ஒரு வழக்கறிஞரின் இலக்கிய யாத்திரை - நவஜோதி ஜோகரட்னம், லண்டன்.-
இலண்டனின் இலக்கிய மேடைகளில் ஆழ்ந்த தமிழ்ப் புலமையோடும் ஆற்றொழுக்கான நடையோடும் பேசவல்லவராக வழக்கறிஞர் செல்லத்தம்பி சிறீக்கந்தராசா அவர்களை நான் பார்த்திருக்கிறேன். ‘ஆங்கிலம் பிறந்த கதையும் வளர்ந்த கதையும்’ என்ற நூல் அவரது ஆழ்ந்த வாசிப்பையும் பரந்த தேடலையும் கொண்ட நூலாகும். ‘ஆற்றல் மிகுந்த மூளையின் தூண்டுதலாலும் வேகமான வாசிப்பாலும்தான் இவரது பேச்சுகள் இத்துணை நுட்பமாக அமைகின்றனவோ?‘ என்று எனக்கு வியப்புண்டு.
ஆனால் அண்மையில் அவரது 85ஆவது பிறந்தநாள் ஆவணத் தொகுப்பை பார்வையிட்டபோது நான் அசந்துதான் போனேன். நம் தமிழர் மத்தியில் வரலாற்று ஆவணமாக்கப்பட வேண்டியவர்களில் சிறீகந்தராசா மிக முக்கியமானவர் என்பதனை இதனைப் பார்வையிடும் போது என்னால் உணர முடிந்தது. இவ்வேளை எனது தந்தை அகஸ்தியர் பாரீசில் வாழ்ந்தவேளை இற்றைக்கு இருபத்தியொன்பது வருடங்களுக்கு முன்னர் அவர் குறித்த ஆவணப் பதிவொன்றை விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் கலைச்செல்வனுடன் இணைந்து ஆவணப்படுத்தியமையும் என்னுள்; வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏனோ அவை சாத்தியப்படுவது சிரமமாகக் காணப்பபட்டது. ஆனால் தொழில்நுட்ப வசதிகள் கோலோச்சி நிற்கும் இன்றைய காலகட்டத்தில் இத்தகைய வரலாற்று ஆவணங்கள் தமிழர்களிடையே பதியப்படுவது முக்கியமானதென்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
அவரின் அன்புத்துணைவி மாதினியின் இனிமையான குரலின் இன்னிசையோடு;ம், விமர்சகர் மு.நித்தியானந்தன் அவர்கள் தான் அறிந்த அதாவது இவருக்கு இருந்த கோவலனாரின் ஓலைச்சுவட்டின் அனுபவத்தைக் கேட்கும் கேள்வியோடும் ஆரம்பித்தபோது என்னை விழிப்படையச்செய்து அப்பதிவை உடன் பார்க்கவேண்டும் என அதில் கட்டிப்போட்டது.