சிவ. ஆரூரனின்'ஆதுரசாலை' நாவல் நயவுரை - ரஞ்ஜனி சுப்ரமணியம் -
'இலக்கியமும் வைத்தியமும் மட்டுமே ஒரு மனிதனைப் பற்றி அறிவதற்கான இரு நேரடி வழிகள். ஆகையால் மருத்துவத்தை இலக்கியத்தோடு இணைத்துப் புனைய முயற்சித்திருக்கிறேன். போர்க்காலத்தில் எமது வைத்தியர்களினதும் சுகாதாரப் பணியாளர்களினதும் அர்ப்பணிப்பான சேவைகளைக் கண்ணால் கண்டும் காதால் கேட்டும் வியந்து மகிழ்ந்ததுண்டு. தற்போது போர்மேகம் விலகிய சூழலில் 'நீரேந்துப் பகுதியில் பொழிய வேண்டிய மழை உப்பளத்தில் இரைத்துப் பொழிவது போல' எம்மண்ணின் மைந்தர்கள் பலர் குடிபெயர்ந்து அந்நிய மண்ணில் வைத்தியம் பார்த்துச் சீரும் சிறப்போடு வாழ்ந்து வரும் ஒரு சூழலில், கல்லையும் மண்ணையும் பற்றிக் கற்றவன் நான் இரத்தமும் சதையும் பற்றி எழுத வேண்டிய நிலைக்கு நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளேன். முடங்கிக் கிடந்த வைத்தியசாலை ஒன்று புத்தாக்கம் பெற்று இயங்கிய கதை இது. A 9 நெடுஞ்சாலையோரம் ஏற்றம் பெற்றிருக்கும் பச்சிசிலைப்பள்ளி ஆதுரசாலைக்குள் ஆரவாரமின்றி அழைத்துப் போகிறேன் வாருங்கள்'. -தோழமையுடன் சிவ. ஆரூரன் -
நாவல் பற்றிய படைப்பாசிரியரின் ஆரம்ப உரையின் சில பகுதிகளே கதைச்சுருக்கமும் ஆகும். அவரது அழைப்பை ஏற்று நானும் சென்றேன். குறுந்தூர ஓட்ட வீராங்கனை போல சென்ற கையோடு திரும்பியும் விட்டேன். காரணம் உண்டு. மிக ஆறுதலான வாசிப்பையே செய்யும் நான் அதிவிரைவில் வாசித்த படைப்பு இது. விரைவு வாசிப்பானது ஆர்வ மிகுதியின் விளைவாகும் . காரணங்கள் சில. கருவுக்கும் கதைக்களத்துக்கும் பொருத்தமான ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான எழுத்துநடை , புனைவில்லா உண்மைகளின் தரிசனம் தந்த பெருவியப்பும் உருக்கமும். மருத்துவத்துறை சார்ந்த ஒருவராக எனது ஒத்துணர்வு .அனுபவரீதியான மன ஈர்ப்பு. உளத்தாக்கங்கள். சிறிதே குற்ற உணர்வு.
இந்நாவல் வாசிப்பானது அனைவருக்கும் இதே உணர்வுகளைத் தராமலும் இருக்கலாம். ஆனால் தாயகத்தின் மீதான நேசமும், இலவசக் கல்வி பெற்றதற்கான நன்றி உணர்வும், தொழில்ரீதியான கடமை உணர்வும், மனிதநேயம் பெற்ற அல்லது பெற நினைக்கும் அனைத்து துறையினராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. நேர்மையான மருத்துவ சேவை என்பது தியாக உணர்வினையும் சம அளவில் தன்னகத்தே பொதிந்து கொண்டதாகும் என்பதை எழுத்தின் பாதைவழி அழுத்தமாகக் கூறிக் கொண்டே செல்லும் நாவல். ஆதுரசாலை எனும் இந்நாவல் ஜீவநதி பதிப்பகத்தின் வெளியீடாக மார்கழி 2021 இல் முதற்பதிப்பினையும் மார்கழி 2023 இல் இரண்டாம் பதிப்பினையும் கண்டுள்ளது .