‘ஈழத்தின் இசை மரபு குறித்தும், நடன மரபு குறித்தும், ஓவிய மரபு குறித்தும் ஏனைய நுண் கலைகள் பற்றியதுமான முறைமையான வரலாறு எழுதப்படாமல் இருப்பது துரதிஷ்டவசமானதாகும். ஈழத்து இலக்கிய வரலாறு ஒழுங்குமுறையான வரலாற்று நெறிக்கு உட்படுத்தப்பட்டதுபோல ஏனைய துறைகளில் அந்தச் சாதனை நிகழ்த்தப்படவில்லை. அந்த வகையில் நவஜோதி ஜோகரட்னத்தின் ‘மகரந்தச் சிதறல்’ என்ற இந்த நோர்காணல் தொகுப்பு ஈழத்தின் இசை, நாடக, நாட்டிய, ஓவிய, இலக்கிய, அரசியல், மருத்துவ, தொழில்முயற்சி வரலாற்றின் மிக நேர்த்தியான பதிவுகளைக் கொண்டு காணப்படுவது பாராட்டத்தக்க எழுத்து முயற்சியாகும்’ என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் ஈலிங் நூல்நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற ‘மகரந்தச் சிதறல்’ நூல் அறிமுகக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றும்போது தெரிவித்தார்.
ஈலிங் நூல் நிலையத்தைச் சார்ந்த திருமதி சாந்தி அகிலன் ஒழுங்கு செய்திருந்த ‘மகரந்தச் சிதறல்’ நூல் அறிமுகக் கூட்டத்தில் மு. நித்தியானந்தன் தொடர்ந்து உரையாற்றும்போது மேலும் கூறியதாவது: ‘லண்டனில் வாழும் 33 பெண் ஆளுமைகளின் தேர்ந்த நேர்காணல்களின் தொகுப்பாக இந்த நூல் சிறப்புப் பெறுகின்றது. இந்நூலில் இடம்பெற்றிருக்கும் இசைப் புலமை சார்ந்த தையல்சுந்தரம் பரந்தாமன், சரஸ்வதி பாக்கியராஜா போன்றவர்களின் நேர்காணல்கள் அவர்கள் இருவரின் மறைவின் பின் கூடிய அர்த்தம், முக்கியத்துவம் கொண்டதாகத் திகழ்கிறது. இசை, நாட்டியம் போன்ற துறைகளில் நேர்காணல்கள்; மேற்கொள்ளப்பட்டுள்ள 12 பெண் ஆளுமைகளின் பல்வேறுபட்ட குடும்பப் பின்னணி, இசை நாட்டியப் பின்புலம், வௌtவேறுபட்ட சமயப் பின்னணிகள், செழுமை மிக்க இசை நாட்டிய வல்லுநர்களிடம் பயின்றமை போன்ற வித்தியாசமான அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது.
அரசியல் துறையில் மறைந்த மங்கையற்கரசி அமிர்தலிங்கத்தின் நேர்காணல் தனி முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இந்த நேர்காணல் தொகுப்பில் விரிவான நேர்காணலுடன் முதன் முதலாக எழுத்தில் பதிவாயிருக்கும் நிர்மலா ராஜசிங்கத்தின் பேட்டி லண்டனில் அவரது அரசியற் செயற்பாட்டை வெளிப்படுத்துகிறது. மேற்கு லண்டனில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ் சிறார்களுக்கு தமிழ் மொழியைப் போதிக்கும் முன்னோடி ஆசிரியையாக புனிதா பேரின்பராஜா அவர்கள் இந்த நூலிலே பதிவாகிறார். இத்துணை பரந்துபட்ட பெண் ஆளுமைகளை கண்டு உரையாடி நூலாக்கி வழங்குவதில் நவஜோதி ஜோகரட்னத்தின் பெரும் உழைப்பும், அயராத முயற்சியும் பாராட்டுக்குரிய ஒன்றாகும்’ என்று தெரிவித்தார்.
கவிஞர் நிலாவின் தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுகக் கூட்டத்தில் திருமதி றஞ்சனி குமரகுருநாதன் உரையாற்றும்போது: ‘ஆழ்கடலில் முத்துக்களை அள்ளிக்கொண்டு வருவதுபோல இந்த நூலில் காணப்படும் பெண்மணிகளின் பேட்டி நமக்கு வியப்பை ஊட்டுவனவாகும். புத்தகத்தை எடுத்தால் அனைத்துப் பேட்டிகளையும் வாசிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் இந்த நூல் வடிவம் பெற்றிருக்கிறது. அழகிய அட்டைப்படத்தையும், ஓவியர் கே. கே. ராஜா அவர்களின் வடிவமைப்பையும் கொண்டு கவர்ச்சிகரமான நூலாக இந்த நூல் அமைகிறது. நமக்குத் தெரியாத கொள்ளையான தகவல்கள் நூல் முழுவதுமே விரவிக் கிடக்கின்றன. பல்வேறுபட்ட துறைகள் சார்ந்த பெண்கள் அனைவரையும் நுட்பமாகப் பேட்டி கண்டு சுவையாக நவஜோதி தொகுத்துத் தந்திருக்கின்றார். இந்த நூலில் தன் கணவரை இழந்த பின்னர் ரயர் விற்பனையில் ஈடுபாடு காட்டிய தொழில் முயற்சியாளர் ராஜேஸ்வரி சிவத்தின் பேட்டி பெண்களுக்கு தன் முனைப்பையும், துணிச்சலையும் தருகின்ற பேட்டியாகும். இந்த நூல்பற்றி கனடாவிலிருந்து கலாநிதி பார்வதி கந்தசாமி, அவுஸ்திரேலியாவிலிருந்து மூத்த எழுத்தாளர் லெ. முருகபூபதியும், இலங்கையிலிருந்து ஜீவநதி ஆசிரியர் க. பரணீதரனும் எழுதிய விமர்சனங்கள் ஈழத்திலும் புகலிடத்திலும் இந்நூல் பெற்றிருக்கும் உயரிய இடத்தைப் பதிவு செய்கிறது’ என்று குறிப்பிட்டார்.
லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பின் தலைவியும் கவிஞருமான உதயகுமாரி பரமலிங்கம் பேசும்போது: ‘ஈழத்தின் முற்போக்கு இலக்கியத்தின் மூலவரான பிரபல எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் புதல்வியான நவஜோதி ஜோகரட்னம் தனது தந்தையின் பணியில் ஈடுபாடு கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், ஊடகவியலாளராகவும், கவிஞராகவும், கட்டுரையாளராகவும் திகழும் நவஜோதி ஜோகரட்னம் தனது நீண்ட எழுத்து வாழ்வின் அறுவடையாக மகரந்தச் சிதறல் என்ற இந்த நூலைத் தந்திருப்பது தமிழ் சமூகத்திற்கு வழங்கிய அருங்கொடையாகும்’ என்று குறிப்பிட்டார்.
‘நவஜோதி ஜோகரட்னத்தின் இந்த எழுத்து முயற்சிகள் தமிழ் பெண்மணிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் தமிழ்ப் பணி. அவரது எழுத்துப்பணி மேலும் சிறக்க வேண்டும்’ என்று கவிதை வடிவில் பிறேமளா தனராஜசிங்கம் தெரிவித்தார்.
ஆங்கில ஆசிரிய ஆலோசகரும், எழுத்தாளருமான புனிதா பேரின்பராஜா உரையாற்றும்போது: ‘ ‘மகரந்தச் சிதறல்’ என்ற இந்த நூலில் இடம்பெற்ற பேட்டிகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது இளைய தலைமுறையினருக்கு எமது கலை கலாச்சார பாரம்பரியத்தினை எடுத்துச் செல்வதற்கு இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு துணைபுரியக்கூடும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில் லண்டன் மட்டுமன்றி கனடாää அவுஸ்திரேலியாää இலங்கை போன்ற நாடுகளில் இந்த நூல் விரும்பி வாசிக்கப்படுகிறதென்பது இந்த நூலின் வெற்றிக்கு ஒரு சான்றாகும் என்றும் இந்த நூலின் அட்டைப்படத்தை வரைந்த நவஜோதியின் மகன் அகஸ்ரி(சிம்பா) பாராட்டுக்குரியவர் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நூலின் அட்டைப்படத்தை வரைந்த அகஸ்ரி ஜோகரட்னம் (சிம்பா) பேசும்போது@ ‘இந்த நூலின் அட்டைப் படத்தை வரைந்தது தனக்கு பெருமையைத் தருவதாகவும் பெண்களின் சிறப்பினைக்காட்டும் குறியீடாகத் தனது அட்டைப்பட ஓவியம் அமைந்துள்ளதையும் குறிப்பிட்டார்’
மொழி பெயர்ப்பாளர் திருமதி சுமித்திரா செழியன் பேசும்போது: ‘எந்த நிலையிலும் புன்சிரிப்போடு திகழும் நவஜோதி ஜோகரட்னம் தனது நெருங்கிய நண்பி என்பதில் தான் பெருமை அடைவதாகவும். இந்த நூலில் இடம்பெற்ற பலரை நான் அறிவேன் என்றாலும் இந்தப் பேட்டிகளை வாசித்ததின் பின்னர் இத்துணை விவரங்கள் கூடிய தகவல்களை பெறக்கூடியதாக இருந்ததையிட்டு வியப்படைந்தேன்’ என்று தெரிவித்தார்.
நூல் ஆசிரியை நவஜோதி ஜோகரட்னம் தனது ஏற்புரையின்போது ‘புத்தகக் கலாச்சாரம் தமிழ் மக்கள் மத்தியில் வேரூன்றாத நிலையில் லண்டனில் நூல் நிலையங்கள் தமிழ் புத்தகங்களை அறிமுகப்படுத்தி வருவதில் ஆர்வம் காட்டி வருவது என்னைப் போன்ற நூல் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒன்றாகும். கடந்த 20 ஆண்டுகளாக லண்டனில் பல பொது நூலகங்களில் தமிழ் நூல்களும் பெருந்தொகையாக உள்ளடக்கப்பட்டுள்ளன. ஈலிங் நூல் நிலையம்ää பிறென்ற் நகராட்சி மன்ற நூல் நிலையத்திலும் தமிழ் நூல்கள் தனிப்பிரிவாகச் சேர்ந்திருப்பதைக் குறிப்பிட்டாகவேண்டும்.
லண்டனில் காணப்படும் பல நூல்நிலையங்களில் தமிழ் நூல்கள் தனிப்பிரிவும் இயங்கி வருவது நன்மை தருகின்ற விடயம். 5000 யிரத்துக்கும் அதிகமான நூல்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூல்கள் பெருமளவு தமிழக எழுத்தாளர்களின் நூல்களாகவே அமைந்திருக்கின்றன. அந்த வகையில் ஈழத்து நூல்களை அறிமுகப்படுத்துவதிலும்ää ஈழத்து எழுத்தாளர்களை வாசகர்களுடன் சந்திக்க வைப்பதிலும் சில நூல் நிலையங்கள் அக்கறையோடு செயற்பட்டு வருவதைக் குறிப்பிட்டாகவேண்டும்.
யமுனா தர்மேந்திரன் வாசகர் வட்டம் என்ற அமைப்பின் மூலம் மாதாந்தம் நூல் நிலையத்தில் வாசகர்களுடன் இலக்கிய நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருவது பாராட்டத்தக்க ஒன்றாகும்.
அந்த வகையில் சாந்தி அகிலன் அவர்கள் எனது மகரந்தச் சிதறல் தமிழ் பெண்களின் பேட்டிகளின் தொகுப்பை இங்கே அறிமுகம் செய்வதற்கான ஒழுங்குகளைச் செய்து தந்தமைக்காக நான் அவருக்குப் பெரிதும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்’ என்று தெரிவித்தார்.
சட்ட ஆலோசகர் எஸ்.பி. ஜோகரட்னம் நன்றி உரையாற்றும்போது லண்டனில் இரண்டாவது முறையாக ‘மகரந்தச் சிதறல்’ நூல் அறிமுகம் செய்யப்பட்டாலும் லண்டன் பரபரப்புச் சூழலிலும் ஆர்வத்தோடு கலந்து சிறப்பித்த இலக்கிய ஆர்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஈழநாடு கே.ஜி. மகாதேவாவின் மகளும்ää நாட்டிய ஆசிரியையுமான திருமதி கோவதனி புவனச்சந்திரன் தனது மாணவிகளுடன் சேர்ந்து நடன நிகழ்ச்சியை வழங்கியமைக்கு நன்றி கூறியதுடன்; திருமதி. தயா அருளானந்தம் அவர்களின் மாணவியின்; நடன நிகழ்ச்சியையும் பாராட்டி நன்றி தெரிவித்திருந்தார்.
குறிப்பிட்ட நேரத்தில் ஈலிங் நூல் நிலையத்தில் ‘மகரந்தச் சிதறல்’ நூல் அறிமுக விழா மிகச் சிறப்பாக நடந்தமையைக் குறிப்பிட்டாக வேண்டும்.
24.06.2017
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.