ஆனந்த விகடன் சஞ்சிகையின் 2016 டாப் நபர்கள்; பட்டியலில் இலங்கையைச்சேர்ந்த கட்டடக்கலைஞர் இ.மயூரநாதனும் இடம் பெற்றிருக்கின்றார். வாழ்த்துகள். நண்பர் மயூரநாதன் விக்கியபீடியா (தமிழ்) பிரிவுக்கு கடந்த பல வருடங்களாக ஆற்றிவரும் பங்களிப்பு பலரும் அறிந்ததொன்றே. விகடன்.கா. இணையத்தளத்தில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வறிவிப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்2றோம்.
"இன்று விக்கிபீடியாவில் 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் குவிந்துகிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இ.மயூரநாதனின் பெரும் உழைப்பு. 2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது. அதன் எதிர்கால வீச்சை உணர்ந்து, விக்கிப்பீடியாவோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார். அதன் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு வருடம் தனியாளாக உழைத்தார். ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆன்லைன் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று 88,000 தமிழர்கள் விக்கிப்பீடியாவில் பதிவுசெய்துள்ளனர். இலங்கைத் தமிழரான இவர், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிகிறார். உலகளாவிய பன்மொழிக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவை, ஆற்றல் வாய்ந்த குழுமமாக உருவாக்கியது இவரது அரிய சாதனை. இவரே தன்னுடைய முனைப்பால் 4,458 கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். உலகப் பன்மொழித் திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ்மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசினால், தமிழ் மொழிக்கான ரேங்க் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும். இதற்கு ஒரே காரணம் மயூரநாதன்"
நன்றி:: http://www.vikatan.com/anandavikatan/2017-jan-04/2016-special/127082-2016-top-10-humans-india.art