அண்டனூர் சுராவின் 'தீவாந்தரம்' - வ.ந.கிரிதரன் -
- அண்மையில் வெளியான எழுத்தாளர் அண்டனூர் சுராவின் 'தீவாந்தரம்' நாவல் பற்றிய எனது விமர்சனம் ஜூலை மாதக் கணையாழி இதழில் வெளியாகியுள்ளது. கணையாழி சஞ்சிகை தற்போது மின்னிதழாக மட்டும் வெளியாகின்றது. மிகக்குறைந்த கட்டணத்தில் கணையாழிக்கான ஆண்டுச் சந்தாவைச் செலுத்த முடியும். அதற்கான இணையத்தள முகவரிகள்: 1. கணையாழி - https://kanaiyazhi.com & 2. மக்ஸெச்டர் - https://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Celebrity/All-Issues -
தமிழில் வரலாற்றுப் புனைவுகள் என்றதும் எமக்கு நினைவுக்கு வருபவர்கள் கல்கி, சாண்டில்யன்,ஜெகசிற்பியன் , அகிலன் , நா.பார்த்தசாரதி மற்றும் இவர்களையொட்டிக் கற்பனாவாதப் புனைவுகளாக வரலாற்றுப் புனைவுகளை எழுதியவர்கள். இவை பூரணமான வரலாற்றுப் புனைவுகள் அல்ல. வரலாற்றுச் சம்பவங்களை, ஆளுமைகளை உள்வாங்கிப் பின்னப்பட்ட, வெகுசன வாசகர்களின் உள்ளங்களைக் கவர்ந்திடப் பின்னப்பட்ட கற்பனாவாதப்புனைவுகள். இவற்றிலிருந்து சிறிது வேறுபட்டது பிரபஞ்சனின் 'வானம் வசப்படும்', 'மானுடம் வெல்லும்' போன்ற நாவல்கள். மிக அதிக அளவில் கிடைக்கப்பெற்ற வரலாற்றுத்தகவல்களின் அடிப்படையில் ஒரு காலகட்டத் சேர்ந்த சாதாரண மானுடர்களின் வாழ்வை வைத்துப் பின்னப்பட்ட புனைவுகள் அவை. இவ்வகையில் ஆட்சியாளர்கள், அவர்கள் வரலாறுகளைத் தவிர்த்துச் சாதாரண மானுடர்களின் வாழ்வை விபரிக்கும் மிகச்சிறந்த வரலாற்று நாவலொன்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டுள்ளது. அதுதான் இளங்கோவடிகளின் 'சிலப்பதிகாரம்' அக்காலத்திலிருந்த நாவலையொத்த வடிவமாகக் காப்பியத்தைக் கூறலாம். எனவே காப்பியமாகச் சிலப்பதிகாரம் உருவாக்கப்பட்டது. அக்காப்பியம் அக்கால மாந்தர் வரலாற்றை, நிலவிய சமூக அமைப்பை, இருந்த நகர அமைப்பை, இருந்த ஆட்சி அமைப்பை, நடைபெற்ற வர்த்தக நடவடிக்கைகளை, தொழிற்பிரிவுகளை எனப் பலவற்றைப்பற்றிய தகவல்களைத் தருகின்றது. சிலப்பதிகாரத்தையொட்டி சங்ககால மானுடர் வாழ்வை மையமாக வைத்து எழுத்தாளர் நா.பார்த்தசாரதி வெகுசன வாசகர்களுக்காகச் சிறந்தொரு கற்பனாவாத வரலாற்றுப் படைப்பாக 'மணிபல்லவம்'என்னுமொரு நாவலைத் தந்துள்ளார். நான் வாசித்த வரலாற்று நாவல்கள் பற்றிய நினைவுகளெல்லாம் சிந்தையிலோடி மறைந்தன எழுத்தாளர் அண்டனூர் சுராவின் அண்மைக்கால நாவலான , 'சந்தியாப்' பதிப்பக வெளியீடாக வெளியான 'தீவாந்தரம்'நாவலை வாசித்தபோது.
எழுத்தாளர் அண்டனூர் சுரா அண்மைக்கால எழுத்தாளர்களில் தன் படைப்புகள் மூலம் , அவற்றுக்குக் கிடைத்த விருதுகள் மூலம் நன்கறியப்பட்ட எழுத்தாளர்களிலொருவராக இருப்பவர். கதை, கட்டுரை, நாவல் என்று இவரது இலக்கியப்பங்களிப்பு பரந்து பட்டது. மேலோட்டமாக எழுதிக்குவிப்பவர்களிலொருவரல்லர். ஆழ்ந்து சிந்தித்து, ஆழமாகத் தகவல்களைத்திரட்டி எழுதுபவர்களிலொருவர். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் இவரைபற்றி இவரது முத்தன் பள்ளம் நாவலுக்கான அணிந்துரையில் "அழகிய பெரியவன், எம்.கோபாலகிருஷ்ணன், கண்மணி குணசேகரன், சு.வேணுகோபால், கீரனூர் ஜாகிர்ராஜா, வா.மு.கோமு, செல்லமுத்து குப்புசாமி எனும் நீளும் தீவிர நாவலாசிரியர் வரிசையில் மற்றுமோர் படைப்பாளி என்று." என்று குறிப்பிட்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. 'தீவாந்தரம்' நாவலை வாசித்தபோது இச்சிந்தனை மேலும் உறுதிப்பட்டது.