1. மண்ணாந்தை மன்னர்கள்'
யாரோ கையில் கோலைக் கொடுத்துவிட்டு
காலணாக் கிரீடத்தையும் சூட்டிவிட்டார்கள்.
கேட்கவேண்டுமா கர்வத்துக்கு?
ஆசானாகத் தன்னைக் கற்பிதம் செய்துகொண்டுவிட்ட மண்ணாந்தையொன்று
பேசலாகாப் பேச்செல்லாம் பேசிமுடித்து
நீசத்தின் உச்சத்தில் நின்றபடி
கெக்கலித்துக்கொண்டிருந்தது.
கொக்கரக்கோவென்று கூவியா
பொழுது விடிகிறது?
கடி துடி அடி மடி
படி இடி குடி முடி
யொவ்வொன்றுக்கும் உன் அகராதியில்
அதிகபட்சம் பத்து அர்த்தங்களென்றால்
அவர் அகராதியில் நூறுபோல்…
இவர் அகராதியில் ஆயிரத்திற்கு மேல்!
கவிதையின் அரிச்சுவடி தெரிந்திருந்தால்
கவியின் மனப்பிறழ்வுக்காய் முதலைக்கண்ணீர்
வடித்திருக்க மாட்டாய்.
கவிதையெழுதும்போதெல்லாம் கவிஞர் காதலனாய்
கிறுக்கனாய்
மாறுவது உனக்குத் தெரியுமா?
சொட்டுச்சொட்டாய் சேகரித்த முத்துகளை
கொட்டாவி விட்டபடியே கையாடல் செய்யப்புகும் உன்
கீழ்மையை ஒளிக்க
எப்படியெல்லாம் பீடாதிபதியாகித் தொங்குகிறாய் தலைகீழாய்
‘Ten Commandments’ தருவதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும்.
தன்னைத்தான் சிலுவையிலறைந்துகொண்டு கவிதை படைக்கும் கவிஞர்
ஒரே சமயத்தில் தனிச் சொத்தும் பொதுச்சொத்துமாய்….
உனக்கெல்லாம் எங்கே புரியப்போகிறது இது?
’அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’ அறிவாயா?
கோபிகிருஷ்ணனின் ’உள்ளேயிருந்து சில குரல்கள்’ கேள்விப்பட்டிருக்கிறாயா?
’நாராய் நாராய் செங்கால் நாரா’யும்
’வாராய் என் தோழி வாராயோ’வும்
’தேரா மன்னா’வோடு ஒட்டி முட்டும் இடங்கள்
என்னவென்று கேட்டால்
இந்த நூலில் கொஞ்சம்
அந்த நூலில் கொஞ்சம் எடுத்தாண்டு
கம்பவுண்டர் பட்டங்கள் நாலைந்து பெற்றுவிடல் எளிது.
எம்பாவாய் கம்புமாவிலிருந்து கிளம்பியதாய்
விளம்பிவிட்டால்
பின், புதுக்கண்டுபிடிப்பாளரன்றோ நீ!
சிரிக்காதே வெட்கங்கெட்டு.
பாட்டி சொல்லக் கேட்டதில்லை?
”புழுத்துப்போகும் வாய் பொய் பேசினால்”.
வீசும் காற்றுக்குச் சுருக்கிடப்பார்க்கும் உன்
மடமையை என்னென்பது...
சிற்றிதழ் வெளி யோர் வழுக்குப் பாறை;
இங்கே கரணம் தப்பினால் மரணம்.
அழகுநடை பழகுவதான பாவனையில் சற்றே
தெனாவெட்டாய் நடந்தால்
வினாடி நேரத்தில் கழுத்து உடைய
விழுந்திடுவாய் அதலபாதாளத்தில்.
கெட்ட முட்டாள் கனவானா யிருப்பதைக் காட்டிலும்
பெட்டிக்கடை வைத்துப் பிழைப்பது எவ்வளவோ மேல்
2. கண்காட்சி
கரை கறையாகியதேன், திரை சிறையாகியதேன்
தரை நரையாகியதே இரை முறையாகியதே
என்று என்று என்று
(திடீர்க்) காதலாகிக் கசிந்துருகிக்
கண்ணீர் வடிக்கும் பாவனையில்
கடித்துக்குதறக் கூர்பற்களைத் தீட்டும்
அந்த வேறு முதலை
யறியுமோ அச்சுப்பிழையும்
மிச்சசொச்சமும்?
முதலைக் கந்துவட்டிக்கு விட்டே
பெருந்தனக்காரர்களாகிவிட்டவர்கள்
நெடுஞ்சாலையில் நடைபயின்றுகொண்டிருக்கிறார்கள்
இறுமாப்போடு நெஞ்சுயர்த்தி இழுத்துச்சென்றபடி _
சங்கிலியால் பிணைத்த ‘ரப்பர்’ முதலையை
3.சகமனிதநேயத்தோடு தரப்படும் சிறுகுறிப்புகள் சில
3.சகமனிதநேயத்தோடு தரப்படும் சிறுகுறிப்புகள் சில
சிறுபத்திரிகை யெழுத்தாளராக இருக்கவேண்டுமா?
சிறிதும் சுரணையில்லாம லிருக்கவேண்டும்.
சுண்டைக்காய்களை பொங்குமாக் கடல்கள் என்று
ஃபிலிம் காட்டினால்
ஆமாஞ்சாமியாய் தலையை வேகவேகமாக ஆட்டி
கட்டாந்தரையில் நீச்சலடித்து
தர்மதாதாக்களை மகிழ்விக்கவேண்டும்.
’ஆடுரா ராமா ஆடுரா’ என்று மனிதர்கள்
அதிகாரக் குரலில் ஆட்டுவித்தால்
அசல் மந்தி கூட அசையாது குந்தியிருக்கும்.
ஆனால், படைப்பாளி குபீரென்று எழுந்து
கடகவென்று குட்டிக்கரணமடித்துக்காட்ட வேண்டும்.
வாலைச் சுண்டியிழுத்தால்
புலியாய் சீறும் பூனைகூட.
ஆனால் எழுத்தாளர் பணிவாய் எழுந்து
பலிமேடையில்
தன்னைத்தான் வாகாய்க் கிடத்திக்கொண்டு
கழுத்தை நீட்டிக் காத்திருக்கவேண்டும்
கில்லட்டீனுக்காய்.
கரும்புள்ளி செம்புள்ளி குத்தி
கழுதையில் ஏற்றி
வழியெங்கும் சாட்டையால் அடித்தபடி
’
பதிலைச் சொல் பதிலைச் சொல்’
என்று குதிக்கும் கருணாமூர்த்திகள், கர்மப் பிரபுக்கள் முன்
கைகூப்பி நிற்கவேண்டும்….
தனமதிகாரசெல்வாக்குத்திமிர்பிடித்த
பணமுதலைகளுக்கு முன்,
அவர்தம்
பரிவாரங்களின் முன்
மண்டியிட்டுத் தெண்டனிட்டு ஊர்ந்து செல்லவேண்டும்.
’உன்னைப்போல் உண்டோ’ என்று போற்றிப் பரவியவாறே
ஒண்ணொண்ணாய் நம் முதுகுத்தண்டின் வட்டுகளை
பெருமுதலாளி வெட்டிப்போட வாகாய்
மடங்கி ஒடுங்கி நிற்க வேண்டும்.
ஆ, மறந்துவிடலாகாது _
மருந்துக்கும் மனசாட்சி யிருக்கக்கூடாது.
நம் மதிப்பார்ந்த சக படைப்பாளி
‘மெகா விற்பனைக்கான
product, brand name ஆக
மாற்றப்படுவதைப் பார்த்தும் வாளாவிருக்கவேண்டும்.
தப்பித்தவறி எதிர்ப்புத் தெரிவித்தாலோ
தாக்கப்படுவது திண்ணம்.
இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால் வனவாசம்
கவனமாயிருக்கவேண்டும்.
இல்லையென்றால்
கட்டம்கட்டப்படுவீர்கள்.
முற்றிய மனநோயாளியாய்.
வெட்டாட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
நாம் தாயமாகப் போகிறோமா?
மாயமாகப் போகிறோமா?
4. .கோதண்டராமன் காதையும் கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸின் ஃபிடில் இசையும்
”ரோமில் இருக்கும்போது ரோமானியர்களாக நடப்பதுதான் நல்லது”.
(ரோம் என்றால் மன்னனா மக்களா என்று யாரும் கேள்வி கேட்கலாகாது).
ரோம் தீப்பற்றி எரிகிறது.
கிரேக்க மன்னன் நீரோ க்ளாடியஸ் ஃபிடில் வாசித்துக்கொண்டிருக்கிறான்
இன்னமும்கூட.
காலப்போக்கில் நீரோ கிளை பிரிந்து பல்கிப் பெருகி
இன்று அடிக்கு அடி தட்டுப்பட்ட வண்ணம்…..
‘ரோம் தீப்பற்றி யெரியட்டுமே
அதற்காக இசையை வாசிப்பதும் ரசிப்பதும் எப்படி
இங்கிதமற்றுப்போகும்’
என்று தர்க்கம் செய்யத் தெரிந்தவர்கள்
தேவையான பாதுகாப்புக்கவசங்களோடு
தலைமறைவாயிருந்தபடியே
தத்தமதான பங்காற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
சிலர் கொழுந்துவிட்டு எரியும் தீயில் எண்ணெய் வார்க்கிறார்கள்
சிலர் தீயின் வெப்பத்தை அளக்க புதுக்கருவி தயாரித்துக்
கொண்டிருக்கிறார்கள்;
சிலர் தீ கருக்கிய இடங்களில் தண்ணீர் தெளித்து
கோலமிடப் பார்த்துக்கொண் டிருக்கிறார்கள்;
’நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்,
நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்’ என்று
கண்ணதாசனின் வரிகளை இரவல் வாங்கியாவது
தவறாமல் தத்துவம் பேசுகிறார்கள் சிலர்;
‘அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்’ என்று பாரதியை
மனப்பாடமாய்ச் சொல்கிறார்கள் சிலர்
(மறந்தும் பின்பற்றமாட்டார்)
துக்கிரித்தன்மாய் தீயையையும் மூட்டி ஃபிடிலையும் வாசிக்கிறானே
இக்கரை இக்கால நீரோ மன்னன், இவன் கொடுங்கோலனல்லவா
என்று கேட்டுவிட்டால் போதும்
கண், காது, வாயைப் பொத்திக்கொண்டுவிடுகிறார்கள்.
காந்தியைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார்களாம்.
இன்னும் சிலர்
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று புன்சிரித்துக் கூறி
ஃபிடிலையும் அதைப் பிடித்திருக்கும் நீரோவின் கையையும்
வருடித்தருகிறார்கள்.
ஐயோ ரோம் எரிகிறதே என்றால்
புனரபி ஜனனம், புனரபி மரணம்
காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா என்று
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில்
ஆறுதலளித்து அவரவர் வழி சென்றவண்ணம்
சுற்றிலும் கேட்கும் வலியோலங்களை
அலைபேசியில் படம்பிடித்தபடியே
அகன்றேகுகிறார்கள்.
நீரோ வாசிக்கும் இசைக்குத் தவறாமல் தலையாட்டியப்டி
தீயில் கருகும் சக ரோமானியர்களிடமிருந்து பார்வையை
அகற்றியபடி
சுற்றுலா செல்கிறார்கள்.
அனுமனுக்குஆச்சரியம் தாளவில்லை –
அதெப்படி இந்திரஜித்தைப் போல இவர்களால்
நினைத்த நேரத்தின் அருவமாகிவிட முடிகிறது!
அதேசமயம், போர்க்களத்தின் ஒவ்வொரு அசைவும்
அவர்களுக்குத் தெரிந்தேயிருக்கிறது என்பது
அவர்கள் பாடும் இரங்கற்பாக்களிலிருந்து புலப்படுகிறது….
’நவீன தமிழ்க்கவிதையின் பொருள் போலவே
நீரோவின் தீயும்’ என்று
கவிதை யாப்பதென்ன அவர்களுக்குக் குதிரைக்கொம்பா?
வால்நுனித் தீயைக் கடலில் முக்கி அணைத்தது தவறோ
என்று தனக்குத்தான் கேட்டபடியே அண்ணாந்த அனுமன் கண்களில்
புஷ்பக விமானம் தெரிகிறது வீங்கிப் புடைத்து.
எரியும் மக்களோடு ஸெல்ஃபி பிடித்துக்கொள்ளவும்,
கூடவே நீரோ க்ளாடியஸிடம் நலம் விசாரிக்கவுமாய்
ரோமுக்குப் புறப்பட்டுச் செல்வோர் எண்ணிக்கை
அதிகமாகிக்கொண்டே.
5.போக்கு
கூலிப்படையினர் கோலோச்சும் காலம் இது.
இங்கே யொரு கையை வெட்டுவது
அங்கே யொரு தலையை சீவுவது
சூறையாடுவது
முடமாக்குவது
கொலைசெய்வது
மட்டுமல்ல
இடப்பட்ட பணி.
ஈவு
இரக்கமின்றி வெட்டிச் சிதைத்திடவும் வேண்டும் அவர்கள்
தத்தமது மனசாட்சிகளை.
6.சுவடு அழியும் காலம்…..
இரண்டு மூன்று முறை, அதற்குமேலும்கூட நச்சுவாயு தாக்கியிருக்கக்கூடும்;
நான்கைந்து முறை, அதற்குமேலும்கூட, கால்கள்
புதைசேற்றில் மாட்டிக்கொண்டிருக்கக்கூடும்;
புழுதியேறி யேறி நுரையீரல் பழுதடைந்திருக்கக்கூடும்
பலநேரம்;
பகலிரவாய் தோண்டிய பள்ளத்தருகே நின்றதில்
பித்தவெடிப்பில் பாதங்கள் கனன்றிருக்கக்கூடும்.
கருமமே கண்ணாகியிருந்தான் அகழ்வாராய்ச்சியாளன்….
பூமிக்கடியில் புதையல் இருக்கிறதென்று தோண்டத் தொடங்கியிருப்பதாய்
எண்ணிக்கொண்ட சிலைதிருட்டுக்காரன்
மருந்துக்கும் தன் மேல் புழுதிபடாதவாறு
மரத்தின் பின்னே ஒளிந்துகொண்டு நின்றவாறு
உன்னிப்பாய் கவனித்துக்கொண் டிருந்தான்.
வியர்வை வழிய
கை
நகக்கணுக்களில் ரத்தம் கசிய
அத்தனையன்போடு ஏந்திக்கொண்டு வெளியே வந்தான்
அகழ்வாராய்ச்சியாளன்
அழகிய பொதி யொன்றை!
அப்படியே அவனைக் கீழே தள்ளி
யதை அபகரித்துக்கொண்டோடியவனிடமிருந்து
ஆறேழு மணிநேரங்கழித்து
அவலத்திலும் அவலமாய் எழுந்ததோர் ஓலம்!
“அய்யய்யோ, என்ன இது வெறும் அத்துவான வெளி?
நட்சத்திரங்களைக் காணோமே – நல்ல விலைக்குப் போகுமே…..
காற்று வீசலையே - காசாக்கியிருக்கலாமே….
கதிரவனும் சந்திரனும் காரிருளாகாதிருந்தால்
காலத்திற்கும் கடைவிரித்து ‘கனவானா’கியிருக்கலாமே…
எல்லாம் போச்சே, எல்லாம் போச்சே
அகழ்வாராய்ச்சியாளனை அபகரித்த உழைப்பெல்லாம்
அந்தோ, விழலுக்கிறைத்த நீராச்சே
என்ன செய்வேன் நான், என்ன செய்வேன் நான்…”
பின்_
’அது சரி, அத்தனை நாள் தோண்டியவன் மண்டையை உருட்டினால்
சிறிதேனும் தேறுமோ பார்க்கலாம்..
காலால் எத்திவிட வாகாய் இருக்கவே யிருக்கிறது இந்த விரிபரப்பு’
என்று ஆயத்தமானான்
-
(நாயொத்தவன் என்றால் அது நாயைப் பழிப்பதாகும்).
சூழ்ச்சிக்காரர்களால் சுகவாசிகளால் கணக்கிடவியலா \
அணுக்கள் அண்டசராசரமெங்கும்
அடர்ந்திருக்கக்
கண்டவரே விண்டிராத
போது
காணாக்கிராதகர்களுக்கு ஏது விமோசனம்?
விண்டவனைச் சுண்டைக்காயாக்கி உதைத்துப் பந்தாட
நீளும் கால்களில்
ஆலகால நஞ்சின் நீலம் பரவும்
ஆங்கே பாரதியின் வரிகளில் அதிரும் வான்:
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான்
போவான் ஐயோன்னு போவான்.”
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.