வாழும் இலக்கியங்கள் - நடேசன் -
நாம் படிக்கும் காலத்தில் பெண்களின் பாடசாலைகளை நோக்கி சைக்கிளில் செல்லும்போது ஓரிரு மடந்தைகள், நிலம் பார்த்தபடி அடியெடுத்துச் செல்வார்கள். தலை சீவி புது உடுப்புடன் உடலெங்கும் ரெஸ்ரெஸ்ரோன் நிறைந்த இரத்தம் காவேரிப் புதுவெள்ளமாகப் பாய்ந்தபடி செல்லும் எங்களுக்கு, அவர்கள் கண்கள் எங்களைத் தொற்றாது புறக்கணிக்கும்போது , ஆணவம் நொந்துபோய், வாய் வார்த்தையில் வந்த தூசணம் காற்றில் மிதக்கும் . அப்போது எம்மில் அறிவாளி ஒருவன் ‘அவளுக்குக் கண்ணகி என்ற நினைப்பு ‘ என்பான்.
'கண்ணகிக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்' என எங்கள் ஆணவத்தை எண்ணெய் போட்டுத் தடவிவிட்டு அடுத்த இலக்கை நோக்கி நகருவோம்.
கண்ணகி என்ற வார்த்தைக்கு அர்த்தம், சிலப்பதிகாரத்தைக் கேள்விப்படாத ஒருவனுக்கு மட்டுமல்ல, அரிச்சுவடி எழுதாதவனுக்கும் புரியும். அந்த அளவுக்குப் படித்தவர்கள் தொடக்கம் பாமரர்கள் வரை கண்ணகி என்றால், கற்பு, நெருப்பு, துணிவு, கோபம் என்றவாறான விம்பத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு கலை வடிவங்களில் நின்று நிலவிவரும் சிலப்பதிகாரத்தின் கதைமூலம் தமிழ் மக்களின் மூளையை பதிவுசெய்துவந்திருக்கிறது.
அந்தச் சிலப்பதிகாரத்தை, அழகான நாடகக்கதையாக்கி மெல்பேனில் மேடையேற்றிய, பாரதி பள்ளி மாணவர்களுக்கு நன்றி. மேடை ஏற்றத்திலிருந்து, நிர்வாகம், பாடல்கள் என மாவை நித்தியானந்தனின் உழைப்பையும் அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.
சிலப்பதிகாரத்தை முறையாக வாசிக்காத போதிலும் நானும் நீங்களும் அறிந்த கதையது. கண்ணகி-கோவலன் - மாதவி என்ற மூன்று பாத்திரங்கள் நமது இலக்கிய வெளியில் மட்டுமல்ல, சமூக, குடும்ப வெளியிலும் இன்றும் நடமாடுபவர்கள். இதனாலேயே சில இலக்கியங்களை எக்காலத்திற்கும் இசைவாகச் சாகாவரம் பெற்றவை என்கிறோம்.