எதிர்வினை: முல்லைத்தீவுக்கு மகாவலி வேண்டுமா? சாத்தியமா?
- அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழில், முகநூலில் வ.ந.கிரிதரன் எழுதிய குறிப்புகள், தமிழ்சின் சிஎன் இணையத்தளத்தில் நக்கீரன் எழுதிய நீண்ட கட்டுரை, முகநூலில் விஜயபாஸ்கரன், எழுத்தாளர் பா.அ.ஜயகரன், எழுத்தாளர் கருணாகரன் ஆகியோர் தெரிவித்த கருத்துகள் பற்றி அனுபவம் மிகுந்த மின் பொறியியலாளர் ஜானகி பாலகிருஷ்ணன் அவர்கள் அனுப்பி வைத்த எதிர்வினை இது. உங்கள் கருத்துகளையும் அனுப்பி வையுங்கள். ஆக்கபூர்வமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பதிவுகளுக்கு உங்கள் கருத்துகளை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.- பதிவுகள் -
அண்மையில் சிறீ லங்கா பிரதமரும், யு.என்.பீ. கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 200 கோடிகள் பெறுமதியான திட்டமாக மகாவலி ஆற்றினை முல்லைத்தீவு வரை திருப்பப் போவதாகவும், அதனுடன் முல்லைத்தீவின் சில பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தினை அமுல்படுத்தப் போவதாவும் அறிவித்தார் என செய்திகள் வெளிவந்தன. அதனையொட்டி பதிவுகள், கட்டுரைகள், கருத்துகள், எதிர்ப்புகள் என்று பல சம்பவங்கள் நடந்தன.
கடந்த புதன்கிழமை, ஆகஸ்ட் 29, 2018 தினம் நண்பர் Giritharan Navaratnam மகாவலித்திட்டம் திசை திருப்பப்படுமாயின் வடக்கு-கிழக்கிற்கான அது பற்றிய பயன்பாடு பற்றியும், அது தொடர்பான ஏற்கத்தகு குடியேற்றத்திட்டம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றியும் தனது கருத்துகளடங்கிய பதிவினைப் பகிர்ந்தார். அவை மறுப்பேதும் கூறாமல் ஏற்றுக் கொள்ளக்கூடியவையே.
இதனிடையே நண்பர் Vijaya Baskaran தனது புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2018 “ஏமாற்றாதே ஏமாறாதே” என்ற தலைப்பில் உள்ள பதிவில், பல தரவுகளைத் தந்தும் சில கடந்தகால குடியேற்றத் திட்ட விபரங்களையும் தனது கருத்துகளையும் தெரிவித்திருந்தார். அவையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருந்தன.
அத்துடன் தானறிந்த வரலாறு நிமித்தம் சில குடியேற்றத்திட்டங்களில் பங்கேற்க தமிழர் முன்வரவில்லை என்பதையும் குறிப்பிட்டு, கல்லோயா திட்டத்தில் தமிழர் உதவிகளைப் பெற்று குடியேறவில்லை எனும் பதிவு பற்றிய உண்மை, பொய் தெரியவில்லை என்றும் கிரிதரன்க கூறியிருந்தார்.
அதே பதிவில் Tamilcnn எனும் தளத்தில் பதிவான, “திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிக மோசமானது அதே சமயம் ஆபத்தானது வெலிஓயா ஆகும்” எனும் தலைப்பில் நக்கீரன் என்பவரினால் எழுதப்பட்ட நீண்ட கட்டுரையின் சில முக்கியமான பகுதிகளை இணைத்து ஆரோக்கியமான தர்க்கத்திற்கு தந்திருப்பதாகக் கிரிதரன் கூறியிருந்தார். இது பற்றிய உங்கள் கருத்தகளைப் பகிருங்கள் நண்பர்களே என்று ஒரு பரந்த வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.