ஃபிடல் காஸ்ட்ரோ: மக்கள் மனங்களை வென்ற மாபெரும் புரட்சித்தலைவன்.
தனது தொண்ணூறாவது வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ மறைந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் புரட்சிகரத்தலைவர்களில் ஒருவர் ஃபிடல் காஸ்ட்ரோ. லெனின், மாசேதுங், ஹோ சி மின் , சேகுவேரா வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டியவர். தான் நம்பிய மார்க்சிச அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் படை சமைத்து, பாடிஸ்டா அரசை வீழ்த்தி ஆட்சி அமைத்த் ஃபிடல் காஸ்ட்ரோவின் வரலாறு அடக்கு முறைகளுக்கு எதிராகப்போராடும் புரட்சிகர சக்திகளுக்கெல்லாம் முன்மாதிரியானது.
அலுக்காமல், சலிக்காமல் நீண்ட நேரம் வரை உரையாற்றுவதில் வல்லவர் இவர். ஒரு சமயம் இவர் அவ்விதமாகத் தொடர்ந்து 9 மணித்தியாலங்கள் வரையில் உரையாற்றியதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எந்த ஒரு விடயத்தையும் பற்றி மிகவும் தெளிவாக, விரிவாக உரையாற்றுவதில் வல்லவரான இவரது அரசினை பெரும் வல்லரசான அமெரிக்காவாலேயே ஒன்றும் செய்ய முடியாமல் போய் விட்டது. எத்தனையோ அமெரிக்கத் தலைவர்கள் முயன்று பார்த்தார்கள். அவரை அசைக்க முடியவில்லை. அமெரிக்க உளவுத்தாபனமான சி.ஐ.ஏ பல தடவைகள் இவரைக்கொல்ல முயன்று அனைத்து முயற்சிகளிலும் தோற்றே போனது. இறுதியில் மேற்கு நாடுகளே , அமெரிக்கா உட்பட, இவரது காலடியில் வீழ்ந்தன.
இவரது வெற்றிக்குக் காரணம் கியூபா மக்கள். பெரும்பான்மைக் கியூபா மக்கள் இவரை தம் அன்புக்குரிய தலைவராகக் கொண்டாடினார்கள். மக்கள் மனங்களை வென்ற மாபெரும் புரட்சித்தலைவனாக மானுட வரலாற்றில் ஃபிடல் காஸ்ட்ரோ நிலைத்து நிற்பார்.
ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் சேகுவேராவுக்குமிடையில் நிலவிய நட்பும், இணைந்த நடத்திய கியூபாப் புரட்சியும் புரட்சிகர வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியவை. இவரது மறைவு வருத்தப்பட வேண்டியது அல்ல. கொண்டாடப்பட வேண்டியது.