கனடா தேர்தல் முடிவுகள் - 2021: லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. - குரு அரவிந்தன் -
இம்முறையும் கனடா தேர்தல் முடிவுகள் ஜஸ்ட்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குச் சாதகமாக வந்திருக்கின்றன. இப்படித்தான் வரும் என்று முன்பு எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டது போலவே, நடந்திருக்கின்றது. 170 ஆசனங்கள் இருந்தால்தான் இங்கு தனியாக ஆட்சி அமைக்க முடியும். லிபரல் கட்சிக்கு 156 ஆசனங்களே கிடைத்திருக்கின்றன. ஏனைய எதிர்கட்சிகள் கொள்கையின் அடிப்படையில் ஒன்றுசேர வாய்ப்பில்லை என்பதால், லிபரல் கட்சிதான் இம்முறையும் கனடாவில் சிறுபான்மை ஆட்சி அமைக்க இருக்கின்றது.
இச்சந்தர்ப்பத்தில் நடந்த இந்தத் தேர்தல் பற்றி குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி 6மணி வரை முற்கூட்டியே வாக்களிக்கும் வசதிகளை தேர்தல் கனடா ஏற்பாடு செய்திருந்தது. அதனால் முற்கூட்டியே வாக்களித்தவர் தொகை 5.8 மில்லியனாக இருந்தது. இதைவிட சுமார் ஒரு மில்லியன் மக்கள் தபால் மூலமும் வாக்களித்திருக்கிறார்கள். 2019 ஆண்டு நடந்த தேர்தலைவிட இம்முறை அதிகமாக வாக்களித்திருந்தனர். இம்முறை சுமார் 37 மில்லியன் வாக்காளரின் பெயர்கள் பட்டியலில் பதிவாகி இருந்தது. கோவிட் - 19 காரணமாக கடைசிவரை காத்திருப்பதை தவிர்ப்பதற்காக முற்கூட்டியே அதிக மக்கள் வாக்களித்திருந்தனர். இறுதி நாளான 20 ஆம் திகதி மாலை 9:30 வரை வாக்குச் சாவடிகள் திறந்திருந்தன. எந்தக் கட்சியாக இருந்தாலும், தனியாக அரசமைப்பதற்குக் குறைந்தது 170 ஆசனங்கள் தேவை. முதலாவது தேர்தல் முடிவு சுமார் 7:10 மணியளவில் வெளிவந்தபோது லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டால், முடிவுகளில் சிலசமயம் மாற்றங்கள் ஏற்படலாம்.