பாரதியும் சிறுகதை இலக்கியமும்! - முருகபூபதி -
பாரதியார் எழுதிய முதல் கவிதையும் , முதல் சிறுகதையும் என்ன... ? என்பது பற்றியும் இலக்கிய உலகில் ஆராயப்படுகிறது. வழக்கமாக இலக்கிய வரலாற்றாசிரியர்கள் வ.வே.சு. ஐயர் ( வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ) எழுதிய குளத்தங்கரை அரசமரம் தான் முதலில் தமிழில் வெளிவந்த சிறுகதை என்று நிறுவுகின்றனர். இவர் 1881 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 02 ஆம் திகதி திருச்சி வரகனேரியில் பிறந்தார். இந்திய சுதந்திரப்போராட்டத்தின்போது தமிழ் நாட்டில் இவரது பங்களிப்பு மிக மிக முக்கியமானது. லண்டன் சென்று சட்டமும் படித்து பரீஸ்டரானவர். சுதந்திரம் சும்மா கிடைக்காது, ஆயுதத்தினாலும் பெறமுடியும் என நம்பிய தீவிரவாதி. பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தில் இவரும் முக்கிய தருணங்களில் இடம்பெறுகிறார். பாரதி மறைவதற்கு முதல் நாள் 1921 ஆம் ஆண்டு 11 ஆம் திகதி, சென்னையில் வ.வே.சு. ஐயர் கைதாகி சிறைசெல்லுகிறார். பாரதி கடும் சுகவீனமுற்றிருப்பது அறிந்து, அவரைச்சென்று பார்க்க விரும்பும் ஐயர், பொலிஸாரிடம் அனுமதி கேட்கிறார். இவரை சிறைக்கு அழைத்துச்செல்லும் பொலிஸாருக்கு இரக்க குணம் இருந்திருக்கவேண்டும்.
பாரதியும் சிறை சென்று மீண்ட செம்மல். ஒரு முன்னாள் கைதியை பார்க்க இந்தக்கைதி விரும்பியபோது, பொலிஸார் அதற்கு அனுமதி தந்து திருவல்லிக்கேணிக்கு அழைத்துச்செல்கின்றனர். மருந்து அருந்தாமல் அடம்பிடிக்கும் பாரதியிடத்தில், மிகுந்த அக்கறையோடு மருந்து எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுவிட்டு சிறைசெல்லும் வ.வே.சு. ஐயர், விடுதலையாக வந்தபின்னர் 1922 ஆம் ஆண்டில் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தைத் தொடக்கி அதனை இயக்குவதற்காக பரத்வாஜ் என்ற ஆசிரமத்தையும் அமைத்தார். அத்துடன் பாலபாரதி என்ற இதழையும் நடத்தினார். இவர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை என்று சொல்லப்படுகிறது.
பாரதி மறைந்து நான்கு ஆண்டுகளில் வ.வே.சு. ஐயரின் வாழ்வில் பெருந்துயரம் நேர்ந்துவிடுகிறது. தனது குருகுல மாணவர்கள் சகிதம் அம்பா சமுத்திரம் அருவிக்குச்சென்றவிடத்தில், அவரது மகள் அந்த அருவியில் தவறி விழுந்துவிடவும், அவளைக்காப்பற்ற அருவியில் குதிக்கிறார். தந்தையையும் மகளையும் அருவி இழுத்துச்சென்றுவிட்டது. சடலங்களும் கிடைக்கவில்லை. பாரதிக்கு முன்னர் ஐயர் இறந்திருந்தால், பாரதி, ஐயர் பற்றி ஒரு காவியமே இயற்றியிருப்பார்.