
இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது சுதந்திரதினச் செய்தியையொட்டித் தனது முகநூற் பக்கத்தில் மும்மொழிகளில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:
"'இலங்கையை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (04) முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற பெருமைமிகு 78 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டேன். தாய்நாட்டினதும் மக்களினதும் பெருமைமிக்க சுதந்திரத்திற்காகப் போராடிய அனைத்து வீரர்களுக்கும் தேசத்தின் கௌரவத்தையும் மரியாதையையும் செலுத்தி, பெருமைமிக்க வரலாற்றின் தாத்பரியத்துடன் கட்டமைக்கப்பட்ட புதிய இலங்கைக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்' என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். ஒரு தேசமாக நாம் பெற்ற சுதந்திரம் பொருளாதார சுதந்திரத்தை அடைவதன் மூலம் முழுமையடைகிறது என்றும், அதற்காக 'இலங்கையை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ், அறிவார்ந்த மனித வளம், தேசிய ஒற்றுமை, சட்டத்தின் ஆட்சி, சுற்றாடல் பாதுகாப்பு, வலுவான சர்வதேச ஒத்துழைப்பு ஆகிய ஐந்து தூண்களின் அடிப்படையில் புதிய மாற்றத்துடன் கூடிய சகாப்தத்தை நோக்கி நாடு கொண்டு செல்லப்படுகிறது என்றும், நாடு பொருளாதார ரீதியில் பெரும் வெற்றிகளின் நன்மைகள், பொருளாதாரத்தில் கீழ்மட்ட மக்களுக்குச் செல்வதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று குறிப்பிட்டு, அந்த இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தில் எம்முடன் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன்."
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வருகை இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய பாய்ச்சல். நாட்டை இதுவரை காலமும் பீடித்திருந்த இனவாத, மதவாத, மொழிவாத அரசியலிருந்து , புதிய பாதையில் நடத்திச் செல்வதற்குரிய வாய்ப்பு தற்போது அமைந்துள்ளது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் , அம்மக்களின் வர்க்கத்திலிருந்து ஒருவர் அதிபராகியிருக்கின்றார். இது மிகப்பெரிய மாற்றம்.
நாட்டின் பொருளாதார வெற்றியை இதுவரை தடுத்து நின்றவை இனவாத, மதவாத, மொழிவாத அரசியல். இவற்றைப் பாவித்து அரசியல் செய்த அரசியல்வாதிகள் எல்லாரும் , வர்க்கப்பின்னணியில் எவ்வித வேறுபாடுகளுமற்று இணைந்திருப்பார்கள். தம் அரசியல் நலன்களுக்காக மக்களைப் பிரித்தாளும் அரசியல் கோசங்கள் எழுப்புவார்கள். இன்று அந்நிலை ஓரளவு மாறியுள்ளது வரவேற்கத்தக்கது.
அருமையாகக் கிடைத்த ஆட்சி வாய்ப்பைப் பயன்படுத்தி, அநுர அரசு செய்ய வேண்டிய நல்ல வேலைகளையெல்லாம் தடுக்கும் வகையில் , ஆட்சிக்கட்டிலில் இருந்து விரட்டியடிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முயற்சிகள் செய்து வருவதையும் கண்டு கொண்டுதானிருக்கின்றோம். இவற்றுக்குப் பணிந்து போகாமல், தம் வழியில் உறுதியுடன் செல்வதில்தான் அநுர அரசின் வெற்றி தங்கியுள்ளது. அவ்விதம் சென்றால், அதில் வெற்றியும் அடைந்தால், பெரும்பான்மையான மக்களின் மனங்களும் மாறும், மீண்டும் பழைய நிலைக்குச் செல்லாத வகையில் மாறும். எனவே இவ்விதமான சவால்களை அநுர அரசு வெற்றிகரமாக எதிர்கொள்ளட்டும். அதுவே அனைவருக்கும் நன்மை.