ கிடைக்காதோ, கிடைக்காவிட்டால் என்ன செய்வது, பெற்றோருக்கு எப்படி பணம் அனுப்புவது என்ற கவலைகளில் பீடிக்கப்பட்டதாக உணரவே இல்லை. எப்படி நான் அதை ஏதோ சினிமா விளம்பரம் பார்ப்பது போல எவ்வித கலவரமும் இல்லாது வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன் என்பது தெரியவில்லை. அதிக நாட்கள் இங்கு இருக்கப் போவதில்லை, ஒரு சில மாதங்கள், அல்லது அதிகம் போனால் ஒரு வருடம் இங்கு காலம் தள்ள முடியும். அதன் பின்? சிக்கல் தான். நிச்சயமின்மை தான். ஆனாலும் எப்படி ஒரு அமைதியான மனத்துடன் அந்த நாட்களில் இருந்தேன் என்பது இப்போது எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏதோ வீரன், தீரன் என்றும் மனத்திடம் என்றும் எல்லாம் என்னைச் சொல்லிக் கொள்வதற்கும் இல்லை.
எப்படியோ தெரியவில்லை. எப்போதும் போல் அமைதியாக, சுற்றியிருப்பவர்கள் எல்லாம் ஒருவர் இரவராக, நாலைந்து பேராக ஊரைக் காலி செய்து கொண்டிருந்த போது, நான் பத்திரிகைகளில் வந்த விளம்பரங்களுக்கு மனுச் செய்துகொண்டிருந்தேன். முதலில் வந்தது, Northern Railway யிலிருந்து வந்த அழைப்பு. நேர்காணலுக்கும் பரிட்சைக்கும். கூடவே சம்பல்பூரிலிருந்து அலஹாபாதுக்கு போக வர இலவச ரயில்வே பாஸும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. முதல் தடவையாக இலவசமாக ரயிலில் வெகுதூரம் பிரயாணம் செய்யப் போகிறேன். கூட வேலை சம்பந்தப்பட்ட ஒரு நேர்காணலுக்கும் போகப்போகிறேன். புதிய அனுபவம். யாரும் சிபாரிசு செய்து அல்ல. கூட அழைத்துச் சென்று அல்ல. நானே என் தகுதியில் என் முயற்சியில் ஒரு வேலை தேடிக்கொள்ளப் போகும் முதல் அடிவைப்பு. பெருமை யாக இராதா?
எப்படிப் போவது? யாருக்கு வழி தெரியும்.? தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் தான் என்ன? ரயில்வே பாஸ் இருக்கிறது. இலவசம். எங்கே வேண்டுமானாலும் இறங்கி எந்த வண்டியில் வேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம். சம்பல்பூரிலிருந்து ஒரு வழியா, இல்லை நேராகச் செல்லும் வண்டி ஏதுமா? இல்லை. எத்தனை வண்டி ஏறி இறங்கி மாறவேண்டுமோ. இஷ்டம் போல் செய்யலாம். ஆனால் குறித்த தேதிக்கு முன்னால் போய்ச் சேர்ந்து விடவேண்டும்.
சேர்ந்தேன். எப்படி என்றெல்லாம் இப்போது நினைவில் இல்லை. அலஹாபாத் ஸ்டேஷனில் இறங்கியதும், அது இரவு நேரம். மணி ஏழரை எட்டு இருக்கும். ஒரு ரிக்ஷாக்காரன் ஒரு நல்ல ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லவே, வேறு வழி? சரி என்று ஏறி உட்கார்ந்து அவன் இட்டுச் சென்ற இடத்தில் இறங்கினேன்.
அது ஹோட்டலாகத் தெரியவில்லை. வளைந்த குறுகிய மாடிப்படி ஏறினால் அறைகள். என் அறைக் கதவு ஒரு மாதிரிதான் இருந்தது. பழங்காலத்துக் கதவு. தாட்பாள் இல்லை. கதவின் மேலே ஒரு சின்ன சங்கிலி. அதை நிலைப்படியின் மேல் சட்டத்தின் வளைவில் கோர்த்து அறையைப் பூட்ட வேண்டும். உள்ளே ஒரு கட்டில். அவ்வளவே. ஒன்றும் சரியாகத் தோன்றவில்லை. இடமும் அதிக நடமாட்டம் உள்ள இடமாகத் தோன்றவில்லை. அப்போது தான் எனக்குச் சற்று, கவலை பயமாக பூதாகரிக்கத் தொடங்கியது. இருப்பதா, இல்லை வேறுஇடம் தேடுவதா? வேறு இடம் எங்கே என்று தேடுவது?. இரண்டு நாட்களுக்கு காசும் கொடுத்தாய்விட்டது. சரி நடப்பது நடக்கட்டும் பார்ப்போம் என்ற ஒரு அசட்டு தைரியம். உள்ளே பையை வைத்துவிட்டு சாப்பிடப் போனேன். அது ஒன்றும் பெரிய தேடலாக இல்லை. வெளியே பெஞ்ச் மேஜை போட்டு இது தான் பஞ்சாபி ஹோட்டல் என்று விளம்பரம் இல்லாது தன்னைக் காட்டிக்கொள்ளும் ஒன்று. சாப்பிட்டேன். அதில் ஒன்றும் கஷ்டம் இல்லை. பஞ்சாபி உணவு பழகியது. புது இடம். எதாக இருந்தாலும் நன்றாகத் தான் தோன்றும். லாட்ஜுக்குத் திரும்பி வந்து படுத்துக்கொண்டேன்.
வழியில் சினிமா விளம்பரம் ஒன்று பார்த்தேன். புதிய படம். ஜனக் ஜனக் பாயல் பாஜே. நல்ல பாட்டுக்கள். நல்ல நடனங்கள் கொண்ட படம். என்று படித்திருக்கிறேன். ஷாந்தா ராம். தாஹேஜ் என்ற பழைய படம் ஒன்று சம்பல்பூர் விஜயலட்சுமி டாக்கீஸில் பார்த்திருக்கிறேன். எரியும் சமூகப் பிரசினைகளை கையாள்பவர் என்று புகழ் பாடப் படுபவர். தஹேஜ் என்றால் வரதக்ஷிணை என்று பொருள். அதில் வரதக்ஷிணைக் கொடுமையில் தவிக்கும் பெண்ணின் அவலம் பற்றிய கதை. அதெல்லாம் சரி. ஆனால் ஒரே மெலோட்ராமா. அழுகை. ஸ்டாக் பாத்திரங்கள். ஸ்டாக் சம்பவங்கள். புதிதாக சாந்தாராம் டச் என்று சொல்லப் படுவதைத் தேடினால், அதில் ஒரு காட்சி. ஜயஸ்ரீ, தான் கதாநாயகி. ஷாந்தாராம் தன் காதலித்து மணம் புரிந்து கொண்ட மனைவியை கதாநாயகியாக்கிக் கொண்டதில் ஒன்றும் தவறில்லை. பணம் மிச்சம். தன் மனைவிக்கும் புகழ் தேடித்தரும் காரியம் தான். ஆனால் அவளை இடுப்பை வளைத்து தன் செழிப்பான பின்புறங்களை ஆட்டிக்கொண்டே நடக்க வைப்பது தான் பெண்ணின் அழகைக் காட்டுவதற்கான ஒரே வழி என்று ஷாந்தாராமுக்குப் பட்டிருக்கிறது. ஜயஸ்ரீயின் பின் புற அழகைப் பற்றி ரொம்பவும் பெருமைப் பட்டுக்கொள்கிறவர் ஷாந்தாராம், அப்பெருமையை உலகறியச் செய்ய்யும் விருப்பம் அவருக்கு என்றும் தோன்றுகிறது. ஆரம்ப காட்சிகளில் ஒரு பந்து வீசப்படும். அது முன்னே தன் அழகான பின்புறத்தை ஆட்டிக்கொண்டே போய்க்கொண்டிருக்கும் ஜயஸ்ரீயின் பின்புறத்தை அடித்துத் திரும்பும். ஜயஸ்ரீ திரும்பிப் பார்த்து பொய்க்கோபம் கொள்வாள். இப்படித்தான் இருக்கும் அவர் சமூகப் பிரசினைகளைக் கையாளும் பார்வையும் அதற்கு அவர் தேடும் உத்திகளும். இப்போது அவர் இந்திய சினிமாவில் ஒரு பெரிய சகாப்த புருஷர். நம்மூர் இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர், மணிரத்தினம் போல. நம்மூர் ஸ்ரீதர் வாழ்வில் ஒரு நாள் நாம் காசியாத்திரை போகும் ஆசை கொண்டிருப்பது போல, அவர் ஒரு நாள் ஷாந்தாராம் ஷூட்டிங் பார்க்கப் போயிருக்கிறார். “உங்களைத் தென்னாட்டு ஷாந்தாராம் என்று சொல்கிறார்களாமே? “ என்று ஷாந்தாரம் கேட்டாராம். “ஸ்ரீதர் அதற்கு சற்று வெட்கப்பட்டு ஆமாம் என்றாராம். எல்லாம் விவரமாக அந்த சைதன்யத்தைப் பற்றி தமிழ் பத்திரிகை ஒன்றில் அவரே எழுதியிருக்கிறார். இல்லையெனில் எனக்கு எப்படித் தெரியும். இன்னொரு காட்சி. மேலே ஒரு ஹரிகேன் விளக்கு ஒன்று தொங்கும். மாமனாரும் மருமகளூமோ இல்லை மாமியாரும் மருமகளுமோ ஒரு சூடான விவாதத்தில். மேலே தொங்கும் ஹரிகேன் விளக்கு ஆடும். ஒரு பக்கம் சாயுந்து ஆடும்போது மாமனாரின் முகம் கோபாக்கினியில் சுடர் விட்டு எரியும். விளக்கு மறுபக்க முனைக்கு ஆடிச் செல்லும் போது மறுமகளின் துக்கத்தில் பீறிடும் முகம் காணும். இப்படி அந்த விளக்கு ஒரு மூலைக்கு மறு மூலை என்று ஆட, இருவர் முகமும் மாறி மாறி உணர்ச்சிகளின் உச்ச கட்டத்தைத் தொடும். அரங்கில் அழுகையும் மூக்கை உறிஞ்சலும் கேட்கும் அமைதி. இது இன்னொரு சாந்தாராம் டச்.
சரி நல்ல பாட்டுக்கள், நல்ல நடனங்கள் இந்தப் படத்தில் என்று சொல்லப்படுகிறது. நடனமும் பாட்டுமே படத்தின் மையக் கரு. அதுவே படம் முழுதும் விரவியிருக்கும் என்றும் படித்திருந்தேன். சரி பார்த்து வைப்போம். ஆனால் அது நாளைக்கு. நேர்காணல், பரிட்சை எல்லாம் முடிந்த பிறகு என்று தீர்மானித்துக் கொண்டேன்.
இரவு அமைதியாகக் கழியவில்லை. எந்நேரமும் கதவு தட்டப் படலாம், எதுவும் நேரும் என்ற ஒரு திகில் இருந்து கொண்டே இருந்தது. இப்போதாவது சரி. நாளை, அறையைப் பூட்டிக் கொண்டு இண்டர்வ்யூக்குப் போனால் இங்கு என்ன நடக்கும்? என்றும் கவலை. இது தான் முதல் தடவை என்பதால் இந்தக் கவலையா, இல்லை இந்த இடம் ஒரு மாதிரியாக அதிகம் நடமாட்டம் இல்லாத இடமாக இருப்பதால் இப்படித் தோன்றுகிறதா என்று தெரியவில்லை.
இரவு எப்படியோ கழிந்துவிட்டது தான். துக்கத்தில் எதுவும் தெரியவில்லை. புது இடம், பழக்கமில்லாத் சூழல். அது தான் வேண்டாத சிந்தனைகளையும் கவலைகளையும் தூண்டியதோ என்னவோ. காலையில் குளித்துவிட்டு காலை உணவும் சாப்பிட்டுவிட்டு நேர்காணலுக்குக்குறித்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்திருக்கவேண்டும். இ[ப்போது அது நினைவில் இல்லை. ஆனால் எல்லாம் முடிந்த பிறகு இரண்டு மூன்று இடங்களுக்குப் அலஹாபாத் சுற்றிப் பார்க்கப் போனது நினைவில் இருக்கிறது. ஒன்று மோதிலால் நேரு புகழும் செல்வாக்கும் மிக்க வக்கீலாக இருந்த போது தனக்கென கட்டிக்கொண்ட ஆனந்த் பவன். அதைப் பின்னர் காங்கிரஸ் பார்ட்டிக்கு என கொடுத்துவிட்டதாகச் சொல்லப்பட்டது. அங்கு தான் இந்திரா காந்தி வளர்ந்ததும், பெரோஸ் காந்தியுடன் பழக்கமேற்பட்டதும், இத்யாதி. ஆனால் இப்போது அந்த பவனின் வெளித்தோற்றம் தான் நினைவிலிருக்கிறதே தவிர உள்ளே சென்று பார்த்த நினைவுகள் மறந்துவிட்டன. அதைத் தான் இப்போது ஸ்வராஜ் பவன் என்று அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பின்னர் ஏதோ ஒரு மொகலாய கட்டிடம் என்னவென்று நினைவில் இல்லை.
பின்னர் கங்கைக் கரைக்குச் சென்றது நினைவில் இருக்கிறது. அங்கு ஒரு படகுக்காரனைப் பிடித்து சங்கமத்துக்கு சென்றது நினைவில் இருக்கிறது. இவ்வளவு தூரம் வந்த பிறகு பிரயாகைக்குப் போய் திரிவேணி சங்கமம் பார்க்காமல் போவியா என்ன? என்று ஒரு படகுக் காரனே கேட்டான். இல்லாவிட்டால் எனக்கு எப்படித் தெரியும் படகில் திரிவேணி சங்கமத்துக்குப் போகலாம், அதற்கு படகோட்டிகள் தயாராக இருப்பார்கள் அந்த வாடிக்கை உண்டு என்று?. சரி என்று உட்கார்ந்து விட்டேன். ஐந்து ரூபாய் பேசினதாக நினைவு. சரியாகச் சொல்வதற்கில்லை. ஆனால் இதுவல்ல நான் சொல்ல வந்த விஷயம்.
எவ்வளவு பெரிய பிரம்மாண்டமான நதி அது. கங்கை. அதில் நான் படகில் தனியாகப் போய்க்கொண்டிருந்தேன். படகோட்டி என்னவோ சொல்லிக்கொண்டிருந்தான். படகில் உட்கார்ந்து பாதி தூரம் அந்த பிரும்மாண்டத்தின் மத்திக்குப் போனபின் தான் பயம் ஏற்பட்டது. இப்போது ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? நீச்சல்கூட தெரியாதே. நீச்சல் தெரிந்தாலே இந்த சமுத்திரம் போன்ற பிரவாகத்தில் எப்படி தப்பிப்பது? ராமக்ரிஷ்ண கதாம்ருதத்தில் தான் படித்த ஒரு கதை. கதையில் படகில் சவாரி செய்துகொண்டிருப்பது ஒரு பண்டிதர். சகல சாஸ்திரங்களும், வேதங்களும், புராணங்களும் கரைத்துக்குடித்தவர். படகோட்டியை, ”உனக்கு இது தெரியுமா, அது தெரியுமா?” என்று தன் தொணதொணப்பில் வறுத்துக்கொண்டிருக்கிறார். படகோட்டி அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் தனக்குத் தெரியாது என்றே சொல்லிவருகிறான். பண்டிதருக்கு தன் வித்வத்தின் கர்வம் தலைக்கேறுகிறது. “கடைசியில் அவனுக்காக பச்சாத்தாபப் பட்டு, “இப்படி ஒன்றுமே தெரியாது வாழ்க்கையை வீணாக்கிவிட்டாயே அப்பா? என்று இரக்கப்படுகிறார். கொஞ்ச நேரத்தில் பலமான காற்று வீச படகு ஆட்டம் காண்கிறது. படகோட்டி அந்த வித்வானைக் கேட்கிறான். ”ஐயா, தங்களுக்கு நீச்சல் தெரியுமா? என்று கேட்க அவர் தெரியாது என்று சொல்ல, இப்போது படகோட்டியின் முறை, “ஐயா, வாழ்க்கை முழுதும் என்ன புராணமும், சாஸ்திரங்களும் கற்று என்ன பயன்?, இப்போது நீச்சல் தெரியாத உங்கள் வாழ்க்கை தான் முடியப் போகிறது? என்று சொல்லி ஆற்றில் குதித்து நீந்தத் தொடங்குகிறான் என்பது அந்தக் கதை. எனக்கும் எந்தப் பயனும் இப்போது இல்லாத படிப்பும், நேர்காணலும், வேலை வாய்ப்பும் என்ன பயன் தரப்போகிறது,? எல்லாமே முடிந்து விடுமோ என்ற பயம் தோன்றியது என் கவலை ஏதும் அறியாத படகோட்டியோ, ”ஐயா வந்துவிட்டோம் மையப் பகுதிக்கு. இந்தோ பாருங்க இங்கே தான் இரண்டு நதியும் சேர்கிறது” என்றான் பார்த்தால் ஏதோ நடுக்கடலில் இருப்பது போல ஒரு பிரம்மாண்டத்தின் நடுவில் அகப்பட்டுக்கொண்டு அந்த படகோட்டியின் கையில் தயவில் என் உயிர் சிக்கிக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.
திரிவேணி சங்கமம் வந்து, கிடைத்தற்கரிய ஒரு அனுபவத்தின் திளைத்து பக்தி பாவத்தில் மூழ்குவதற்கு பதிலாக நான் இப்படி வேண்டாத சிந்தனையில் எல்லாம் ஆழ்ந்து ஏன் அவதிப்பட வேண்டும்? படகு இருக்கிறது. இதையே தொழிலாகக் கொண்ட படகோட்டி இருக்கிறான். என் உயிரைக் காப்பதில் தானே அவன் பிழைப்பும் என்று நினைத்துக்கொண்டேன். நேற்று இரவு இப்படித் தானே வேண்டாத சிந்தனைகளில் அவதிப் பட்டோம் என்றும் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.
இருப்பினும் இது தானா திரிவேணி சங்கமம்? சரஸ்வதி இல்லை. யமுனையும் கங்கையும் தான். ஆனால், இரண்டு நதிகளும், சங்கமிக்கும் இடத்தில் படகு இருக்கமுடியுமா? எங்கோ நிறுத்தி விட்டு இது தான் த்ரிவேணி என்கிறானோ. எதாக இருந்தால் என்ன? இரண்டு நதிகளும் சங்கமிக்கும் புள்ளியில் இருந்து தான் ஆகவேண்டுமா என்ன? தூரத்தில் இரு பக்கங்களிலும் விஸ்தாரமாக, ஏதோ கடல் விஸ்தரித்து இருப்பது போல ஒரே நீர்ப்பரப்பாக, தொடுவானம் வரை, இப்படி எங்கே பார்த்திருக்கிறோம். சங்கமிக்கும் புள்ளியிலிருந்து வெகுதூரம் தள்ளியே இருந்து விட்டுப் போகட்டும். இப்படி அகன்ற ஒரு நீர்ப்பரப்பை எங்கு காணப் போகிறோம். இந்த பிரம்மாண்டத்தின் நடுவில் நாம் எவ்வளவு சிறுத்துப் போய்விட்டோம். நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருந்தது. சிந்தனை மறுத்த பிரமிப்பில் ஆழ்ந்திருக்கும் போது படகோட்டி திரும்பிக்கொண்டிருந்தான். ஒன்றும் பேசத் தோன்றவில்லை. படகோட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொல்வது எதுவும் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவனும் இந்த ஆள் பயந்து கிடக்கிறான் என்று தெரிந்திருப்பான்.
மாலை சினிமாவுக்குப் போனேன். ஜனக் ஜனக் பாயல் பாஜே. ஜனக் ஜனக் என்று சலங்கைகள் ஒலித்தன என்று பொருள். தேகி நா தார் மூக், தேகினா தார் பாணி, கேவல் ஸூனி தாஹார் பாயேர் த்வனி கானி. (அவன் முகத்தை நான் பார்க்கவில்லை. அவன் குரலையும் நான் கேட்கவில்லை. அவன் கால் சலங்கை ஒலி மாத்திரமே எனக்குக் கேட்டது) தாகூரின் பாடல் வரிகள். சலங்கை ஒலிகள் தான் என்னென்ன கற்பனைகளை சிறகடித்துப் பறக்க விடுகின்றன. இன்று காலை கூட பீம் சேன் ஜோஷியின் பாட்டு கேட்டது. இரண்டே வரிகள். சலங்கை ஒலி தான் கேட்கிறது. அவளை யார் சமாதானப் படுத்துவது? கேட்க மாட்டேன் என்கிறாளே? போதும் அரை மணி நேர கயாலுக்கு.
சில காட்சிகள், படிமங்கள் காலம் காலமாக நம்மை சிலிர்க்க வைக்கின்றன. ஏங்க வைக்கின்றன. அதை நினைத்து நினைத்து நாமும் ஏங்க விரும்புகிறோம் என்பது தான் விந்தை. வெகு தூரப் பயணி. கிணற்றடியில் ஒரு பெண். நீர் வார்க்கிறாள். படகோட்டி. ஒரு கரையிலிருந்து மறு கரைக்குப் பயணம். இப்படியான எல்லா இலக்கியங்களிலும் எல்லாக் காலத்திலும் திரும்பத் திரும்பத் தோன்றும் படிமங்களில் காட்சிகளில் சலங்கை ஒலியும் ஒன்றாகத் தோன்றுகிறது.
முதல் தடவையாக ஷாந்தா ராமின் படம் ஒன்றில் சிலகாட்சிகள் ரசிக்கும் படியாக இருந்தன. பாட்டுக்கள். சில நடனங்கள். இளம் வயது சந்தியா, ஷாந்தாராமின் புதிய சேர்க்கை, படத்திலும், வாழ்விலும்,. ஜெயஸ்ரீ, பிரிந்தாயிற்று. சாந்தாராமுக்கு சினிமாவைப் பத்தி என்ன தெரியும் என்று ஜெயஸ்ரீ சொல்ல ஆரம்பித்து விட்டாள். பாபுராவ் படேலின் ஃபில்ம் இந்தியாவில் படித்தேன் ஏதோ ஆத்திரத்தில் சொல்கிறாள் என்று தோன்றும். ஆனால் உண்மையும் அது தானே.
மற்றபடி படம் சினிமாவாக இல்லை. பழைய சாந்தாராம். கலர்ப் படம். கதக் நடனம் பார்க்கும் படியாக இருந்தது. மற்றபடி அது என்னைக் கவரவில்லை. திரும்ப ஒரு முறை நான் அந்தப் படத்தைப் பார்க்கும் ஏற்படவில்லை. புர்லாவிலும் சரி, தில்லியிலும் சரி.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.