பாரதியின் காலம் 20ம் நூற்றாண்டின் ஆரம்பக் காலம், இந்தியாவெங்கும் சுதந்திர விடுதலைப் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த காலம். மக்கள் அரசியல்ரீதியாக மட்டுமன்றி சமூக ரீதியாகவும் அடிமைப்பட்ட வாழ்வுக்கு உட்பட்டிருந்தார்கள். இந்த நிலையிலே பாரதி மக்களின் அரசியல், சமூக விடுதலையை நோக்காகக்கொண்டு இலக்கியங்கள் படைத்தார். தமிழ்க் கவிதை உலகில் மிகவும் முற்போக்கான சமூக, அரசியல் உணர்வுகளை உணர்வு பூர்வமாக முதன்முதல் வெளிப்படுத்தினார். முக்கியமாக அவர் தொழிலாளர்களுக்கு, அடக்கி ஒடுக்கப்பட்டவர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அக்குரல் பாரம்பரியச் சிந்தனைகளுக்கு மாறானதாக அமைந்தன.
அந்தவகையில் அவர் மக்கள் இலக்கியத்தின் முன்னோடியாக விளங்கினார். ஆறில் ஒரு பங்கு' என்னும் சிறுகதை முன்னுரையில் 'இந்த நூலைப் பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து இரசிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்த தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்குச் சமர்ப்பணம் செய்கின்றேன்' என்று கூறுகின்றார். இது அவர் தொழிலாளர் மீது கொண்டிருந்த பற்றைக் காட்டுகிறது.
தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்தார். தொழிலாளர்களை மேலான நிலையில் மதிக்க வேண்டும் என்று கூறினார். தேசிய எழுச்சியின்போது தொழிலாளர்கள், விவசாயிகளின் வீறுகொண்ட போராட்டங்களுக்கு அறைகூவல் விடுவதாக அவரின் எழுத்துக்கள் அமைந்தன. தன்னையும் ஒடுக்கப்படும் உழைக்கும் வர்க்கத்தோடு இணைந்து நோக்கினார். அவரது மக்கள் நல நாட்டத்தை 'விடுதலை' என்ற கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார். 'திறமை கொண்ட, தீமை அற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்திட வேண்டும்' என்று கூறுகிறார்.
சாதி பேதமின்றி சமத்துவமாக வாழ்வதையும் மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வதையும் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்தி ஆண்களும் பெண்களும் சமமாக வாழ்வதையும் விடுதலையின் இலக்கணமாகக் கருதினார். இந்திய சமூகத்திலே புரையோடிப் போயிருந்த சாதிக் கொடுமைக்கு எதிராக அவர் வன்மைiயாகக் குரல் கொடுத்தார். சாதி வேற்றுமை, வெள்ளையரின் அதிகாரத்துவம் இரண்டையும் மனிதத் தன்மை அற்றவை என்று சாடினார். சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இவை இரண்டும் மண்மூடிப் போவதாக நினைத்துப் பள்ளுப் பாடுகிறார்.
“பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே – வெள்ளை
பறங்கியரைத் துரையென்ற காலமும் போச்சே”
என்று சமத்துவ சமூக நோக்கின் மாசற்ற மனிதப் பணியை வெளிப்படுத்துகின்றார். இந்தியரிடையே சாதி அடிமைத்தனம் உள்ளவரை வெள்ளையருக்கே அது நன்மை பயக்கும். இந்தியருக்குத் துன்பம் உண்டாக்கும் என்று கூறுகிறார்.
“சாதிச் சண்டை போச்சோ – உங்கள்
சமயச் சண்டை போச்சோ”
என்று வெள்ளையர் சுதந்திரம் வேண்டுவோரைப் பார்த்துக் கேட்கும் பாவனையில் பாடி மனிதனை மனிதன் அடிமைப்படுத்தும் வேட்டை மடமையைக் கண்டிக்கின்றார். மேலும் சுதந்திரம் கேட்கிறீரே உமக்கு அந்தத் தகுதி உண்டா? என்று ஏளனமாகக் கேட்கிறார்.
“சேர்ந்து வாழ்வீரோ – உங்கள்
சிறுமைக் குணங்கள் போச்சோ?”
வெள்ளையர் மக்களை அடிமைப்படுத்தியதற்கு இந்திய மக்களின் ஒற்றுமையின்மையைச் சுட்டிக் காட்டுவதோடு சாதி தொடர்பான ஏற்றத் தாழ்வுகளை சாதியை ஏற்றுக் கொண்ட பெரிய மனிதர்களிடம் இதனைக் கூறாது தெய்வத் தன்மை கொண்ட குழந்தைகளிடம் கூறுகிறார்.
“சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லால் பாவம்!
நீதி, உயர்ந்த மதி, - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்”
அவ்வாறே பெண் அடக்குமுறை வலிமை பெற்றிருந்த சூழலில் பெண்ணின் சமத்துவ உரிமைக்காக் குரல் கொடுத்தார். பெண் விடுதலையை சமூகத் தளத்துக்கு விரிவுபடுத்தும் வகையில் பெண்களின் உயர் கல்விக்கான வாய்ப்பு, இள வயதில் மணம் செய்து வைக்கும் முறையை ஒழித்தல், கணவனைத் தெரிவு செய்வதில் பெண்ணின் விருப்பைப் பெறுதல், உடைமைகளில் அவர்களுக்குச் சமபங்கு வழங்குதல், முதலானவற்றின் அவசியத்தை அவர் வற்புறுத்தினார். அந்தவகையில் பெண்களின் உயர் கல்விக்கான வாய்ப்பை பின்வரும் பாடல் வெளிப்படுத்துகின்றது.
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!”
அதாவது ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் உயர் கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை மனித நேயத்துடன் இக்கவிதை வரிகள் வெளிப்படுத்துகின்றன. அத்தோடு பெண்ணுக்கு விதிக்கப்பட்டதுபோல் ஆணுக்கும் ஒருதார மணமுறையை விதித்தல், பெண்ணிடமிருந்து மட்டுமன்றி ஆணிடமும் கற்பை எதிர்பார்த்தல் முதலான பால்ரீதியான சமத்துவச் சிந்தனைகளை வெளிப்படுத்தினார். ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால் அப்போது பெண்மையும் கற்பழிந்து விடாதோ என்று வினாவுகின்றார். அந்தவகையில் கற்பு என்பது இருவருக்கும் பொதுவானது என்பதை பின்வரும் கவிதை வரிகள் வெளிப்படுத்தியுள்ளன.
“கற்பு நிலையென்று சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்னணக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்”
மேலும் அவரது பாடல்களில் ஏழை மக்களின் வறுமை கண்டு ஏங்குவதும் அதைப் போக்க வழி காண்பதும் அவரது பாடல்களிலே அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. சிலருக்கு உணவு மிதமிஞ்சி இருப்பவர் உண்ண உணவின்றி மடியும் கொடுமை தீர்ந்திட வேண்டும். எல்லோரும் சமம். அண்ணன் தம்பி போல என்ற புத்தி உண்டாகி ஏழை மக்களின் வயிறு பசிக்காமல் செல்வந்தர்கள் காப்பாற்ற வேண்டும். அது முடியாது போனால் நிலத்தைச் சகலருக்கும் பொதுவென்று ராஜ்ஜவிதி ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். என்று ஏழைகளின் வறுமையைப் போக்க வழிகூறுகின்றார்.
“இனியொரு விதி செய்வோம் - அதை
அந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக் குணவிலை யெனில்
யுகத்தினை அழித்திடுவோம்”
என்று ஏழைகளுக்குச் சார்பாக ஆக்ரோசமாகப் பாடுகின்றார். இது பாட்டாளி வர்க்க சமத்துவ கோசமாக அமைகின்றது. பாரதம் ஒப்பில்லாத பொதுவுடமைச் சுமுதாயமாக மலரவேண்டுமென்று அவர் பிரகடனம் செய்கின்றார். சமுதாயத்தின்மீது அவர் கொண்டிருந்த பற்றுதல் பின்வருமாறு.
“நெஞ்சு பொறுக்குதில்லையே இதை
நினைந்து நினைந்திடினும் பொறுக்குதிலையே
கஞ்சி குடிப்பதற்கிலார் அதன்
காரணங்கள் இவையெனும் அறிவுமிலார்...”
என்று அக்கால மக்களின் அவல நிலை கண்டு நெஞ்சம் கொதிப்புறுகின்றார்.
இந்திய சுதந்திரம் மனிதகுல விடுதலையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பாரதி விரும்பினார்.
“மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியும் உண்டோ”
என்று சபதம் இடுகின்றார்.
பாரதி பெறப்படும் சுதந்திரம் அரசியல் சுதந்திரமாக மட்டும் அமையாது சமூக விடுதலையையும் கொண்டதாக அமைய வேண்டும் என்று விரும்பினார். அச்சமும், தளைகளும் இல்லாத ஆத்ம சுதந்திரமான நிலையினையும் அவர் வற்புறுத்தினார்.
“மண்ணுலகத்து மானுடன் தனைக் கட்டிய
தளையெலாம் சிதறுக”
என்று பாடிய அவர்,
“எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே
பொய்யும் ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே”
என்று பிரகடனம் செய்கின்றார்.
ஆசிய எழுச்சியையும் உலக ஒற்றுமையினையும் காண அவர் விரும்பினார். அறிவின் துணை கொண்டும், உணர்வின் வழி கொண்டும் அவர் மனிதனைப் புரட்டிக் கீழே தள்ளும் தளைகளைத் தகர்த்தி மண்ணுலகில் விண்ணுலகை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார்.
பாரதியின் பக்திப் பாடல்களும் மக்கள் நலன் சார்ந்தவையாகவே அமைந்துள்ளன.
“நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ”
என்ற பாடலில் தனது வாழ்வு மக்கள் நலமுடன் வாழ்வதற்குப் பயன்பட வேண்டும் என்று வேண்டுகின்றார். மக்களின் நோயினையும் வறுமையினையும் நீக்குவதற்கான ஆயுதமாக கவிதை அமைய வேண்டும். மனிதர் அனைவரும் ஓர் உள்ளம் எனக்கொண்டு எல்லோரும் பயனுற சந்தோசமாக வாழ்வதற்கான அறநெறியை வெளிப்படுத்தினார்.
மக்கள் மத்தியில் புரையோடிப் போயுள்ள மூடத்தனங்களையும் வேற்றுமைகளையும் சாடி, அவற்றைப் போக்குமாறு கேட்கிறார். சாதிப்பிரிவுகள், சண்டைகள், பண்ணடிமை, மதவேறுபாடு, நிறவேறுபாடு, வர்க்க வேறுபாடு முதலான வேற்றுமைகளைச் சாடும் அவர் அவற்றிலிருந்து விடுபடுமாறு மக்களை வேண்டுகின்றார்.
“வயிற்றிலிருந்து சோறிட வேண்டும் - இந்த
வாழும் மனிதருக்கெல்லாம்
பயிற்றிப் பல கல்வி தந்து...”
என்று ஏழைக்கு உணவிடுவதை வலியுறுத்துவதுடன் எல்லோரையும் உயர்த்துவதற்கான கல்வியறிவை ஊட்ட வேண்டிய அவசியத்தையும் பாடுகின்றார்.
“சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்...”
என்று மானுட நேயத்தை வற்புறுத்துகின்றார். மற்றவரில் அன்பு செலுத்தினால் வேற்றுமை நீங்கும். அது பூமி செழிப்புற வழி சமைக்கும்.
“அறிவை உயர்த்திட வேண்டும்...
அத்தனை பேருக்கும் ஒன்றாய்...
சிறியதை மேம்படச் செய்தால்...”
உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதம் இன்றி அறிவை வளர்ப்பதே மனிதர் மேம்படுத்துவதற்கான வழி என்று கூறுகின்றார். ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் எனச் சிறியவர்களை மேம்படச் செய்தால் தெய்வம் நம்மை வாழ்த்தும் என்று ஒன்றுபட்ட வாழ்வை வற்புறுத்துகிறார்.
இவ்வாறு மக்கள் அனைவரும் சமனானவர்கள். இதை மறுத்த உள் நாட்டுச் சாதிக்கொடுமையையும், மதவிரோதத்தையும், பாலியல் ஏற்றத் தாழ்வையும் கண்டித்தார். மனித சாதி ஒன்றே என்று இடித்துரைத்தார். மனிதன் என்பவன் மேல் கீழ் அற்றவன். மனித ஆத்மா சமமான அன்பு கொள்ளும் போது மட்டுமே மனிதநேயம் மலரும். மக்கள் இன்பமான வாழ்வு வாழ்வர். இதுவே அவரது கவிதைகளில் விரவிக் கிடக்கும் கருத்தாகும்.
உசாத்துணை நூல்கள்
1. சித்திரலேகா, மௌ., 1996, பாரதியின் பெண் விடுதலை, விபுலம் வெளியீடு.
2. நடேஸ்வரன், க., 2013, பாரதியைப் பயில்வோம், தென்மராட்சி இலக்கிய அணி.
3. வேந்தனார், க., 1965, பாரதியார் பாடல்கள், ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை.
4. வேலுப்பிள்ளை, சு., 2007, பாரதியார் பாடல்கள், ஸ்ரீ லங்கா புத்தகசாலை.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர் - சிவராசா ஓசாநிதி, உதவி வரிவுரையாளர், மொழித்துறை, கிழக்குப் பல்ககை;கழகம், இலங்கை.