அந்த உலகம் எனக்குப் பலவிதங்களிலும் பிடித்த உலகம்
என்பேன்.
என் மனத்தில் சஞ்சலங்கள் அலையடிக்கத்தொடங்குகையில்,
என் மனத்தில் சஞ்சலப்புயல்கள் வீசத்தொடங்குகையில்,
என் மனத்தின் அமைதி சீர்குலையத்தொடங்குகையில்,
நான் அந்த உலகை நோக்கிப் பயணமாகத் தொடங்குகின்றேன்.
அந்த உலகப்பயணம் தரும் திருப்தியை எனக்கு வேறெந்தப் பயணமும்
தருவதில்லை.
அந்த உலகில் நானும் காட்சிகள் அற்புதமானவை.
பறவைகளைப் பற்றிய புரிதல்களை,
அறிவியற் சாதனைகளை வெளிப்படுத்தும்
அந்த உலகில் நான் எவ்வளவு நேரமானாலும் என்னை மறந்து
பயணிப்பேன்.
அந்த உலகின் மிகச்சிறப்புகளிலொன்று காலக்கப்பல்.
அந்த உலகின் காலக்கப்பலைப்போல் இன்னுமொரு காலக்கப்பலை
நான் வெறெங்கும் கண்டதில்லை.
அந்தக் காலக்கப்பற் பயணத்துக்காகவே நான் அடிக்கடி அங்கு செல்வதுண்டு.
அந்தக்கப்பலிலேறி
ஆதியில் இங்கு ஆட்டம்போட்ட இராட்சதப்பறவைகள், மிருகங்களின் காலகட்டத்துக்கு
என்னால் மிகவும் இலகுவாகச் சென்று விட முடிகின்றது.
ஆனால் அக்காலக்கப்பல் என்னை அவற்றிடமிருந்து திறமையாக
பாதுகாக்கவும் செய்கின்றது.
என்னால் அம்மிருகங்கள்,பட்சிகளின் அபாயங்களைப்பற்றிய சிந்தனைகளை நீக்கி
அங்கு அக்கப்பலில் பயணிக்க முடிகின்றது.
என்னால் உலகின் மகா சர்வாதிகாரிகளின் ஆட்டங்களை , ஏற்படுத்திய பேரழிவுகளை
அவர்களுக்கருகில் நின்று அவதானிக்க அக்கப்பல்
சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகின்றது.
கிளியோபட்ராவின் பேரழகில் எனை மறக்க முடிகின்றது.
இராஜஇராஜ சோழனின் கப்பற் படையில் தென்கிழக்காசியாவை நோக்கி
அல்லது இலங்கையை நோக்கிப் பயணிக்கவும் முடிகின்றது.
சர்வாதிகாரிகளும், கொடுங்கோலர்களும், அமைதியின் காவலர்களும், மகான்களும்
அருகருகாக வாழும் அற்புத உலகம் அது.
அவ்வுலகுக்கு அடிக்கடி பயணிக்கின்றேன். விரும்பினால் நீங்களும்
என்னுடன் இணைந்துகொள்ளலாம்.
நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற்றுக்கொள்ளலாம்.
என்ன நீங்கள் பயணத்துக்குத் தயாரா நண்பர்களே!
போர்களாலும், பேரழிவுகளாலும், வர்க்க, வர்ண வேறுபாடுகளாலும்
பற்றியெரியும் இவ்வுலகின் கனலிலிருந்து உங்களை என்னால்
காப்பாற்ற முடியும்
நீங்களும் என்னுடன் அவ்வுலகுக்குப் பயணிக்க முடிந்தால்
நண்பர்களே!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.