முன்னுரை
கவிதை என்றால் என்ன என்று யாராலும் சொல்லிவிட முடியாது. கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடையது, ஓசையுடையது, சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலைவடிவம் இப்படி கவிதை என்பதற்குப் பலர் பல்வேறு வரையறைகளைக் கூறியுள்ளனர். கவிதை என்பதற்குத் திட்டமான வரையறைகள் எதுவும் கிடையாது. கவிதை என்பது அவரவர் தனிப்பட்ட அனுபவங்களுக்கேற்ப குருடர் தடவிய யானை போல கவிதைக்கு வரையறை தந்துள்ளனர் என்றே கூறலாம்.
மொழிவழியாகக் கிடைக்காத, அனுபவிக்க முடியாத எத்தனை எத்தனையோ உணர்வுகளைக் கவிதை புலப்படுத்துகிறது. சிறுகதை நாவல்களை விடவும் மனிதனின் அந்தரங்க உணர்வுகளோடு மிகவும் நெருக்கமானது, சக மனிதர்களின் உள்ளார்ந்த அனுபவங்களை, மனவோட்டங்களைப் புரிந்து கொள்வதற்காகவே தான் கவிதைகளைப் படிப்பதாக கவிஞர் ராஜ மார்த்தாண்டன் இப்புத்தகத்தின் மதிப்புரையில் கூறுகிறார். நமது மனவுணர்வுகளுக்கேற்ற கவிதைகளைப் படிக்கும்போது அவை நம் மனதிற்குப் பிடித்துப்போகின்றன. கவிதைக்கென வகுத்திருக்கும் பொதுவான கோட்பாடுகள் அனைத்தும் அந்த நேரத்தில் இரண்டாம்பட்சமாகின்றன. அவ்வகையில் கவிஞர் இளம்பிறை அவர்களின் “முதல் மனுசி” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள “தொட்டிச்செடி “ கவிதை பற்றி ஆராய்வதாக அமைகிறது இக்கட்டுரை.
கவிஞர் இளம்பிறை
இவரது இயற்பெயர் க.பஞ்சவர்ணம் என்பதாகும். சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சாட்டியக்குடி ஆகும். இப்பொழுது இவர் சென்னையில் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரது எழுத்துப் பணி 1988-களில் தொடங்கியிருக்கிறது. இளவேனில் பாடல்கள் (1988), மவுனக்கூடு (1993), நிசப்தம் (1998), முதல் மனுசி(2002), நீ எழுத மறுக்கும் எனதழகு(2007) என்ற கவிதைத் தொகுப்புகளைப் படைத்தவர். யாளி அறக்கட்டளை விருது, திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கவிஞர் கரிகாலனின் களம் இலக்கிய விருது, கவிஞர் வைரமுத்துவின் “ கவிஞர் தின விருது “ போன்ற பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். இளம்பிறை என்னும் புனைப்பெயரில் எழுதி வருபவர். கிராமம் மற்றும் அனுபவம் சார்ந்த படைப்புகளால் அதிகமாக அறியப்பட்டவர். நகரத்திலிருந்த புதுக்கவிதையை கிராமத்திற்கு நகர்த்தி வந்தவர் கவிஞர் இளம்பிறை.
இளம்பிறையின் கவிதைகளை மதிப்பீடு செய்த கவிஞர் ராஜ மார்த்தாண்டன் இவரது கவிதைகளில் மூன்று அம்சங்கள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளதாகக் குறிப்பிடுகிறார். 1. பாசாங்கற்ற உண்மையின் குரல் 2. மண் சார்ந்த மனதின் வெளிப்பாடு 3. கவிதையமைப்பு, வார்த்தைகளை விரயம் செய்யாத எளிமையான – இயல்பான மொழிநடை என்ற மூன்று முக்கியமான தன்மைகளைக் குறிப்பிடுகிறார். “ இளம்பிறை கவிதைகளில் பாசாங்கு இல்லை. அகம் சார்ந்த கவிதைகளாயினும் சரி, புறம் சார்ந்த கவிதைகளாயினும் சரி இவர் தான் நம்பகின்றவற்றையே வெளிப்படுத்தியிருக்கிறார். சமூக அங்கீகாரங்களுக்காக இவர் தன் இயல்பான மனவுணர்வுகளை மறைத்து , தன் பிம்பத்தைப் பிரகாசிக்க வைக்க முயலவில்லை. இதனால் இவர் கவிதைகள் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையேயான ஊசலாட்டமாக முரண்பட்ட மனவுணர்வுகளின் வெளிப்பாடாக, தன் சூழலிலிருந்து அன்னியப்பட்ட தனிமை கொண்டதாகவும், விடுபடும் மார்க்கமற்ற சோகம் ததும்பியதாகவும் நம்முள் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன “ என்று மிகச் சரியாகக் கணிக்கிறார் கவிஞர் ராஜ மார்த்தாண்டன்.
தொட்டிச்செடி கவிதை
கிராமத்திலிருந்து நகரத்திற்குப் புலம் பெயர்தல் என்பது இன்றைய காலகட்டத்தில் மிகச் சாதாரணமான ஒரு நிகழ்வு. அன்றுதொட்டு இன்றுவரை புலம்பெயர்தல் என்பது எங்காவது ஓரிடத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. புலம் என்றால் இடம் என்பது பொருள். புலம்பெயர்தல் என்பதை இடம்பெயர்தல் என்றும் குறிப்பிடலாம். நாகரீகம் தோன்றுவதற்கு முன் மனிதன் நாடோடியாக ஊர் ஊராகப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வந்ததை அறிவோம். புலம்பெயர்தல் என்பது ஒரு பரவலான நிகழ்வு. ஆனால் அந்த இடப்பெயர்வின் உள்ளே உள்ள வலியை, பிறந்த மண்ணிலிருந்து வேருடன் பிடுங்கப்படுவதற்கான நெருக்கடியை பல்வேறு நிர்ப்பந்தங்கள் ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக ஏற்படும் மனச் சிதறல்களைப் புலப்படுத்துகிறது தொட்டிச்செடி கவிதை.
மண்ணில் விழுந்த விதை தன்னியல்பாக முளைத்து விரிந்து, கிளை பரப்பி சுதந்திரமாக அசைகிறது இதுதான் கிராம வாழ்வு. நகரம் என்பது இந்த அசைதல் என்ற ஒன்றை அறியாதது. நகரத்தில் வளரும் குழந்தை இந்த அசைவு பற்றி அறியாமல், நகர வாழ்வின் அவலங்களில் திளைத்துக் கொண்டிருக்கிறது. நகரத்துக் குழந்தைகள் இந்த அசைவற்று வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைவிட உருவத்தில் பெரியதாகிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கிராமத்தில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த தனது குழந்தைப் பருவத்துச் சந்தோசங்கள் தன் குழந்தைக்குக் கிடைக்கவில்லையே என்று ஒரு தாயின் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது தொட்டிச்செடி கவிதை.
தனது குழந்தைக்குக் கிராமத்தின் அனுபவங்களும், மனவுணர்வுகளும் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் அந்தத் தாயின் மனதில் ஏற்படுகிறது.
“ வேண்டும் கண்மணியே
உன்னுள் நீயே
ஊற்றி ஊற்றித்
துளிர்க்க வைத்துக்கொள்ளும்
காயங்களும் அனுபவங்களும் “
அவரவர்களுக்கான காயங்களும் அனுபவங்களும் வெவ்வேறானவை. நகரத்தில் வளரும் அந்தக் குழந்தையைப் பார்த்து,
“போ..
நகர வீதிகளில்
இடறலில் கிளுக்கும்
குளிர்பான மூடிகளையேனும்
குலுக்கிக் கொண்டிரு”
கள்ளிப்பழத்தின் ருசி :
“கள்ளிப்பழம் தேடி
அருகம்புல்லில் முள் உரசி
உண்டு மகிழ்வதில்
உள்நாக்குவரை சிவக்கும்
அனுபவம் இல்லாது
செய்துவிட்டேன் உனக்கு “
கிராமங்களில் வயல் வரப்புகளில், காடுகளின் ஓரங்களிலும் சாதாரணமாக நாம் பார்க்கக்கூடிய ஒன்றுதான் இந்த சப்பாத்திக்கள்ளி. கிராமத்து மக்களின் விலையில்லா செர்ரி பழம் என்பர். சிவப்பு நிற பழத்தின் மேல்புறத்தில் முள் இருக்கும். முள்ளை எடுத்துவிட்டுப் பழத்தைச் சாப்பிடுபவர். இந்தப்பழம் பல மருத்துவ குணங்கள் மிக்கது. கிராமங்களில் ஆடு மாடுகளை மேய்ப்பவர்கள் இப்பழத்தினை உட்கொண்டு தங்கள் நாவறட்சியைப் போக்கிக்கொள்வர். சிறுபிள்ளைகள் இதனை உட்கொள்ளத் தெரியாமல் தங்கள் நாக்கினை சிவக்க வைத்துக்கொள்வார்கள். கள்ளிப்பழங்கள் தேடி காட்டுக்குள் அலைவதும், பழம் கிடைத்தவுடன் அதிலுள்ள முட்களை அருகம்புல்லில் தேய்த்து, உள்நாக்கு சிவக்கச் சிவக்க உண்டு மகிழ்வதும் ஒரு சுகம். இந்த அனுபவம் நகர வாழ்தலில் கிடைக்குமா? தேக்குமர இலைக்கொழுந்துகளை உள்ளங்கைகளுக்குள் வலிக்க வலிக்கத் தேய்த்துச் சிவக்கின்ற அதன் உள்ளங்கையைச் சூரியனுக்குக் காட்டவிடாமல் கூட்டி வந்ததற்காக வருந்துகிறாள் அந்தத் தாய்.
பட்டு வண்ண இறகு பொறுக்குதல்:
“ பட்டு வண்ண இறகுகள் பொறுக்கி
அதே வண்ணத்தில்
பண்டிகைக்கு
உடை கேட்டழும் உன்னை
அதட்டியபடி பெருமிதம் கொள்ளும்
வாய்ப்பிழந்தேன்”
பண்டிகைகள் என்பது கிராமங்களில் ஆடம்பரமாக இருப்பதில்லை. பண்டிகைகள் என்பது சின்னச்சின்ன மகிழ்ச்சிகளால் ஆனது. கிராமத்துப் பண்டிகையின் முத்திரை புதிய ஆடைகள் மற்றும் அவற்றின் வண்ணங்கள் மட்டுமே. கிராமத்தில் குழந்தைகள் விளையாட்டாக பறவைகளின் வண்ண வண்ண இறகுகள் பொறுக்கி வைத்து அதே வண்ண ஆடைகளைப் பண்டிகைக்கு வாங்க வேண்டுமென்று ஆசைப்படுவார்களாம். அவர்களைப் பெற்றோர்கள் அதட்டி மறுப்பார்களாம். அத்தகைய பெருமிதம் கொள்ளும் வாய்ப்பினை இழந்து விட்டதாக அந்தத் தாய் ஏக்கம் கொள்கிறாள்.
பூவரசமரம் பூவுதிர்த்தல் :
“நாணல் கயிறு திரித்து
நத்தாங்கூடு சலங்கை கட்டி
பூவரசமரம்
பூவுதிர்த்துக் கைதட்டும்
நாட்டிய அரங்கத்தைக்
கெடுத்ததும் நானே”
கிராமத்தில் பூவரசமரம் பூவுதிர்த்துப் பூவுதிர்த்துக் கைதட்டும். கைதட்டத் தட்ட பூ உதிர்க்கும் பூவரசமரம். சறுகுகள் சலசலக்கும். இயற்கையின் அற்புதம் நடக்கும் நாட்டிய அரங்கம். இத்தகைய சுதந்திரத்தைப் பறித்துக் கெடுத்ததும் தானே என்று வருத்தம் கொள்கிறாள்.
அப்பார்ட்மெண்ட் டப்பா
இயற்கை வெளியில் சுதந்திரமாய்ச் சுற்றித் திரிய வேண்டிய குழந்தையை, அதன் உயிர்ப்பைச் சுருக்கி, வளர்ந்து கிளை பரப்ப வேண்டிய அவளைத் தொட்டியில் சுருக்கி , அவளது வளர்ச்சியை அவ்வப்போது வெட்டியும், வீட்டிற்குள்ளேயே இடம்மாற்றி இடம்மாற்றி வைக்கப்படும் தொட்டிச்செடியைப் போல வைத்திருப்பதாகவும், ஆட்டோவில் ஸ்கூலுக்குப் போகும் நெரிசலான வாழ்கையையே இந்த நகர வாழ்க்கையையே தான் தன் குழந்தைக்குத் தந்திருப்பதாக எண்ணி எண்ணிக் கரைந்து போகிறாள் அந்தத் தாய்.
தொட்டிச்செடியில் வேர் விட்டு வளர முடியாமல், போதிய மண்ணும் சூரிய வெளிச்சமும் இல்லாமல் ஒரு சிறிய தொட்டிக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டுள்ள தொட்டிச்செடி. அந்தத் தொட்டிச்செடியைத் தொட்டு நிற்கும் இக்குழந்தை, தன் சுயத்தைத் தொலைத்து விட்டு நிற்கிறது அந்தக் குழந்தை.
முடிவுரை :
குழந்தைகள் தன்னியல்பாக வளர முடியாமல் வளரத் துடிக்கும் அவர்களின் வேர்கள் வெட்டப்படுகின்றன தொட்டிச்செடிகளைப் போல என்கிறார் கவிஞர். தன்னுடைய வேர்க்கால்களை வீசி நடக்க முடியாமல் வேறு பாதையும் இல்லாமல் தொட்டிக்குள் அடைபட்டிருக்கும் வாழ்க்கை. குழந்தைகளின் உலகத்தை, அவர்களது வாழ்க்கையை, அவர்களது கனவை அப்பார்ட்மெண்ட் கூண்டுகளில் அடைத்து வைத்து விட்டதைக் கவிஞர் இளம்பிறை இந்தக் கவிதையில் அழகுற எடுத்துரைக்கிறார். கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம்பெயர்தல் என்பது பொருளாதார மேம்பாடு, வயிற்றுப் பிழைப்புக்காகத் தொழில் தேடுதல் எதுவாயினும் சரி இடப்பெயர்வின் வலி, துயரம் தவிர்க்க இயலாதது என்பதைக் கவிஞரின் தொட்டிச்செடி கவிதை மூலம் உணர முடிகின்றது.
உசாத்துணை விபரங்கள்:
நூலின் பெயர் : முதல் மனுஷி; நூலாசிரியர் பெயர் : இளம்பிறை; பதிப்பு விவரங்கள் : ஸ்நேகா வெளியீடு, 348, டி.டி.கே சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014; முதல் பதிப்பு : மே 2003
* கட்டுரையாளர்: - முனைவர் கோ. சுகன்யா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் - 641004. -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.