கவிஞர் வைரமுத்துவின் நீரியல் சிந்தனை - முனைவர்.ம.சியாமளா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை (சுழற்சி-II), குருநானக் கல்லூரி, சென்னை- 42. -
முன்னுரை
நீரால் தழைக்கும் நிலம், பிள்ளைப் பேரால் தழைக்கும் குலம். இயற்கை வரப்பிரதாசம் நீர் ஆகும். மனிதனின் முயற்சியின்றி அமைந்தவை இயற்கை நீர்நிலை. முயற்சியால் அமைந்தவை செயற்கை நீர்நிலை. உயிரினங்களின் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது நீர். நம் உடலில் நீரே மிகுதியாக உள்ளது. உடலில் நீர்ச்சத்து நீங்கிவிடின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது என்பதை உணரலாம்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
என்பார் வள்ளுவர். மழையின் மாற்று வடிவங்களே அருவி, ஆறு, ஓடை, கடல், ஏரி, குளம், இன்னபிற. ஐம்பெரும் பூதங்களுள் ஒன்று நீர். இறை வழிபாட்டிற்கு நீர் மிகவும் முக்கியமானதாகும். மங்கல நிகழ்ச்சியாயினும், அமங்கல நிகழ்ச்சியாயினும் அவற்றிற்கு முதல் தேவையாகக் கருதப்படுகிறது நீர். நீரின் தத்துவத்தில் அமைந்த ஆலயம் திருவானைக்கால் ஆகும்.
நீரின் ஏற்பட்ட வளர்ச்சி
நீரின் வளத்தினாலே ஆற்றங்கரையோரங்களில் சிறந்த நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டாக நகரங்கள் திகழ்கின்றன. ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிக வளர்ச்சி சிந்துநதியில் வளர்ந்தது. நைல் நதியில் எகிப்து நாகரீகம் தழைத்து ஓங்கியது. எல்லா உயிர்களுக்கும் ஊட்டமளிப்பது நீர்தான்.
நீரின் சிறப்பு
நீரில்லாவிடில் வாழ்வில்லை. நீரின்றி அமையாது உலகம் என்பது வான்மறைந்த தந்த வள்ளுவர் கூற்று. அத்தகைய நீரின் சிறப்பாக காவியம் பேசுவது அரசர் முன்னின்று நடத்திய விழா நீர் விழாவாகும். நீர் விழாவின் போது கொடுங்குற்றம் செய்தவர்கள் கூட மன்னிக்கப்பட்டனர். மக்கள் பாவங்களைக் கழுவும் ஆற்றல் நீருக்கு இருப்பதாக நம்பிய நிலையும் காவியத்தில் இடம்பெறக் காண்கிறோம். ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்கின்றது நல்வழி.
அப்பூதிகள் திருநாவுக்கரசு பெயரால் தண்ணீர்ப்பந்தல் அமைத்து நீரறம் செய்து வந்ததைப் பெரியபுராணத்தால் அறிகின்றோம். இறந்தவர்களுக்கு நதியில் நீர்க்கடன் செய்தல் மரபு. நீர்க்கடன் செய்தாலே வீடுபேறடைய முடியும்.