வ. ந. கிரிதரன் அவர்களின் கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள் என்னும் சிறுகதைத் தொகுப்பில் வெளிப்பட்டு நிற்கும் அந்நியமாதல் கருத்துநிலை - ஓர் ஆய்வு! - அ.எப்தா நிஷான் A.Abdhan Nishan , மூன்றாம் வருடம், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை -
அறிமுகம்
தமிழிலக்கிய வரலாற்றில் 'புலம்பெயர்வு", 'புலம்பெயர்தல்" ஆகிய சொற்கள் பற்றிய கருத்துக்களைப் பரவலாகக் காணமுடிகின்றது. மனிதநாகரிகத்தின் வளர்ச்சிநிலைகளில் புலம்பெயர்வு தொடர்ச்சியாகவே இடம்பெற்று வந்துள்ளது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர்கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ்விலக்கியத்துக்கூடாகப் பேசப்படுகிறது. புலம்பெயர் இலக்கியத்தின் உள்ளடக்கம் ஈழத்தமிழ்ப் படைப்புலகுக்கு புதிதாக அமைகின்ற அதேவேளை, உருவத்திலும் பல மாறுதல்களை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது.
'புலம்பெயர்வு" என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டுப்பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சூழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுகிறவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு அரசியல் சமூக பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களையே இங்கு 'புலம்பெயர் இலக்கியம்" அல்லது 'புலம்பெயர்ந்தோர் இலக்கியம்" என்ற சொற்றொடர் கொண்டு அழைக்கின்றோம். இதனை ஆங்கிலத்தில் Diaspora Literature என குறிப்பிடுவர்.
புலம்பெயர் இலக்கியம் என்றாலே உடனே ஞாபகத்துக்கு வருவது புலம்பெயர் ஈழத் தமிழர்களின் படைப்புகள்தாம். ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னொரு கட்ட வளர்ச்சி கூறாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியங்கள் காணப்படுகின்றன. புலம்பயர் படைப்புக்களில் கவிதை சிறுகதை நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களே முக்கியமானவையும் கவனத்திற்கு உரியவையாகவும் காணப்படுகின்றன.
புலம்பெயர் இலக்கியங்கள் புலம்பெயர்ந்து சென்று ஈழத்து சமூக பண்பாட்டுச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் அவற்றை எதிர்கொண்ட விதங்கள் புல பாதிப்புக்கள் புலம்பெயர் அனுபவங்கள் பண்பாட்டுச் சிக்கல்கள் மொழி பிரச்சனை அகதியாக்கப்படுதல் போன்றவற்றை கூறுபொருளாகக் கொண்டு காணப்படுகின்றன.