ஆய்வுச் சுருக்கம் :
தொல்தமிழர் வாழ்வில் மூத்தோர் வழிபாடாக நடுகற் பண்பாடு அமைந்திருக்கின்றது. சங்கப் பனுவல்களின் தொகுப்பு முறையில் காலத்தால் முற்பட்டவையாகிய அகநானூறு புறநானூறு ஆகியவற்றில் பதுக்கை மற்றும் நடுகல் பற்றிய குறிப்புகள் அதிகம் உள்ளன. நடுகற்கள் எவ்வாறு வீரவழிபாடாகவும் சடங்குமுறையாகவும் மாற்றம் பெற்றன என்பதை இனங்காண்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும். பகுப்பாய்வு முறையியலை அடிப்படையாகக் கொண்டு சங்கப் பனுவல்களின் வைப்புமுறையில் இலக்கியங்களைப் பகுப்பாய்வு செய்து அவற்றில் நடுகல் குறித்த பாடல்களைத் தனியே வகையீடு செய்து விபரண முறையியல் அடிப்படையில் இந்த ஆய்வு முன்வைக்கப்பட்டுள்ளது. கடவுள்கோட்பாடுகள் உருவாகுவதற்கு முன்னரே தமக்கு முன்னர் வாழ்ந்து தம்குடிகளைக் காத்து மடிந்த வீரர்களை மூத்தோராகக் கருதித் தலைமுறையாகத் தொடர்ந்த மரபே நடுகல் வழிபாடு என அறிய முடிகிறது. இதுவே பிற்காலத்தில் வழிபாட்டுச் சடங்காகவும் கிராமியத் தெய்வ மரபாகவும் மாற்றமுற்றதெனக் கருதமுடிகிறது.
திறவுச் சொற்கள் : நடுகல், பதுக்கை, தொல்தமிழர் வழிபாடு, சங்கப் பனுவல்கள்
1. அறிமுகம்
தமிழ்ப்பண்பாட்டின் வேர்களை சங்கப்பனுவல்களில் கண்டு கொள்ளமுடியும். எழுத்து வடிவிலான ஆதாரங்களாகிய அவை, தமிழ்த் தொல்குடிகளின் பண்பாட்டை அறிந்துகொள்ள உதவுகின்றன. சங்கப் பனுவல்களினூடாக பலியிடுதல், வெறியாட்டு, நடுகல் ஆகிய தொன்மையான வழிபாட்டு முறைகளையும் அவற்றுக்கூடாக மக்களின் பண்பாட்டையும் கண்டடைய முடிகிறது. அகநானூறு மற்றும் புறநானூற்றுப் பாடல்களில் அதிகமும் நடுகல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அப்பாடல்கள் குறிக்கும் தொல்குடிப்பண்பாட்டை அறிவதன் ஊடாக மூத்தோர் வழிபாடாக நடுகற்கள் அமைக்கப்பட்டன என்ற உண்மையையும் கண்டடைய இயலும்.
2. சங்கப் பனுவல்களில் மூத்தோர் வழிபாடாக நடுகற்கள்
சங்க இலக்கியங்களில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, மலைபடுகடாம், பட்டினப்பாலை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்களில் நடுகல் வழிபாடு மற்றும் பதுக்கைகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அவற்றுள் அகநானூறு (16 பாடல்கள்) மற்றும் புறநானூற்றுப் (12 பாடல்கள்) பாடல்களிலேயே இவை அதிகம் எடுத்தாளப்பட்டிருக்கின்றன. இவ்விரு இலக்கியங்களின்வழி நடுகல் வழிபாடு பற்றி நுண்மையாக நோக்கமுடியும்.
(அ) பதுக்கைகளும் நடுகற்களும்
‘நடுகல்’ என்பது வீரன் இறந்த இடத்திலோ அல்லது வேறு இடத்திலோ அவன் நினைவாக எழுப்பப்படும் நினைவுக்கல் ஆகும். இது வீரக்கல் (Hero Stones) எனவும் அழைக்கப்பட்டது. இவை முதலில் செப்பனிடப்படாத நினைவுக் கற்களாகவும் குத்துக்கற்களாகவும் அமைக்கப்பட்டன. இறந்துபட்டோரின் வீரச்செயல் புடைப்புச் சிற்பமாகப் பொறிக்கப்பட்டனவும் வீரரின் பெயரும் அவர் புகழ்மொழியும் எழுதப்பட்டனவெனவும் குறித்த சங்கப்பனுவல்களால் அறியப்படுகின்றன.
இறந்த வீரரின் உடலை மூடிய கற்குவியல்கள் ‘பதுக்கை’ என அழைக்கப்பட்டன. இவை கல்பதுக்கை, கல்திட்டை என இறந்தோரை மூடிய அல்லது புதைத்த மேடுகளாக அமைக்கப்பட்டிருந்தன. கற்பதுக்கைகள் மற்றும் இலை தழைகளால் மூடிய மேடுகளும் குறிக்கப்படுகின்றன. அதிகமும் பதுக்கையின் மேல் அமைக்கப்பட்ட நடுகல் அல்லது பதுக்கையின் அருகின் அமைக்கப்பட்ட நடுகல் பற்றிய குறிப்புக்களும் உள்ளன. பதுக்கைகள் இல்லாமல் தனியாகவும் நடுகற்கள் அமைக்கப்பட்டன.
கற்பதுக்கைகளுக்கு அருகில் நடுகற்கள் அமைக்கப்பட்டவற்றை “வல் ஆண் பதுக்கைக் கடவுட் பேண்மார் நடுகல் பீலி சூட்டி” (அகம் 35) என்ற பாடலில் கற்குவியலின்மேல் உள்ள நடுகல் தெய்வத்தை வழிபடுவதற்காக அக்கல்லில் மயிற்தோகைகளைச் சூட்டினர் எனவும் “உயர்பதுக்கு இவர்ந்த ததர்கொடி அதிரல் நெடுநிலை நடுகல் நாட்பலிக் கூட்டும்” (அகம் 289) என்ற பாடலில் உடலை மூடிய உயர்ந்த கற்குவியல்களில் காட்டுமல்லிகை ஏறிப் படரும். அம்மல்லிகையின் மலர்கள் கொண்டு நெடிது காலம் நிலைத்து நிற்கும் நடுகல்லாகிய தெய்வத்திற்கு நாட்பலியிட்டு வழிபாடு செய்வர் எனவும், “பரலுடை மருங்கின் பதுக்கை சேர்த்தி” (புறம் 264) என்ற பாடலில் பருக்கைக் கற்களைக் கொண்டு மேடு அமைத்து மரலில் இருந்து எடுத்த நார்கொண்டு சிவந்த பூக்களால் கண்ணியைத் தொடுத்து அழகிய மயிற்பீலியைச் சூட்டிப் பெயரை எழுதி நடுகல்லும் நட்டனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “வெறியாட்டு போன்ற பிறிதொரு சடங்காகக் கல் நட்டு வழிபடும் நடுகல் சடங்கைக் கூறலாம். அகழ்வாய்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ள ‘பதுக்கைகள்’ எனப்படும் கற்படைகள் தமிழகம் முழுவதும் மிகுதியாகக் கிடைத்துள்ளன. ஊரிருக்கைகள் அமைந்த பகுதிகளில் இவ்வகையான நடுகற்கள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. வீரனை நினைவுபடுத்தும் வகையில் கல் நடப்பட்டு வழிபடப்பட்டவை இவை. இதனை நடுகல் என்று அழைக்கிறோம்.” 1 இவற்றினூடாக கற்பதுக்கைகள் அமைக்கப்பட்டு அருகில் நடுகல் நாட்டப்பட்டு வழிபாடியற்றப்பட்ட செய்திகள் தெளிவாகின்றன.
(ஆ) நடுகல் மற்றும் பதுக்கைகள் காணப்படும் இடங்கள்
நடுகற்கள் பெரும்பாலும் ஊரின் எல்லையில் அல்லது ஊரின் ஒதுக்குப் புறத்தில் போர் நடைபெற்ற இடங்களில் அமைக்கப்பட்டன. அகநானூற்றுப் பாலைத்திணைப் பாடல்களில் அதிகமான குறிப்புக்கள் இவை குறித்து உள்ளன. “பெரிய ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் நின்றாங்குப் பெயரும் கானம்” (அகம் 387) என பெரிய முகபடாம் அணிந்த யானை மீது செல்லும் அரசியராயினும் அவ்விடத்தினின்றும் மேலும் செல்ல நினைக்காது திரும்பிச் செல்லும் அச்சம் மிகுந்த பாலைநிலம் எனவும், ஒருமுறை சென்றவர் மீளவும் செல்லத் தயங்கும் நீண்ட சுரவழியில் அந்நடுகற்கள் உள்ளன எனவும், போர் நடந்த பாலைநிலங்களில் வரிசையாக அமைக்கப்பட்ட நடுகற்களின் அருகில் வாள்களும் கேடகங்களும் வைக்கப்பட்டன என்றும் பாலைத்திணைப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.
புறநானூற்றுப் பாடல்களில், போர்நடந்த இடங்கள், ஊரின் எல்லைப்புறங்களுடன் ஏரிக்கரைகளில் ஆற்றங்கரைகளில் காட்டுப்பகுதிகளில் அமைக்கப்பட்ட குறிப்புக்களும் உள்ளன. “இதுவரை தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற நடுகற்கள் பெரும்பாலும் மக்கள் வாழ்கின்ற அல்லது வாழ்ந்ததாக அறியப்படும் ஊருக்கு வெளியில்தான் கண்டறியப்பட்டுள்ளன. ஈமக்காடுகள் உள்ள இடங்களிலும் நடுகற்கள் இருந்துள்ளன. இவை உணர்த்துவது யாதெனில் நடுகற்கள் எடுக்கப்படும் இடங்களை நோக்குகையில் வீரன் மடிந்த போர்க்களமாகவோ அல்லது அவனைப் புதைத்த இடமாகவோதான் அனுமானிக்க முடிகின்றது.” 2 இதனூடாக நடுகற்கள் அதிகமும் ஊருக்கு வெளியேயும் ஊரில் எல்லையிலும் போர் நடைபெற்ற இடங்களிலும் அமைக்கப்பட்டவை தெரியவருகின்றன.
(இ) நடுகல் பற்றிய தொல்காப்பியச் சூத்திரம்
தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே நடுகல் அமைக்கும் வழக்கம் தொல்தமிழர் குடிகளிடம் இருந்ததென்பதும் அது சடங்கு முறையாகப் பேணப்பட்டது என்பதும் தெரியவருகிறது. “நடுகல் என்பதன் நேர்ப்பொருள் நடப்படுகின்ற கல் - வீரக்கல் நினைவுச் சின்னக் குத்துக்கல் என்பனவாகும். இத்தகைய பழக்கங்கள் திடீரென எழுவன அல்ல என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். மேலும் அப்பழக்கங்களிற் சிலகூறுகள் பாடல்களைவிடப் பழமையானவை என்பது முறையானது. தொல்காப்பியம் இதனை கவிதைக்குரிய பாடுபொருளாக மட்டும் காட்டவில்லை. பாடல்கள் முழுமையாகக் காட்டும் ஒரு மெய்ம்மை என்பதனோடு அதனை ஒரு சடங்காகக் காட்டுவதோடு ஆறு நிலைகளை உடையதாக அக்கல் நடுதலை எண்ணுகிறது.” 3
“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்
றிருமூன்று வகையிற் கல்லொடு புணர” 4
இங்கு நடுகல் அமைத்தல் முதல் அதன் வழிபாடு வரை ஆறு படிமுறை உரைக்கப்படுகிறது.
i. காட்சி என்பது ஒரு கல்லினைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் செதுக்குதல்
ii. கால்கோள் என்பது அக்கல்லினை நடுவதற்கு நல்ல நேரம் குறித்தல்
iii. நீர்ப்படை என்பது அக்கல்லை தூயநீர் கொண்டு கழுவுதல்
iv. நடுதல் என்பது அக்கல்லினை எவ்விடத்தில் நிறுவவேண்டும் எனத் தீர்மானித்து நடுதல்
v. பெரும்படை என்பது இறந்துபட்ட வீரனின் சிறப்புக்களை அக்கல்லில் பொறித்தல் மற்றும் அவனின் வீரச்செயல்களைக் குறித்து போற்றி விழா எடுத்தலும் விருந்தும் பிறவும் ஆகும்.
vi. வாழ்த்துதல் என்பது இறந்த வீரனை நடுகல் வழியாக வழிபடுதல்
இவற்றினூடாக தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே நடுகல் வழிபாடு இருந்தது என்பதும் அது சடங்காக மக்களால் தொடர்ந்து பேணப்பட்டதும் அறியப்படுகிறது.
3. நடுகற்கள் அமைத்துப் பாடப்பட்டோரும் நடுகற்களின் அமைப்பும்
அகநானூற்றுப் பாடல்களில் போரில் இறந்த வீரர்களுக்கு பெயரும் பீடும் எழுதி வேல், கேடகம், வைக்கப்பட்ட நடுகற்களும் பின்னர் செம்மறிக்குட்டி பலியிடப்பட்ட செய்திகளும் பதிவாகியுள்ளன.
தழையிட்டு மூடிய கற்குவியல் (அகம் 109)
கற்குவியல் (அகம் 289)
வீரரின் நடுகல் (அகம் 387)
காட்டுயானை ஆள் என உதைத்த நடுகல் (அகம் 365)
மறவர் நடுகல்லில் அம்பு தீட்டுதல் அதனால் நடுகல்லின் எழுத்து பக்கம் தேய்ந்து காணப்படல் (அகம் 297)
உப்புவணிகரின் வண்டில் முனை அழுத்தி சிதைந்த நடுகல் (அகம் 343)
பெயரும் பீடும் எழுதிய நடுகல் (அகம் 179)
பெயரும் பீடும் எழுதிய எழுத்துடை நடுகல் (அகம் 53)
கற்குவியல் கொண்ட பதுக்கையும் நடுகல் முன் வேலும் கேடகமும் வைக்கப்பட்டபட்டவையும் (அகம் 67)
பெயரும் பீடும் எழுதி வேல் கேடகம் வைக்கப்பட்ட நடுகல் (அகம் 131)
நடுகல் தெய்வத்திற்கு மயிற்றோகை, துடிமுழக்குதல், செம்மறிக்குட்டி பலியிட்ட செய்தி குறிப்பிடப்படுதல் (அகம் 35)
ஆகியன அகநானூற்றுச் செய்யுட்களின்வழி அறியப்படும் நடுகல் பற்றிய குறிப்புகளாகும்.
மேற்குறித்த அகநானூற்றுப் பாடல்களில் கற்குவியற் பதுக்கைகளும் பின்னர் பெயரும் பீடும் எழுதி வேல் கேடகம் வைக்கப்பட்ட நடுகற்களும் காணப்பட்டுள்ளன. பலியிடப்பட்ட செய்தியும் வருகிறது. இங்கு படிப்படியான வளர்ச்சி முறை தெரிகிறது. புறநானூற்றுப் பாடல்களில் அரசர்கள், நிலத் தலைவர்கள், போரில் இறந்த வீரர்கள் ஆகியோருக்கு நடுகற்கள் அமைத்து வழிபடப்பட்ட குறிப்புகள் உள்ளன. இவை புறநானூற்றுப் பாடல்களில் ஒரு சடங்கு முறைக்கு மாற்றம் பெறுவதை அவதானிக்கலாம்.
புறநானூற்றுப் பாடல்களில் கோப்பெருஞ்சோழன்மீது நட்புக் கொண்டிருந்த பொத்தியார் பாடிய (புறம் 221, 222, 223) பாடல்களிலும்: அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடிய (புறம் 232) பாடலிலும் நடுகல் வழிபாடு குறிக்கப்படுகிறது. இவை தவிர ஏனைய புறநானூற்றுப் பாடல்களில் அதிகமும் நிரைமீட்கும் போரிலும், அரசனுடன் கூடவே பகைமுடிக்கும் போரிலும் இறந்த வீரர்கள் மீதே அதிகமான பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
ஆநிரை மீட்கவரும் போரில் மாண்டவன் நடுகல். (புறம்.260)
பகை கவர்ந்த ஆநிரை மீட்டுத்தந்த போரில் வீழ்ந்த கரந்தை மறவனின் நடுகல். (புறம்.261)
நிரைமீட்டு உயிர்துறந்த வீரனுக்கு பீலியும் கண்ணியும் சூட்டி கல் நட்டமை. (புறம். 264)
நிரைமீட்டு உயிர் துறந்த வீரனின் கல்லுக்கு மாலைசூட்டுதல். (புறம். 265)
கணவன் பகைமுடித்து வருக என முன்னோரின் நடுகல்லைப் பரவியமை. (புறம் 306)
போருக்குச் சென்ற கணவன் நடுகல் மிகுந்த ஊரை உடையவன் என ஊரின் சிறப்பை பாடுதல். (புறம். 314)
பலியிட்டு நன்னீராட்டி நெய்விளக்கேற்றி நடுகல்லை வழிபடும் சிறப்பை பாடியமை. (புறம். 329)
களிறினை எறிந்து தாமும் வீழ்ந்த மலைநாட்டுத் தலைவனின் நடுகல்லைத் தொழுவோம் என பாடியமை. (புறம். 335)
முதலான புறப்பாடல்களில் நடுகல் குறித்து உரைக்கப்பட்டுள்ளன.
மேற்குறித்த பாடல்களில் கல்நடுதல், நன்னீராட்டுதல், பீலி சூட்டுதல், பலியிடுதல், நெய்விளக்கேற்றுதல், மது படைத்தல், மாலை சூட்டுதல், வணங்குதல் ஆகிய வழிபாட்டு முறை எடுத்துக்காட்டப்படுதல் கவனிக்கத்தக்கது. நடுகல் அமைக்கும்போது இறந்தவர்கள் புழங்கிய பொருட்களையும் இட்டுப் புதைத்தலை (புறம்329, புறம்252, அகம்35) அக்கால மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
தமிழகத்தில் நடுகற்களைப் பற்றி ஆராய்ந்த பேராசிரியர் வெ.கேசவராஜ் 5 அமைக்கப்பட்ட நடுகற்களை; நிரைமீட்டோர் கல், வடக்கிருந்தோர் கல், பத்தினிப் படிமக்கல், கடலுள் மாய்ந்தோர் கல், ஊர்காத்தான் கல், பெண் மீண்டான் கல், அறம் காத்த நடுகல், கழி பேராண்மைக்கல், சாவாரப் பலிக்கல், அடியார் சமாதி, அரசர் பள்ளிப்படை, புலி குத்திக்கல், பன்றிகுத்திக் கல், குதிரை குத்திக்கல், எழுது பொருதார் கல், மாடு பொறித்த கல், யானைப்போர் நடுகல், நாய்க்கு நடுகல் ஆகியனவாக வகைப்படுத்தியுள்ளார். இவற்றுள் சங்ககாலப் பிற்பகுதியில் மீட்கப்பட்ட நடுகற்களும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன.
4. முன்னோரைப் போற்றுதல்
தொல்தமிழர் மரபில் நடுகற்கள் வீரக்கற்களாகப் போற்றப்பட்டிருக்கின்றன. போரில் மரணமடைந்தவர்கள் தம் குடிகளைக் காக்க வந்தவர்களாகவும் அவர்கள் தம்மைக் காவல் செய்கிறார்கள் என்பதனையும் மக்கள் நம்பினர். அதனாலேயே வழிவழியாக வந்த நம்பிக்கையின் அடிப்படையில் நடுகற்கள் பின்னர் வணக்கத்துக்குரியனவாகப் போற்றப்பட்டிருக்கின்றன. இவை தமக்கு முன்னோரை தெய்வமாகப் போற்றி வழிபடும் மரபை எமக்குக் காட்டுகின்றன.
“ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்ததெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே” 6
என்ற மாங்குடி மருதனாரின் புறநானூற்றுப் பாடல் களிற்றை வென்று தாமும் வீழ்ந்து நடுகல்லாயினவரின் நடுகல்லைத் தொழுவதன்றி நெல்லும் பூவும் சொரிந்து வழிபடச் சிறந்த கடவுளும் வேறு இல்லை என்று குறிப்பிடுகிறது. இதனூடாக களிறு எறிந்து பட்டோருக்கு நடுகல் அமைத்து அவனையே தெய்வமாக வணங்கும் வீரவழிபாடு எடுத்துக்காட்டப்படுகிறது.
“நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது
விருந்து எதிர் பெறுகதில் யானே” 7
என்ற இப்புறப்பாடல் களிறுகள் பொருது சிதைந்த முள்செடியாலாகிய வேலியும் மக்கள் அரிதாகவே வந்து உண்ணும் நீர்நிலையும் உடைய சிறிய ஊரிலே வாழ்ந்த மறக்குலப் பெண் தன் கணவன் பகைமுடித்து வருக என நடுகல்லை வேண்டுகிறாள். இப்பாடல் நடுகல்லை வழிபாடு செய்யும் ஒரு பெண்ணைக் கண்டோர் கூற்றாக அமைந்துள்ளது. “தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை 300ற்கும் மேற்பட்ட நடுகற்களை வடார்க்காடு, தர்மபுரி மாவட்டங்களில் கண்டு பிடித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான நடுகற்கள் இன்றும் வழிபாட்டில் உள்ளன. மக்கள் இந்நடுகற்களை கடவுளாக வழிபட்டு வருகின்றனர். இவற்றிற்கு ஆண்டுதோறும் சிறந்த வழிபாடுகள், விழாக்கள் நடத்தப்படுகின்றன. இவற்றின் முன்னர் இரும்பாலான சூலமும் கத்தியும் இன்றும் நட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கும் எண்ணெய் பூசி, மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.” 8
5. தொடரும் வழிபாட்டு மரபு
பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை, கமில் சுவலபில், வ. அய். சுப்பிரமணியன் ஆகியோர் சங்கப்பிரதிகளை காலநிரற்படுத்தியதுபோது பேராசிரியர் வீ. அரசு அவர்களும் சடங்கு சார்ந்த தொகையாக்கத்தில் சங்கப் பிரதிகளை காலநிரற்;படுத்துகையில் நான்கு வகையான எல்லைப்பாடுகளை வகுக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றை முதற்தொகுதியாகக் கொண்டு அவற்றின் காலத்தை கி.மு 550 என்ற மேல் எல்லையைக் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். ஆற்றுப்படை நூல்களை (திருமுருகாற்றுப்படை தவிர்ந்த) இரண்டாவதாகவும் கலித்தொகையை மூன்றாவதாகவும் பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையை நான்காவதாகவும் வகைப்படுத்துகிறார். இவற்றில் “முதற்தொகுதியில் இச்சடங்கு மிகுதியாக இடம்பெற்றிருப்பதும் படிப்படியாக அடுத்தடுத்த தொகுதிகளில் இச்சடங்கு குறைவாக இடம்பெறும் தன்மையை அடிப்படையாகக் கொண்டு முதல் தொகுதியில் அமைந்த சங்கப் பிரதிகளைக் காலநிரலில் பழமைமிக்கனவாகக் கருத இயலும். நடுகல் மரபும் தொல்பழங்குடிச் சமூக அமைப்பின் அடையாளத்தைக் கொண்டது. இச்சடங்கு தொல்பழம் பிரதிகளில் இடம்பெற்று படிப்படியாக வைதீகப் பிரதிகளில் மிகக் குறைந்து போயிருப்பதைக் காண்கிறோம். எனவே, தொல்பழஞ்சடங்கைக் கொண்டிருக்கும் பிரதி பழம்பிரதியாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். நடுகற்களில் காணப்படும் பிராமி எழுத்துக்கள் தமிழின் தொன்மையான எழுத்து வடிவம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கி.மு 550 அளவில் நடப்பட்ட நடுகல் கிடைத்துள்ளது. இதில் பிராமி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம் தொல் பழம் தமிழ் எழுத்தின் தரவாக அமையும் நடுகற்கள் சங்க இலக்கியத்தில் பேசப்படுவதன் மூலம் அதன் பழமையை அறிய முடியும்.” 9
இவற்றினூடாக சங்கப்பனுவல்களை காலநிரற்படுத்தும்போது முதலில் வைக்கப்பட்டுள்ள அகநானூறு புறநானூறு ஆகியவற்றில் நடுகல் பற்றிய குறிப்புகள் அதிகம் வந்துள்ளமையும் ஏனைய பிரதிகளில் (நற்றிணை-1, குறுந்தொகை-2, ஐங்குநுறூறு-2, மலைபடுகடாம்-1, பட்டினப்பாலை -1, பரிபாடல் -1, திருமுருகாற்றுப்படை-1) மிகக் குறைந்த பதிவுகளே வந்துள்ளன என்ற உண்மையினையும் கண்டு கொள்ளமுடியும்.
அகநானூற்றுப் பாடல்களில் கற்குவியற் பதுக்கைகளும் நடுகற்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை “எழுத்துடை நடுகற்கள்” என்ற செய்திகளும் கிடைக்கப்பெறுவதோடு அவற்றுக்கு அருகில் வேல், கேடகம் வைக்கப்பட்ட செய்திகளும் உள்ளன. சில பாடல்களில் நடுகற்களின் முன் பலியிடப்பட்ட செய்தி வருகிறது. ஆனால் புறநானூற்றில் வழிபாடு இயற்றும் குறிப்புக்கள அதிகமாக உள்ளன. இங்கு நடுகற்கள் ஒரு சடங்கு முறையாகவும் வழிபாட்டுக்கு உரியதாகவும் மாற்றமடைவதை அவதானிக்கலாம்.
நடுகற்களை வணங்குவதால் மழை வளம் பெருகும், நாடு சிறப்புறும், பயிர்வளம் சிறக்கும், போருக்குச் சென்ற நிலத்தலைவர்களும் வீரர்களும் வெற்றி பெற்று மீள்வார்கள், மக்கள் பாதுகாக்கப்பட்டு சிறப்பெய்துவார்கள், நோய் முதலியவற்றிலிருந்து விடுபடுவார்கள் முதலான நம்பிக்கைகள் இவற்றினூடாக வெளிப்படுத்தப்படுகின்றன. இதனாலேயே “வேள்வி நடாத்தி மடை கொடுத்துச் சிறு தெய்வங்களை வழிபடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது எண்ணத்தக்கது. ஐயனார், மதுரைவீரன், இருளன், கறுப்பன், நொண்டி முதலியன நடுகல் தெய்வங்களை ஒத்தனவாயுள்ளன.” 10 என சு. வித்தியானந்தன் அவர்கள் நடுகல் வழிபாடு, கிராமிய தெய்வ வழிபாடாக மாறியமை குறித்து எழுதுகிறார். இதனாலேயே முன்னோரை வழிபடும் மரபாக நடுகற்கள் அமைந்துள்ளன என்ற முடிவுக்கு வரமுடிகிறது.
“வீரக்கற்களை நிறுவுவது என்பது அக்காலச்சமூகத்தின் இறப்புச் சடங்கோடு தொடர்புடைய நம்பிக்கைகள் பழக்கங்களின் ஒரு கூறாகும். இந்த பழக்கமும் இதனை ஒட்டிய நம்பிக்கையும் தென்னிந்தியாவில் கி.மு முதலாயிரம் ஆண்டுகளின் பிற்பாதியில் நிலவிய இரும்புக்காலப் பெருங்கற் புதைவுப் பழக்கத்தின் ஒரு பகுதியாகும். இதன் இறுதிச் சடங்கு எச்சங்கள் நாடு முழுவதும் காணப்படுகின்றன. மேலும் இந்தப் பழக்கத்தோடு இறந்த முன்னோரை வழிபடும் மரபும் முற்பட நிலவிப் பின் இதனோடு கலந்திருந்ததாகக் கருதப்படுகிறது.” 11 இறந்தவர்களின் நினைவும் அவர்களை நடுகற்களாக அமைத்து வழிபடுவதால் தமக்கு அவை ஆற்றலை வழங்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் இவற்றை வணங்கியிருக்கின்றனர்.
6. முடிவுரை
சங்கப்பனுவல்களில் அகநானூறு புறநானூறு ஆகியவற்றின்வழி நடுகற்பண்பாடு இருந்துள்ளது என்பதும் அவை நாடுகாக்கும் போரிலும் நிரைமீட்கும் போரிலும் தம் குடிகளைக் காக்கும் ஏனைய வழிகளிலும் தம்முயிரைக் கொடுத்து மாண்ட வீரர்களை நினைக்கும் வகையில் அமைக்கப்பட்டவை என்பது எழுத்துக்களின் வழியிலான ஆதாரங்களின் ஊடாக அறியப்படுகின்றன. உயிர்நீத்த வீரர்களுக்கு கல்நட்டு வழிபாடு இயற்றும் வழக்கம் அதிகமும் தொல்குடிகளின் பண்பாட்டில் நிகழ்ந்துள்ளன. இது தொடர்ச்சியாக ஒரு சடங்குமுறையாகப் பேணப்பட்டு வந்துள்ளது. மூத்தோரை வழிபடும் இந்நடுகற் பண்பாடே பிற்காலத்தில் நாட்டுப்புறத் தெய்வ வழிபாடாக நிலைபெற்று வளர்ந்திருக்கின்றது. இதனூடாக தமிழரின் வழிபாட்டு மரபு என்பது நடுகற்களின் வழியாகவே பேணப்பட்டு வந்துள்ளது என்பது சங்கப்பிரதிகளின்வழி தெளிவாகப் பதிவாகியுள்ளன. இவற்றை அறிவியல் பூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் தொல்பொருள் ஆய்வுகளின் ஊடாகக் கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களும் அண்மைய கீழடி ஆய்வுகளிற் கிடைத்த பழந்தமிழரின் புழங்கு பொருட்களும் மேலும் உறுதிப்படுத்துகின்றன. இவற்றின்வழி தமிழரின் வழிபாடு மரபின் வேர்களைக் கண்டடைய முடியும் என்று கருத இடமுண்டு.
அடிக்குறிப்புகள்
1. அரசு, வீ., (2009), சங்க நூல்களில் இடம்பெற்றிருக்கும் சடங்குகள் சார்ந்த தொகையாக்கம், புதிய பனுவல், சர்வதேசத் தமிழியல் ஆய்விதழ், இதழ் 3, ப.6
2. பிரபு, ஆ., நடுகல் வழிபாடும் தமிழர் நம்பிக்கையும், https://ourjaffna.com/tradition/
3. கைலாசபதி, க., (2006), தமிழ் வீரநிலைக் கவிதை, குமரன் புத்தக இல்லம், சென்னை,ப.325
4. தொல்காப்பியம், புறத்திணையியல், (2007), கணேசையர் பதிப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, நூற்பா 60:19-22
5. கேசவராஜ், வே., (2008), தென்னிந்திய நடுகற்கள், காவ்யா, சென்னை.
6. புறநானூறு, 335:10-12
7. மேலது, 306:4-5
8. அர்த்தநாரீசுவரன்,பெ., (1996), கல்வெட்டுவழிப் பண்பாட்டியல், கொங்குவேள் பதிப்பகம், சென்னை. ப.8
9. அரசு, வீ., மேலது 1, ப.6-7
10. வித்தியானந்தன், சு., (1971), தமிழர் சால்பு, பாரி புத்தகப் பண்ணை, சென்னை. ப.125
11. கைலாசபதி, க., (2006), மு.கு.நூல், 325-326
உசாத்துணை
1. அகநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2004.
2. புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2004.
3. சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும், சிவத்தம்பி, கா., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2009.
4. பண்டைத் தமிழ்ப் பனுவல்கள், சதீஸ்.கோ., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2016
5. தமிழ் வீரநிலைக் கவிதை, கைலாசபதி, க., குமரன் புத்தக இல்லம், சென்னை, 2006.
6. தொல்லியல் சுவடுகள், 2011, வேதாசலம், வெ., டெக்லா, ச.,(பதி.ஆ) நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2011.
7. வீர வழிபாடு, https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0577.html
(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் முதலாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாட்டில் 11 ஜனவரி 2020 இல் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. மாநாட்டு மலர் பக். 153-160)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.