வரலாற்றைப் புனைவினூடாகக் கையளிக்கும் நீ பி அருளானந்தத்தின் 'புண்ணியபுரம்' - கலாநிதி சு. குணேஸ்வரன் -
தமிழில் வாசிப்புக் கலாசாரத்தை வளர்த்தெடுத்ததில் வரலாற்று நாவல்களுக்கு முதன்மையான இடமுண்டு. கல்கி, சாண்டில்யன் வரிசை நாவல்களின் ஈர்ப்புக் காரணமாக அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையே தமது பிள்ளைகளுக்குச் சூட்டுமளவிற்கு அந்நாவல்கள் வாசகர்களிடையே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்தன.
வரலாற்று நாவல்கள் என்பவை கடந்த காலத்தை மீட்டுப் பார்ப்பதற்கும் வரலாற்றைப் புனைவினூடாகக் கையளிப்பதற்கும் ஓர் உத்தியாகவே எழுத்தாளர்கள் எடுத்தாண்டுள்ளார்கள். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால் ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்தவரையில் வரலாற்று நாவல்களின் எழுச்சி என்பது போதுமான அளவுக்கு நிகழவில்லை என்றே கூறலாம். மாறாக, சமூக பண்பாட்டு அரசியல் வரலாறுகளுக்கே ஈழச்சூழல் பெரிதும் இடங்கொடுத்து வந்துள்ளது. இதற்குப் பல்வேறு அகப்புறக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தியிருப்பதை நாம் அறிவோம்.
ஈழத்தின் முதல் வரலாற்று நாவலாகிய தி.த சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி (1895) மதுரை நாயக்கர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சம்பவங்களை அடியொற்றியதாக அமைந்திருந்தது. 'மோகனாங்கி தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல் என்ற பெருமைக்கு அப்பால் வரலாற்றைச் சமூக சீர்திருத்தத்தோடு முன்வைத்திருப்பதே அதன் தனிச்சிறப்பு' என்று அருண்மொழிவர்மன் குறிப்பிடுவதும் இதனாற்தான். இந்நிலையில் சமூக அரசியல் பண்பாட்டுக் கூறுகளின் ஊடாகக் கட்டமைக்கப்பட்டனவாக ஈழத்து நாவல்கள் அமைந்திருப்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.