'எரிந்து கொண்டிருக்கும் நேரம்' என்னும் கவிஞர் சேரனின் கவிதைகளை லக்சுமி ஹாம்ஸ்றம் (Laksmi Holmstrom) அவர்களின் மொழிபெயர்ப்பில் 'ஆர்க்' வெளியீட்டகம் வெளியிட்டிருந்தது. இதற்காக அப்பதிப்பகத்துக்கு இங்கிலாந்துப் பேனா அமைப்பினரின் (PEN - UK) மொழிபெயர்ப்பு நூல்களுக்கான 2012ற்குரிய விருது கிடைத்துள்ளது. லக்சுமி ஹாம்ஸ்றம் அவ்ர்களுக்குக் கனடாவின் 2007ற்கான இயல்விருது கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்த விருது கிடைத்தபோது எழுத்தாளர் ஜெயமோகன் மிகவும் கடுமையாக அந்த விருதினையும், லக்சுமி ஹாம்ஸ்றம் அவர்களின் அதற்கான தகுதி பற்றியும், அவரை அவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் பற்றியும் விமர்சித்துத் தனது வலைப்பதிவில் எழுதியிருந்தார். அந்நடுவர்களில் நானுமொருவனாக இருந்ததனால் அது பற்றி பதிவுகள் இணைய இதழில் எழுதிய பதில் கட்டுரைகளிலொன்றினை ஒரு பதிவுக்காக இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதியில் பகிர்ந்துகொள்கின்றேன்.
'இயல்விருது' பற்றிய ஜெயமோகனின் கட்டுரை பற்றி....
- வ.ந.கிரிதரன் -
மதிப்புக்குரிய ஜெயமோகனுக்கு, என கடிதத்திற்கான உங்களது பதிற் கட்டுரை பற்றியதொரு சிறு விளக்கமிக் கட்டுரை. மேற்படி உங்களது பதிற் கட்டுரையில் பின்வரும் கருத்துகளைக் கூறியிருக்கின்றீர்கள்:
1. 'எந்தவிருதைப்பற்றி குறைசொன்னாலும் தேர்வுமுறையின் ஒழுங்கமைப்பு பற்றிய பதில் வரும். ஆனால் ஓர் அமைப்பின் உள்ளக்கிடக்கையே விருதுகளாக ஆகிறது.... இயல் விருதின் தெரிவுமுறை முற்றிலுமாக எனக்குத்தெரியும்.'
மேலுள்ள கூற்று எனக்கு வியப்பினைத் தருகின்றது. இயல்விருது பற்றிய உங்களது கண்டனத்தில் இம்முறை நடுவர்களாகப் பங்குபற்றியவர்களைப் பற்றி மிகவும் காரசாரமாக கண்டித்திருக்கின்றீர்கள். ஏதோ இந்த நடுவர்களெல்லாரும் தாமாகவே இந்த வாய்ப்புக்குக் காத்திருந்தவர்கள் போலவும், அவர்களது தெரிவில் ஏதோ மறைமுகமான நோக்கங்களிருப்பது போலவுமொரு தொனி தென்படுகிறது. அதே சமயம் இயல்விருதின் தெரிவுமுறை உங்களுக்கு முற்றிலுமாகத் தெரியுமெனவும் எழுதியிருந்தீர்கள். உண்மையைக் கூறப் போனால் எனக்கே இந்தத் தேர்வு முறை என்னிடம் என் கருத்துகளுக்காக அறுவர் கொண்ட இறுதிப் பட்டியலை அனுப்பிய போதுதான் தெரியும். அதுவரையில் நான் பரிந்துரை செய்யப்பட்ட அனைவரினதும் பட்டியலிலிருந்து தெரிவு செய்வதுதான் நடுவர்களின் வேலையென்று எண்ணியிருந்தேன். ஆனால் அறுவர் பெயர்களைக் கொண்ட இறுதிப் பட்டியலைப் பார்த்தபொழுதுதான் இயல்விருது அமைப்பினரால் தேரிந்தெடுக்கப்பட்ட பட்டியலிருந்து அறுவரை 1, 2,3...6 என்னும் தர வரிசையில் தெரிவு செய்வதுதான் நடுவர்களின் பணியென்பதைத் தெரிந்து கொண்டேன். இது பற்றிய என் சந்தேகத்தினையும் குழுவினரிடம் கேட்டிருந்தேன். அதன்பின்னர் ஏற்கனவே நடுவராக இருக்க ஒப்புக் கொண்டதின் அடிப்படையில் எனக்குத் தரப்பட்ட பட்டியலிருந்து என் தேர்வினை 'தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் விருதுக்கான விதிகளுக்கமைய', என் சிற்றறிவுக்கேற்ப தெரிவு செய்திருந்தேன். இந்த விடயத்தில் நீங்கள் நடுவர்களையும் அமைப்பையும் ஒன்றாக நினைத்துக் குழம்பியுள்ளீர்கள் போல் தெரிகிறது. நடுவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட பட்டியலிருந்து தத்தமது அறிவு, அனுபவத்திற்கேற்ப தெரிவினைத் செய்துள்ளார்களென்றே நான் கருதுகின்றேன். அவ்விதம்தான் நான் என் தெரிவினைச் செய்திருந்தேன். மேலும் நீங்கள் 'ஓர் அமைப்பின் உள்ளக்கிடக்கையே விருதுகளாக ஆகிறது' என்று கூறும்பொழுது நான் நீங்கள் இயல்விருதுக் குழுவினரையே கருதுவதாகக் கருதிக் கொள்கின்றேன். நடுவர்களையல்லவென்றும் கருதிக் கொள்கின்றேன். நீங்கள் உங்கள் கண்டனத்தை, கேள்விகளைத் தெரிவித்திருக்க வேண்டியது இறுதிப் பட்டியலையும், நடுவர்களையும் தெரிவு செய்த இயல்விருது அமைப்பினரிடம்தான். அவர்களிடம்தான் உங்களது கடுமையான ஆட்சேபத்தினைத் தெரிவித்திருக்க வேண்டும். 'இயல் விருதின் தெரிவுமுறை முற்றிலுமாக எனக்குத்தெரியும்' என்றும் தெரிவித்திருக்கின்றீர்கள். அவ்விதம் தெரிந்த நீங்கள் இதுவரையில் ஏன் அந்த விடயத்தைப் பற்றி இதுவரையில் வாயே திறக்கவில்லை. அவ்விதம் திறந்திருந்தீர்களென்றால் என்னைப் போன்றவர்களுக்கு முன்பே இந்த நடைமுறை இருப்பது தெரிந்திருக்கும். எம்மிடம் நடுவர்களாக இருப்பதற்கு எம் சம்மதத்தைக் கேட்டும் இயல்விருதுக் குழு கடிதம் எழுதியபோதே இதுபற்றி என் விளக்கத்தைக் கேட்டிருக்க முடியும்.
2. 'உங்கள் தனிப்பட்ட தேர்வில் உங்களுடைய தேர்ச்சியின்மை வெளிப்படுகிறதோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகிறது. நீங்கள் லட்சுமி ஹாம்ஸ்டம் குறித்து சொல்வனவே அதற்குச் சான்று. நண்பரே, தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு பேராசிரியரைப்பற்றியும் இதைவிடச் சிறப்பான ‘அதிகாரபூர்வ’ ஆதாரங்கள் இருக்கும்.' என்றிருக்கின்றீர்கள். என் சிற்றறிவுக்குச் சரியென்று பட்டதை, என்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாகச் செய்திருக்கின்றேன். இன்னுமோரிடத்தில் ' 'உங்கள் கடிதம் சொல்லும் ஒரு வேதனையான நகைச்சுவையை எண்ணி சிரித்தேன். உலகளாவிய தமிழர்களுக்கு தமிழிலக்கியத்தை ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் ஒரு அம்மணி அறுமுகம் செய்து வைக்கிறாள்' என்றும் கூறியிருக்கின்றீர்கள். அத்துடன் 'ஒரு நான்குநூல்களை மொழிபெயர்த்த ஒரு மொழிபெயர்ப்பாளரை' என்று குறிப்பிட்டு திருமதி லட்சுமி ஹாம்ஸ்டமி பங்களிப்பினைக் குறைத்தும் காட்டியிருக்கின்றீர்கள். முதலாவது உலகளாவிய தமிழர்களுக்காக அவர் ஆங்கில மொழிபெயர்ப்பினைச் செய்யவில்லை. உலகமெங்கும் பரந்து வாழும் ஆங்கிலம் பேசும் மக்களுக்காகத் (அவர்களுள் ஆங்கிலம் பேசும் தமிழர்களும் அடங்குவர்) தான் செய்திருக்கின்றார். மேலும் உலக அரங்கில் தமிழ் இலக்கிய முயற்சிகளை (பழந்தமிழ் மற்றும் நவீனத்துவ) ஏனையவர்கள் அறிவதற்கு, தமிழ் எழுத்தாளர்களைச் சர்வதேசத் தளத்தில் கணிப்பிடுவதற்கு இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் உதவி செய்யுமென்று நான் கருதுகின்றேன். அத்துடன் நீங்கள் கூட உங்களது கட்டுரைகள், நூல்களில் உங்களுக்குப் பிடித்த ஒருசில படைப்பாளிகள் பற்றியே எழுதி வருகிறீர்கள். ஒருவிதமான குழுமனப்பான்மை உங்கள் எழுத்துகளில் கூட இருக்கின்றதாக நான் தனிப்பட்டரீதியில் கருதுகின்றேன். இந்தவிடயத்தில் தன்னைக் குறுகியவட்டத்தினுள் சிக்க வைக்காது திருமதி லக்சுமி அவர்கள் சு.ரா, மெளனி, ந.முத்துசாமி , அசோகமித்திரன், புதுமைப்பித்தன், அம்பை, பாமாவெனத் தமிழ் இலக்கிய உலகின் பல்வேறு போக்கினரையும் கருத்தில்கொண்டு மொழிபெயர்த்திருக்கின்றார். அந்த மனப்பான்மை எனக்கு முக்கியமானதாகப் பட்டது. அவ்விதமான மனப்பான்மை தமிழ் இலக்கியச் சூழலின் சரியான வடிவத்தை சர்வதேச இலக்கியப் பிரியர்களுக்கு எடுத்துக் காட்டுமென்பதென் தாழ்மையான அபிப்பிராயம்.
3. 'நானே சொல்கிறேன். நாற்பதாண்டுக்காலமாக தமிழ் பண்பாட்டு ஆய்வில் ஒரு புதிய அலைக்காக உழைத்தவர் தொ.பரமசிவம். நமக்கு சம்பிரதாயமான ஒரு வரலாற்று ஆய்வுமுறையே இருந்துவந்தது. கல்வெட்டுச்சான்றுகள். தொல்பொருளாதாரங்கள் மற்றும் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே வரலாற்றை வகுப்பது. அது வரலாற்றை மேலிருந்து எழுதுவது. பண்பாட்டு வரலாற்றை கீழிருந்து எழுதும் ஒரு பெரு முயற்சியின் முன்னோடி தொ.பரமசிவம்...... தொ.பரமசிவம் பற்றி ஆங்கிலத்திலும் இணையதளத்திலும் தேடினால் கிடைக்காது. பல்கலைக் கழக அங்கீகாரங்கள் முன்னரே வாங்கிய விருதுகள் இல்லை. ஏன், அவருக்குப் பின் அவரது பாணியில் ஆய்வைச் செய்த சி.ஜெ.·புல்லர் போன்ற வெளிநாட்டினரைப்பற்றி நீங்கள் தேடினால் கிடைப்பதன் நூறில் ஒருபங்கு கூட அவரைப்பற்றி கிடைக்காது. நண்பரே , தமிழ் முன்னோடிகளை அளக்க அது அல்ல அளவுகோல்..' என்றும் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். ஆனால் வெகுசன சஞ்சிகைகள், இணைய இதழ்கள் மற்றும் சிற்றிதழ்களிலெல்லாம் நீங்கள் வளர்க்கும் நாய்க்குட்டிகள், பாலாவுடனான திரைப்பட முயற்சிகள், சினிமா விமர்சனக் குறிப்புகள் பற்றியெல்லாம் அதிக அளவில் எழுதிவரும் உங்களது நூல்களில், கட்டுரைகளில் இவர்களுக்கேன் இருட்டடிப்பு. உங்களைப் போன்ற பெரும் எழுத்தாளர்கள் அத்தகையவர்களைப் பற்றி அடிக்கடி, நிறைய எழுதினாலே அவர்களைப் பற்றிப் பலர் என்னைப் போன்ற பலர் அறிய வாய்ப்பாக அமைந்து விடுமல்லவா. ஏன் எழுதுவதில்லை (அபபடி எழுதியிருந்தால் அது பற்றிய என் அறியாமைக்காக மன்னிக்கவும்). மேலும் இறுதிப் பட்டியலில் எமக்குத் தரபபட்டவர்கள் அனைவரினதும் பங்களிப்பினை நான் மறுக்கவில்லை. ஆயினும் எனக்குச் சரியென்று பட்டதையே என்னால் செய்ய முடியும். நடுவர்களின் தேர்வு செய்யும் சுதந்திரத்தை நீங்கள் மதிக்க வேண்டும்,. அதற்காக யாரிடமோ காட்ட வேண்டிய கோபத்தை அவர்களிடம் காட்டாதீர்கள். தேவையில்லாத உள் நோக்கங்களெல்லாம் இருப்பதாகக் கற்பித்துக் கொண்டு ஆத்திரப்படுவதில் அர்த்தமேதுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. உங்களுக்கு இயல்விருது அமைப்பினரின் செயற்பாடுகளில் அதிருப்தி நிலவுமாயின் அதனை ஆக்கபூர்வமாக அவர்களிடமே தெரிவிக்கலாமே. நடுவர்கள் வேறு. அமைப்பு வேறு. நடுவர்களின் பணி அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையுடன் சரி. அதனை நீங்கள் புரிந்து கொண்டு, இனியாவது உங்களது அதிருப்திகளை சரியானவர்களை நோக்கித் திருப்பினால் நல்லதென நான் தனிப்பட்டரீதியில் நினைக்கிறேன்.
4. 'பேராசிரியர் இராமானுஜம் நாடகத்துக்கு ஒரு முக்கியமான பங்களிப்பை ஆற்றியுள்ளார். ஆனால் அவர் ஒரு பல்கலையில் அவருக்கு அளிக்கப்பட்ட வேலையை சிறப்பாகச் செய்தார், அவ்வளவுதான். ஆனால் உண்மையில் நாடகத்தில் முன்னோடி சாதனையாளர், தன் வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்தவர் ந.முத்துசாமிதான். நீங்கள் பேராசிரியர் இ.ராமானுஜத்தைப்பற்றி நிறைய தகவல்களை பெறலாம்.அவர் கல்வித்துறையாளர். முத்துசாமியைப் பற்றி நாம் சொன்னால்தான் உண்டு' என்றும் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். நீங்கள் பேராசிரிய இராமனுஜத்தை அவரொரு பேராசிரியரென்ற காரணத்துக்காக வெறுத்துக் குறைத்து மதிப்பிடுகின்றீர்களோ தெரியவில்லை. அவருக்குக் கூட 'விளக்கு' அமைப்பினரின் விருதொன்றினைத் தவிர வேறெந்த விருதும் இதுவரையில் கிடைத்ததாகத் தெரியவில்லை. 'விளக்கு' அமைப்பு விருது வழங்குவதில் இதுவரையில் இலக்கு தவறவில்லையென்று குறிப்பிடும் நீங்கள் அவர்களிடமும் ஏன் பலரிருக்க பேராசிரியர் இராமானுஜத்திற்கு உங்களது விருதினை வழங்கினீர்களென்று கேள்விகள் எழுப்பியிருந்தீர்களா? அறிய ஆவல்.
5. 'உங்கள் அளவுகோல் எவ்வளவு அபத்தமானது என்பது என் சொற்களால் உங்களுக்குப் புரியுமா என்று தெரியவில்லை. ஒருவர் கல்வித்துறை அமைப்பு சார்ந்து செயல்படுபவராக இருந்தால் பல இடங்களை அடைந்து தன்னை நிறுவிக்கொள்ள முடியும். பெரிதாக தன்னைக் காட்டிக் கொள்ள முடியும். பல அங்கீகாரங்கள் விருதுகள் அவருக்கே கிடைக்கும். இதுதான் தமிழ்நாட்டு வழக்கம். இங்கே உண்மையான சாதனையாளர்கள் முற்றிலும் புறக்கணிக்கபப்ட்டு கிடக்கிறார்கள். இங்கே தனக்காக உழைப்பவர் தன்னை பூதாகரமாக காட்டிக் கொள்ள முடியும். அசோகமித்திரனைவிட நூறுமடங்கு பெரிதாக க.ப.அறவாணன் தெரிவார். சுந்தர ராமசாமியைவிட நூறுமடங்கு பெரிதாக வைரமுத்து தெரிவார். லட்சுமிக்கு மாற்றாக நான் அசோகமித்திரனை சுட்டிக்காட்டினால் ஒரு இணைய தளத்தை அல்லது ஆங்கிலக்கட்டுரையைக்கூட ஆதாரமாகச் சுட்ட முடியாது. ஆகவே அசோகமித்திரனைவிட லட்சுமி தமிழ்ச்சாதனையாளர் என ஆகிவிடுவாரா? சொல்லுங்கள்' என்றும் கேள்வி எழுப்பியிருக்கின்றீர்கள். எனது அளவுகோல் எவ்வளவு அபத்தமானது என்று கூறுவதற்கு உங்களுக்குள்ள எழுத்துச் சுதந்திரத்தை நான் மதிக்கின்றேன். ஒருவருக்குச் சரியென்று படுவது இன்னொருவருக்கு அபத்தமானதாகவும், பிழையாகவும் படுவது இயல்புதான். இதுபோன்ற விடயங்களை இலக்கிய , அறிவியல் உலகங்களில் அவ்வப்போது காண்கின்றோம்.. ப.சிங்காரத்தின் நாவல்களைப் பலர் ஆரம்பத்தில் இனங்கண்டு கொள்ளவில்லை. பலருக்கு அவை சாதாரணமாகக் கூடத் தென்பட்டிருக்கும். பின்னர் உங்களைப் போன்றவர்கள் காலத்தில்தான் அவற்றுக்குரிய உரிய இடம் தமிழ் இலக்கிய உலகில் கிடைத்தது. பாரதி இருந்த காலத்தில் பாரதியின் கவிதைகளைப் பல அறிஞர்கள் கவிதைகளாகவே ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களில் பலருக்கு அவை அபத்தமாகக் கூடத் தென்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய நிலையென்ன.. முனைவர் பட்டப் படிப்பிற்கு பாரதியின் படைப்புகளை ஆராய்கின்றார்கள். அதுபோல் லக்சுமி ஹோம்ஸ்ரோமின் ஆங்கில் மொழிபெயர்ப்பு உங்களுக்கு வேண்டுமானால் தரமற்றதாகத் தெனபடலாம். அவரது பங்களிப்பு குறைவானதாகத் தென்படலாம். ஆனால் இந்தியாவின் 'Hutch Crossword Book Award' குழுவினருக்கு அவ்வாறு தெரிந்திருக்கவில்லை. அவரது மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய சாகித்திய அமைப்பினருக்கு (இவர் மொழிபெயர்த்த அசோகமித்திரனின் சிறுகதைகளை, மாதவையய்யாவின் நாவலை இந்திய சாகித்திய அகாடமியினர் வெளியிட்டிருக்கின்றார்கள்) அவ்விதம் தெரியவில்லை. ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகப் பதிப்பகத்தினருக்கு (லக்சுமியின் மொழிபெயர்ப்பில் வெளியான பாமாவின் 'சங்கதி' நாவலை வெளியிட்டவர்கள்), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தினருக்கு, கதா அமைப்பினருக்கு (நா.முத்துசாமியின் 'நீர்மை'யின், மெளனியின் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை வெளியிட்டவர்கள்), அவரது நூல்களை வெளியிட்ட மேலும் பல பதிப்பகத்தினருக்கெல்லாம் இவரது ஆங்கில மொழிபெயர்ப்பு தரமாகப் பட்டதால்தான் வெளியிட்டிருக்கின்றார்கள்.
மேலும் மொழிபெயர்ப்பென்பதும் இலக்கியத்திலோர் அங்கம்தான். அந்த வகையில் லக்சுமி ஹோல்ம்ஸ்டாமின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்' என்று பாடிய பாரதி தொடர்ந்து 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை. திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்' என்றும் கூறுவதை கவனிக்க வேண்டும். இதற்கு லக்சுமி போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானதுதான்
மேலும் உங்களது இணையத்தளத்தில் இயல்விருது பற்றிய கேள்வியொன்றுக்கு தமிழகத்திற்குத் தனக்குப் பிடித்த ஈழத்து நூல்களை மட்டுமே அறிமுகம் செய்த ஒருவரான திரு.பத்மநாபர் (இலண்டன்) அவர்களுக்கு வாழ்நாள் சேவைக்கான இயல்விருது வழங்கப்பட்டது பற்றி விதந்து கூறியிருக்கின்றீர்கள். அதற்கான உங்கள் காரணங்களுக்கெல்லாம் பல்வேறு காரணங்களைக் கூறியிருக்கின்றீர்கள். அதே சமயம் தமிழ் இலக்கிய உலகுக்கு என்னைப் போன்ற்வர்கள் பார்வையில் பெரும் பங்களிப்பைச் செய்தவர்களான கே.கணேஷ் மற்றும் தாசிசியஸ் போன்றவர்களின் பங்களிப்பு புரியவில்லையென்றும் எழுதியிருக்கின்றீர்கள். என்னைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் பங்களிப்பு, பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
இயலவிருது பற்றிய உங்கள் கருத்துகளுக்கான என் கருத்துகளை இத்துடன் நிறுத்திக் கொள்கின்றேன். எதிர்காலத்தில் இயல்விருதுக் குழுவினர் தம் பணியினை மேலும் சிறப்பாக முன்னெடுக்க இத்தகைய விவாதங்கள் வழி சமைக்குமென நான் நிச்சயம் நம்புகின்றேன்.