பொதுவாக இன்றைய சமுதாயம் இரு வேறுபட்ட இனங்கள் அல்லது பல்வேறுபட்ட இனங்கள் இணைந்து வாழும் சமுதாயமாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக இந்தியாவை எடுத்து நோக்குகின்ற பொழுது நூற்றுக் கணக்கான இனங்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் பல இனங்கள் வாழ்வதைக் காணக்கூடியதாக உள்ளது. தமிழ் நாட்டிலே தமிழர்களோடு கேரள மாநிலத்தவர்கள், கர்நாடக மாநிலத்தவர்கள், ஆந்திர மாநிலத்தவர்கள் போன்ற பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். இலங்கையிலே சிங்கள இனம் பெரும்பான்மை இனமாகவும் தமிழர்கள், முஸ்லிம்கள், வேடர்கள், மலேசியர்கள், பேகர்கள், காப்பிலியர்கள் போன்றோர் சிறுபான்மை இனமாகவும் குறிப்பிடப்படுகின்றார்கள். அவ்வாறு பல இனங்கள் இணைந்து வாழ்கின்ற பொழுது அவ்வினங்களுடையே இடைத்தொடர்பு (Intraction) ஏற்படுவதால் கலை, கலாசாரங்கள், பண்பாடு, மொழி போன்றவை இனங்களுக்கிடையே உள்வாங்கப்படுகின்றன. அவற்றுள் மொழியே மிக இலகுவாக உள்வாங்கப்படுகின்றது. அதற்குக் காரணம் இனங்கள் தமக்குள் இடைத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு முதன்மைக் காரணியாக மொழியைப் பயன்படுத்திக்கொள்கின்றமையாகும். தமது எண்ணங்கள், விருப்பு, வெறுப்புகள் என நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்;துவதற்கும் மொழியே பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு கருத்துப் பரிமாற்றத்திற்காக மொழியைப் பயன்படுத்துகின்ற பொழுது ஓர் இனம் அல்லது சமூகம் ஏனைய இனத்தின் அல்லது சமூகத்தின் மொழியை மிக இலகுவாகக் கற்றுக் கொள்கின்றது. தொடக்க நிலையில் பேச்சு வழக்கு மொழியைக் கற்றுக் கொண்டு தேவை கருதி எழுத்து வழக்கினையும் கற்றுக் கொள்கிறார்கள். இதற்கமைய ஒரு சமுதாயம் இரு மொழிச் சமுதாயமாயின் இரு மொழிகளும் பன்மொழிச் சமுதாயமாயின் பல மொழிகளும் கற்றுக் கொள்ளப்படுகின்றன.
இலங்கை வாழ் மலையகத் தமிழர்களுள் கல்வி கற்றவர்கள் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழியில் சிறந்த மொழி ஆளுமை உடையவர்களாக உள்ளார்கள். ஏனெனில் அவர்கள் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வதும் ஆங்கில மொழி இணைப்பு மொழியாக உள்ளமையும் ஆகும். அதேபோல் யாழ்ப்பாணத் தமிழர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே சிறந்த ஆளுமை உடையவர்களாக உள்ளார்கள். அதற்குக் காரணம் அவர்கள் தனித் தமிழர்கள் வாழும் பகுதியில் வாழ்வதால் சிங்கள மொழியின் தேவை இன்மையாகும். அதேபோல் சிங்களவர்கள் சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளார்கள். அவர்கள் தமிழ் மொழியில் தேர்ச்சி பெறாமைக்குக் காரணம் அவர்களுக்குத் தமிழ் மொழியின் தேவை இன்மையாகும். இவ்வாறு ஒரு சமூகம் இரு மொழிகளில் சிறந்த ஆளுமை உடையதாக இருந்தால் அது இரு மொழியச் சமூகம் எனப்படுகின்றது. அந்த வகையில் ஒரு மொழியில் இரு மொழியம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
தாய்மொழியோடு இன்னுமொரு மொழியைத் தெரிந்திருக்கின்ற நிலை இரு மொழியம் எனப்படுகின்றது. இரு மொழியைப் பயன்படுத்துபவர் இருமொழியாளர் எனப்படுகின்றார். சிலர் சிறு வயது முதலே இருமொழி ஆளுமை உடையவர்களாக இருப்பார்கள். அதற்குக் காரணம் அவர்கள் வாழும் இரு மொழிச் சூழல் ஆகும். இது தவிரச் சில நாடுகளில் அனைவரும் கட்டாயமாக இரு மொழி ஆளுமை உடையவர்களாக இருத்தல் வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் இருமொழி ஆளுமை உடையவர்களாக இருப்பார்கள். இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இலங்கை ஆகும். இலங்கையில் ஏற்பட்ட இன முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அரசு அனைத்துச் சிங்கள மொழி மூல அரசப் பள்ளிக் கூடங்களில் தமிழ்மொழியும் தமிழ்மொழி மூலப் பள்ளிக் கூடங்களில் சிங்கள மொழியும் கட்டாயமாகக் கற்பிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தி உள்ளது. அத்தோடு இதன் பயனாக இன்று இலங்கைவாழ் சிறுவர்கள் அனைவரும் சிறு பருவத்திலேயே இரு மொழி ஆளுமை உடையவர்களாகத் திகழ்கின்றனர். இரு மொழியம் பல வகையாகப் பகுத்து நோக்கப்படுகின்றது.
1. இளமை இரு மொழியம்
சில பள்ளிக் கூடங்களில் மாணவர்கள் தொடக்கக் கல்வி நிலையிலேயே தாய் மொழியோடு வேறு ஒரு மொழியையும் கற்றுக் கொள்ளும் வகையில் பாடத்திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் ஆங்கிலம் கற்கும் சிறுவர்களுக்கு ஸ்பானிய மொழி இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படுகின்றது. சிங்கப்éரில் ஆங்கில மொழி மூலம் கற்கும் மாணவர்களுக்குத் தமிழ்மொழி இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படுகின்றது. இலங்கையிலே தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியையும் சிங்கள மாணவர்கள் தமிழ் மொழியையும் தொடக்கக் கல்வியிலேயே கற்றுக் கொள்கிறார்கள். இவ்வாறு சிறு பருவத்திலேயே இருமொழிகளில் ஆளுமையைப் பெற்றுக் கொள்ளும் நிலை இளமை இரு மொழியம் எனப்படுகின்றது. இலங்கையில் தமிழ்ப்பள்ளிகளில் சிங்கள மொழியும் சிங்களப் பள்ளிகளில் தமிழ் மொழியும் கட்டாயப்பாடமாகக் கற்பிக்கப்படுகின்றன. அதன் மூலம் இங்குள்ள சிறார்கள் சிறு வயது முதலே தங்களது தாய்மொழியோடு தங்கள் சூழலிலுள்ள, தம்மோடு இணைந்து வாழ்கின்ற இன்னுமொரு சமூகத்தின் மொழியையும் கற்றுக் கொள்கிறார்கள். அத்தோடு ஆங்கில மொழியும் பள்ளிக்கூடங்களில் கட்டாயப்பாடமாகக் கற்பிக்கப்படுகின்றது. அதனால் இலங்கைச் சிறார்கள் சிறுவயது முதலே மும்மொழி ஆளுமை உடையவர்களாக விளங்குகிறர்ர்கள்.
2. முதுநிலை இரு மொழியம்
சிலர் சிறு பருவத்திலேயே ஒரு மொழியை இரண்டாம் மொழியாகக் கற்றுக் கொள்ளாமல் பருவமடைந்த பின்னர்த் தேவை கருதிக் கற்றுக் கொள்வார்கள். எடுத்துக்காட்டாக இலங்கையிலே வயது முதிர்ந்த சிங்களவர்கள் தமிழ் மொழி தமிழர்கள் சிங்கள மொழியையும் இரண்டாம் மொழிகளாகக் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக போர் முடிவடைந்ததன் பின்னரே இவ்வாறான கற்றல் செயல்பாட்டில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். சிலர் குறிப்பிட்ட மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் கற்றுக் கொள்கிறார்கள். அரசாங்கம் இம்மொழி கற்றவர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவதால் சிலர் இம்மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்கள். இவ்வாறு பல்வேறு தேவைகளுக்காக முதியவர்கள் இலங்கையில் குறிப்பிட்ட மொழிகளைக் கற்றுக் கொள்கிறார்கள். இவ்வாறு வயது முதிர்ந்ததன் பின்னர் யாதாயினும் தேவை கருதித் தாய் மொழி தவிர்ந்த வேறு ஒரு மொழியைக் கற்றுத் தேர்ந்தால் அது முதுநிலை இரு மொழியம் எனப்படுகின்றது.
3. குறை இரு மொழியம்
ஒரு மொழியின் அடிப்படைத் திறன்கள் நான்கு ஆகும். அவை கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல். சில வேளைகளில் புதிதாக ஒரு நாட்டில் குடியேறியவர்கள் தாய் மொழி தவிர்ந்த இன்னுமொரு மொழியில் இரண்டு திறன்களில் மட்டுமாவது தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். எடுத்துக்காட்டாக இலங்கையிலிருந்து மேலை நாடுகளுக்குக் குடிபெயரும் தமிழர்களுள் சிலருக்கு ஆங்கில மொழியைப் படிக்க மட்டும் தெரிந்திருக்கும். சிலருக்குப் பேசுவதனைப் புரிந்துகொள்ளும் திறன் மட்டும் இருக்கும். ஆனால் பேசும் திறன் குறைவாக இருக்கும். இலங்கையில் மலையகத்தில் வாழ்கின்ற இலங்கைவாழ் இந்திய வம்சாவழித் தமிழர்களுள் பலருக்கு தமிழ் மொழியைப் பேச மட்டுமே முடியும். அதேபோல் அவர்களுக்கு சிங்களமொழியிலும் நன்கு உரையாட முடியும். அதேபோல் சிங்கள மக்களுள் சிலருக்கு பேச்சு வழக்கில் மட்டுமே உள்ள சிங்கள கிளை மொழியான வேடுவ மொழியிலும் ரொடிய மொழியிலும்; உரையாட முடியும். மேலும் ஆங்கில மொழியில் கல்வி கற்ற தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்கள் தங்களது தாய்மொழியில் கேட்டல் மற்றும் பேச்சுத் திறன்களில் மட்டும் ஆளுமை உடையவர்களாக இருக்கின்றமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இவ்வாறு தாய்மொழியுடன் இன்னுமொரு மொழியில் ஏதாவது ஓரிரு திறன்களில் தேர்ச்சி பெற்றிருக்கும் நிலை குறை இரு மொழியம் எனப்படும்.
4. கல்விசார் இரு மொழியம்
கல்வி அறிவுடையவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு அடிப்படை மொழித் திறன்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இவ்வாறு தாய்மொழி போல் இன்னுமொரு மொழியிலும் அடிப்படை மொழித்திறன்களிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருத்தல் கல்விசார் இரு மொழியம் எனப்படுகின்றது. மேலும் மொழித்திறன்கள் நான்கிலும் முழுமையான தேர்ச்சி நிலையை அடைகின்ற அந்நிலை முழு இரு மொழியம் என அழைக்கப்படுகின்றது. முழு இரு மொழியமானது கல்வியியலாளர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாகும். தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கல்வியியலாளர்களின் ஆங்கில மொழித் தேர்ச்சியினை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். இலங்கையைப் பொறுத்தளவில் (வட, கிழக்கு மாகாணம் தவிர்ந்த) ஏனைய மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட கல்வி கற்ற தமிழர்கள் சிங்கள மொழியிலும் ஆங்கில மொழியிலும் முழுமையான தேர்ச்சி உடையவர்களாக உள்ளார்குள். அதேபோல் கல்வி கற்ற சிங்களவர்கள் ஆங்கில மொழியில் முழுமையான தேர்ச்சி உடையவர்களாகக் காணப்படுகிறார்கள்.
5. நாட்டுபுற இரு மொழியம்
கல்வி அறிவு அற்றவர்கள் தமது தாய்மொழி தவிர்ந்த இன்னுமொரு மொழியின் அடிப்படை மொழித்திறன்கள் நான்கினுள் கேட்டல் மற்றும் பேசுதல் ஆகிய இரு திறன்களில் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பார்கள். அதுவும் முழுமை பெறாத குறை நிலையாகவும் சற்றுக் கொச்சை வழக்காகவும் இருக்கும். இது நாட்டுப்புற இரு மொழியம் எனப்படும். இலங்கையில் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்கின்ற தமிழர்கள் அனைவருமே சிங்கள மொழியில் கேட்டல் மற்றும் பேசுதல் திறன்களில் தேர்ச்சி உடையவர்களாக உள்ளார்கள். அவர்கள் சிங்களவர்களுடன் காலங் காலமாக இணைந்து வாழ்வதால் தொடர்ந்து சிங்கள மொழியை கேட்டதன் மூலம் அவர்கள் இயலபாகவே பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொண்டுள்ளார்கள். மலையகத் தமிழர்கள் சிங்கள மொழியைச் சற்று கொச்சையாகப் பயன்படுத்தி பொழுதும் ஏனைய தமிழர்கள் சிங்கள மொழி கேட்டல் மற்றும் பேச்சுத் திறன்களில் சிறந்த ஆளுமை உடையவர்களாக உள்ளார்கள். ஆனால் சிங்கள மக்களிடம் இவ்வாறான இயல்பானத் தமிழ் மொழி திறன்களைக் காண முடிவதில்லை. அவர்கள் அம்மொழியைக் கற்றுக் கொண்டதன் பின்னரே பயன்படுத்துகிறார்கள். இயல்பாக அவர்களிடம் தமிழ் மொழி வளர்வதற்குரிய வாயப்பு அங்கு இல்லை. ஏனெனில் தமிழர்களுக்குச் சிங்கள மொழியில் உரையாட வேண்டிய தேவை, கட்டாயம், நிர்ப்பந்தம் உள்ளமையால் அவர்கள் அம்மொழியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சிங்களவர்களுக்கு அத்தகைய தேவை இன்மையால் அவர்கள் தமிழ் மொழி பற்றி அக்கறை கொள்வதில்லை.
6. சமனுடை இரு மொழியம்
தலைமுறை தலைமுறையாக இரண்டு மொழிகளைப் பயன்படுத்தி வருகின்ற பொழுது மொழிக்கலப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அவ்வாறு மொழிக்கலப்பு ஏற்பட்டாலும் தாய் மொழியிலும் இரண்டாம் மொழியிலும் மொழி இழப்பு ஏற்படாத நிலையினைத் தக்க வைத்துக் கொள்ளுதல் சமனுடை இரு மொழியம் எனப்படும். எடுத்துக்காட்டாக இலங்கைவாழ் தமிழ் மக்களின் பேச்சு வழக்கிலே பல சிங்கள மொழிச் சொற்களும் ஆங்கில மொழிச் சொற்களும் கலந்துள்ளன. ஆயினும் அதனால் தமிழ் மொழி வளமடைகிறதேயன்றி அம்மொழியின் தனித்தன்மைக்கு இழப்பு நேரிட வாய்ப்பில்லை. அதேபோல் சிங்கள மொழியுpலும் தமிழ் மொழிச் சொற்கள் மற்றும் ஆங்கில மொழிச் சொற்கள் கலந்துள்ளன. ஆனால் அது அம்மொழியை முற்று முழுதாக தங்களது ஆளுமைக்குட்படுத்தும் வகையில் இல்லை. ஆனால் இலங்கையில் தமிழ்ப் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் ஆங்கிலம் தமிழ் மொழியைச் சீரழிப்பதாக உள்ளது. தற்காலத்தில் இங்கு தமிழ் மொழியானது ஆங்கிலத்திற்கு ஒரு விகுதியாகவே பயன்படுகின்றது. எ-டு: டிரெயின்ல, நியுஸ்ல, பைக்ல, கார்ல, லொரில, வேன்ல, பிளயிட்ல, டிவில, ரேடியோல, புக்ல, பார்க்ல, லெட்டர்ல, ரோட்ல, பேப்பர்ல, போன்ல, மெஸேஜ்ல
இவ்வாறே சிங்கள மொழியிலும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் சிங்கள மொழியில் தமிழ் ‘ல’ வுக்குப் பதிலாக ‘எக்கே’ என்ற விகுதி பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு வேற்று மொழிச் சொற்கள் ஒரு மொழியை தனது ஆளுகைக்கு உட்படுத்ததாத வரையில் பயன்படுத்துதல் வேண்டும்.
7. சமனிலா இரு மொழியம்
தமிழ் நாட்டில் பல தலைமுறையாக வாழும் தமிழ் - தெலுங்கு இரு மொழியாளர்களுள் சிலர் தமது தாய்மொழியான தெலுங்கினை முழுமையாகக் கற்றுக் கொண்டவர்கள் அல்லர். மாறாகத் தமது இரண்டாம் மொழியான தமிழ்மொழியில் முழுமையான தேர்ச்சி உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். இதேபோல் இலங்கையிலும் சில தமிழர்கள் சிறு பருவம் முதலே சிங்கள மொழிமூலப் பள்ளிகளில் கற்பதால் தமது தாய் மொழியான தமிழ்மொழியில் கேட்டல், பேசுதல் ஆகிய இரு மொழித்திறன்களில் மட்டும் தேர்ச்சி உடையவர்களாக உள்ளார்கள். அவர்களால் தமது தாய்மொழியில் எழுதவோ படிக்கவோ முடியாது. ஆனால் சிங்கள மொழியில் முழுமையான தேர்ச்சி பெற்றவர்களாகக் காணப்படுகின்றார்கள். இவ்வாறு தமது தாய்மொழியில் குறைவான தேர்ச்சியும் இன்னுமொரு மொழியில் முழுமையான தேர்ச்சியும் பெற்றிருக்கும் நிலை சமனிலா இரு மொழியம் எனப்படும்.
8. எல்லைப்புற இரு மொழியம்
பெரிய ஒரு நாட்டில் பல்வேறு மாநிலங்களைக் கொண்ட அரசியல் சூழலில் வாழ்கின்ற ஒருவரின் இரு மொழியத் திறன் அவர் வாழும் இடம் மற்றும் சூழல் காரணமாக வேறுபடலாம். எடுத்துக்காட்டாக இந்தியா 29 மாநிலங்களை உடைய ஒரு பெரிய நாடாக உள்ளது. இங்கு ஒரு மாநிலத்திற்கும் இன்னுமொரு மாநிலத்திற்கும் இடையில் வாழ்கின்ற அதாவது மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் இரு மொழியம் இம்மாநிலங்களை அடிப்படையாகக் கொண்டதாக அமையும். எடுத்துக்காட்டாகக் கேரள - தமிழ் நாட்டு எல்லையில் வாழ்பவர்கள் மலையாளம் மற்றும் தமிழ்மொழியில் ஆளுமை உடையவர்களாகவும் கர்நாடக - தமிழ்நாட்டு எல்லையில் வாழ்பவர்கள் கன்னட மற்றும் தமிழ்மொழியில் ஆளுமை உடையவர்களாகவும் ஆந்திர - தமிழ்நாட்டு எல்லையில் வாழ்பவர்கள் தெலுங்கு மற்றும் தமிழ்மொழியில் ஆளுமை உடையவர்களாகவும் விளங்குவார்கள். இவ்வாறு மாநிலங்களின் எல்லைப்புறச் சூழலால் ஏற்படும் இருமொழி நிலை எல்லைப்புற இரு மொழியம் எனப்படும். இவ்விரு மொழி நிலை இந்தியா போன்ற பல மாநிலங்களைக் கொண்ட பெரிய நாடுகளுக்கே சாத்தியமாகும். ஆயினும் இலங்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இணைந்து வாழ்கின்ற பொழுது தமிழர் சிங்கள மொழியையும் சிங்களவர்கள் தமிழ் மொழியையும் உள்வாங்கிக் கொள்கின்றனர். தமிழர்கள் மிக விரைவாகச் சிங்கள மொழியைப் பயன்படுத்த பழகிக் கொள்கின்றர். ஆனால் சிங்களவர்களால் அது இயலாத விடயமாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
9. உள்நாட்டு இரு மொழியம்
எல்லைப் புறம் தவிர்ந்து உள்நாட்டுக்குள்ளேயே இருமொழியில் ஆளுமை பெற்றிருக்கும் நிலை உள்நாட்டு இரு மொழியம் எனப்படும். எடுத்துக்காட்டாக மொரீசியஸ், சிங்கப்éர் போன்ற சிறிய நாடுகளைக் குறிப்பிடலாம். இங்கு வாழும் தமிழர்கள் தமது தாய்மொழியாகிய தமிழோடு தாங்கள் வாழும் நாட்டில் வழக்கிலுள்ள மொழிகளிலும் ஆளுமை உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். அத்தகைய நிலை உள்நாட்டு இரு மொழியம் எனப்படுகின்றது. அதேபோல் இலங்கையிலும் தமிழர்கள்சிங்கள மொழியை மி இயல்பாகக் கையாள்கிறார்கள். ஏனெனில் சிங்களமே இலங்கையில் பெரும்பான்மை மொழியாக இருப்பதால் சிறுபான்மை இனத்தவர்கள் அம்மொழியைக் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. மேலும் சிங்கள மொழி ஆளுமை இருந்தால் மிக விரைவாக தொழில்களைப் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி பாதுகாப்பிற்காகவும் சிங்கள மொழி அறிந்திருத்தல் அவசியமாகின்றது. அனால் சிங்களவர்களால் தமிழ் மொழியை அவ்வளவு இயல்பாகப் பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு அம்மொழி அவசியமின்மையாகும்.
10. தனிமனித இரு மொழியம்
சில சமயங்களில் ஒரு நாட்டிலுள்ள அனைவருமே இருமொழிகளில் ஆளுமை உடையவர்களாக இருப்பதுண்டு. இது கல்வியியலாளர்களிடையேயே சாத்தியமானதாகக் காணப்படும். எடுத்துக்காட்டாகத் இலங்கைவாழ் தமிழ்க் கல்வியியலாளர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் சிங்களவர்கள் சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் சிறப்பாகக் கையாளும் திறமை பெற்றவர்களாகக் காணப்படுகின்றார்கள். அவ்வாறு ஒரு நாட்டில் இரு மொழிய நிலை தனிமனிதர்களை மட்டுமே சார்ந்திருப்பின் அது தனிமனித மொழியம் எனப்படுகின்றது.
11. சமூக இரு மொழியம்
தமிழ்நாட்டில் பல்வேறு மாநில மக்கள் இணைந்து வாழ்கிறார்கள். எடுத்துக் காட்டாகத் தெலுங்கு, கன்னடம், மராத்தி, கொங்கணி போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட இன மக்களைக் குறிப்பிடலாம். அவர்களுள் பலர் தமது தாய் மொழியோடு தமிழ்ச் சமூகத்தின் தாய்மொழியான தமிழ்மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகிறார்கள். அதேபோல் இலங்கையில் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் சிங்கள மொழியில் ஆளுமை உடையவர்களாக உள்ளார்கள். தமிழர்கள் சிங்கள மொழியில் தேர்ச்சி உடையவர்களாக உள்ளார்கள். அவ்வாறு ஒரு நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இனத்தவர்கள் தமது தாய்மொழியோடு தாம் வாழ்கின்ற நாட்டின் பெரும்பான்மை மொழியையும் கற்றுத் தேர்ந்திருக்கும் தன்மை சமூக இரு மொழியம் ஆகும்.
12. தேசிய இரு மொழியம்
சில வேளைகளில் ஒரு நாடே இரு மொழிய நாடாக இருப்பதற்கு வாயப்புண்டு. எடுத்துக்காட்டாகப் பராகுவே நாட்டில் வாழும் மக்கள் ஸ்பானியம் மற்றும் கௌராணி ஆகிய இரு மொழிகளையும் பயன்படுத்துகிறார்கள். அத்தோடு ஆப்பிரிக்க நாடான தன்சானியாவில் வாழும் பழங்குடி மக்கள் தங்களது பழங்குடித் தாய்மொழியோடு அந்நாட்டின் தொடர்பு மொழியான சுவாகிலி மொழியையும் பயன்படுத்துகின்றனர். அதேபோல் இலங்கைவாழ் தமிழர்கள் தமிழ் மொழியோடும் சிங்களவர்கள் சிங்கள மொழியோடும் இணைப்பு மொழியான ஆங்கில மொழியை இயல்பாகக் கையாளுகின்றார்கள். இவ்வாறு ஒரு நாட்டிலுள்ள அனைவரும் இரு மொழியைப் பயன்படுத்துவது தேசிய இரு மொழியம் எனப்படுகின்றது.
13. இணை இரு மொழியம்
பொருண்மை அடிப்படையில் ஒன்றாக இருந்து அப்பொருண்மை தொடர்பான சொற்களைத் தேர்ந்தெடுப்பதில் பிரிந்து தனித்தனியாக இருப்பது இணை இரு மொழியம் எனப்படும். எடுத்துக்காட்டாக ஆங்கில மொழிச் சொற்களான ‘Plant, Apple, Open, Eat, Corn’ போன்ற சொற்கள் ஜெர்மன் மொழியில் முறையே Pflanze, Apple, Offen, Easson, Korn எனக் குறிப்பிடப்படுகின்றன. அதேபோல் தமிழ்மொழிச் சொற்களான தலை, மலை, பனை போன்ற சொற்கள் மலையாள மொழியில் முறையே தலா, மலா, பனா என வழங்கப்படுகின்றன. இலங்கைவாழ் சிங்களவர்கள் கதிரையைப் ‘புட்டுவ’ என்றும் மலையகத் தமிழர்கள் ‘புட்டுவம்’ என்றும் குறிப்பிடுவதைக் கூறலாம். இங்கு ‘புட்டுவம்’ என்ற சொல் சிங்கள மொழியிலிருந்து உள்வாங்கப்பட்ட பொழுதும் அச்சொல் தமிழ்ப்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்படுவதனைக் காணலாம்.
14. கூட்டு இரு மொழியம்
ஒரு மொழியின் சொல்லும் அதற்குரிய பொருளும் ஒன்றாக இருந்த பொழுதும் மொழி வாரியாகப் பிரிந்து தனித்தனியாக நிற்பது கூட்டு இரு மொழியம் எனப்படுகின்றது. எடுத்துக்காட்டாகச் சிங்கள மொழிச் சொற்களான அம்மா, அக்கா, மாமா, சல்லி, போஞ்சி(பீன்ஸ்), கோவா (முட்டைகோஸ்), கொயில (ஒருவகை தண்டுக்காய்கறி), கொட்டுகொல(வல்லாரை) போன்றவை தமிழ் மொழியில் அதே ஒலிப்போடும் பொருண்மையோடும் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும் மொழிநிலையில் குறிப்பிட்ட இரு மொழிகளும் தனித்தனியே சிங்களம், தமிழ் என்றே குறிப்பிடப்படுகின்றன.
15. படிநிலை இரு மொழியம்
ஒரு மொழியில் ஒரு சொல்லும் அதற்குரிய பொருளும் இணைந்திருக்க அத்துடன் வேறு ஒரு மொழியின் சொல்லை இணைத்துப் பொருள்கொள்ளுதல் படிநிலை இரு மொழியம் எனப்படும். எடுத்துக்காட்டாகச் சிங்கள மற்றும் தமிழ்மொழிகளில் ‘காரி’ என்பது உரிமைப் பொருளைக் குறிக்கும் படர்க்கை, ஒருமை, பெண்பால் பெயர்ச்சொல் விகுதியாகும். அவ்விகுதி சிங்கள மொழியிலும் அதே ஒலிப்போடும் அதே பொருளோடும் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் அவ்விகுதி ஆங்கில மொழிச் சொல்லில் அதே பொருளோடு; இணைத்துத் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் கீழ்வருமாறு பயன்படுத்தப்படுகின்றது.
ஆங்கிலம் தமிழ் சிங்களம்
Army ஆமிகாரி ஆமிகாரி
Police பொலிஸ்காரி பொலிஸ்காரி
Car கார்காரி கார்காரி
16. செயல்பாட்டு இரு மொழியம்
சிலர் தமது தொழில், அலுவலகம், வணிகம் போன்ற தேவைகளுக்காக வேற்று மொழி பேசுபவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டிய நிலையில் இருப்பார்கள். அதற்காகச் சில வேற்று மொழிச்சொற்கள், சொற்றொடர்கள், வாக்கியங்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டாகச் சென்னை தொடர்வண்டி நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் சுமை தூக்கும் தமிழர் இந்தி மற்றும் ஆங்கில மொழிச் சொற்கள் சிலவற்றைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அதுபோல் சுற்றுலாப் பயண வழி காட்டிகள் ஆங்கில மொழிச்சொற்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளான வெள்ளவத்தை, கிருலப்பனை, தெஹிவலை போன்ற பகுதிகளில் காய்கறி வணிகம் செய்யும் சிங்கள வணிகர்கள் அவற்றின் பெயர்களையும் விலைகளையும் ஓரளவு கொச்சையாகவேனும் தமிழில் கூறும் திறமை பெற்றவர்களாக உள்ளார்கள். இவ்வாறு தங்களது அடிப்படைத் தேவைகள் மற்றும் செயல்பாடுகள்; கருதி சில வேற்று மொழிச்சொற்கள், தொடர்கள், வாக்கியங்களைத் தெரிந்திருத்தல் செயல்பாட்டு இரு மொழியம் எனப்படும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.