காலன் ஒத்திவைத்த மரணம்! ஐ. தி. சம்பந்தன் வாழ்வும் பணிகளும்! மொழிவழித் தொழிற்சங்கங்களை உயிர்ப்பிக்க ஒலித்த குரல் ஓய்ந்தது! - முருகபூபதி -
பிறக்கின்ற ஒவ்வொரு உயிருக்கும் மரணம் நிச்சயமானதுதான். எமது தமிழ் சமூகத்தில் ஒருவர் மரணம் எய்தி அமரத்துவம் அடைந்துவிட்டால், இயற்கை அநர்த்தத்தினால் அல்லது விபத்தினால், வேறு ஏதும் காரணங்களினால் கொல்லப்பட்டால், “ காலன் கவர்ந்துவிட்டான் “ என்போம்.
உயிரைக்கவர வரும் எமதர்மன், தனது செயலாளர் சித்திரகுப்தனிடம் ஒருவரை எவ்வளவு காலம் பூவுலகில் வைத்திருக்கலாம் எனக்கேட்டுத்தான் மரணத்தீர்ப்பை வழங்குவார் என எமது முன்னோர்கள் சொல்வார்கள். சித்திரகுப்தனின் கணக்குத்தவறி, எமதர்மன் தனது கடமையைச் செய்யாமல் திரும்பிச்சென்றால், “ மரணிக்கவிருந்தவர் மயிரிழையில் உயிர் தப்பினார் “ என்ற பிரயோகமும் சமூகத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.
இம்மாதம் 03 ஆம் திகதி லண்டனில் தமது 87 வயதில் இயற்கை எய்தியிருக்கும் மூத்த தொழிற்சங்கவாதியும், தமிழ் உணர்வாளரும், சமூகச் செயற்பாட்டாளரும், எழுத்தாளரும் , ஆவணப்பதிவாளருமான ஐ.தி. சம்பந்தன் அவர்கள், இங்கு குறிப்பிடப்பட்ட எமதர்மராஜனதும் அவரது செயலாளர் சித்திரகுப்தனதும் கணிப்பின் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்ட மரணத்தை அடைந்திருக்கிறார். இதனை வாசிக்கும் வாசகர்கள், “ அது என்ன ஒத்திவைக்கப்பட்ட மரணம்…? “ எனக்கேட்கலாம். ஆம்… அவர் 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதியே முன்னாள் மானிப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தருமலிங்கம், மற்றும் ஆலாலசுந்தரம் ஆகியோருடன் எமதர்மனிடம் போய்ச் சேர்ந்திருக்கவேண்டியவர்.