மீள்பிரசுரம்: சர்வதேச மகளிர் தினம் - மார்ச்,8
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கானகங்களில் சுற்றிக்கொண்டிருந்த குரங்கினங்களில் ஒன்று மனித இனமாகப் பரிணமித்த போது தோன்றிய முதல் மனித உயிர் ஆணல்ல, அது ஒரு பெண். ஆம்! அவள் தான் நமது மூதாய் என்று அறிவியல் உறுதியாகச் சொல்கிறது. நாகரிகம் தோன்றாத அந்தக் காலத்தில் வேட்டையாடிக் கொண்டு குகைகளில் மனித இனம் வாழ ஆரம்பித்தது. இந்த ஆதிப் பொதுவுடமைச் சமுதாயத்தில் பெண்ணே தலைமைப் பாத்திரம் வகித்தாள்; பெண்ணே வேட்டைக்குத் தலைமைத் தாங்கினாள்; பெண்ணே சமுதாயத்தை இயக்கினாள். படைத்து காத்து ரட்சிப்பது கடவுளல்ல, பெண் தான் என்பது அந்த காட்டுமிராண்டி மனிதர்களுக்கு தெரிந்திருந்தது. காலங்கள் சென்றன, ஆரம்ப கால நாகரிகங்கள் உருவாகின. மனித அறிவின் வளர்ச்சியால் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாழ் முறைகள் பெரும் மாற்றத்துக்குள்ளாயின. உற்பத்தியில் ஈடுபட்டு ஓரிடத்தில் நிலையாக வாழ ஆரம்பித்த மனித இனத்தில் தனியுடமைத் தோன்றிற்று, தற்கால குடும்ப முறையும் உருப்பெற்றது. இப்போது தலைமைப் பாத்திரம் பெண்களிடமிருந்து ஆணுக்கு மாறியிருந்தது. எனினும் பெண்கள் சமுதாயத்தில் அனைத்து நிலையிலும் பங்கு பெற்றனர். உலகின் முதல் விஞ்ஞானியானாலும், முதல் விவசாயி ஆனாலும் அல்லது உலகின் முதல் கவிஞர் ஆனாலும் சரி- அவர்கள் பெண்களாகவே இருந்தனர்.