அகநானூற்றில் வரலாற்றுச் செய்திகள் - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை சுழற்சி -2, குருநானக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை. -
கடந்த கால நிகழ்வுகளின் பதிவு வரலாறாகும். எட்டுத்தொகை நூலான அகநானூற்றின் வழி அக்கால மக்களின் வரலாற்றினையும் சமுதாய வாழ்வியலையும் நாகரிகப் பண்பினையும் அறிய முடிகிறது. மேலும் மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. மூவேந்தர்கள் பற்றிக் காணலாகும் செய்தியினை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மூவேந்தர் மரபு
தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே மூவேந்தர் ஆட்சி அமைப்பு நிலை பெற்றுவிட்டதை,
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு (தொல்.பொருள். 384)
என்னும் கூற்றால் அறியலாம். மூவேந்தரைக் குறிப்பிடும் தொல்காப்பியர் சேர, சோழ, பாண்டியர் எனக் குறிப்பிடாமல் அவர் தம் மாலையினைப்
போந்தே வேம்பே ஆரென வரூஉம்
மாபெருந் தாணையர் மலைந்த பூவும் (தொல்.பொருள்.63)
எனக் கூறுகின்றார்.
மாலைக்கு உரிமையுடைய சேர,சோழ, பாண்டியர் என உணர்ந்து கொள்ள வேண்டியுள்ளது. அகநானூறும் சேர, சோழ, பாண்டியரை மூவர் எனப் பின்வருமாறு குறிப்பிடுகின்றன. தமிழ் செழு மூவர் (அகம்.31:14) இதில் மூவர் என்று சேர, சோழ, பாண்டியரே குறிக்க வந்துள்ளது தெளிவாகின்றது.