கணையாழி: பாரதியாரும் ருஷ்ய புரட்சி பற்றிய அவரது சிந்தனைகளும்! - வ.ந.கிரிதரன் -
- கணையாழி சஞ்சிகையின் பெப்ருவரி 2022 இதழில் வெளியான எனது கட்டுரை. கட்டுரையில் தவறுதலாக அக்டோபர் புரட்சி நடைபெற்ற ஆண்டு 2017 என்று அச்சாகியுள்ளது. இது எனது தட்டச்சுப்பிழை. அதனை 1917 என்று மாற்றி வாசிக்கவும். கணையாழி சஞ்சிகை மின்னிதழாக வெளியாகின்றது. மக்ஸ்டெர் இணையத்தளத்தில் சந்தா கட்டி அதனை வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள முகவரி: http://www.magzter.com/IN/Kanaiyazhi/Kanaiyazhi/Celebrity/
பாரதியாரின் எழுத்துகள் தேடல் மிக்கவை. தெளிவு மிக்கவை. மானுடப் பருவத்தின் பல்வேறு படிகளிலும் , மானுட அறிவின் வளர்ச்சிக்கேற்ப புதிய அர்த்தங்களைத் தந்து விரிந்து செல்பவை. அவரது வாழ்வு குறுகியது. அக்குறுகிய வாழ்வினுள் அவர் எழுதினார். மானுட இருப்பு பற்றிச் சிந்தித்தார். சக மானுடர்கள்தம் வாழ்க்கை, அவற்றின் தரம், பிரச்சினைகள், துயரம் , தீர்வு என்றெல்லாம் சிந்தித்தார். அந்நியராதிக்கத்தில் அடிமைப்பட்டுக்கிடந்த பிறந்த நாட்டின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தார். தான் வாழ்ந்த மானுட சமூகத்தின் வர்க்க விடுதலைக்காக, வர்ண விடுதலைக்காகச் சிந்தித்தார். எழுதினார். அத்துடன் எழுத்துடன் நின்று விடாது சமூக, அரசியல் மட்டத்தில் செயற்பட்டார். பிறநாட்டுப் படைப்புகளையெல்லாம் வாசித்தார். அவற்றிலிருந்து அறிந்தவற்றைத் தன் சிந்தனைத் தேடலுக்குட்படுத்தினார். அத்தேடலினூடு தானடைந்த ஞானத்தைக் கட்டுரைகளாக்கினார். கவிதைகளாக்கினார்.
என்னைப்பொறுத்தவரையில் அவரது படைப்புகள் மட்டுமல்ல வாழ்க்கையுமே ஒரு வழிகாட்டிதான். என்னிடம் எப்பொழுதுமே பாரதியாரின் கவிதைத்தொகுப்பு என் முன்னால் மேசையிலிருக்கும். அவ்வப்போது அதைப்பிரித்து வரிகள் சிலவற்றை வாசித்தாலே போதும். சோர்வு அகன்று விடும். இருப்பின் இன்பம் , அர்த்தம் புரிந்து விடும். பாரதியாரின் கவிதைத்தொகுப்பொன்றினை என் வாசிப்பின் ஆரம்பப்படிக்கட்டிலேயே அப்பா வாங்கித் தந்திருந்தார். {கூடவே புலியூர்க் கேசிகனின் சங்க இலக்கியப் பொழிப்புரை நூல்களும் கூடவே ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணம்), வியாசர் விருந்து (மகாபாரதம்) நூல்களையும் வாங்கித் தந்திருந்தார். இராமாயணனும், மகாபாரதமும் ஒவ்வொருவர் வீட்டிலிருக்க வேண்டுமென்பது அவரது கருத்து. அதனாலேயே குழந்தைகள் ஐவருக்கும் அக்காப்பியங்களிலிருந்தே பெயர்களையும் சூட்டினார். சசிரேகா, கிரிதரன், பாலமுரளி, மைதிலி, தேவகி என்பது அவர் எங்களுக்கு வைத்த பெயர்கள் என்றால் அவர் இவ்விடயத்தில் எவ்வளவுதூரம் ஆர்வமாகவிருந்தார் என்பதைப் புலப்படுத்தும். )
என்னை மிகவும் அதிசயிக்க வைத்த ஒரு விடயம். பாரதியார் தன் கவனத்தைக் கம்யூனிச அமைப்பின் மீது, அதற்கான ஆயுதப் புரட்சியின் மீது திருப்பியதுதான். அக்டோபர் 1917இல்தான் ருஷியாவில் புரட்சி நடைபெற்று உலகின் கவனத்தை ஈர்த்தது. பாரதியாரின் கவனத்தையும் அது ஈர்த்தது. அது பற்றி அவர் நிறையவே சிந்தித்திருக்கின்றார். அதன் நன்மை, தீமைகளைப்பற்றித் தனது எழுத்துகளில் தர்க்கித்திருக்கின்றார். அது அவர் வாழ்ந்த சூழலில் மகத்தானதொரு விடயமாக எனக்குத் தென்படுகின்றது.