இலங்கை: செய்தித்துறை இல்லாத இலங்கையை வைத்திருக்கவே மகிந்த அரசு விரும்புகின்றது. வைத்தியகலாநிதி சி.சிவமோகன் சாட்டை!
வீரகேசரி மற்றும் தினக்குரல் பத்திரிகை நிறுவனங்களின் யாழ் வடமராட்சி பிரதேச ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீதான கொலை முயற்சி தாக்குதலையும், மன்னாரிலிருந்து வெளிவரும் புதியவன் பத்திரிகையின் ஆசிரியர் வி.எஸ்.சிவகரனுக்கு விடுக்கப்பட்ட உயிர்க்கொலை அச்சுறுத்தலையும் வன்மையாக கண்டித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தனது கண்டன அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: 'ஊடகத்துறையை உலகத்தின் “மூன்றாவது கண்” என்றும், ஊடகவியலாளர்களை “ஜனநாயகத்தின் காவல் நாய்கள்” என்றும் உலக கனவான்கள் விளிக்கின்றனர். ஜனநாயக மறுப்பு சம்பவங்களின் போதும், ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்களின் போதும், அதை எதிர்த்து நாட்டுக்குள் ஜனநாயகத்தை நிலைநிறுத்தும், ஜனநாயகத்தை பாதுகாக்கும் பணியின் சிறப்பு கருதி இத்தகைய கௌரவத்தை வழங்கி உலகம் ஊடகவியலாளர்களை சிறப்பிக்கின்றது. சிறீலங்கா போன்ற ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்காத ஆபத்தான நாடுகளில் ஊடகவியலாளர்கள் ஆட்சியாளர்களோடும், அதிகாரத்தோடும் போராடிக்கொண்டு மிகவும் நெருக்கடியான சூழலிலும் செய்தியறிக்கைகளை இடுவதால் தான், ஜனநாயகம் என்ற சொல்லை இன்றும் கூட நம்மால் உச்சரிக்க முடிந்திருக்கின்றது.