மராத்தி, மேற்கு இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் பேசப்படும் ஓர் இந்தோ-ஆரிய மொழியாகும். இம்மொழியானது அங்கு அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்படுகின்றது. உலகளவில் தொண்ணூறு மில்லியன் மக்களால் பேசப்படும் மொழி எனும் சிறப்பைப் பெற்றுக் காணப்படுகின்றது.
இந்திய மக்களால் பயன்படுத்தப்படும் மொழிகளுள் மராத்தி நான்காவது இடத்தைப் பெற்றுத் திகழ்கின்றது. இம்மொழி பாலி என்ற மொழியின் வழியாகச் சமசுகிருதத்திலிருந்து வந்தது. இது மகாராஷ்டி அல்லது மகாராஷ்டிரா அல்லது அபப்ரம்ஸா என அழைக்கப்பட்டு வந்தது. பின்பு அதன் பேச்சு மொழியில் ஏற்பட்ட படிப்படியான மாறுதல்களே இன்றைய மராத்தி மொழி உருவாக வழிவகுத்தது.
தோற்றம்
மராத்தி மொழியின் தோற்றம் கி.பி.8ஆம் நூற்றாண்டு எனச் சுட்டப்படுகின்றது. நவீனகால மராத்தி பிராகிருத மகராஷ்ட்ரி மொழியிலிருந்து வந்தது. கி.பி.875ஆம் ஆண்டு வரை சாதவாகனப் பேரரசின் அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது மற்ற பிராகிருத மொழிகளைக் காட்டிலும் சிறப்பு வாய்ந்த மொழியாக மேற்கு, தென்னிந்தியாவில் பேசப்பட்டு வந்தது. மேலும் இது மகாராஷ்ட்ரி அபபிராம்சா என அழைக்கப்பட்டது. மகாராஷ்ட்ராவில் வாழ்கின்ற ஐம்பது மில்லியனுக்கு மேலான மக்களுக்கு மராத்தி தாய்மொழியாகவும் திகழ்கிறது.
மகாராஷ்ட்ரிரா எனும் பெயர் மகாபாரதத்திலோ, இராமயணத்திலோ இடம் பெறவில்லை. கி.பி.17ஆம் நூற்றாண்டில் சீனப்பயணி யுவாங் சுவாங் இந்தப் பகுதியை மா-ஹா-லா-சொ (ma-ha-la-cho) என்று குறிப்பிடுகின்றார். கி.பி.10ஆம் நூற்றாண்டில் அல்பர்னி மகாராஷ்டிராவை மார்காட்டா (Marhatta) என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாராத்தி மொழியின் தோற்றத்தைப் பற்றி அறிஞர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்துள்ளன. அதாவது, மராத்தி மொழி சமசுகிருதத்திலிருந்து வளர்ச்சியடைந்தது என சி.வை.வைத்யாவும் (C.V.Vaidya), அபபிரம்சாவிலிருந்து வளர்ச்சியடைந்தது என ஸ்டென் க்னோவும் (Sten Knonow) கூறுகின்றனர். பலர் பஞ்ச திராவிட மொழிகளில் ஒன்று எனவும் குறிப்பிடுகின்றனர்.
கைரேயின் (Khaire) கருத்துப்படி (முந்தையப் பேச்சு) மராத்தி மொழியின் பேச்சுமொழிச் சொற்கள் பல தமிழிலிருந்தும் கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளிருந்தும் கடன் வாங்கப்பட்டு யாதவர்களால் பேசப்பட்டதெனக் கூறுகின்றார்.
பெரும்பாலான மக்கள் மராத்தி மொழியானது பிராகிருதத்திலிருந்து வந்தது என்றே கருதுகின்றனர். ‘விஜயாஅதித்ய’ செப்புத்தகடு மற்றும் சரவணபலகோலா (கர்நாடகம்) கல்வெட்டுக்கள் பிராகிருத மொழி என்று சுட்டுகின்றது. மேலும் அது ‘உத்தியோட்டன்’ என்ற சைன மதத்துறவியின் கூற்றுப்படிக் கொங்கனி எனவும் சொல்லப்பட்டது.
கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கு முன் (யாதவா காலத்திற்குமுன்) மராத்தியில் எந்தவொரு படைப்புகளும் இல்லை. அதன்பின் வந்த ஆட்சியிலேஎ மராத்தி அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.
தொன்மை மொழி
கி.பி.1000லிருந்து இந்தோ-ஆரிய மொழிகளில் பெங்காலியோடு மராத்தி மொழியும் மிகப்பழமையான மொழியாகத் திகழ்கிறது. இம்மொழியானது 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆரம்ப காலத்தில் மராத்தி மொழியானது மகாராஷ்ட்ரி , மராத்தி, அல்காத்தி என்ற பெயர்களில் அறியப்பட்டன.
பேசப்படும் இடங்கள்
முதன்முதலில் மராத்தி மொழியானது மகாராஷ்டிராவில் பேசப்பட்டு வந்தது. பின்னர் அண்டை மாநிலமான குஜராத் பரோடா, அகமதாபாத் ஆகிய பெருநகரங்களிலும், மத்திய பிரதேசம், கோவா, கர்நாடக மாநிலங்களான பெல்காம், ஹுப்ளி, தார்வாட், பிடார் ஆகிய இடங்களிலும், யூனியன் பிரதேசங்களான டாமன் – டையூ, தாத்ரா, நாகர்ஹவேலி ஆகிய இடங்களிலும் பேசப்பட்டன. மத்திய பிரதேசத்திலும் கனிசமான அளவில் பேசப்பட்டு வருகிறது. அதே போன்று வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலும் குடியேறிய மகாராஷ்ட்ரியர்கள் மராத்தி மொழியினைப் பேசி வருகின்றனர். அதுமட்டுமின்றி இஸ்ரேல், மாரிட்டஸ் போன்ற நாடுகளிலும் இம்மொழிப் பேசப்பட்டு வருகின்றன.
அலுவலக மொழி
மராத்தி இந்தியாவிலுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் அலுவலக மொழியாக உள்ளது. கோவா மாநிலத்திலும் கொங்கனியோடு மராத்தி மொழியும் அலுவல மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மகாரஷ்டிர பல்கலைக்கழகம் மட்டுமல்லாது குஜராத்திலுள்ள பரோட பல்கலைக்கழகமும், ஆந்திர பிரதேசத்திலுள்ள ஒஸ்மானிய பல்கலைக்கழகமும், கோவாவிலுள்ள பஞ்ஜிம் பல்கலைக்கழகமும் மராத்திய மொழியியலுக்குத் தனித்துறையை உருவாக்கிச் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மராத்திய இலக்கியம்
மராத்திய இலக்கியம் தொடக்கக் காலத்தில் தோற்றம் பெற்றிருப்பினும் அதனுடைய இலக்கியப் போக்கு 13ஆம் நூற்றாண்டில்தான் மலரத் தொடங்கியது. இம்மொழியானது பாலி என்னும் சமசுகிருத மொழியிலிருந்து வந்தது. இது மகாராஷ்டிரா- அபபிரம்சா (Apabharamsa) என்று அழைக்கப்படுகிறது.
மகராஷ்ட்ரி பிராகிருத மொழிகளிலே மிகவும் புகழ்வாய்ந்த மொழியாகும். இம்மொழியானது தென்னிந்தியா மற்றும் வட இந்தியாவில் பெருமளவும் பேசப்படுகிறது. இன்றைய நவீன மொழியில் பெர்சிய மொழியும் செல்வாக்குப் பெற்றிருக்கிறது.
13ஆம் நூற்றாண்டுக்கு முன் மராத்தி மொழியின் நிலை
மராத்தி மொழியின் பழமை, தோற்றம் போன்றவற்றில் புலவர்களிடையே ஒருமித்தக் கருத்து இல்லை. பழங்கால (முந்தைய கால தொடக்கநிலை) மராத்திய எழுத்து வடிவமானது சத்தார இடத்தில் உள்ள விஜயாதித்யா செப்புத் தகட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்திலுள்ள கோமடேஸ்வரர் சிலையின் பாதத்திலிருந்து முதலில் வாசிக்கப்பட்ட கல்வெட்டு எடுத்துள்ளனர். சவுந்தரராஜன் காரவியாலென் ஆகும். தொடக்க காலத்தில் சாதவாகன் பேரரசில் அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்பட்ட மகாராஷ்ரி பிராகிருதத்திலிருந்து மராத்தி மொழி வந்தது என்று புலவர்கள் நம்பினார்கள்.
யாதவர்கள்
மராத்தி இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சியில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. முதல் நிகழ்ச்சியானது தேவகிரியை தலைநகரமாக ஆட்கொண்ட யாதவ அரசு தோன்றியதாகும். யாதவர்கள் தங்கள் வழக்கு மொழியாக மராத்தியைப் பயன்படுத்தினார்.
இரண்டாவது முக்கிய நிகழ்வானது மகானுபாவ்பாந்த், வார்கரி போன்ற மத அமைப்புகள் உருவானதே ஆகும்.
மகானுபாவ்பாந்த்
யாதவர்களின் ஆட்சிக் காலத்தில் மகாராஷ்ட்ரி மெதுவாக மராத்தி வளர்ச்சியடைந்தது. இக்காலத்தில் மிகுதியான ஆன்மீகக் கவிஞர்கள் தோன்றினார்கள்.
சக்ரதார் சுவாமியின் மகானுபாவ் அமைப்பு குறிப்பிடத்தகுந்தது. பாவர்த்தீபிகா எனும் நூலை எழுதிய தியானேஸ்வர் ஆன்மீகக் கவிஞர்களில் மிகப் புகழ்வாய்ந்த கவிஞராகத் திகழ்ந்தார். பாவாத் தீபிகா என்ற நூலானது, தியானேஸ்வரி என்று அனைவராலும் பிரபலமாக அறியப்பட்டது. மகானுபாவ்பாந்த் வார்கரி போன்ற மத அமைப்புகள் தங்களுடைய கொள்கைகளைப் பரப்புவதற்கு மராத்தி மொழி ஊடகமாகச் செயல்பட்டது. இந்த வார்கை அமைப்பில் உள்ளவர்கள் எக்னாத் என்ற வார்கரி ஆன்மீகக் கவியைப் பின்பற்றினார்கள்.
முக்டீஸ்வர் சிறந்த புராணமாக மராத்தி மொழியில் மொழிபெயர்த்தவர். ஆன்மீகக் கவிஞரான துக்காராம் மராத்தி மொழியைச் சிறப்பு வாய்ந்த உயரிய மொழியாக மாற்றினார். மாமேதையான துக்காராமின் கவிதைகள் வியக்கத்தக்க அளவில் மக்களை ஈர்த்தன. அவர் ஒரு தீவிரமான சமூகச் சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தார். சொற்பொருள், தெளிவு, ஊக்கம் போன்றவைகள் இவரின் கவிதைகளின் சிறப்பம்சமாகும்.
மராத்தியின் காலம்
1630- லிருந்து சத்ரபதி சிவாஜி ஆட்சியின் தொடக்க காலத்திலே மராத்திமொழி தன் உயரிய இடத்தைத் திரும்பப்பெற்றது. பின்வந்த அரசர்கள் தனது எல்லையை வடக்கில் டெல்லி வரைக்கும், கிழக்கில் ஒரிசா வரைக்கும், தெற்கில் தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர் வரைக்கும் விரிவுபடுத்தினார்கள். மராத்தியர்களின் இவ்விரிவாக்கம் மராத்தி மொழியைப் பல இடங்களில் பரப்புவதற்கு உதவியாக இருந்தது. முகலாயர்கள் ஆட்சி செய்யப்பட்ட வட இந்தியாவில் இது வழக்கு மொழியாகச் செயல்பட்டு வந்தது. கி.பி.17ஆம் நூற்றாண்டில் சமார்த்தா (Samartha), ராம்தாஸ் (Ramdos) போன்றோர் மராத்தியக் கவிதை மூலம் இலக்கியத்திற்கு தமது பங்களிப்பை அளித்தனர். ஆனால் கி.பி.18ஆம் நூற்றாண்டில் மராத்தியப் பேரரசின் செல்வாக்கு வீழ்ச்சியுற்றது.
18ஆம் நூற்றாண்டு
கி.பி.18ஆம் நூற்றாண்டில் வாமனப்பண்டிட் (Vamanapandit) எழுதிய எதார்த்த தீபிக, ரகுநாத பண்டிட் எழுதிய நளதமயந்தி சுயம்வரா, ஸ்ரீதர் பண்டிட் எழுதிய பாண்டவப் பிரதாப் (Pandava pratap), ஹரிவிஜய் (Hari vijai), ராம்விஜய் (Ramvijay) போன்றவையும் மோரொபந்வால் (Morepanta) எழுதப்பட்ட மகாபாரதம் போன்ற நூல்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்ட படைப்புகளாகும். பேஷ்வா ஆட்சிக்காலத்தில் கிருஷ்ண தயான்வா, ஸ்ரீதர் போன்ற கவிஞர்கள் வாழ்ந்தனர். மகா காவிய வடிவங்களுக்குப் புத்துயிர் ஊட்டுவதாக அமைந்தது.
நவீன காலம் (1800க்கு பின்)
கி.பி.18ஆம் நூற்றாண்டில் இறுதியில் பிரிட்டிஷ் அரசு இந்தியா முழுவதும் தனது ஆட்சியை நிலைநிறுத்தியது. இது அனைத்து இந்திய மொழிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. சிறப்பாகக் கிறித்துவ மதப் போதகர்கள் உள்ளூர் மொழிகளைக் கற்றுக் கொண்டு உரிய முறையில் நிலைப்படுத்துவதற்கு முயற்சி செய்தனர். கிறித்துவ மதப் போதகரான வில்லியம் கிரே என்பவர் மராத்தி இலக்கணம், அறிவியல் அகராதிகள் உருவாகுவதற்கு முக்கியப்பங்கு வகித்தார்.
கி.பி.19ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிரா காலனி ஆதிக்கத்தில் வந்தது. அதனால் கல்வி போன்ற துறையிலும் ஆங்கில மொழியின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. கி.பி.1817ஆம் ஆண்டு ஒரு ஆங்கில நூல் மராத்தியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. கி.பி.1835இல் முதல் மராத்தி செய்தித்தாள் வெளிவந்தது. சமூகச் சீர்த்திருத்த நூல்கள், சில இலக்கியங்களை வெளியிட்டு மராத்தி மொழி பெருகுவதற்கு பத்திரிக்கை சிறந்த முறையில் உதவியது.
மராத்தி மொழியானது மராத்திய நாடகங்களின் வாயிலாகவும் புகழ்பெற்றது. மராத்தி மொழியின் சிறப்பம்சங்களில் ஒன்று மராத்திய நாடகம். அதில் தனித்துவம் மிக்கது சங்கீத நாடகம் (Sangeth Nadak) இது வசந்த் வியாக்யன்மாலா என்று அழைக்கப்படுகிறது. மராத்திய நாட்டுப்புற நடனங்கள் லாவணி(Lavani) என்று அழைக்கப்படுகிறது. தீபாவளிக்கான சிறப்புப் பதிப்புகள் தீபாவளி அன்கா (Diwali anka) என்று அழைக்கப்படுகின்றது.
நவீன மராத்தியக் கவிதையின் தந்தை என்று அழைக்கப்படும் கேசவசத் (Keashavaut) கி.பி.1885ஆம் ஆண்டு முதன்முதலில் தனது முதல் கவிதையை வெளியிட்டார்.
கி.பி.1832ல் முதல் மராத்திய பத்திரிக்கையாகிய தர்பன் (Durban) பாலசாஸ்திரி ஜம்பேவர் என்பவரால் தொடங்கப்பட்டது. கி.பி.1840ல் தீர்க்கத்தரிசன் (Dirghadarshan) என்ற முதல் மராத்திய வெளியீடு தொடங்கப்பட்டது.
கி.பி.20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் மராட்டிய இலக்கியத்தின் வளர்ச்சி சிறப்படைந்திருந்தது. சமுதாய அரசியல் நிகழ்ச்சிகள் மராத்திய இலக்கியம், நாடகம், இசை, திரைப்படம் போன்றவைகள் வளர்ச்சியடைந்தன.
நவீன மராத்திய உரைநடையானது வெவ்வேறு இலக்கிய வடிவங்களான கட்டுரை, சுயசரிதை, புதினம், நாடகம் போன்றவற்றின் வழியாக வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றது.
சிப்லங்கருடைய (Chiplunkar) நிபந்மாலா (கட்டுரைகள்), என்.சி.கேல்ஹார்கருடைய சுயசரிதைகள், ஹரிநாராயணன் ஆப்டேயுடைய புதினங்கள், நாராயண் சித்தாராம் பாத்கே, வி.எஸ்.காண்டேகர், மாமாவரையேர்கள், கிர்லோஷ்யுடைய நாடகங்கள் முக்கியப் படைப்புகளாகும்.
விஜய் டெண்டுல்கர் தன்னுடைய மராத்திய நாடகங்களின் வாயிலாக மகாராஷ்டிராவில் பெரும்புகழ் பெற்றார். பி.எல்.தேஷ்பாண்டே (P.L.Deshpande), டி.கே.ஆட்ரி (D.K.Atre), பிரபோதன்கா தாக்கரே (Prabodhanka Thakray) இவர்களும் மராத்திய நாடகங்களின் மூலம் பெரும்புகழைப் பெற்றார்கள். இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு மராத்தி மொழியானது தேசியளவில் அட்டவணை மொழியாக வரவேற்கப்பட்டது.
வட்டார மொழிகள்
மராத்தி கல்விச் சாலைகளிலும், அச்சு ஊடகங்களிலும் பயன்படும் வட்டார மொழிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்திய ஆய்வாளர்கள் மராத்தி மொழியில் 42 வட்டார மொழிகள் பேசப்படுவதாக வேறுபடுத்தியுள்ளனர். அகிராணி, காண்டேஸி, வார்ஹடி, ஜாடி போலி, வாட்வாலி, சாமவெடி, சதர்ன் இந்தியன் மராத்தி, கொங்கணி போன்றவைகளாகும்.
தொகுப்புரை
•மராத்தி மொழியானது பாலி மொழியின் வழியாகச் சமசுகிருதத்திலிருந்து வந்தது. இது மகாராஷ்ட்ரி, அபப்ரம்ஸா என்று அழைக்கப்பட்டது.
•மகாராஷ்டிராவை, யுவான் சுவாங் மொ-ஹா-லா-சோ என்றும் அல்பருணி மர்காட்டா என்றும் குறிப்பிட்டுள்ளார்.
•மராத்தி மொழியின் தோற்றத்தைப் பற்றி புலவர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பெரும்பாலான மக்கள் மராத்தி மொழி மகாராஷ்டிரி பிராகிருதத்தலிருந்து வந்தது என்றே கருதுகின்றனர்.
•கி.பி.13ஆம் நூற்றாண்டிற்கு முன்பு வரை மராத்தியில் எந்தவொரு படைப்புகளும் தோன்ற வில்லை என்பதை அறியமுடிகிறது.
•மராத்திய மொழி 1500 வருடப் பழமையானது.
•இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மராத்திய மொழி பேசப்பட்டு வருகிறது.
•மகாராஷ்டிர மாநிலத்தின் அலுவலக மொழியாக மராத்தி விளங்குகிறது.
•கி.பி.13ஆம் நூற்றாண்டிலிருந்துதான் மராத்தியில் இலக்கியங்கள் தோற்றம் பெற்றன.
•மராத்திய எழுத்து வடிவமானது ‘சத்கலா’ என்ற இடத்தில் உள்ள விஜயாதித்யா செப்புத் தகட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
•யாதவர்கள் மராத்தியைத் தங்கள் வழக்கு மொழியாகப் பயன்படுத்துகின்றனர்.
•மகானுபாவ் பாந்த, வார்காரி போன்ற மத அமைப்புகள், மராத்தியின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
•கி.பி.1600இல் சத்ரபதி சிவாஜி தனது எல்லையை விரிவுபடுத்தியபோது மராத்தி மொழி பல்வேறு இடங்களிலும் பரவியது.
•கி.பி.17ஆம் நூற்றாண்டில் சமார்த்தா, ராம்தாஸ் போன்ற கவிஞர்கள் தோன்றினர்.
•வாமன பண்டிட், ரகுநாத் பண்டிட், ஸ்ரீதர் பண்டி, ஹரி விஜய், ராம் விஜய் போன்றோரின் படைப்புகள் 18ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்றுத் திகழ்ந்தன.
•நவீன காலத்தில் பிரிட்டிஷ் அரசின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து கிறித்துவ மதப் போதகர்களும் மராத்திய வளர்ச்சிக்குப் பங்காற்றினார்.
•இக்காலத்தில் பத்திரிக்கைகள், வெளியீடுகள், கவிதை, நாடகம், இலக்கியம், திரைப்படம் எனப் பல்வேறு துறைகளின் வாயிலாக மராத்தி மொழி வளர்ச்சி பெற்றது.
•இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு மராத்தியமொழி தேசியளவில் அட்டவணை மொழியாக வரவேற்கப்பட்டது.
•மராத்தி மொழியில் சுமார் 42 வட்டார மொழிகள் பேசப்பட்டு வருகின்றன.
(விக்கிபீடியா ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.)
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
* கட்டுரையாளர் - - சே.முனியசாமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஜெ.பீ. கலை அறிவியல் கல்லூரி, அகரக்கட்டு, ஆய்க்குடி, தென்காசி – 627852 -