[அண்மையில் மறைந்த எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான தி.சு.சதாசிவம் அவர்களின் நினைவாக எழுத்தாளர் பாவண்ணனால் எழுதப்பட்டு , திண்ணை இணைய இதழில் பிரசுரமான கட்டுரையிது. - பதிவுகள்] எண்பதுகளின் பிற்பகுதியில் கொப்பள என்ற ஊரிலிருந்து கதக் என்னும் ஊர்வரைக்கும் கேபிள் புதைக்கும் வேலைக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டிருந்தேன். இரண்டு ஊர்களுக்கும் இடையில் லக்குண்டி என்னும் சிற்றூர் இருக்கிறது. பருத்தியும் சோளமும் விளையும் கரிசல் மண்ணைக் கொண்ட சிற்றூர். ஊருக்கு நடுவில் அழகான ஏரியொன்றும் சமணக்கோவில் ஒன்றும் உண்டு. அதையொட்டித்தான் நாங்கள் எங்களுடைய கூடாரத்தை அமைத்திருந்தோம். பொழுது சாய்ந்தபிறகுதான் வேலையிலிருந்து திரும்புவோம். பிறகு ஒரு குளியல். அதற்கப்புறம் நண்பர்களோடு பேசியபடியே ஒரு நடை. எளிய இரவு உணவு. உணவை முடித்ததுமே நண்பர்கள் மீண்டுமொரு நடைக்குத் தயாராவார்கள். நான் எனது கூடாரத்துக்குள் சென்றுவிடுவேன். லாந்தர் விளக்கெரியும் ஒரு சிறிய எழுத்துமேசையின் முன்பு அமர்ந்து படிக்கவோ அல்லது எழுதவோ, அக்கணத்தின் மனநிலைக்குத் தகுந்தபடி செய்வேன். அந்த ஊரில் இருக்கும்போதுதான் பெங்களூரிலிருந்து இயங்கிக்கொண்டிருந்த காவ்யா பதிப்பகத்தின் தொடர்பு கிடைத்தது. இங்கே இன்று என்னும் இதழையும் வேறு சில சிறுகதைத்தொகுதிகளையும் நாவல்களையும் காவ்யாவிடமிருந்து வரவழைத்துப் படித்தேன். அவற்றுள் ஒன்று சம்ஸ்காரா என்னும் கன்னட நாவலின் தமிழ்மொழிபெயர்ப்பு.
தி.சு.சதாசிவம் என்னும் பெயரை அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தேன். அந்த நாவலின் திரைவடிவத்தை ஏற்கனவே பார்த்திருந்ததால், அந்த நூலையே முதலில் படிக்கலாம் என்ற எண்ணத்தில் உடனே படிக்கத் தொடங்கினேன். அதுவரையில் தமிழில் வெளிவந்த கன்னட மொழிபெயர்ப்புகளை ஹேமா ஆனந்ததீர்த்தன், சீதாதேவி, சித்தலிங்கையா என்னும் பெயர்களில் மட்டுமே பார்த்துப் பழகிய என் கண்களுக்கு அந்தப் பெயர் புதுமையாக இருந்தது. காவ்யா வழியாக ஒரு புதிய மொழிபெயர்ப்பாளர் தமிழுக்குக் கிடைத்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டேன். ஒரு கோயில் தூண் சிற்பத்தை அட்டைப்படமாகக் கொண்டிருந்தது அந்தப் புத்தகம். வாசிப்பவர்களையெல்லாம் வசீகரிக்கிற உள்ளடக்கமான மரபுக்கும் புதுமைக்குமான மோதல்தான் அந்த நாவலின் களம். மரணமடைந்துபோன ஒருவனுடைய இறுதிச்சடங்கையொட்டி இப்படியெல்லாம் பிரச்சனைகள் முளைக்குமா என திகைக்கவைத்த நாவல். சடங்குகளைப்பற்றியோ மரபுகளைப்பற்றியோ சாதி உயர்வுபற்றியோ துளியும் கவலையே படாதவன் இறந்துபோகிறான். எல்லாவற்றையும்பற்றிக் கவலைப்படுகிற கூட்டம் அவனுக்கு இறுதிச்சடங்கை நடத்தலாமா, நடத்தலாம் என்றால் எப்படி நடத்துவது என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாமல் குழம்பித் தவிக்கிறது. ஒரே அமர்வில் அந்த நாவலை படித்துமுடித்ததற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உண்டு. நாவலின் களம் ஒரு காரணம். பிராமணியத்தை கன்னட மண் எப்படி அணுகுகிறது என்னும் பதிவை அறிந்துகொள்கிற ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக அந்தக் களம் கட்டமைக்கப்பட்டிருந்தது. சதாசிவத்தின் தங்குதடையற்ற மொழிபெயர்ப்பு இன்னொரு காரணம். எந்த இடத்திலும் பிசிறுகளே தட்டுப்படாத மொழிபெயர்ப்பு. சதாசிவத்தை முதலில் காவ்யா சண்முகசுந்தரத்தோடு பணிபுரிகிற யாரோ ஒரு விரிவுரையாளராகத்தான் இருக்கவேண்டும் என்று அப்போது நினைத்துக்கொண்டேன். நேரில் சந்தித்துப் பேசிய பிறகுதான் அவர் இந்தியத் தொலைபேசித் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
ஊர் ஊராக அலைந்து திரிந்து, கேபிள் புதைக்கிற மரபே சட்டென்று மாறி நுண்ணலை கோபுர நாகரிகம் உருவாகி வளர்ந்து நிலைபெற்ற காலத்தில், நான் பெங்களூருக்கு மாற்றலாகி வந்துவிட்டேன். அதே நேரத்தில் ஆரோக்கியத்தை முன்னிட்டு இடமாற்றல் பெற்று சதாசிவம் பெங்களூரிலிருந்து சென்னைக்குக் குடியேறிவிட்டார். அதனால் அவரை பெங்களூரில் சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. கிட்டத்தட்ட அதற்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்துத்தான் நான் அவரைச் சந்தித்தேன். அதற்குள் அவர் பல படைப்புகளை மொழிபெயர்த்து சிறந்த மொழிபெயர்ப்பாளராக தமிழ்ச்சூழலில் தன்னை நிறுவிவிட்டிருந்தார். அவருடைய ஆர்வம் மொழிபெயர்ப்புகளைக் கடந்து, நாடகம், திரைப்படம் என பல தளங்களிலும் விரிவடைந்து செல்லும் ஒன்றாக இருந்தது.
சாரா அபுபக்கர் என்னும் கன்னட நாவலாசிரியர் எழுதிய சந்திரகிரி ஆற்றங்கரையில் என்னும் நாவலை தமிழில் மொழிபெயர்த்ததற்காக அவருக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. அதையொட்டி, பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் ஒரு பாராட்டுவிழாக் கூட்டத்தை நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விழாவுக்கு அவர் வந்திருந்தார். அந்த விழாவில்தான் நான் அவரை முதன்முதலாகச் சந்தித்தேன். தமிழவன், நஞ்சுண்டன், கிருஷ்ணசாமி, இறையடியான், நான் சண்முகசுந்தரம் என அனைவரும் அந்த நிகழ்ச்சியில் அவரை வாழ்த்திப் பேசினோம். சம்ஸ்காரா நாவலில் இடம்பெற்றிருக்கும் அந்நிகழ்ச்சியில் சில மூலப்பகுதிகளையும் தமிழாக்கப்பகுதிகளையும் மாறிமாறிப் படித்துக் காட்டிய நஞ்சுண்டன், அவற்றில் வெளிப்பட்டிருக்கும் சதாசிவத்தின் நேர்த்தியான உழைப்பை மிக உயர்வாகப் பாராட்டிப் பேசினார். நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, ஏறக்குறைய இரண்டுமணிநேரத்துக்கும் மேலாக, தமிழ்ச்சங்கத்துக்கு எதிரில் இருந்த ஏரிக்கரையோரமாக அமர்ந்து நானும் அவரும் பேசிக்கொண்டிருந்தோம். அவருக்கு இலக்கியத்தைப்போலவே தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் சமமான அளவில் ஈடுபாடு இருந்தது. கன்னடச் சூழலில் இயங்கிவரும் சமுதாயா நாடகக்குழுவைப் போலவும் நீநாசம் நாடகக்குழுவைப் போலவும் தமிழில் அர்ப்பணிப்புணர்வுள்ள ஒரு நாடகக்குழு இல்லாத குறையைச் சுட்டிக்காட்டி, ஆற்றாமையோடு அன்று பேசினார். ப்ரெக்ட் எழுதிய ஒரு நாடகத்தையும் வேறு சில ஜெர்மானிய நாடகங்களையும் மொழிபெயர்த்துவைத்திருப்பதாகச் சொன்னார். அவற்றை மேடையேற்றவும் குழுக்கள் இல்லை, அவற்றை நூலாக வெளியிடவும் பதிப்பகங்கள் முன்வரவில்லை என்று வருத்தத்தோடு பகிர்ந்துகொண்டார். கிருஷ்ண ஆலனஹள்ளி, பூரணசந்திர தேஜஸ்வி, மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், தேவனூரு மகாதேவ என எண்ணற்றோரின் பல சிறந்த படைப்புகளையெல்லாம் அப்போதே அவர் மொழிபெயர்த்து கையெழுத்துப் பிரதிகளாக தயார்செய்து வைத்திருப்பதாகச் சொன்னார். மொழிபெயர்ப்புக்கான தக்க ஊதியம் கொடுத்து, மூல ஆசிரியர்களுக்கும் கெளரவமான ஒரு உரிமைத்தொகையை வழங்கி, நல்ல முறையில் வெளியிடக்கூடிய சரியான பதிப்பகம் அமையாததால் அவற்றைப் பிரசுரம் செய்ய இயலாதபடி உள்ளதென்று வருத்தத்தோடு சொன்னார். அவருடைய வருத்தமான மனநிலையை மாற்றும் விதமாக, தன் இளமைக்கால அனுபவங்களை அவர் பேசும் விதமாக சில கேள்விகளைக் கேட்டு, பேச்சின் திசையைத் திருப்பிவிட்டேன் நான். உடனே அவர் மிக விரிவாகப் பேசத் தொடங்கிவிட்டார். தன் இளமைக்காலம், படிப்பு, திருப்பத்தூரிலிருந்து பெங்களூருக்குக் குடியேறிய பின்னணி, கன்னடம் மட்டுமன்றி, மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளை சுயமான ஆர்வத்தின் காரணமாக பிழையறக் கற்றுத் தேர்ந்த வேகம் எனச் சொல்லிக்கொண்டே சென்றார். சில ஆண்டுகள் கழிந்த பிறகு, இரண்டாயிரத்துக்குப் பிறகு, இதே கேள்விகளை மீண்டும் அவரிடம் கேட்டு, ஒரு விரிவான நேர்காணலை நிகழ்த்தினேன். அது திசையெட்டும் என்னும் மொழிபெயர்ப்புக்கான காலாண்டிதழில் வெளிவந்தது.
சோமனின் உடுக்கை, பார்வதிபுரம், கார்வலோவின் தேடல் ஆகியவை அவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்த முக்கியமான கன்னட நாவல்கள். கடவுளின் குறும்பு என்பது அவர் மொழிபெயர்த்த மலையாள நாவல். மொகள்ளி கணேஷ், எஸ்.திவாகர் ஆகிய கன்னடச் சிறுகதையாசிரியர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறுகதைளை மொழிபெயர்த்து, தனித்தொகுதிகளாகவே வெளிவரும்படி செய்தார். ரோஷமன், இகிரு ஆகிய திரைப்படங்களின் திரைக்கதைவடிவங்களும் அவருடைய மொழியாக்கத்தில் வெளிவந்தன.
நான்கு முழுநீள வெள்ளைத்தாளில் நான் எழுதக்கூடிய விஷயத்தை ஒரே ஒரு உள்நாட்டுக் கடிதத்தில் எழுதிவிடும் ஆற்றல் உள்ளவர் சதாசிவம். அவ்வளவு சிக்கனம். அரிசிமணிகளை வரிசையாக அடுக்கியதுபோன்ற சின்னச்சின்ன எழுத்துகள். அடித்தல் திருத்தலே இல்லாத வாக்கியங்களின் வரிசை. பார்ப்பதற்கு எறும்புகள் ஊர்ந்துசெல்வதுபோல இருக்கும். புரிந்துகொள்ள முடியாதபடி ஒரே ஓர் எழுத்தைக்கூட அவருடைய வாக்கியத்தில் கண்டுபிடிக்கமுடியாது. அவ்வளவு நேர்த்தி. அவ்வளவு கச்சிதம். அவ்வளவு தெளிவு.
சென்னையில் முதன்முதலாக நான் அவரைத் தேடிச் சென்று பார்த்தபோது, அவர் சாலிகிராம் பகுதியில் குடியிருந்தார். அச்சமயத்தில் பொழிந்த பெருமழையின் வெள்ளம் வீட்டுக்குள் புகுந்து, தரைத்தளத்தில் அவர் சேமித்துவைத்திருந்த கையெழுத்துப் பிரதிகளை நனைத்து வீணாக்கிவிட்டதென்று வருத்தம் தோயச் சொன்னார். தன் சொத்துகளையெல்லாம் இழந்தபோதுகூட, அந்த அளவுக்கு வருத்தப்பட்டதில்லை என்று சொல்லிவிட்டு மெளனத்தில் ஆழ்ந்துவிட்டார். பிறகுதான், அப்பகுதியிலிருந்து சின்மயா நகருக்குள் குடிசென்றார்கள். அதுவரை தான் மொழிபெயர்த்ததைவிட மேலும் சிறப்பான ஒன்றை மொழிபெயர்க்கும் ஆர்வம் குடிகொண்டவராக இருந்தார். சில கன்னடப் புத்தகங்களை பெங்களூரிலிருந்து வாங்கியனுப்பும்படி கேட்டிருந்தார். எந்தவொரு நல்ல படைப்பைப் படித்ததுமே, அதை தமிழில் மொழிபெயர்த்தால் நன்றாக இருக்குமே என்று ஆதங்கத்தோடு கடிதம் எழுதுவார். அப்போது அவருடைய கடிதங்களில் வெளிப்படும் உற்சாகத்துக்கு ஈடு இணையே இருந்ததில்லை.
சிவராம காரந்த்தின் ”பித்து மனத்தின் பத்து முகங்கள்” சுயசரிதையை மொழிபெயர்க்க அவர் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அந்தப் புத்தகம் என் வீட்டு நூலகத்திலேயே இருந்ததால், அதை உடனடியாகவே எடுத்துவந்து கொடுத்தேன். ஆனால் மனத்தில் பொங்கிய உற்சாகத்துக்கு இணையாக, அவர் உடல் உழைக்க மறுத்தது. புரதச்சத்தை ஏற்றுக்கொள்ள இயலாதபடி ஒரு விசித்திரமான நோய் அவரைத் தாக்கி, அது சோர்வென்னும் பள்ளத்தில் அவரைத் தள்ளிவிட்டது. அதிலிருந்து அவரால் மீளவே முடியவில்லை. பத்து வரிகள் படித்து எழுதுவதற்குள் கண்களும் முதுகும் சோர்ந்துபோகின்றன என்று சொன்னார். காரந்தரின் வாழ்க்கைவரலாற்றை மொழிபெயர்ப்பதன் வழியாக அச்சோர்வை வெற்றிகொள்ள முயற்சி செய்யப்போவதாகச் சொன்னார்.
ஒரு சில வாரங்களுக்குப் பிறகு, தொலைபேசியில் பேசியபோது, சுயசரிதையைப் படித்துக்கொண்டிருப்பதாகவும், படிக்கப்படிக்க தன்னுடைய தன்னம்பிக்கையின் அளவு பெருகிக்கொண்டே போகிறது என்றும் சொன்னார். படித்ததில் பிடித்த பகுதிகளை நினைவிலிருந்து எடுத்துப் பேசினார். அவருடைய அசைபோடுதல் எனக்குப் பிடித்திருந்தது. சரி, நம் முயற்சி வேலை செய்யத் தொடங்கிவிட்டது, இனி செய்யாமல் விடமாட்டார் என்று எண்ணியிருந்தேன்.
ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. பேச்சுவாக்கில், எவ்வளவு தொலைவுக்கு மொழிபெயர்ப்புவேலை முன்னேறி இருக்கிறது என்று ஆவலோடு கேட்டேன். அவர் ஒரு கசப்பான புன்னகையைச் சிந்தினார். ”இமயமலையையே தூக்கிவிடவேண்டும் என்று ஆசையாய்த்தான் இருக்கிறது, எதார்த்தத்தில் ஒரு பேனாவை தொடர்ச்சியாக ஐந்து நிமிடம் பிடிக்கக்கூட முடியவில்லை” என்று சொல்லி பெருமூச்சு வாங்கினார். ஒரு நிமிட நேரம் மெளனம். பிறகு மெதுவான குரலில் “வேண்டுமானால், அந்தப் புத்தகத்தை நீங்கள் கொண்டு செல்லலாம்” என்று சொன்னார். ”உடனடியாக, அப்படிப்பட்ட அவசர முடிவோடு மனம் சோர்ந்துபோய்விடக்கூடாது. உங்களால் முடியும், பொறுமையாகச் செய்யுங்கள். ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என்று கணக்கு வைத்துக்கொண்டால் கூட ஓராண்டுக்குள் செய்து முடித்துவிடலாம்” என்று ஆறுதலாகச் சொல்லிவிட்டு அவர் முகத்தைப் பார்த்தேன். அவர் சிரித்தபடி சிறிதுநேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு தலையைக் குனிந்துகொண்டார். ”தமிழுலகம் அவசியமாக அறிந்துகொள்ளவேண்டிய ஒரு புத்தகம் இது. இதை நீங்கள் கண்டிப்பாகச் செய்யுங்கள்” என்று மறுபடியும் வலியுறுத்தினேன்.
இதற்கிடையில் நானே இடமாற்றம் பெற்று சென்னைக்கு வந்தேன். ஓய்வு நாளொன்றில் அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அப்போதும் சிவராம காரந்த்தைப்பற்றித்தான் நேரம் காலம் கரைவது தெரியாமல் பேசிக்கொண்டே இருந்தார். ”ஆரம்பித்துவிட்டீர்களா?” என்று ஆவலோடு கேட்டேன். “இல்லை, வாசிக்க இன்னும் கொஞ்ச பக்கங்கள் உள்ளன. அதை முடித்துவிட்டு தொடங்கிவிடலாம்” என்று பதில் சொன்னார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னால் நண்பர் மகாலிங்கம் சென்னைக்கு வந்திருந்தார். ஒருநாள் மாலையில் தொலைபேசியில் சொல்லிவிட்டு, நானும் அவரும் சென்றிருந்தோம். சிவராம காரந்த் நூலைப்பற்றிய என் கேள்விக்கு மீண்டும் அவர் பழைய பதிலையே சொல்லிவிட்டுப் புன்னகைத்தார். ”2013 ஆம் ஆண்டுக்கான வேலை இது என்கிற எண்ணத்தோடு தொடங்கி, விரைவில் முடித்துவிடுங்கள்” என்று சொன்னேன். ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக அவர் தன்னுடைய பழகிய பழைய புன்னகையையே பதிலாக வழங்கினார். சந்திக்கிற ஒவ்வொருமுறையும் இதே கேள்வியை அவரிடம் கேட்பதை நினைத்து எனக்கே வருத்தமாக இருந்தது. அடுத்தமுறை சந்திக்கும்போது, திரைப்படம், நாடகம், சிறுகதைகள், அரசியல் என எதைப்பற்றிப் பேசினாலும் பேசலாமே தவிர, தப்பித்தவறிக்கூட சிவராம காரந்தரின் வாழ்க்கைவரலாற்று மொழிபெயர்ப்பைப்பற்றிய பேச்சைமட்டும் எடுக்கவே கூடாது என்று முடிவெடுத்தேன். அவராகவே இந்தப் பேச்சைத் தொடங்கும்வரை காத்திருப்பதுதான் நல்லது என்று எண்ணிக்கொண்டேன்.
05.02.2012 அன்று நான் வார விடுமுறைக்காக பெங்களூருக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் அவருடைய மரணச்செய்தியை நண்பர்கள் தொலைபேசியில் அழைத்துச் சொன்னார்கள். துயரமும் அதிர்ச்சியும் ஒருகணம் எதையும் சிந்திக்க இயலாதபடி துவளவைத்தன. எவ்வளவு நீண்ட மகத்தான வாழ்வு. ஒரே கணத்தில் எதுவுமே இல்லை என்று சட்டென்று முடிவடைந்துவிட்டது. பெருமூச்சோடு தரையை வெறிச்சிட்டிருந்த அச்சமயத்தில் சிவராம காரந்தரின் முகமும் சதாசிவத்தின் முகமும் மாறிமாறி மனத்தில் நிழலாடின. இனி ஒருபோதும் காரந்தரின் வாழ்க்கைவரலாற்றை மொழிபெயர்க்கத் தொடங்கிவிட்டீர்களா என்று உரையாடலைத் தொடங்கவே முடியாதபடி மரணம் அவரை அள்ளிக்கொண்டு போய்விட்டது. என் சுய கட்டுப்பாட்டுக்கு பொருளே இல்லாமல் போய்விட்டது. அவராகப் பேசவும் இனி வாய்ப்பில்லை. நானாக ஆரம்பித்துவைத்துக் கேட்கவும் வழியில்லை
நன்றி: திண்ணை