ஆய்வுச்சுருக்கம் (abstract)

- முனைவர் நா.ஜானகிராமன்,  தமிழ்த்துறைத்தலைவர்,  பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி, 9842523869 -இலக்கியங்கள் பல்வேறு வகைகளில் பொருட்களைச் சுட்டுகின்றன. அதன் ஒரு வழி முன்னம் என்பதாகும். முன்னம் என்றால் குறிப்பு என்று பொருள். தொல்காப்பியர் இதனைப்பற்றி விளக்கியுள்ளார். தலைவன், தலைவி, தோழி, பாங்கன் ஆகியோர் பல சூழல்களில் தாம் கூறவந்த கருத்தினை நேரடியாகச் சொல்லாமல் பிறவழியில் சொல்ல முனைந்துள்ளனர். இதனையே  குறிப்புப் பொருள் என வழங்கினர். குறிப்பறியமாட்டாதவன்  ஒரு மரம் என்ற முதுமொழிக்கேற்ப குறிப்புப்பொருள் சங்கப்பாடல்களில் செல்வாக்கு மிக்க ஒன்றாய் இருந்து வந்துள்ளது. நற்தொகையிலும் கலித்தொகையிலும் இதனை நன்கு உணரமுடிகின்றது. இராமாயணம், மகாபாரதம், புராணங்கள் பலவற்றில் இருந்து குறிப்புப்பொருள்கள் சங்கப்பாடல்களில் எடுத்தாளப்பெற்றுள்ளன.பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் போன்றோரின் பெயர்களால் இதனை அறியலாம். தாவரங்கள் மற்றும் விலங்குகள் மலர்கள் போன்றவற்றால் குறிப்பால் பொருள்களை உணர்த்தியுள்ளனர்.  தன்னுறு வேட்கை கிழவன் முன்கிளத்தல் எத்திறத்தானும் கிழத்திக்கில்லை என்பதில் தலைவி நேரடியாகத் தன் விருப்பத்தைத் தெரிவிக்க மாட்டாள் என்பதை உணர்த்துகின்றது. தலைவி மற்றும் பிற மாந்தர்கள்  தாம் சார்ந்த அனைத்தையும் குறிப்பில் உணர்த்துவர். இவ்வாறு குறிப்பில் உணர்த்துதல் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

கலைச்சொற்கள்

முன்னம், பிரப்பங்கொடி, அரும்புகள், பீர்க்கமலர், பொருள்வற்றல், மலர்கள் காளைகள், இயற்கைப்புணர்ச்சி, நல்லவன், அந்தணன், குடிப்புகழ், கௌரவர்கள் பாண்டவர்கள், கூற்றுவன்,காயாமலர், மத்தம் பிணித்த கயிறு.

முன்னுரை

தொல்காப்பியம் பிற்கால பல இலக்கியங்களுக்குத் தோற்றுவாயாக உள்ள மூலமாகும். தமிழின் மூத்த சிறந்த இலக்கிய இலக்கண வகைமையில் வைத்து அறிஞர்கள் பாகுபடுத்துகின்றனர். செய்யுளியலில் தொல்காப்பியர் செய்யுளுறுப்புகளாக முப்பத்தைந்து உறுப்புகளையும் அவற்றின் சிறப்புகளையும் பேசுகின்றார். சங்கக் கவிதைக்கும் அதன் பிற்கால இலக்கிய வகைமைகளுக்கும் இது முக்கியமாகின்றது. எழுத்து முதலாக தொடங்கி இலக்கிய வனப்புசொக்கள் வரை அனைத்தையும் விளக்கும் தொல்காப்பியர் முன்னம் என்னும் குறிப்புமொழியைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். இந்த நாளில் இது வளர்ந்து மரமாகிவிட்டது. இன்று மொழியியல் துறையில் வளர்ந்து விட்ட Sign Language> Semiotics> Physical and Body Language போன்ற துறைகள் இந்த முன்னத்தின் வாயிலாகவே வளர்ந்தது. காரணம், குறியீடுகள் மூலம் அனைத்தையும் உணர்த்த முடியும் என்பதே ஆகும். இலக்கியத்தில்  மாந்தர்கள் பேசுகின்ற பல இடங்களை விட பேசாத பல இடங்கள் மிக ஆழமான பொருளையும் அகலமான  கருத்துக்களையும் தந்துவிடுகின்றன. ஆழமான ஆழமான பொருளும் அழுத்தமான பொருட்குறிப்பும் இலக்கியச் செழுமைக்குக் காரணமாக அமைகின்றன. பிரிந்தவர் கூடினால்  பேசவும் வேண்டுமோ? என்ற அடி குறிப்புமொழியான முன்னத்தினை தெரிவிக்கின்றது. இலக்கிய நிகழ்வுகள் யாவும் எளிமையாகவும் ஆர்வத்துடனும் பிறர் கேட்கும் அளவிற்கு சுவையுடனும் இருப்பதற்கு குறிப்புமொழி அவசியமாக இருந்துள்ளது என்பதற்குப் பல இடங்களைச் சான்று காட்டலாம்.

இலக்கண வரையறை

முன்னம் என்பதற்குக் குறிப்பு மொழி என இன்றைய ஆய்வாளர்கள் வகுத்துவைத்திருந்தாலும் தொல்காப்பியர் சொன்ன முன்னம் எதைச்சுட்டுகின்றது எப்பொருளை விளங்கவைக்கின்றது என்னும் ஆய்வுகள் இன்றுவரை நடந்தேறி வருகின்றன.

இவ்விடத்து இம்மொழி  இவரிவர்க்கு  உரியவென்று
அவ்விடத்து அவரவர்க்கு உரைப்பது முன்னம் (1463)

என்று தொல்காப்பியர் விளக்கம் தருகின்றார்.

மேலும் எழுத்ததிகாரத்தில், முன்னத்தின் உணரும் கிளவியெல்லாம் ..  என்ற குறிப்பினைத் தருகின்றார்.   (kailasapathy.k 1966: 34) அவ்வாறெனில் இந்த முன்னம் எச்சூழலில் வருகின்றது என்று பார்த்தால் அதற்குப் பின்வரும் குறிப்பு கிடைக்கின்றது. அது,

காலம் களன் இடம் என மூன்றும் வருவது

திணை, கைகோள் கூற்று காலம் என்பதில் முக்காலம் என்ற பொருளும் வருகின்றது.

இறப்பே நிகழ்வே எதிரது
திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணர
பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும். (செய்யு. நூ.194)

இதற்கு உரையாசிரியர் பல விளக்கங்களைத் தருகின்றனர்.

அவற்றுள் சில, உரையாசிரியர் விளக்கம் பின்வருமாறு.அது இடமும் காலமும் உணர்ந்து கேட்போர்க்குத் தக்கவாறு மொழிதலும் செய்யுளுறுப்பாம் என்கிறார்.

யாதொரு இடத்தாலும் யாதாலுமொரு மொழி தோன்றியக்கால் இம்மொழி சொல்லுதற்குரியாரும் கேட்டற்குரியாரும் இன்னாரென்று அறியுமாற்றான் அங்ஙனம் அறிதற்கு ஓரிடம் நாட்டி அவ்விடத்துக் கூறுவார்க்கும் கேட்பார்க்கும் ஏற்றவரை ஈடாகச் சொல்வது முன்னம். ( saradambal.S 2010 : 56)

இடம் காலம் உணரப்பெற்று கேட்போர்க்குத் தக்கவாறு மொழிதலும் மற்றும் யார் கேட்பவர் யார்  சொல்பவர் இவ்விருவருக்கும் இடையே உள்ள தொடர்புகள் பற்றியும் உள்ள களமே முன்னத்தின்  பொருளதாகும். காலம், இடம், பொருள் என அனைத்தையும் ஓரிடம் வைத்துக் கூறுதல் முன்னத்தின் பொருளென உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த குறிப்பால் உணர்த்தும் செய்திகள் இலக்கணப்பாடத்திலும் உள்ளன. தொல்காப்பிய எழுத்தியலில், வரும் எடுத்துக்காட்டுகளில் இதனைக் காணலாம்.

செம்பொன் பதின் தொடி
செம்பு ஒன்பதின் தொடி
செம்பொன்பதின் தொடி
குன்றே ராமா
குன்றேரா மா

செம்பு ஒன்பதின் தொடி என்பதில் ஒன்பதின் தொடி எனவும், செம்பொன் பதின் தொடி என்பதில் பத்தின் தொடி எனவும் செம்பொன்பதின் தொடி என்பதில் செம்பு ஒன்பதாகிய தொடி எனவும் பொருள்கொள்ளுமாறு காட்டுகின்றார் உரையாசிரியர். குன்றே ராமா என்பதில் குன்றுபோல் உள்ள இராமன் எனவும் குன்றேரா மா என்பதில் மலைப்பகுதியினைத் தாண்டமுடியாத குதிரை எனவும் பொருள் குறிப்பால் உணர்த்தப்பெறுகின்றது.

குறுந்தொகையில் குறிப்புப் பொருள் ( cannotation)
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.  ( குறு.3. குறிஞ்சி)
-தேவகுலத்தார்.

இந்த தேவகுலத்தார் பாடலில் காதலின் ஆழத்தைக் குறிப்பாகத் தெரியப்படுத்துகின்றார். ‘பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பானது’ நிலத்தை விட பெரியதாகவும், நீரைவிட ஆழமானதாகவும், வானைவிட உயர்ந்ததாகவும் உள்ளது. பெருந்தேன் என்ற குறிப்பு ஆழமான காதலின் பொருளதாகும். கருங்கோற் என்பதில் மலைநில வருணனையாகக் கொள்ளலாம். நட்பு என்பதில் வெறும் நட்பு மட்டுமல்லாமல் காதல் என்னும் படிநிலை வளர்ச்சியைக் காட்டுகின்றது. ( sasivalli.v.c 2010 : 56)

பாவடி உரல பகுவாய் வள்ளை
ஏதின் மாக்கள் நுவறலும் நுவல்ப
அழிவ தெவன்கொலிப் பேதை யூர்க்கே
பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்
கருங்கண் தெய்வம் குடவரை யெழுதிய
நல்லியற் பாவை அன்னஇம்
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே.
- பரணர். குறு.89. மருதம்

வள்ளைப்பாட்டினைப் பாடி ஊரார்தம் குற்றங்களைப் பேசிப்பகிர்ந்து கொள்கின்றனர். ஏதின்மாக்கள் என்பவர் குற்றமில்லாத மக்கள் எனவும், பரத்தையும் என்று கொள்ளலாம். இவர்கள் தலைவனின் காதலை அல்லது தலைவியின் காதலை பொய்த்துப் பேசுகின்றனர். இதனால் அழிவது என்னை? எங்கள் நலமல்லவா? இதற்கு ஏன் நொந்து கொள்கின்றனர். கண்டார் உயிருண்ணும் கூற்றமாக விளங்கும் கொல்லிப்பாவை போன்றவள் தலைவி. இவள் என்னுயிரைக் கொன்றவள். இவள் நலனைப்பற்றிய அக்கறை யாருக்கும் தேவையில்லை.

முன்னம் -கொல்லிப்பாவை  போன்ற தலைவி

திணை - குறிஞ்சி - தோழி கூற்று (வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத் தோழி கூறியது)

எற்றோ வாழி தோழி முற்றுபு
கறிவளர் அடுக்கத் திரவின் முழங்கிய
மங்குல் மாமழை வீழ்ந்தெனப் பொங்குமயிர்க்
கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி
வரையிழி அருவி உண்துறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென்தோள் சாய்த்துஞ் சால்பின் றன்றே. (குறு.90 குறிஞ்சி)
-மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதனார்.

இந்தப் பாடலில் வரும் முன்னப்பொருளைப் பின்வருமாறு பகுக்கலாம்.

முன்னம் - அருவி, மிளகு, பலாப்பழம் இறுதியில் திருமணம் இயற்கைப்புணர்ச்சி, பாங்கற்கூட்டம், பாங்கியர் கூட்டம் பிறகு திருமணம் என்ற குறிப்புப்பொருள் கிடக்கின்றது. ( shanmugam.R 1981: 78)

பிரப்பங்கொடி

பிரப்பங்கொடியைக் குறிப்புப்பொருளாகக் கொண்டு புலவர் கருத்தினை முன்வைத்துள்ளார். ( Srinivasan.Re 1979: 78)
திணை- மருதம் - தலைவி கூற்று  (பரத்தையிற் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி தன்வரைத்தன்றி அவன் வரைத்தாகித் தன்நெஞ்சு நெகிழ்ந்துழி தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது. பரத்தையிற் பிரிந்து வந்த வழி வேறுபட்ட கிழத்தியைத் தோழி கூறியதுமாகும்.)

அரிற்பவர்ப் பிரம்பின் வரிப்புற விளைகனி
குண்டுநீ ரிலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்டுறை ஊரன் பெண்டினை யாயிற்
பலவா குகநின் நெஞ்சிற் படரே
ஓவா தீயு மாரி வண்கைக்
கடும்பகட் டியானை நெடுந்தே ரஞ்சி
கொன்முனை இரவூர் போலச்
சிலவா குகநீ துஞ்சு நாளே. (குறு.91. மருதம்)
-ஔவையார்.

பிரப்பங்கொடியில் பழுத்த கனியினை கெண்டைமீன்கள் துள்ளி விழுந்து உண்கின்றன. அத்தகைய தண்துறை ஊரனை கண்டு காதல் கொள்ளும் மகளிர் வாழும் குறிஞ்சி நிலத்தினை தம் நிலமாகக்கொண்ட ஓரியின் வள்ளண்மைக் கரங்கள் பகைவர் தம்மை அழிப்பதற்குத் தூக்கமில்லாமல் இருக்கின்றான். அதனைப்போல தலைமகளும் உறக்கமில்லாமல் தவிக்கின்றாள்.
குறிப்புப்பொருள்  - பிரப்பங்கொடி, கெண்டைமீன்கள் (சேரன்குடி), கொன்மனைஇரவூர் (துன்பம்)

முன்னமே சிவக்கும் அரும்புகள்

பருவம் வருவதற்கு முன்பே சிவக்கும் சில அரும்புகளைக் குறிப்புப் பொருளாக்கினர் புலவர்.( subbu reddiyar. N 1974:100)  திணை- முல்லை - தலைவி கூற்று (பருவம் கண்டு ஆற்றாள் எனக் கவன்ற  தோழிக்கு ஆற்றுவல் என்பதுபடத் தலைமகள் சொல்லியது)

பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே
மானே மருள்வேன் தோழி பானாள்
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
அருவி மாமலை தத்தக்
கருவி மாமழைச் சிலை தருங் குரலே. (குறு.94.முல்லை)
-கதக்கண்ணனார்.

கார்காலம் வந்தது என்றெண்ணி அரும்புகள் முன்பே சிவந்தன என்பது பொய்யானது. அப்படி சிவந்திருந்தால் தலைவன் நிச்சயம் வந்திருப்பான். இது தலைவியின் உறுதித்தன்மையை தெரிவிக்கின்றது.

முன்னம் - செம்முல்லையின் அரும்புகள் முன்பே சிவந்தன. இதைப்பார்த்து தலைவர் வரமாட்டார் எனத்துணிய மாட்டேன். என்னைப்பிரிந்தவர் நிச்சயம் வந்து சேர்வார் எனக் கூறுகின்றாள் தலைமகள்) sivathambi.Ka 1982 : 98)

தலைவன் கூற்றில் குறிப்பு
தலைவன் பல இடங்களில் தமது கருத்தினைக் குறிப்பால் விளக்குவான். அவ்வகையில் இடம் பொருள் ஏவல் என மூன்றும் இருக்கும்.

மால்வரை இழிதருந் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே. (குறு.95)    -கபிலர்.

முன்னப் பொருள் - மலைமீது விழும் அருவி,

தலைமகள் மீது வீழ்ந்த காதல் அருவியின் வலிமை பாறைகளால் அழியும். எனது வலிமை தலைமகளால் அழிந்தது என்கிறான் தலைவன்) மேலிருந்து வீழும் வேகக் குறைவு என்பது போல தலைவனின் நோக்கு தலைவியினால் தகர்க்கப்படுகின்றது என்பதும் குறிப்பாகும்.

பீர்க்கமலர் என்னும் குறிப்பு

இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் கலித்த
மாரிப் பீரத் தலர்சில கொண்டே. ( குறு.98. முல்லை
-கோக்குள முற்)றனார்.

பீர்க்கமலர் போன்ற தலைவியின் நெற்றியில் உள்ள பசலை நோய். நன்னுதலில் வரைந்த பசலை என்னும் பருவ நோயினைக் குறிப்பால் உணர்த்துகிறது இப்பாடல்). இப்பாடல் முல்லைத்திணையில் அமைந்த  - தலைவி கூற்று (பருவம் கண்டு ஆற்றாளாயத் தலைமகட்குத் தோழி சொல்லியது)

பொருள் வற்றும் குறிப்பு

உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே. ( குறு.99. முல்லை)
-ஔவையார்.

பொருள் ஒருகாலத்தில் வற்றிவிடும் அதுபோல காமமும் வற்றிவிடும் ஆகவே என்ன வாழ்க்கை. இதுதான் உலக இயல்பு போலும் என வாழ்க்கைத் தத்துவத்தை முன்னத்தால் விளக்கும் இடம் இது. இது முல்லை - தலைவன் கூற்று  (பொருள் முற்றித் புகுந்த தலைமகன் “எம்மை நினைத்தும் அறிதிரோ? என்ற தோழிக்குச் சொல்லியது.

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே. ( குறு.100 குறிஞ்சி)
-கபிலர்.

முன்னப்பொருள் -  காந்தளை வேலியாக உடைய இந்த ஊர். மலைநெல், காட்டுமல்லிகை, பசிய மரல் எறிவர் கொல்லிமலை பாவை போன்ற எம் காதலி அவள் மணத்தற்கு அரியள்.

கலித்தொகையில் மலர்கள், காளைகள்

கலித்தொகையில் உள்ள மலர்கள் வண்ணத்தினைப் போன்று கலித்தொகையில் வரும் காளைகள் இருக்கின்றன.

‘தளி பெறு தண் புலத்துத் தலை பெயற்கு அரும்பு ஈன்று,
முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும்;
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று,
ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ் கோடலும்;
மணி புரை உருவின காயாவும்; பிறவும்;
அணி கொள மலைந்த கண்ணியர்- தொகுபு உடன்,
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார்,
சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ,
ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு’ ( கலி.70)

முன்னம் -மலர்களைப் போன்று காளைகள்
காளிதேவி- படையல்
சுடர் விரிந்தன்ன சுரி நெற்றிக் காரி,
விடர் இயம் கண்ணிப் பொதுவனைச் சாடிக்,
குடர் சொரியக் குத்திக், குலைப்பதன் தோற்றம் காண்-
படர் அணி அந்திப், பசும் கண் கடவுள்
இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்து இட்டுக்
குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம்! ( கலி.101 முல்லை)

முன்னம்- காளைகள் குத்திக் குடலை மாலையாகச் சூடிவரும் காட்சி எருமையில் வரும் கூற்றுவன் போன்று குடலை மாலையாகக் கொண்டு ஆடும் காட்சி காளிதேவிக்குப் படையல் போன்று உள்ளது.

இயற்கைப்புணர்ச்சி

'கோளாளர் என் ஒப்பார் இல்' என நம் ஆன் உள்,
தாளாண்மை கூறும் பொதுவன், நமக்கு ஒரு நாள்,
கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு
வேளாண்மை செய்தன கண்.
ஆங்கு, ஏறும் வருந்தின் ஆயரும் புண் கூர்ந்தார்;
நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும்
முல்லை அம் தண் பொழில் புக்கார், பொதுவரொடு,
எல்லாம் புணர் குறி கொண்டு. ( கலி.101 முல்லை)

கன்னியர்கள் காளைகளைத் தழுவுதல் போன்று ஏறுதழுவுதல் நிகழ்கின்றது. என்றாவது ஒருநாள் தனது காதலன் ஆகாமல் இல்லை. அவனைக்கண்டு காதல் கொள்கின்றன என் கண்கள். அனைவரும் புணரும் குறி கொண்டு, அதாவது காதல் புணர்ச்சி கொண்டு என்கின்றார்.

சவால் விடும் மகளிர்

ஓஒ! இவள், 'பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால்,
திரு மா மெய் தீண்டலர்' என்று கருமமா,
எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்
சொல்லால் தரப்பட்டவள்.

நல்லவர் என்னும் குறிப்பு

‘மெல் இணர்க் கொன்றையும், மென் மலர்க் காயாவும்,
புல் இலை வெட்சியும் பிடவும், தளவும்,
குல்லையும், குருந்தும், கோடலும், பாங்கரும்-
கல்லவும், கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர்,
பல ஆன் பொதுவர்; கதழ் விடை கோள் காண்மார்-
முல்லை முகையும் முருந்தும் நிரைத்தன்ன
பல்லர், பெரு மழைக் கண்ணர், மடம் சேர்ந்த
சொல்லர், சுடரும் கனம் குழைக் காதினர்,
நல்லவர்- கொண்டார், மிடை. (கலி.103)

(நல்லவர் என்பது குறிப்புப்பொருள்)

அந்தணர் பற்றிய முன்னம்

‘கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன்
ஆடி நின்று, அக்குடர் வாங்குவான் பீடு காண்-
செந் நூல் கழி ஒருவன் கைப்பற்ற, அந்நூலை
முந் நூலாக் கொள்வானும் போன்ம்! ( கலி.103)

முப்புரிநூல் அணிந்தவன் – அந்தணன் என்ற குறிப்பு வெளிப்பட்டு நிற்கின்றது.

குடிப்புகழ் தேயா விழுப்புகழ்
கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே, ஆய மகள்.
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சு இலார் தோய்தற்கு அரிய- உயிர் துறந்து-
நைவாரா ஆய மகள் தோள்.
வளியா அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆய மகள் தோள்?
விலை வேண்டார், எம் இனத்து ஆயர் மகளிர்- (கலி.103)

மறுமையிலும் புகழ் வேண்டி வாழ்தல் என்னும் குறிப்பு வெளிப்பட்டு நிற்கின்றது.

கௌரவர், பஞ்சபாண்டவர் குறிப்பு
ஆங்க, செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப,
மறுத்து மறுத்து மைந்தர் சாரத்,
தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப-
இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்பப்-
பாடு ஏற்றுக் கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர்,
கோடு இடை நுழைபவர், கோள் சாற்றுபவரொடு-
புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ. (கலி.104)

நூற்றுவர் என்னும் குறிப்பும், ஐவர் அட்ட பொருகளம் போல என்னும் குறிப்பும் முன்னப்பொருளாகும். இது உவம முன்னப்பொருளாகும்.

கூற்றுவன்

கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டு வாய் சாக் குத்திக்,கொள்வார் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா- செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி,உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம்!
வீரனின் துணிவு – குறிப்பாக உணர்த்தப்பட்டுள்ளது.

கண்ணன் பற்றிய குறிப்பு

ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக்;
காயாம் பூம் கண்ணிக் கரும் துவர் ஆடையை,
மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர்
ஆயனை அல்லை பிறவோ அமரர் உள்
ஞாயிற்றுப் புத்தேள் மகன்?
அதனால் வாய்வாளேன்; ( கலி.108)

காயா மலரினை அணிந்தவன் கண்ணன் என்ற குறிப்பினைக் காணலாம்.

திருமால் பற்றிய குறிப்பு

வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால், சேய்த்து அன்றி,
அண்ண அணித்து ஊர் ஆயின், நன்பகல் போழ்து ஆயின்,
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய்! மற்று இன்ன
வெயிலொடு, எவன், விரைந்து சேறி? உது காண். ( கலி. 108)

மயில் எருத்து வண்ணத்து மாயவன் மாலவன் திருமால்.

மத்தம் பிணித்த கயிறு
கடி கொள் இரும் காப்பில் புல் இனத்து ஆயர்
குடி தொறும் நல்லாரை வேண்டுதி - எல்லா! -
இடு தேள் மருந்தோ, நின் வேட்கை? தொடுதரத்
துன்னித் தந்தாங்கே நகை குறித்து, எம்மைத்
திளைத்தற்கு எளியமாக் கண்டை. 'அளைக்கு எளியாள்
வெண்ணெய்க்கும் அன்னள்' எனக் கொண்டாய் - ஒள் நுதால்
ஆங்கு நீ கூறின், அனைத்து ஆக நீங்குக்
அச்சத்தான் மாறி, அசைவினான் போத்தந்து
நிச்சம் தடுமாறும் - மெல் இயல் ஆய் மகள்!
மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம்
சுற்றிச் சுழலும் என் நெஞ்சு. ( கலி.110)

மத்திலே கட்டப்பட்ட கயிறு சுற்றிச்சுற்றி ஒரே இடத்திற்கு வருதலை, என் நெஞ்சம் மத்தம் பிணித்த கயிறாக சுற்றுச்சுழலும் தன்மையதாக உள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவுரை

அரும்புகள் மலர்வதும். பீர்க்கமலர் மலரும் காலநிலையும், குறிப்பால் உணர்த்தப்படுகின்றன. கார்காலம் வந்ததும் தலைவன் தேரேறி வருவான் என்ற விடை குறிப்பால் தெரியவருகிறது. அந்தணர் பற்றிய குறிப்புகளை இலக்கியம் எடுத்துரைக்கின்றது. குடிப்புகழ், நற்புகழ், கூற்றுவன் கொல்லும் காட்சி போன்றன குறிப்புப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முன்னம் என்பதற்குரிய பொருளாக குறிப்பு என்னும் பொருளை உரைத்துள்ளார். இது காலம், களம், இடன் என்னும் இடத்தில் வருகின்றது. குறுந்தொகை மற்றும் கலித்தொகைப் பாடல்களில் உள்ள முன்னப்பொருளை அடியாக வைத்து சில பாடல்களின் வாயிலாக எடுத்துரைக்கப்பெற்றுள்ளது. அகம், புறப்பாடல்களில்  பல முன்னப்பொருள்களைப் புலவர்கள் எடுத்தாண்டுள்ளனர். முன்னம் என்னும் பொருண்மை பின்னாளில் பல இலக்கியங்களுக்கும் பரந்துவிரிந்து கையாளப்பெற்றுள்ளது. இன்று மொழியியல் துறையில் குறியீட்டியல் ( semiotics) என்னும் துறையாக வளர்ந்துள்ளது.

உசாத்துணைப்பட்டியல்

1. Kailasapathy.K  ( 1966) Pandai thamizhar vazhvum vazhipadum, Makkal velieedu, Chennai.
2. Saradambal.S ( 2010)> Sannga Seviyal, sanga greeka oppeedu, meenakshi book house, Madurai.
3. Sasivalli.V.C ( 2010), Thamizhar Thirumanam, IITS, Chennai-113.
4. Shanmugam.R.(1981), Ulaga makkalin pazhakka vazhakkangal, Chennai.
5. Srinivasan. R ( 1979), Sanga ilakkiyathil uvamaigal, Aniyagam, Chennai.
6. Subbu reddiyar. N (1974), Tholkappiaym kattum vazhkai, Chennai.
7. Sivathambi. Ka. ( 1982), Ilakkiyamum karuthunilayum, Thamizh puthakalayam, Chennai.

* கட்டுரையாளர் - முனைவர் நா.ஜானகிராமன்,  தமிழ்த்துறைத்தலைவர்,  பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்  கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இனாம்குளத்தூர், திருச்சிராப்பள்ளி, 9842523869

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R