மலையகத் தமிழ் மக்கள் இந்திய வம்சாவழித் தமிழர் என்ற அடையாளத்தை மறுப்பதற்கான காரணிகள்! - சடகோபன் ராமையா -
மலையக தமிழ் மக்கள் தம்மை இந்தியர்கள் என்று அழைத்துக் கொண்டதால்......
( அ ) 1948ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பிரஜா உரிமை பறிப்பு சட்டம் ஒன்றை கொண்டுவந்து பிரஜா உரிமையையும் வாக்கு உரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர் ஆக்கி அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கே போய்விடவேண்டும் என்று கோஷமிட்டார்கள். இந்திய வம்சாவழி மக்கள் இடதுசாரிகளுடன் சேர்ந்து இந்த நாட்டின் அரசாட்சியை கைப்பற்றி விட கூடும் என்று அச்சம் அப்போது எழுந்தது.
( ஆ ) 1964ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி இந்த மக்களின் பத்து பேரில் 7 பேர் இந்தியாவுக்கு போய்விடவேண்டும் என்று ஒப்பந்தம் செய்து ஏழு இலட்சம் பேரை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்கள்.
( இ ) 1945ஆம் ஆண்டு இரண்டாம் உலக மகா யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் கொழும்பு துறைமுகத்தின் மீது குண்டு வீசப்பட்ட போது கொழும்பு புறக்கோட்டை தமிழ் வர்த்தகர்கள் அனைவரும் தமது கடைகளை மூடிவிட்டு பாதுகாப்புக்காக இந்தியா சென்றுவிட்டனர் . இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. " இவர்கள் இவ்விதம் நெருக்கடியான நேரத்தில் நாட்டை விட்டு ஓடியவர்கள் , நாட்டுப் பற்று அற்றவர்கள் என்றும், அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி விடவேண்டும் என்றும் " அன்றைய காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் நிதி அமைச்சராக இருந்தவருமான ஜே. ஆர். ஜெயவர்த்தன பாராளுமன்றில் உரையாற்றியமை பாராளுமன்ற பதிவு புத்தகத்தில் பதிவாகியுள்ளது.