முனைவர் விஜயராஜேஸ்வரி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம். -தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் ”இரண்டாம் வேற்றுமை” என்று செயப்படுபொருள் வேற்றுமை கூறப்படுகின்றது. ”செயல் படுகின்ற பொருள்” என்பார் முனை. அகத்தியலிங்கம். செயப்படுபொருள் என்பது வினைக்குத் தகுந்தபடி மாறுகின்ற ஒன்று. எனவே  செயப்படுபொருளை வரையறுப்பது கடினம் எனபார் முனை. கு.பரமசிவம். (இக்காலத்தமிழ் மரபு, 1983, பக் - 138). 

தமிழிலும் மலையாளத்திலும் செயப்படுபொருளை ஏற்கும் சொற்களாக இருப்பவை  பெயர்களும், பதிலிடு பெயர்களும் ஆகும். எனவே இதன் உருபுகள் பெயரிலும் பதிலிடு பெயரிலும் அமையும் என்பது இதனால் பெறப்படுகின்றது.

ஆங்கில மொழியில் சொல்வரிசைமூலம் செயப்படுபொருள் குறிக்கப்படுகின்றது. (Dr.K.M.George, Malayalam Grammar and Reader, 1983, page -77). ஆனால் தமிழிலும் மலையாளத்திலும் பெயர்ச்சொற்களில் குறிப்பிடப்படும் அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தி செயப்படுபொருள் சுட்டப்படுகின்றது. அதனால் தமிழிலும் மலையாளத்திலும் சொல்வரிசைக் கட்டுப்பாடு இல்லை.

தமிழில் செயப்படுபொருள் வேற்றுமை உருபு ”ஐ”.
”ஐ” யெனப் பெயரிய வேற்றுமைக்கிளவி என்பது தொல்காப்பியம். (தொல்.சொல்.555).
நன்னூலாரோ இரண்டாவனதனுருபு ”ஐ” யே என்பார். (நன்னூல் 299).

தமிழில் செயப்படுபொருளை உணர்த்தும் உருபாக ”ஐ” மட்டுமே உள்ளது. மலையாளத்தில் இவ்வுருபு “எ” ஆகும்.

“ப்ரதிக்ராகிக கர்மம் எ” என்று இரண்டாம் வேற்றுமையின் பெயர் ப்ரதிக்ராகிக; அதன் வேற்றுமை உருபு “எ” என்கிறது கேரளபாணினியம்.       ( கேரளபாணினியம், நாமாதிகாரம், விபக்திபிரகரணம், காரிகை 55, பக்- 169).

சான்று:
தமிழ்                    மலையாளம்
கண்ணன் + ஐ = கண்ணனை    கண்ணன்+ எ= கண்ணனெ
மரங்கள் + ஐ = மரங்களை    மரங்ஙள் + எ= மரங்ஙளெ
சீதை + ஐ = சீதையை        சீத + எ = சீதயெ

செயப்படுபொருள் வேற்றுமையின் பணி
”செயப்படுபொருள் குன்றா வினையுள்ள ஒரு தொடரில் செயப்படுபொருள் இது என்று காட்டுவதே செயப்படுபொருள் வேற்றுமையின் பணி” என்பார் தாமசு லேமன். ( A Grammar of Modern Tamil, 1989, page-27).

இன் சாரியை
தமிழில் பெயர்கள் ”ஐ” உருபினை ஏற்கும்போது ”இன்” சாரியை பெரும்பாலும் விருப்பத்தேர்வாகவே (Optional) அமைகின்றது. ஆனால் மலையாளத்தில் பெரும்பாலும் அது கட்டாயச்சாரியையாகவே (Obligatory) அமைகின்றது.

சான்று:
தமிழ்                    மலையாளம்
ஆண்+ஐ=ஆணை                      ஆண்+எ=ஆணினெ
கண்+ஐ=கண்ணை                 கண்+எ=கண்ணினெ 
வீடு+ஐ=வீட்டினை/வீட்டை             வீடு+எ=வீட்டினெ
குயில்+ஐ=குயிலினை/குயிலை        குயில்+எ=குயிலினெ
பாம்பு+ஐ=பாம்பினை/பாம்பை         பாம்பு+எ=பாம்பினெ

தமிழ் – மலையாளச் செயப்படுபொருள் வேற்றுமைகள் 
இனி, கீழ்வரும் தமிழ் மலையாள வேற்றுமைத்தொடர்களைக் காண்போம்.
தமிழ்          மணி ஒரு மாடு / மாட்டை வாங்கினான்
மலையாளம்        மணி ஒரு பசுவினெ வாங்ஙி.
தமிழ்            இராதை அம்மாவை அழைத்தாள்                     மலையாளம்        ராத அம்மயெ விளிச்சு
தமிழ்            நான் பழம் / பழத்தைப் பறித்தேன்.
மலையாளம்        ஞான் பழம் பறிச்சு

தொடர் ஒன்றில் செயப்படுபொருளைச்சுட்டும் உருபு தொடரில் பெயருடன் எல்லாச்சூழல்களிலும் அமைந்து காணப்படுவதில்லை. தமிழிலும் மலையாளத்திலும் இதே நிலையினைக் காணமுடிகிறது. இவை தற்காலத்தமிழ் மொழியில் எந்தெந்த இடங்களில் வருகின்றன, ஏன் வருகின்றன என்று தமிழ் இலக்கணவியலாளர்கள் கூறும் கருத்துப்படி ஆராயப்பட்டு அக்குறிப்பிட்ட தமிழ்த்தொடர்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அங்கு செயப்படுபொருள் வேற்றுமை உருபுக்கு  ஏற்படும் மாற்றங்கள், உருபு கட்டாயமாக வெளிப்படும் இடங்கள், கட்டாயமாக வெளிப்படாதிருக்கும் இடங்கள், விருப்பத்தேர்வாக வெளிப்படும் இடங்கள், இருமொழிகளிலும் இந்நிலையில் காணப்படும் வேறுபாடுகள் ஆகியவை இங்கு கண்டறியப்படுகின்றன. இக்காலத்தமிழ் மொழியில் வழங்கும் செயப்படுபொருள் வேற்றுமையினைக் குறித்து அறிவதற்கு முனை. தாமசு லேமன், முனை. கு.பரமசிவம்,  முனை.அகத்தியலிங்கம் போன்றவர்களின் நூல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. தற்கால மலையாள மொழியில் வழக்கிலுள்ள செயப்படுபொருள் வேற்றுமையின் பயன்பாடுகளைக் குறித்து அறிவதற்கு முனை.ஆர்.இ.ஆசர் மற்றும் குமாரி, (Malayalam, 1997), முனை .கே.எம்.ஜார்ஜ்  (Malayalam Grammar and Reader), போன்றோரின் நூல்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 

செயப்படுபொருள் வேற்றுமை-தமிழ்
தமிழில் உயர்திணை, அஃறிணை இரண்டிலும் குறிப்பிட்ட ஒன்றையோ ஒருவரையோ சுட்டும் பெயர்கள் ”ஐ” உருபைப்பெற்றே வருமென்றும், அவ்வாறு சுட்டாத பெயர்கள் அவ்வுருபைப்பெறாமல் வருமென்றும் முனை.கு.பரமசிவம் கூறுகின்றார். (இக்காலத்தமிழ் மரபு, 1983, பக் -139).

செயப்படுபொருள் குன்றா வினையொன்றில் செயப்படுபொருள் குறிப்பிட்டுச்சுட்டப்பட்டால் “ஐ” வேற்றுமை உருபு கட்டாயம் இடம்பெறும் (Obligatory)  என்றும், செயப்படுபொருள் குறிப்பாகச் சுட்டப்படுவதாக இருந்தால்,

1.அவ்வுருபேற்கும் பெயர் சிறப்புப்பெயராக இருக்கும்
2.உடைமைப் பதிலிடுபெயர்களைப் பெற்று வரும்
3.சுட்டுப்பெயரடைகளை ஏற்று வரும் என்று தாமசு லேமன் கூறுகின்றார். ( A Grammar of Modern Tamil, 1989, page-27).   

செயப்படுபொருள் வேற்றுமை - மலையாளம்
மலையாளத்தில் உயர்திணைப்பெயர்களுடனும் (Human), பெரும்பாலான அஃறிணை உயிருடைப்பெயர்களுடனும், கடவுள்களின் பெயர்களுடனும் செயப்படுபொருள் உருபு கட்டாயம் இடம்பெறும். அஃறிணை உயிரற்ற பொருட்களின் பெயர்களுடன்   மலையாளச் செயப்படுபொருள் வேற்றுமை உருபு “எ” இடம்பெறுவதில்லை. ( R.E.Asher and Kumari, Malayalam, 1997, பக் - 202).

செயப்படுபொருள் வேற்றுமைத்தொடர்கள் - மொழிபெயர்ப்புகள்
தமிழ், மலையாள மொழிகளில் இலக்கணிகள் கூறியுள்ள செயப்படுபொருள் வேற்றுமையினைத் தாங்கியுள்ள தொடர்கள்  மொழிபெயர்க்கப்பட்டு அவற்றிடையே நிலவும் வேறுபாடுகள் கீழே கண்டறியப்படுகின்றன.

உயர்திணைப் பெயருடன் செயப்படுபொருள் வேற்றுமை
சான்று:
தமிழ்        (1) குமார் கமலாவைக் காதலிக்கிறான்
மலையாளம்      (2) குமார் கமலயெ ஸ்னேகிக்குன்னு
தமிழில் ”கமலாவை” எனச்சுட்டிக்கூறப்படுவதால் செயப்படுபொருள் வேற்றுமை “ஐ” உருபு அப்பெயரில் இடம்பெறுகிறது என்கிறார் தாமசு லேமன். மலையாளத்தில் உயர்திணைப்பெயர்கள் அனைத்துமே இவ்வேற்றுமையான “எ” வினைப் பெற்றே வரும் என்கிறார் ஆசர். 

சிறப்புப்பெயருடன் செயப்படுபொருள் வேற்றுமை
“சிறப்புப்பெயர்கள் எல்லாம் தனித்தனியே ஒவ்வொருவரைக் குறிப்பன. ஆதலால் அவை “ஐ” உருபினைப்பெற்றே வரும் என்பார் கு.பரமசிவம்.

சான்று:
தமிழ்      (3) இராமன் சீதையை நோக்கினான்
மலையாளம்    (4) இராமன் சீதையெ நோக்கி.

உடைமைப்பதிலிடு பெயருடன் செயப்படுபொருள் வேற்றுமை
சான்று:
தமிழ்        (5) நான் என் சாவியைத் தொலைத்தேன்
மலையாளம்    (6) ஞான் தாக்கோலு களஞ்ஞு.

இங்கு ”சாவி” என்ற உயிரற்ற அஃறிணைப்பெயருடன் “ஐ” உருபு வருவதற்கான காரணம் அது ”என்” என்ற உடைமைப்பதிலிடுபெயரால் சுட்டப்படுவதால்தான் என்கிறார் தாமசு லேமன். ஆனால் மலையாளத்தில் ”சாவி” என்ற சொல்லுக்கு இணையான “தாக்கோல்” என்ற அஃறிணை, உயிரற்ற பொருட்பெயர்களுடன் செயப்படுபொருள் வேற்றுமை உருபு இடம் பெறாது என்பார் முனை. கே.எம் ஜார்ஜ் மற்றும் ஆசர் போன்றோர். எனவே தமிழில் இவ்விடம் செயப்படுபொருள் அமையும். மலையாளத்தில் அமையாது. எனவே இது இருமொழிகளிலும் செயப்படுபொருள் வேற்றுமை ஏற்கும் பெயரில் அமைப்பு அடிப்டையில் காணப்படும் வேறுபாடாகக்   கொள்ளப்படுகிறது.
சுட்டுப்பெயரடையுடன் செயப்படுபொருள் வேற்றுமை

சான்று:
தமிழ்        (7) இந்தப் புத்தகத்தைக் கொடுங்கள்
மலையாளம்    (8) ஈ புஸ்தகம் (எனிக்கு) தரூ

தமிழில் ”புத்தகம்” என்ற அஃறிணை உயிரற்ற பொருட்பெயரின் முன்  ”இந்த” என்ற சுட்டுப்பெயரடை அமைந்து அப்பெயரைச்சுட்டிக்காட்டுவதால் “ஐ” உருபு கட்டாயம் இடம்பெறுகிறது. ஆனால் மலையாளத்தில் அதே பெயர் “ஈ” என்ற (ஈ=இந்த) சுட்டுப்பெயரால் சுட்டிக்காட்டப்பட்டாலும் கூட அஃறிணை உயிரற்ற பொருட்பெயராதலால் அப்பெயர் செயப்படுபொருள் வேற்றுமை உருபு “எ” யினை எடுப்பதில்லை. 

செயப்படுபொருள் வேற்றுமை உருபு பெயரைச் சுட்டுதல்
தமிழில் பெயருடன் செயப்படுபொருள் வேற்றுமை “ஐ” மட்டும் இணைந்தாலும் அது பெயரைக் குறிப்பிட்டுக்காட்டும்.
சான்று:
தமிழ்             (9)  குமார் இட்லியைச் சாப்பிட்டான்
மலையாளம்     (10) குமார் இட்லி யாணு கழிச்சது

மேற்காணும் தொடர் (9) ல் , தமிழில் ”ஐ” உருபு பெயருடன் இணைந்து அப்பெயரினைச் சுட்டி/குறிப்பிட்டுக்காட்டும். எனவே “ஐ” உருபு அங்கே கட்டாயம் இடம்பெறுகிறது. அதே பெயர் மலையாளத்தில் வரும்போது அம்மொழியின் விதிக்கு ஏற்ப அவ்வுருபு அங்கே இடம்பெறவில்லை. அதனால் தமிழில் அவ்வுருபினால் வெளிப்படுத்தப்படும் சுட்டிக்காட்டும் தன்மை மலையாளத்தில் இல்லையென்று சொல்லிவிடமுடியாது. அப்பண்பு அங்கு செயப்படுபொருள் உருபினால் அல்லாது ”ஆணு” எனும் சொல்லால் வெளிப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் “எ” எனும் செயப்படு பொருள் வேற்றுமை உருபு ”இட்லி” எனும் அஃறிணை உயிரற்ற பொருட்பெயருடன் கட்டாயமாக நீக்கப்படுவதனைக் காணலாம்.

அஃறிணைப்பொதுப்பெயரும் செயப்படுபொருள் வேற்றுமையும்

தமிழில் அஃறிணைப்பொதுப்பெயர் ஒன்றுடன் அப்பெயரைச் சுட்டிக்காட்ட வரும் சொற்கள் எதுவும் இடம்பெறாமலும், “ஐ” உருபும் இடம்பெறாமலும் வந்தால் அச்சொல் குறிப்பிட்டுச்சொல்லப்படவில்லை என்று தெளிகிறோம்.

சான்று:
தமிழ்          (11)  குமார் இட்லி சாப்பிட்டான்
மலையாளம்  (12) குமார் இட்லி கழிச்சு
இங்கு, தமிழில் (11) இட்லி பொதுவாகக்குறிக்கப்படுகின்றது. அதனால் “ஐ” உருபு இடம்பெறவில்லை. மலையாளத்தில் “எ” உருபு இல்லாததன் காரணம் இட்லி எனும் சொல் பொதுவாகக் கூறப்படுவதால் அல்ல; அச்சொல் அஃறிணை உயிரற்ற பொருளாக இருப்பதே காரணம் ஆகும். ஆகவே மேற்காட்டப்பட்ட தமிழ், மலையாளத்தொடர்களில்  (11) மற்றும் (12) இருவேறு காரணங்களால் செயப்படுபொருள் வேற்றுமை உருபு இடம்பெறவில்லை. எனவே அவை எழுவாய் வேற்றுமை போல் அமைகின்றன.

 

அஃறிணைப்பொதுப்பெயர்கள் குறிப்பிட்டுக் கூறப்படாமல் பொதுவாகக் கூறப்பட்டால் அப்பெயர்கள் “ஐ” உருபற்று எழுவாய் வேற்றுமையில் அமைகின்றன.

சான்று:
தமிழ்             (13) அவன் தண்ணீர் கேட்டான்
மலையாளம்     (14) அவன் வெள்ளம் சோதிச்சு
தமிழ்            (15) அவன் பணம் கேட்டான்
மலையாளம்        (16) அவன் பணம் சோதிச்சு
மேற்கூறப்பட்ட தொடர்களில் தமிழில், பெயர்கள் பொதுவாகக்கூறப்பட்டதால் ”ஐ” உருபினை அவை ஏற்கவில்லை. மலையாளத்தொடர்களோ அஃறிணை உயிரற்ற பொருட்பெயர்களாதலால் “எ” உருபினை அவை ஏற்கவில்லை. 

அஃறிணைப்பெயர்கள் பொதுவாகக் கூறப்பட்டு; பொதுமையைக் குறிக்கும் சொற்களுடனும் வந்தால் செயப்படுபொருள் வேற்றுமை உருபு தமிழில் விருப்பத்தேர்வாக அமையும்.
சான்று:
தமிழ்        (17) குமார் ஒரு பெட்டியை வாங்கினான்
மலையாளம்    (18) குமார் ஒரு பெட்டி வாங்ஙி
தமிழ்        (19) குமார் ஒரு பெட்டி வாங்கினான்
மலையாளம்    (20) குமார் ஒரு பெட்டி வாங்ஙி

இவ்விடம், மலையாளத்தில் “ஒரு” என்ற பொதுமைப்படுத்தும் சொல், அஃறிணைப்பெயரில் “எ” உருபேற்பதில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துவது இல்லை. இங்கே தமிழில் ”பெட்டியை” என்று வந்தாலும், மலையாளத்தில் ”பெட்டியெ” என்று வரவில்லை. மாறாக தமிழில் “பெட்டி” என்று வந்தாலும் மலையாளத்தில் ”பெட்டியெ” என்று வரவில்லை. அப்படி வந்தால் அது மலையாளத்தின் தவறான வழக்கு ஆகும். இங்கு மலையாளத்தில் “பெட்டி” என்று மட்டுமே வரும்.

உயர்திணைப்பெயர்கள் பொதுவாகக்கூறப்படுதல்
தமிழில் உயர்திணைப்பெயர்கள் பொதுவாகக்கூறப்பட்டால் “ஐ” உருபு கட்டாயம் இடம் பெறும் என்பது தமிழின் விதியாகக்கூறுவார் தாமசு லேமன்.
சான்று:
தமிழ்        (21) குமார் ஒரு பையனைப் பார்த்தான்
மலையாளம்    (22) குமார் ஒரு பையனெக் கண்டு.

இங்கு தமிழில் ”ஒரு” எனும் பொதுமைப்படுத்தும் சொல் உயர்திணைப்பெயருக்கு முன் இடம்பெற்று அப்பெயரைப் பொதுவாகக் காட்டியது. அதனால் அப்பெயர் “ஐ” உருபினை ஏற்றது. மலையாளத்திலும் அதன் செயப்படுபொருள் உருபு ”எ” இடம்பெற்றது. ஆனால் அதற்கான காரணம் தமிழுக்கான காரணம் போல் அல்ல. மாறாக, உயர்திணைப் பெயர்கள் அனைத்துமே “எ” உருபு பெறும் என்பது அம்மொழி பின்பற்றும் விதியாகும். எனவே இவ்விடம் “ஒரு” என்ற பொதுமைப்படுத்தும் சொல் இடம் பெற்றாலும் பெறாவிட்டாலும் அப்பெயருடன் “எ” உருபு இடம்பெறும்.

[பையனை=பையனெ]

இதுகாறும் தாமசு லேமன் அவர்களின் தற்காலத்தமிழில் “ஐ” வேற்றுமை குறித்த கருத்துக்கள் மலையாள செயப்படுபொருள் வேற்றுமை குறித்த கருத்துக்களோடு ஒப்பிடப்பெற்று தற்காலத் தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் செயப்படுபொருள் வேற்றுமையும் , அதன் உருபுகளின் வருகை குறித்த ஒற்றுமைகளும்   வேற்றுமைகளும்   காணப்பட்டன.

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இடம்பெறும் செயப்படுபொருள் வேற்றுமைகள் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்பட்டன. இவ்வாய்வின் மூலம்  இருமொழிகளிலும் செயப்படுபொருள் வழங்கப்படுகின்ற முறைகள் அறியப்பட்டன.  இத்தகைய இரு மொழி இலக்கண ஆய்வு தற்கால கணினி வழி மொழிபெயர்ப்பு ஆய்வுகளுக்கு மிகவும் பயன்படும்.

பயன்பட்ட நூற்கள்
1.தொல்காப்பியம் – சொல்லதிகாரம் – சேனாவரையர் உரை.
2.நன்னூல் – காண்டிகையுரை.
3.R.E.Asher and Kumari, Malayalam.
4.Thomas Lehmann,A Grammar of Modern Tamil.
5.முனை.கு.பரமசிவம், இக்காலத்தமிழ் மரபு.
6.ஏ.ஆர்.இராஜ இராஜ வர்மா,கேரளபாணினியம்,நாமாதிகாரம்,விபக்திபிரகரணம்
7.Dr.K.M.George, Malayalam Grammar and Reader.
8.K.N.Ezhuthaccan, The History of The Grammatical Theories in Malayalam.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*கட்டுரையாளர் - முனைவர் விஜயராஜேஸ்வரி, விரிவுரையாளர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம். -


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R