நான் பார்த்த சீக்கிய மதத் திருமணம்! - கனகசபை குருபரன் -
- ஓவியம் AI -
கடந்த ஆனி மாதம், சீக்கிய மத முறையிலான திருமணம் ஒன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இது நான் பார்த்த முதலாவது வேற்று இன, மத திருமணம் என்பதால் அது சம்பந்தமான எனது மன உணர்வுகளை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.
ஏற்கனவே சீக்கிய இனத்தவருடன் எனக்கு இருந்த தொடர்பு பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் போட்ஸ்வானாவில் சீக்கியர் ஒருவரோடு மூன்று மாதங்கள் ஒரே வீட்டில் வசித்திருக்கிறேன். வீடு விற்பனை முகவராகக் கனடாவில் வேலை பார்த்த அவர், அக்காலப் பகுதியில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாகத் தொழில் தேடி போட்ஸ்வானாவிற்கு வந்தார். கனடாவில் இருக்கும் எனது சகோதரரின் பரிந்துரையோடு வதிவிடம் தேடி எனை நாடி வர, இந்திய அமைதிப் படையின் அடடூழியங்களை நேரடியாகப் பார்த்திருந்தாலும், வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டேன். எனினும் அவருடன் நான் வசித்த அந்த மூன்று மாதங்கள், சீக்கிய சமுதாயம் பற்றிய எனது எண்ணத்தை முற்றாக மாற்றி விட்டன. அன்று தொடங்கிய எமது நட்பு, நான் போட்ஸ்வானாவை விட்டு வரும் வரை தொடர்ந்தது.
சுவாரசியமாகப் பேசவும் சுவையாகச் சமைக்கவும் கூடிய அவரோடு நடந்த உரையாடல்களில் இருந்து சீக்கிய மதத்தின் வரலாறு, சீக்கியர்களின் வாழ்க்கைமுறை பற்றி விபரமாக அறிந்து கொண்டேன். ஒரு இந்துத் தகப்பனுக்கும், இஸ்லாமியத் தாய்க்கும் பிறந்த குரு நானக்(1469-1539) எனும் குருவினால் சீக்கிய மதம் நிறுவப்பட்டது. அவரைத் தொடர்ந்து வந்த 9 சீக்கிய மத குருமார்களினால் அது மெருகூட்டி வளர்த்தெடுக்கப்பட்டது. பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங், அவர்களுடைய புனித நூலான குரு கிரந்த் சாஹிபை தனக்கு அடுத்த குருவாக பிரகடனப்படுத்த, இன்று வரை அந்தப் புனித நூலையே குருவாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். அவர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் உள்ள பிரதான மண்டபத்தில் உள்ள தர்பார் சாஹிப் என்று அழைக்கப்படும் சிறு மேடையில் குரு கிரந்த் சாஹிபை வைத்து, கவிதை வடிவில் அதில் உள்ள சுலோகங்களைப் பாடித் துதிப்பது, அவர்களின் வழிபாட்டு முறையாகும். இந்து, இஸ்லாம் இரண்டினதும் வரலாறு, இறையியல்த் தடங்களை சீக்கியம் தன்னகத்தே கொண்டுள்ளது. சீக்கியம், எப்படி வாழவேண்டும் என்று பல நல்ல விடயங்களைக் கூறி இருந்தாலும், தியாகம், மனித நேயம் மற்றும் நேர்மையான நடத்தை என்பவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.