ஆங்கிலத்தில் மட்டுமல்ல - வாசிப்பை நேசிப்போம்! - இளவரசி இளங்கோவன், மொன்றியல் , கனடா -
சுயமுன்னேற்றம் மற்றும் தனி நபர் வளர்ச்சி, தொழில் வளர்ச்சி முன்னேறுவது எப்படி இது போன்ற விடயங்களை யோசிக்கும் பொழுதும் அது பற்றிய புத்தகங்களை யோசிக்கும் பொழுதும் எப்பொழுதும் எல்லோரும் முன்வைக்கும் நூல்கள் அனைத்தும் பெரும்பாலும் ஆங்கில நூல்களாகவே இருப்பதையும் ஆங்கில எழுத்தாளர்கள் மட்டுமே இவை அனைத்தையும் அறிந்து இருப்பது போலவும் ஒரு மிகப்பெரிய மாயை நம்மவர்களிடையே தொடர்ந்து வருகிறது.
இதற்காக ஆங்கில எழுத்தாளர்களையும் ஆங்கிலப் புத்தகங்களையும் குறைத்து மதிப்பிட்டு குறை சொல்ல முன்வருகிறேன் என்று பொருள் கொள்ள கூடாது .மாறாக அதற்கு இணையாக சில சமயங்களில் அதற்கு முன்னோடியாகவும் மேலாகவும் தமிழிலும் நூல்களும் எழுத்தாளர்களும் உள்ளனர் என்பதைத்தான் நான் இங்கே சொல்ல வருகின்றேன்.
அந்த வகையில் மனிதவள மேலாண்மை,ஆளுமை மேம்பாடு மற்றும் நிதி முதலீடுகள் போன்ற துறைகளில் நிபுணராக உள்ளவர் சுயமுன்னேற்றம் பங்குச்சந்தை உணர்ச்சிகளை கையாள்வது பற்றிய நுண்ணறிவு, நேரத்தை எவ்வாறு நேரமேலாண்மை விற்பனை தலைமைப் பண்பு மற்றும் சுய ஆளுமை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை பற்றிய புத்தகம் எழுதிய ஆகச்சிறந்த தமிழ் எழுத்தாளர், பயிற்சியாளர் சோம வள்ளியப்பன் அவர்களைப் பற்றித்தான் என்னை கவர்ந்த நான் வியப்புக்கு ஆளான பல்வேறு விடயங்களை இக்கட்டுரையின் வாயிலாக நீங்களும் அறிந்து கொள்ள முன்வைக்கின்றேன்.
எழுத்தாளர்களைப் பற்றி நிறைய தேடல்களை செய்து கொண்டிருக்கும் வேளையில் எதேச்சையாக நான் கண்டறிய நேர்ந்த ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் தான் சோம வள்ளியப்பன் அவர்கள். அவருடைய சுயமுன்னேற்ற நூல்களையும் அவர் எழுதிய "இட்லியாக இருங்கள்" என்ற புத்தகமும் மிகவும் சுவாரசியமாக கவரக்கூடியதாக இருந்தது. அவர் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் 45 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
சோம வள்ளியப்பன் தமிழகத்தின் அனைத்து முன்னணி பத்திரிக்கை இதழ்களிலும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதுபவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட மனிதவளம், பொருளாதாரம் ,பணம் பங்குச்சந்தை,நேர மேலாண்மை ,ஆளுமை மேம்பாடு போன்ற பல்வேறு கருத்துக்களை சொல்லி வருபவர்.